Saturday, December 13, 2014

பீஷ்மரின் கவலை!

பீஷ்மருக்கு அவர் இவ்வளவு வருடங்களாகக் கட்டிக் காத்து வந்ததொரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டாற்போலவும், எந்நேரமும் இடிந்து விழுந்துவிடுமோ என்னும் அச்சத்திலும் இருப்பதாக உணர்ந்தார்.  இந்த இளைஞர்கள் அவர் காலத்தில் இருந்தவர்களைப் போல் அல்ல.  உலகம் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டு வருகிறது.  மாறி வரும் சூழலில் இவர்களது எண்ணங்களும் மாறுபடுகின்றன. நம் காலத்தில் இருந்தாற்போல் எதுவும் இப்போது இல்லை.  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………. என்ன செய்யலாம்?  ஆம், அது தான் சரி.  பீஷ்மர் தன் சிறிய தாயாரும் இன்றளவும் அவருடன் இந்த சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கும் ஸ்திர நிலைமைக்கும் பாடுபட்டுக் கொண்டு அவரோடு தோளோடு தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் மகாராணி சத்யவதியைக் கண்டு அவளோடு ஆலோசனை செய்ய விரும்பினார்.


யோசனையுடன் ஒவ்வொரு அடிகளையும் நிதானமாக அளந்து நடப்பது போல் நடந்த வண்ணம் சத்யவதியின் மாளிகையை பீஷ்மர் அடைந்தார். அவரை அங்கே கண்டதுமே காவலுக்கு என நிறுத்தப்பட்டிருந்த சேடிப் பெண்கள், பூனையைக் கண்டதும் பறந்தோடும் கிளிகளைப் போல ஓட்டமாக ஓடி விட்டனர். ராணி சத்யவதி தன் வழக்கப்படி அங்கே சுவற்றில் அமைக்கப்பட்டிருந்ததொரு பிறையில் பொருத்தப்பட்டிருந்த மகாதேவன், அந்த சங்கரன் உருவச் சிலையைப் பார்த்த வண்ணம் மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். கடவுளருக்கெல்லாம் கடவுளான அவரிடம் என்ன வேண்டுகிறாள்? வருடங்கள் பல ஓடியும் சத்யவதியின் எழில் குறையவில்லை.  அவள் வயதுக்கேற்ற சுருக்கங்களையும்  அவள் மேனியில் காணமுடியவில்லை. அவள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அவள் தன் நரைத்த மயிரை எடுத்துக் கட்டியிருந்த விதம் கிரீடம் ஒன்றை அவளுக்குச் சூட்டியது போல் அமைந்துவிட்டது.  இதனால் அவள் கம்பீரமும், எழிலும் அதிகம் தான் ஆனது.


வெகு சிலரையே அவள் பார்க்க அனுமதித்தாள்.  ஆனாலும் அவளை ஒரு முறை பார்ப்பவர்களை  அவள் எழில் மட்டுமின்றி வெளிப்படையான அவள் மன உறுதியும், ஹஸ்தினாபுரத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் அவள் குணமும் கவர்ந்து விடும்.  அவள் எதிரே பீஷ்மர் அமர்வதற்கென தங்கத்தகடு வாய்ந்ததொரு ஆசனம் போடப்பட்டது. பீஷ்மர் சத்யவதியை விடச் சில ஆண்டுகள் மூத்தவராக இருந்தாலும் அவளுக்குத் தாய் என்ற ஸ்தானத்தில் மரியாதை செய்யத் தவறியதில்லை.  அது போலவே இப்போதும் அவள் கால்களில் விழுந்து தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். தன் மூத்தாளின் மகனின் சிரசில் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்த சத்யவதி ஒரு அன்பான புன்முறுவல் மூலம் தான் பீஷ்மர் மேல் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினாள்.


“அமர்ந்து கொள் காங்கேயனே!  உன்னைப் பார்த்தால் மாபெரும் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே!  என்ன விஷயம்?” இவ்வுலகமே மறந்துபோன அவருடைய உண்மைப் பெயரான காங்கேயன் என்னும் பெயரில் இன்று வரை சத்யவதி மட்டுமே அழைக்கிறாள். இவ்வுலகு அவரைக் கடுமையான சபதம் எடுத்த அதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் பீஷ்மராகவே அறிந்திருக்கிறது. சத்யவதி கேட்டதற்கு பீஷ்மர் சற்று நேரம் மறுமொழி கொடுக்கவில்லை. பின்னர் மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையையும் ரகசியம் பேசுவது போன்ற குரலில் சொன்னார். “தாயே, நாம் மிகவும் மோசமானதொரு சூழ்நிலையை இப்போது எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆம், மோசமானதொரு சூழ்நிலை!”


பரிதாபம் பொங்க பீஷ்மரைப் பார்த்த சத்யவதி அது மாறாத குரலிலேயே அதே சமயம் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் , “என்ன விஷயம்?” என்று கேட்டாள். “திருதராஷ்டிரன் இன்று காலை என்னைப் பார்த்தான் தாயே!  கண்களில் கண்ணீருடன், “பிதாமகரே, தயவு செய்து துரியோதனனை ஹஸ்தினாபுரத்தை விட்டு அனுப்பி விடாதீர்கள்.” என்று வேண்டினான். அவன் எல்லாவற்றிலும் களைத்துச் சளைத்துப் போனவனாகத் தென்பட்டான்.”


சத்யவதியின் ஆச்சரியம் அவள் குரலிலும், கண்களிலும் வெளிப்படையாகவே தெரிந்தது.  “என்ன?  ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா துரியோதனனை ஹஸ்தினாபுரத்திலிருந்து அனுப்புவதா?  இதில் எவருக்கும் சம்மதமில்லையே!  எவரும் இப்படிச் சொல்லவும் இல்லையே! அவன் இங்கேயே இருக்கட்டும்;  இருப்பான். யுவராஜாவாகவே!”


“தாயே, அவனை அப்படி இருக்கச் செய்வதில் ஆபத்து நிறைந்திருக்கிறது. நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தாயே!  வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே! பாண்டவர்களின் உயிரை எடுப்பதில் துரியோதனன் கிட்டத்தட்ட ஜெயித்து விட்டான். விதுரனின் சமயோசிதம் பலிக்கவில்லை எனில்!  பாண்டவர்கள் உயிருடன் இருப்பது எங்கே!”


“அதெல்லாம் சரிதான் மகனே!  ஆனால் இப்போதோ யுதிஷ்டிரனை அரசனாக்கப் போகிறோம். அரசனை அவனால் எப்படி எதிர்க்க முடியும்? இயலாத காரியம் மகனே!”


“இல்லை தாயே, தாங்கள் துரியோதனனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.  அவன் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் மோசமானவனாக, பயங்கரமானவனாக ஆகி விட்டான். அதோடு இல்லாமல் அதிகாரத்தின் ருசியையும் அனுபவித்து விட்டான். யுதிஷ்டிரனோ அவன் சகோதரர்களோ இங்கில்லாமல் தனியாகப் பதவி சுகம் கண்டுவிட்டான். அனைத்து வளங்களையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டான். தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்க இவை அனைத்தும் தேவை என்பதை உணர்ந்து கொண்டு அப்படியே நடந்து கொண்டு தனக்காக ஒரு தனிக் கூட்டத்தை உருவாக்கியும் விட்டான்.  அஸ்வத்தாமா துரியோதனனின் சிறந்த நண்பனாகி விட்டான்.  ஆகவே அஸ்வத்தாமா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் துரோணர் எந்த அளவுக்கு யுதிஷ்டிரனுக்கு உதவுவார் என்பது கேள்விக்குறி!  யுதிஷ்டிரன் துரோணரை நம்ப முடியாது. துரியோதனன் ஹஸ்தினாபுரத்திலேயே தொடர்ந்து இருந்தான் எனில், பாண்டவர்கள் ஐவரும் அவனுடைய தயவிலும், கருணையிலும் தான் உயிர் வாழ வேண்டும்.”

1 comment:

ஸ்ரீராம். said...

ம்..... குழப்பங்கள் தொடங்கி விட்டன!