Tuesday, November 26, 2013

ஹஸ்தினாபுரத்தின் முதல் வாரிசு!

“ஆம், தாயே! மழைக்காலத்துக்கு முன்னர் நான் அனுப்பிய செய்தி உங்களுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன்.” ரகசியம் பேசும் தொனியில் மெதுவாகப் பேசினான் உத்தவன். “ ஐவரும் ராக்ஷச வர்த்தத்தில் வசிக்கின்றனர். அங்கே எவரும் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாது. “ மஹாராணியும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு காது கொடுத்துக் கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டாள்.  பின்னர், “ஆம், விதுரன் எனக்குச் சொன்னான்.  மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  அவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கு உரியவற்றைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.  அது மட்டும் நடந்துவிட்டால் போதும்.  என் கடைசி நாட்களை நான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் கழிப்பேன்.”

“அது தான் நான் இங்கே வந்ததின் காரணமும் ஆகும், தாயே!  வாசுதேவன் மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில் அவர்கள் தாங்கள் ஒளிந்து வாழும் பயங்கரமான ராக்ஷசவர்த்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகிறான்.  அப்போது திரெளபதியின் சுயம்வரத்துக்கான நேரமும் நெருங்கி வரும்.” புன்னகை புரிந்தாள் மஹாராணி.  “ஒவ்வொருத்தரும் திரெளபதியின் கரத்தைப் பிடிக்கத் தாங்களே ஏற்றவர்கள் என எண்ணுகின்றனர்; துரியோதனனும் நினைக்கிறான்.  அவ்வளவு ஏன்?  கர்ணன், அஸ்வத்தாமா அனைவருமே விரும்புவதாக நான் அறிந்தேன்.  விதுரா, ராஜசபையில் என்ன முடிவெடுக்கப்பட்டது?”

விதுரர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “மாட்சிமை பொருந்திய அன்னையே, இளவரசர் சுயம்வரத்திற்கு வந்த அழைப்பை ஏற்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.”  என்றார்.  புத்தி நுட்பமுள்ள ராணியோ, “துரோணர் இதற்கு எவ்வாறு ஒத்துக் கொண்டார்?” என்று உடனே கேட்டாள்.  ராணியின் கேள்வியைக் கேட்ட விதுரர் சிரித்தார். “உண்மையில் இது ஒரு ஆச்சரியமே அன்னையே! நான் நினைப்பது என்னவெனில் துரியோதனனால் ஏற்பட்ட கெடுதலைச் சரி செய்து எதிரியை நண்பனாக்கிக் கொள்வது சிறந்தது என அவர் நினைத்திருக்கலாம்.  செகிதனாவைப் புஷ்கரத்திலிருந்து விரட்டியது அவருக்குப் பிடிக்கவில்லையே!  அதோடு துரியோதனனால் போட்டியில் ஜெயித்து இளவரசியின் கரத்தைப்பிடிக்க முடியாது என்று அவருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம்.  இது துரியோதனனுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.”

“ஆஹா, இந்தச் சிறுவன் துரியோதனனை வழிக்குக் கொண்டு வருவது கஷ்டம்.  அவனே ஒரு போக்கிரிப் பையன்.  ஆஹா, அவன் ஹஸ்தினாபுரத்தை ஆட்சி செய்கையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ, அதை அந்த மஹாதேவனே அறிவான்.  அது போகட்டும்,  உத்தவா, தற்போது என்ன செய்தி கொண்டு வந்தாய்?”

“தவிர்க்க முடியாததொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. வாசுதேவன் பாண்டவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணுகிறான்.  இதன் மூலம் அவர்கள் பழைய வாழ்க்கைக்கு, அங்கிருக்கும் அனைத்து அரசர்களின் முன்னிலையிலும் எளிதாகத்  திரும்பி வர முடியும் என்பதும் அவன் கருத்து.  அதற்கு இந்தச் சுயம்வரம் சரியான நேரமாக அமையும் என நினைக்கிறான்.  அவர்களை மீண்டும் அவர்களுக்கு உரிய இடத்தில் அமர்த்த இது உதவும்.”

“அப்புறம், என்ன கஷ்டம்?  அவர்கள் வரமாட்டேன் என்கின்றனரா?”  மஹாராணி கேட்டாள்.  உத்தவன் மீண்டும் காது கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மீண்டும் குரலை நன்கு தழைத்துக் கொண்டு பேசினான். “ ஆசாரியர் வேத வியாசரிடமிருந்து செய்தி கிடைக்கும்வரை அங்கிருந்து கிளம்ப யுதிஷ்டிரன் தயாராக இல்லை;  தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்று அவன் சொல்கிறான்.  அர்ஜுனனோ உடனே அங்கிருந்து கிளம்பத் துடிக்கிறான்.   வெளியே வந்து காம்பில்யத்துக்கோ, ஹஸ்தினாபுரத்துக்கோ வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை;  எங்களுடன் துவாரகை வருகிறேன் என்று துடிக்கிறான்.  ராக்ஷசவர்த்தத்தில் தற்போது அவன் நடத்தி வரும் வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவே இல்லை;  ஆனால் சகோதரர்கள் அனைவரும் சம்மதித்து வர வேண்டும் என்பதோடு, அத்தை குந்தியும் சம்மதிக்க வேண்டும் என்று சொல்கிறான்.  அது வரை அவனாலும் கிளம்ப முடியாது.”

“எனக்குத் தெரியும் அவர்களின் ஒற்றுமையைக் குறித்து.  ஐவரும் அருமையான சகோதரர்கள்.  ஒரே நெருப்பிலிருந்து எழுந்த ஐந்து பிழம்புகள்.  என் இத்தனை வருட வாழ்க்கையில் சகோதரர்களுக்குள்ளே இத்தனை அன்பும், ஒற்றுமையும், நம்பிக்கையும் ஒரு சேர அமைந்து நான் இன்று வரை பார்க்கவில்லை.  இவர்களைத் தான் பார்க்கிறேன்.  த்வைபாயனன் இங்கே தான் இருக்கிறான்.  இன்று காலை தான் இங்கே வந்து சேர்ந்தான்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களோடு வெளிப்பட வேண்டும் என்பதில் அவனுக்கும் சம்மதம் இருக்கும்.” என்றாள் ராணி.

“இதோடு முடியவில்லை தாயே!  பீமன் தன்னால் இப்போது வர இயலாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.  அவன் இல்லாமல் அவர்களில் எவரும் அங்கிருந்து கிளம்ப மாட்டார்கள்.”

“ஆஹா, அவன் என்ன அங்கேயே கடைசி வரை இருந்து தன்னை மறைத்துக் கொள்ளவா விரும்புகிறான்? இல்லை என்றே நம்புகிறேன்.  அந்த ராக்ஷசவர்த்தத்திலேயேவா இருக்கப் போகிறானாம்?”

“அவன் தான் ராக்ஷசவர்த்தத்தின் அரசன், மஹாராணி, அதோடு அடுத்த வாரிசையும் அடைந்து விட்டான்.  பீமனுக்கு மகன் பிறந்திருக்கிறான்.”

“என்ன?” ராணிக்கு ஆச்சரிய மிகுதியில் கண்கள் விரிந்தன என்றால் எதற்கும் அசையாத விதுரர் கூட விரிந்த கண்களுடன் ஆச்சரியக்குறியை முகத்தில் காட்டினார்.  “ஆம், அன்னையே, பீமனுக்கு ராக்ஷசன் போலவே ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான்.  அவனுக்கு ஆறு மாதம் தான் ஆகிறது என்றால் எவரும் நம்ப மாட்டார்கள்.  அவன் அழுகையே சிங்க கர்ஜனை போல் இருக்கிறது. பீமன் என்ன சொல்கிறான் தெரியுமா?  முன்னோர்களின் உதவியே இல்லாமல் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த பரதனின் வழித்தோன்றல்களான அவர்களுக்கு இப்போது பிறந்திருக்கும் இந்தக் குழந்தை தான் முதல் வாரிசு என்றும், ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்துக்கு வாரிசு பிறந்திருப்பதாகவும் சொல்கிறான். பரத வம்சத்தைச் சார்ந்த குருவின் வழித்தோன்றல்களில் இப்போதிருக்கும் பிள்ளைகள் எவருக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை. ஆகவே பீமனின் குழந்தையே வயதில் மூத்தவன் என்பதால் முறையான வாரிசு என்கிறான்.”

மனம் விட்டுச் சிரித்தாள் மஹாராணி.  அவள் முகம் புன்னகையில் மலர்ந்து விரிந்தது.  “ஆம், ஆம், அது உண்மையே.  அவன் தான் நம் குலத்தின் முதல் வாரிசு ஆவான்.  என்றாவது ஒரு நாள் ஹஸ்தினாபுரத்தின் சிம்மாசனத்திலும் அமருவான்.  பீமன் அவனை ஏன் இங்கே அழைத்து வரக்கூடாது?”

“ராக்ஷசர்களின் ராணியான ஹிடும்பி, தன் மகனைப் பிரியச் சம்மதிக்கவில்லை.” என்றான் உத்தவன்.

“பின் அவளையும் அழைத்து வரலாமே!  பீமன் தான் ராக்ஷசக் குலத்தில் திருமணம் செய்து கொண்ட முதல் இளவரசன்.  அவள் நரமாமிசம் சாப்பிடமாட்டாள் என நான் நினைக்கிறேன்.”

“அரசன் வ்ருகோதரன், “பீமன் அங்கே இப்படித் தான் அழைக்கப்படுகிறான்.” என்ற உத்தவன் மேலும் தொடர்ந்து, “அங்கே அரசன் வ்ருகோதரன்,  ஒரு சட்டத்தைப் போட்டிருக்கிறான். அதன்படி எந்த ராக்ஷசர்களும் நர மாமிசம் உண்ணக் கூடாது.  ஹிடும்பி, தன் கணவன் போட்ட உத்தரவை மீறாத உத்தம மனைவியாக இருந்து வருகிறாள்.   ஆனால் எனக்கு என்னமோ சில சமயம் அவள் நர மாமிசம் சாப்பிடவே விரும்புவதாகத் தோன்றும்.  எப்படியோ, இப்போது கடோத்கஜனைச் சுற்றி எல்லாம் நடக்கிறது.”

“கடோத்கஜன்!  இது என்ன பெயர்!”  என்றாள் ராணி.


3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவாரஸ்யமாகப் போகிறது.

“கடோத்கஜன்! ;)

பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

ரங்காராவ் நடித்த 'வீர கடோத்கஜன்' படம் பார்த்திருக்கிறேன்! கதொத்காஜன் என்ற பெயரால் நினைவுக்கு வருவது இது! :)))

இராஜராஜேஸ்வரி said...

“கடோத்கஜன்! -
கலகல்ப்பான வருகை..!