Wednesday, March 18, 2015

பீமனின் வருத்தம்! ராணிமாதாவின் எச்சரிக்கை!

ராணி சத்யவதியின் மாளிகையில் ராணிமாதா மிகுந்த வருத்தத்திலும் மனக் கஷ்டத்திலும் இருந்தாள்.  வரப் போகும்நாட்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என்பதை அது சூசகமாகக் காட்டியதோ? மிகவும் வருத்தத்துடன் யோசனையில் ஆழ்ந்திருந்த சத்யவதி கூட பீமனின் ராக்ஷச உருவத்தைத் தன் மாளிகையில் கண்டதும் முகம் மலர்ந்தாள். உருவத்தில் என்ன தான் ராக்ஷசத்தனமாக வளர்ந்திருந்தாலும் பீமன் நடத்தையில் இன்னமும் ஒரு குழந்தையைப் போல் தான் இருக்கிறான் என்பதைக் கண்டதும் அவள் மனம் இன்னமும் அவன் பால் கனிந்து நெகிழ்ந்தது. அவனுடைய சந்தோஷமான நடையைப் பார்த்ததுமே அவள் துக்கமெல்லாம் பறந்துவிட்டாற்போல் உணர்ந்தாள். அவனைக் கண்டதினால் ஏற்பட்ட மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் அவள் புன்முறுவலுடனும், கண்களில் அதீத அன்புடனும் பீமனை வரவேற்றாள்.

பீமன் கீழே விழுந்து அவளை வணங்கினான்.  எப்போதும் போல் தன் கைகளை ஆசி கூறும் பாவனையில் வைக்காமல் கீழே குனிந்து பீமனின் முதுகில் அன்புடன் தடவிக் கொடுத்தாள் ராணிமாதா. பீமனைப் பார்த்து, “எங்கே போயிருந்தாய் இத்தனை நாட்களாக? என்ன செய்து கொண்டிருந்தாய் பீமா? மாளிகை எரிந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றீர்களே? நீ மட்டும் அந்த ராக்ஷச உலகில் ஒரு ராக்ஷசியை என்னைக் கேளாமல் திருமணம் செய்து கொண்டு விட்டாய்.  அதோடு ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொண்டாய். இன்று வரை உன் ராக்ஷச மனைவியையோ, பிள்ளையையோ எனக்குக் கூட்டி வந்து காட்டவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் உன்னுடைய அபூர்வமான நடத்தையால் துரியோதனனைத் திரௌபதியிடமிருந்து விலக்கி விட்டாயே!  அவனைப் பின்வாங்கும்படிச் செய்துவிட்டாயே! நீ எவ்வளவு மோசமான பிள்ளை!” என்று சொன்னாள் சத்யவதி.  ஆனால் அவள் முகம் மலர்ந்தே இருந்தது.  பீமனிடம் விளையாட்டாகப் பேசுவதைப் பார்ப்பவர் புரிந்து கொள்ளும்படியான தொனியிலும் பேசினாள்.

“ஆஹா, பாட்டியாரே, என் அருமைப்பாட்டியாரே, நீர் ராணிமாதா என்பதற்குத் தகுதியானவரே!  ஆயிரம் கண் படைத்தவன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் இந்திரனை விட உமக்குப் பல்லாயிரம் கண்கள் இருக்கின்றன போல் தெரிகிறதே! எல்லா விஷயங்களும் உமக்குத் தெரிந்திருக்கிறதே! அந்த சப்தரிஷிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட உம்மளவு ஞானத்தைப் பெற்றிருப்பார்களா? இவ்வளவு மெய்யறிவு படைத்திருப்பார்களா? சந்தேகமே! ஆனாலும், ராணிமாதா, நான் செய்த நல்லவைகள் எதுவும் உம் கண்களில் படாமல் போனது என் துரதிர்ஷ்டமே!”போலியான வருத்தத்துடன் பெருமூச்சு ஒன்றை விட்டான் பீமன். பின்னர் தொடர்ந்து, “ ஆஹா, இது என்னுடைய துரதிர்ஷ்டமன்றி வேறென்ன!  கெட்ட கிரஹங்களின் சேர்க்கையால் எனக்கு இப்படி நேர்ந்திருக்கிறது.” என்று முடித்தான்.

“ஆஹா, பீமா, உன்னைப் பற்றி நான் அறிய மாட்டேனா?  அனைவரும் சேர்ந்து நகருக்குள் நுழைய வேண்டிய ஊர்வலத்திலிருந்து நீ நழுவிச் சென்று உன் பழைய விசுவாசியான பலியாவைப் பார்த்துவிட்டு இங்கே இப்போது வந்திருக்கிறாய்! அல்லவா? இதோ பார் பீமா! ஒரு குரு வம்சத்து இளவரசனைப் போல் நடந்து கொள்!  அதை எப்போது கற்கப் போகிறாய்?”விடாமல் அவனைக் கேலி செய்தாள் ராணி சத்யவதி.

பீமன் விஷமமான புன்முறுவலுடன் ராணிமாதாவை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். “தாயே, எனக்கு என்ன ஆச்சரியமெனில் குரு வம்சத்து இளவரசர்கள் மற்றோரெல்லாம் எப்போது என்னைப் பார்த்து என்னைப் போல் நடக்கக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பதே!  ஹா, ராணிமாதா, நான் மட்டும் இப்போது பலியாவைப் போய்ப் பார்க்கவில்லை எனில் நான் உயிருடன் ஆரோக்கியத்துடன் வந்திருப்பது தெரியாமலேயே அவன் இறந்தே போயிருப்பான். “ என்று அதே விஷமத்துடன் கூறினான் பீமன்.  அவன் கண்களும் குறும்பில் பளிச்சிட்டன.  “ஓஹோ, அப்படியா விஷயம்? அப்படி எனில் நீங்கள் அனைவரும் விரும்புவது போல் நான் இன்னமும் இறக்காமல் இருக்கப் போகிறேன் என்கிறாயா?” தனக்கு வந்த சிரிப்பை அடக்கிய வண்ணம் கேட்டாள் ராணிமாதா.

“ஆஹா, ராணிமாதா, தாங்கள் இப்படிப் பேசலாமா? இப்படியெல்லாம் தயவு செய்து பேசாதீர்கள்.  யமதர்மராஜனுக்கே உங்களைக் கண்டால் பயம். உங்களை அழைத்துச் செல்ல அஞ்சுகிறான். உங்களை நெருங்கவும் அஞ்சுகிறான்.  என்ன செய்வது?  நாங்கள் எல்லோருமே இந்த விஷயத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஆகிவிட்டோம்.” பீமனின் இந்தக் குறும்பான பேச்சைக் கேட்டதும் ராணிமாதாவால் இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.  வாய்விட்டுக் கலகலவெனச் சிரித்தாள். சற்று நேரம் சிரித்த ராணிமாதா தன் சிரிப்பை அடக்கியவண்ணம் கொஞ்சம் கவலையுடன் பேச ஆரம்பித்தாள். “பீமா, பீஷ்மன் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதை நீ அறிந்திருப்பாய்.  ஒரு கண நேர பலவீனத்துக்கு ஆட்பட்டு உங்கள் அனைவரையும் வாரணாவதம் அனுப்பியதன் மூலம் உங்களை மரணத்தின் வாசலைப் பார்க்க வைத்ததை நினைத்து நினைத்து வருந்துகிறான்.  இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று இரவும் பகலும் யோசிக்கிறான். நீங்கள் அனைவரும் அந்த மாபெரும் கண்டத்திலிருந்து தப்பி உயிருடன் இன்று இருப்பதற்கு எல்லாம் வல்ல மஹாதேவனே காரணம் என உறுதியாக நம்புகிறான். இப்போதாவது தான் முன்னர் செய்த தவறைத் திருத்த விரும்புகிறான்.  அதற்காக யுதிஷ்டிரனுக்கு உடனடியாகப் பட்டம் சூட்ட விரும்புகிறான்.  அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டான்.” என்றாள்.

“பாட்டியாரே, தாத்தா பீஷ்மர் அவர்களை நாங்கள் யாரும் தவறாகவே நினைக்கவில்லை.  எங்களிடம் அவருக்கு மிகப் பிரியமும், பாசமும் உண்டு என்பதை நாங்கள் நன்கறிவோம். அதோடு அவர் நேர்மையும், நீதியும் உருவெடுத்தவர்.  அது மட்டுமல்ல எங்கள் பெரியப்பா வழிச் சகோதரர்களுக்கும், எங்களுக்கும் இடையில் சகோதரச் சண்டை ஏற்படக் கூடாது என்று அவர் நினைத்தார்.  அதைத் தடுக்கவும் எண்ணினார். “

“குழந்தாய், அவன் அப்படி நினைத்தது இயற்கைதானே?” என்றாள் சத்யவதி.
“தாயே இந்த விவாதத்துக்கு ஒரு முடிவு இல்லை.  துரியோதனனுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள சச்சரவும் முடிந்து போகும் ஒன்றல்ல.  அவன் அதர்மத்தின் உருவம்; நாங்கள் தர்மத்தின் உருவம்.” கொஞ்சம் கர்வத்துடனேயே இதைக் கூறினான் பீமன். இதைப் பார்த்த சத்யவதிக்குப் புன்னகை பிறந்தது. “பீமா, பீமா, நீ மிகவும் கர்வக்காரன், ஆம். ஆனால் என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு, தம்பி. ஒரு முறையாவது ஒத்துக்கொள்!  நீ ஒரு சண்டைக்காரன் தானே?” மீண்டும் விளையாட்டாகக் கேட்டாள் ராணிமாதா.

“ஆஹா, நீங்களுமா? ராணிமாதா, நீங்களுமா இப்படிக் கேட்கிறீர்கள்? நான் இயற்கையிலேயே அமைதியானவனாக இருப்பதாலேயே துரியோதனன் இன்னும் உயிருடன் இருக்கிறான். இல்லை எனில், என்றோ அவனைச் சுக்குச் சுக்காகக் கிழித்திருப்பேன்.” உண்மையிலேயே மனம் வருந்திச் சொன்னான் பீமன். “பீமா, பீமா, உன்னுடைய நடத்தையை மாற்றிக் கொள்ளாதே. வேண்டாத விஷயங்களை நினைக்காதே. நீ உண்மையிலேயே ஒரு நல்ல பிள்ளை. கருணை, தைரியம், வீரம், பெருந்தன்மை ஆகியவை நிரம்பியவன்.  அந்த உன் குணத்தில் மாற்றம் ஏதும் செய்துவிடாதே. மிகப் பெரியதொரு கண்டத்தில் இருந்து தப்பிப் பிழைத்து இப்போது தான் தாய்நாடு வந்திருக்கிறீர்கள். இப்போது உன் பெரியப்பா பிள்ளைகளிடம் சண்டை, சச்சரவு ஏதும் வேண்டாம்.” எச்சரிக்கும் தொனியில் கூறினாள் ராணிமாதா!

1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.