Tuesday, March 17, 2015

ஹஸ்தினாபுரத்து வீதிகளில் பீமன்!

அவ்வளவில் அங்கிருந்து ரேகா சென்றாள். பின்னர் பலியா பீமனைப் பார்த்து, “சின்ன எஜமான், எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தான்.  அதைக் கேட்ட பீமனும் தாராள மனதோடு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக வாக்குக் கொடுத்தான்.  பலியா அப்போது பீமனிடம்,” சின்ன எஜமான், எப்படியாவது கிருஷ்ண வாசுதேவனை நான் பார்த்தாக வேண்டும்.  அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும். நீங்கள் நான் கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்து என் பணிவான வணக்கங்களை அவருக்குத் தெரிவிக்க உதவுங்கள். என் வாழ்நாளில் இந்த வாய்ப்பை நான் தவற விட்டால் பின்னர் கிடைப்பது அரிது.”

பீமன் தான் மனதளவில் இதனால் வருந்தியவன் போல் நடித்தான். “ஆஹா, பலியா, இந்தப் பித்துப் பிடித்த மக்கள் கூட்டத்தோடு நீயுமா சேர்ந்துவிட்டாய்? என் அத்தை மகனைப் பார்க்க வேண்டும் என்ற பைத்தியம் உன்னிடமுமா இருக்கிறது?” என்று கேட்டான்.

“ஓஹோ, நீங்கள் எப்படி மறந்தீர்கள் சின்ன எஜமான்?  கிருஷ்ண வாசுதேவனைப் போன்ற மல்யுத்த வீரன் கிடைப்பானா? மிகச் சிறந்த மல்யுத்த வீரனன்றோ!அதிலும் 16 வயதிலேயே மிகத் திறமையான மல்லர்களை வென்றதோடு அல்லாமல், கம்சனையும் கொன்றானே. சாணூரன் எவ்வளவு பிரபலமான மல்லன்? அவனையே வென்றிருக்கிறான் அல்லவா? என்னுடைய மல்யுத்தக் களத்திற்கு அவன் வந்து பார்த்து ஒரு சிறிய போட்டியையும் நடத்தி ஆசீர்வதிக்க விரும்புகிறேன்.”

“சரி, சரி, உன் விருப்பம் போல் ஆகட்டும்.  நாளை சரியான நேரம் பார்த்து கோபுவை அனுப்புகிறேன்.  அவன் வந்து உன்னைக் கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்க அழைத்துச் செல்வான். ஆஹா, அந்தப் போட்டி!  அதிலே நானே கிருஷ்ண வாசுதேவனுடன் போட்டியிடட்டுமா? அல்லது கோபு? ம்ம்ம்ம்? உன் மகன் சோமேஷ்வர்? யார் சரியாக இருக்கும்? சரி, சர்ரி அதுவும் உன் விருப்பம் போல் ஆகட்டும். உனக்கு ஒன்று தெரியுமா?  அவன் என்னை மிகவும் மதிப்பான். என்னிடம் மரியாதை மட்டுமின்றி அதீதப் பாசமும் காட்டுவான். நானும் அவனை என்னுடைய சிறிய சகோதரனைப் போல் தான் நடத்துவேன்.  அவனும் அப்படியே என்னிடம் நடந்து கொள்வான்.”

“என் மல்யுத்தக்களம் மட்டும் அவனால் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டால், இத்தனை காலம் நான் வாழ்ந்த வாழ்க்கை வீணாகாது.”

பலியாவின் வீட்டிலிருந்து கிளம்பிய பீமன் அங்கிருந்த பெரிய மைதானங்களைத் தாண்டிச் சென்றான். மிகப் பெரிய மைதானங்களால் சூழப்பட்ட அரச மாளிகைகள் அவன் கண்களில் தெரிந்தன. எப்போதும் இல்லாத உற்சாகம் அவன் நடையில் தெரிந்தது.  அதன் காரணமும் அவனுக்குப் புரிந்தது. தாமரையைப் போன்ற அழகான பாதங்களைக் கொண்ட அந்த அரசகுமாரி ஜாலந்திராவை அவன் மீண்டும் பார்க்கப் போகிறான்.  அவன் உடலே மிதந்தது.  காற்றில் பறப்பதைப் போல் உணர்ந்தான்.  ஆம், அந்த அரசகுமாரியின் பாதங்களும் இப்படித் தானே பறக்கும்.  அவள் கூடவே தானும் பறப்பது போல் பீமனுக்குத் தோன்றியது. ஜாலந்திராவின் முகம் அவன் கண்ணெதிரே தோன்றியது.  உடனேயே கங்கையின் படகுத்துறையில் தன் தோள்களின் மேல் அடைக்கலமாகப் படுத்துக் கிடந்த ஜாலந்திராவின் மென்மையான உடலின் ஸ்பரிசம் அவன் நினைவில் வந்து அவனைப் பரவசப் படுத்தியது. அவள் தலை தன் தோள்களில் சாய்ந்து கிடந்ததை நினைத்துக் கொண்டு தன் தோள்களைத் தடவி விட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டான்.

அரண்மனை முற்றம் மக்களால் நிரம்பி இருந்தது.  எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். ஊர்வலத்தோடு வந்த படை வீரர் கூட்டம் மட்டுமின்றி நகர மக்களும் சேர்ந்து வந்ததால் அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.  அனைவரும் பாண்டவர்களையும், கிருஷ்ண வாசுதேவனையும் பார்ப்பதோடு அல்லாமல் அன்று அவர்கள் சார்பில் அளிக்கவிருக்கும் அரண்மனை விருந்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தோடு அங்கே தங்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே முரசுகளின் முழக்கமும், மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் ஜெய கோஷமும் சமுத்திரத்தில் ஏற்படும் அலை ஓசையை நினைவூட்டியது. அங்கு காணப்பட்ட கோலாகலமும், கொண்டாட்டமும் பீமனுக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆங்காங்கு காணப்பட்ட பெரு மரங்களின் நிழல்களையும் அவற்றின் கீழே அமர்ந்து இளைப்பாறும் மக்களையும் பார்த்துக்கொண்டே சென்றான் பீமன்.  இந்த மரங்களின் மேல் சிறு வயதில் தான் ஏறி விளையாடியது எல்லாம் அவன் நினைவில் மோதியது.  உற்ற தோழனைப் பிரிந்த நண்பனைப் போல் மீண்டும் அவற்றை ஆவலுடன் பார்த்துக் கொண்டே சென்றான் பீமன்.  அவன் முதலில் சென்றது ராணிமாதா சத்யவதியின் மாளிகைக்கு.  அங்கு போய் ராணிமாதாவை வணங்கிய பின்னரே அவள் ஆசிகளைப் பெற்ற பின்னரே மற்றவரைச் சந்திக்க எண்ணினான் பீமன்.

3 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்தான். ஆனால் நீண்ட நேரமாக பீமன் பார்வையிலேயே நகர்கிறதே...!!

sambasivam6geetha said...

இந்த பாகம் முழுவதுமே பீமனைக் குறித்தே வரும் ஶ்ரீராம். :)))

வல்லிசிம்ஹன் said...

SuvaaraSyamthaan.paarkkalaam
Bheemanaiye padikkalaam.