Tuesday, March 25, 2014

மஞ்சுவின் சந்தேகங்களுக்கு என்னுடைய பதில்!

//துரியோதனன் ஏற்கனவே பானுமதியை மணந்திருந்தும் திரௌபதியை சுயம்வரத்தில் வெல்ல முயற்சிப்பது ஏன்?//

துரியோதனன் பானுமதிக்கு முன்பே அவள் அக்காவை மணந்தவன். அவள் இறக்கவே பானுமதியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டான். ஆக துரியோதனனின் பெண்ணாசையும் இங்கே ஒரு முக்கியக் காரணம்.

அடுத்ததாக பானுமதி ஒரு அரசனின் மகள் தான்.  சக்கரவர்த்தியின் மகள் அல்ல.  சாமானிய ஒரு அரசன் மகளுக்கும், பெரும்புகழும், பாரம்பரியமும் வாய்ந்த சக்கரவர்த்தியின் மகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன அல்லவா! அதோடு ஆர்யவர்த்தம் என்றழைக்கப்பட்ட வடமாநிலப் பகுதிகளில் பெரிய அரசாக ஹஸ்தினாபுரத்துக் குரு வம்சத்தினரின் ராஜ்ஜியமும், பாஞ்சாலமும் தான் இருந்தது.  மகதம் பெரிய ராஜ்யம் தான் என்றாலும் அது கிழக்கு நாடாக இருந்ததால் ஆர்யவர்த்தத்தில் சேரவில்லை. ஒருசாம்ராஜ்யத்தின் இளவரசியை மணந்தால் தான் பின்னால் ஹஸ்தினாபுரத்து மன்னனாகையில் பலவிதங்களீலும் அனுசரணை கிடைக்கும் என்னும் ராஜரீகமான முடிவுகளும் இதில் ஒரு காரணமாக உள்ளது.

//துருபதன் துரோணாச்சாரியார் இருவரும் நண்பர்களாக இருந்து பகைவர்களாகிவிட்டனர்.. அந்த நிலையில் துரியோதனன் துரோணரின் மாணாக்கன்.. அவன் திரௌபதியை திருமணம் செய்ய சுயம்வரத்தில் கலந்துக்கொள்வதை துரோணர் தடுக்க நினைப்பது ஏன்?//

துரோணர் அங்கே முக்கியப் படைத் தளபதி என்பதோடு அல்லாமல் ஹஸ்தினாபுரத்தின் இளவல்கள் உட்பட அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி அளித்து வந்தார். முக்கிய முடிவுகள் அவரைக் கேட்டே எடுக்கப்பட்டன. மன்னனுக்கும், யுவராஜாவுக்கும் உள்ள அதிகாரம் அவருக்கும் இருந்தது. மேலும் குரு என்பதால் தனிப்பட்ட மரியாதையையும் பெற்றார். ராஜபோக வாழ்க்கை.  அவர் ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். அப்போது தான் துருபதனிடம் சென்று யாசிக்க நேர்ந்தது.  துருபதனும் அவர் யாசித்ததால் பொருள், பொன் என்று தருவதாகவும் நாட்டை எல்லாம் கொடுக்க முடியாது. சின்ன வயசில் விளையாட்டுத் தனமாகச் சொன்னதை எல்லாம் உண்மையாக்க இயலாது.  என் நாடு, என் மக்கள் அவர்கள் என்னை நம்பி இருக்கிறார்கள்.  இந்த நாட்டுக்கென ஒரு பாரம்பரியம் உள்ளது.  நாட்டைப் பிரித்து துரோணருக்குக் கொடுப்பதன் மூலம் அந்தப் பாரம்பரியத்தை உடைக்க முடியாது என்று சொல்லிவிடுகிறான்.  தீராப் பகை மூள்கிறது.  பகைவனை முழுசாக வெறுக்கிறார் துரோணர்.  அவன் மேலே வரக்கூடாது என எண்ணுகிறார்.  அப்படிப்பட்டவர் தன் சீடன் பகைவன் மகளைத் திருமணம் செய்து வந்தால் எப்படிப் பொறுப்பார்?  அதுவும் தினம் தினம் அரச மாளிகைக்கு வரும்பொதெல்லாம் பகைவன் மகளையும் பார்க்க நேரிடும்.  அவள் யுவராஜாவின் மனைவி என்ற வகையில் அவளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.  துருபதனையும், அவன் மக்களையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் சுதந்திரமான மனப்போக்குள்ளவர்கள்.  ஆகையால் அவர்களை இவரால் அடக்கி ஆள முடியாது.    பகைவன் துருபதனோடு கெளரவர்கள் பெண் எடுத்து சம்பந்தம் செய்து கொண்டால் இவர் பகை நீடிக்க விடாமல் கெளரவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  அப்போது இவர் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். துருபதனை நாட்டை விட்டே ஓட்டவேண்டும் என்னும் அவர் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டால்?  அதான் காரணம்


கண்ணனிடம் ஆலோசனைக்காகவோ அல்லது சாதிக்கவோ உதவிக்கேட்டு வரலாம் என்ற சந்தேகம் துரோணருக்கு ஏன் வந்தது?

பதிவுகளிலேயே இது குறித்து முன்பே வருகிறது.  துரோணரோடு பானுமதியின் சந்திப்பும், பானுமதி, துரியோதனன் பேச்சும், பின்னர் பானுமதிக்கு துரியோதனன் புஷ்கரம் செல்ல அனுமதி கொடுக்கும் காரணமும் ஏற்கெனவே வந்துவிட்டது.  துரோணர் இவற்றை எல்லாம் அறிந்தவரே என்பதால் நேரடியாகத் தெரியாவிட்டாலும் அவருடைய வயதுக்கும், புத்திசாலித் தனத்துக்கும் ஊகிக்க முடியுமே!  பானுமதியும் தான் கூட வந்திருக்கிறாள்.  வேறு என்ன காரணம் இருக்க முடியும்?


எல்லாம் அறிந்த கண்ணன் கண்டிப்பாக தர்மம் பிறழமாட்டான் என்ற நம்பிக்கை துரோணருக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது?

இந்தக் கதைப்படி கண்ணன் ஒரு சாமானிய மானுடன் தான். நம்மெல்லாரையும் போல.  அவன் நிகழ்த்திய அற்புதங்களை தர்க்க ரீதியாக ஆராய்ந்து சொல்லி வருகிறார் முன்ஷிஜி. ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டும் படிக்க வேண்டும்.  அதோடு கண்ணனை இந்தக் கதைப்படி இப்போது தான் பார்க்கிறார் துரோணர். முன்னர் ஹஸ்தினாபுரம் சென்றபோது பார்க்கவில்லை.  அவனைக் குறித்த செவிவழிச் செய்திகள் தான் அவருக்குத் தெரியும். கண்ணன் நேரடியாகப் பாண்டவர்களுக்கு அத்தை வழி சகோதரனும் ஆவான்.  ஆகவே அவன் சார்புடையவனாக இருக்கலாம் என்ற எண்ணம் எல்லாருக்குமே வரும் தான்.  இங்கே துரோணருக்கோ பாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று மட்டுமே தெரிந்திருந்தாலும் கெளரவர்களுக்குக் கண்ணன் உதவுவானோ என்ற எண்ணமும் இல்லாமல் போகவில்லை. யாதவர்களும், கெளரவர்களும் சேர்ந்திருந்தால் மாபெரும் பலமுள்ள ஒரு சாம்ராஜ்யம் உருவாகலாம் என்ற எண்ணமும் இருக்கலாம். ஆனால் கெளரவரகளின் நடத்தை துரோணருக்கே அதிருப்தியைத் தந்ததால் கண்ணன் அதை ஆதரிப்பானா என்ற நியாயமான சந்தேகம் அவருக்கு வந்தது. ஆகவே ஒரு கால் கண்ணன் தர்மத்துக்கு முரணாக நடப்பானோ என நினைத்திருக்கலாம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதில்கள்... மஞ்சு அவர்களுக்கும் நன்றி...

ஸ்ரீராம். said...

இந்த பதில்கள் முந்தைய பதிவுகள் படித்திருந்தால் தெரிந்திருக்கும்தான். இப்போது பானுமதி கண்ணனை மூத்த சகோதரன் என்று அழைத்தாலும் இதே பதிவின் முந்தைய பகுதியொன்றில் துரியோதனனின் ஒரு கேவலமான முயற்சி பற்றி எழுதி இருந்தீர்கள். அதுவும் நினைவுக்கு வருகிறது. பானுமதிக்கு மதுவைப் புகட்டி...

கதம்ப உணர்வுகள் said...

தங்கமே,

எத்தனை அழகா என் சந்தேகங்களை தீர்த்திருக்கிறீர்கள்..

ஸ்ரீராம் சொன்னது போல முந்தைய பதிவுகள் ரெகுலரா படித்துக்கொண்டு வந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு இந்த சந்தேகங்கள் தோன்றி இருந்திருக்காது.

காலையே படித்துவிட்டேன். ஆனால் வேலை அதிகமாக இருந்ததால் பதில் எழுத தாமதம் ஆகிவிட்டதுப்பா கீதா..

மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா பதில்கள் அற்புதமானவை...