Thursday, March 19, 2015

பாட்டனும், பேரனும்!

பீமன் இதற்குக் கடும் ஆக்ஷேபம் தெரிவித்தான். “ராணிமாதா, நான் எந்தச் சண்டைக்கும் போவதில்லை; யாருடனும் சண்டை போடும் எண்ணமும் எனக்கு இல்லை;  ஆனால் சண்டை, சச்சரவு என்னைத் தேடி வந்தால் விட மாட்டேன். அதில் என் பக்கம் தான் நியாயமும் இருக்கும். என் பக்கமே ஜெயிக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.” என்று சர்வ நிச்சயமாகச் சொன்னான்.

“குழந்தாய், நீ அப்படி நினைக்கப் போதுமான காரணங்கள் ஏராளமாகவே உள்ளன. ஆனால் கெடுதல்  செய்வோரையும், நினைப்போரையும் நாம் நல்லது நினைப்பதன் மூலமும், செய்வதன் மூலமுமே வெல்ல முடியும்.  நீ முதலில் அதைப் புரிந்து கொள். அதைக் கற்றுக்கொள்!” என்றாள் சத்யவதி. பீமன் அப்பாவியாக, “ஆஹா, நான் சொன்னால் நம்புவீர்களோ மாட்டீர்களோ, பாட்டியாரே, நான் அப்படித் தான் நடந்து கொள்ள இதுவரை முயன்று வருகிறேன். இன்னொரு விஷயம் தெரியும் அல்லவா உங்களுக்கு? என் மூத்த அண்ணார் யுதிஷ்டிரருக்குப் பட்டம் சூட்டினால் துரியோதனன் தற்கொலை செய்து கொள்வானாம்.  எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பாட்டியாரே, அவன் சகோதரர்கள் அனைவரும் காந்தாரம் சென்றுவிடுவார்களாம். இங்கே இருக்க மாட்டார்களாம். பாட்டியாரே, நீங்கள் ஒரு விஷயத்தில் என்னை தாராளமாக நம்பலாம்.  இந்தக் கௌரவர்கள் அனைவரும் சுகமாகக் காந்தாரம் போய்ச் சேரவும் அங்கே அமைதியான வாழ்க்கை நடத்தவும் என்னால் இயன்றதைச் செய்வேன். அதில் நீங்கள் என்னை நம்பலாம்.” சற்றும் சிரிக்காமல் இதைச் சொன்ன பீமன் திடீரென என்ன நினைத்துக் கொண்டானோ, தன் சாமர்த்தியமான பேச்சுக்குத் தானே சிரித்துக் கொண்டான். பின்னர் ராணிமாதாவை மீண்டும் நமஸ்கரித்து, “உங்கள் ஆசிகள் எனக்கு வேண்டும், பாட்டியாரே!” என்று வேண்டினான்.

“என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, பீமா.” என்றவள் பீமன் அவளையே தீவிரமாகப் பார்ப்பதைக் கண்டு, அவனுக்குள் ஏதோ ஓடுகிறது என்று புரிந்து கொண்டாள். “என்ன விஷயம், பீமா? என்ன யோசிக்கிறாய்? என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?” என்றும் கேட்டாள்.  பீமன் இதழ்களில் ஒரு குறும்புச் சிரிப்பு நெளிந்தது. “பாட்டியாரே, நான் சொல்லிவிட்டால் அப்புறம் நீங்கள் என்னைக் கோபிப்பீர்கள்.” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சின்னப் பையனைப் போல் சொன்னான் பீமன்.

“ஆஹா, இது என்ன அப்பா புது விஷயமாக இருக்கிறது? நீ எப்போதிலிருந்து என்னுடைய கோபத்தை எல்லாம் லக்ஷியம் செய்ய ஆரம்பித்திருக்கிறாய்? இது என்ன புதுப்பழக்கம்?” என்றாள் ராணி சத்யவதி. “ஆஹா, பாட்டியாரே, பாட்டியாரே, சரி கேளுங்கள், சொல்கிறேன்.  ஆஹா, நீங்கள் மட்டும் என் தாயாக இருந்திருக்கக் கூடாதா?” என்றான் பீமன். இப்போது சத்யவதியினால் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டே, “பொல்லாத பையன் அப்பா நீ! ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்ன காரணம்?” என்று கேட்டாள்.” ஆஹா, அப்படி மட்டும் இருந்தால், பாட்டியாரே, இந்த வெள்ளைத் தலைமயிர் உங்கள் தலையைச் சுற்றிலும் ஒளிவீசும் கிரீடத்தைப் போல் அலங்கரிக்கிறது அல்லவா? அத்தகைய அழகு பொருந்திய மணிமுடி எனக்கும் கிடைத்திருக்கும், வம்சம் வழியாக. ஹூம்!” என்று போலியாக சோகப்பெருமூச்சு விட்டான் பீமன். “பொல்லாதவன், பொல்லாதவன், போடா, போ!” என்று விளையாட்டாக அவன் முதுகில் அடித்தாள் ராணிமாதா.  அதன் பின்னர் பீமன் சற்று நேர சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பின்னர் ராணிமாதாவின் அரண்மனையிலிருந்து வெளியேறினான்.

அடுத்து அவன் சென்றது பீஷ்மரின் மாளிகையை நோக்கி. “ஹா, இந்தப் பொல்லாத பயங்கரமான அறிவு படைத்த கிழவனைச் சந்திக்க வேண்டும்.”  என்ற தனக்குத் தானே முணுமுணுத்த வண்ணம் மாளிகையினுள் நுழைந்தான் பீமன். பீமன் வந்திருப்பதைத் தெரிந்து கொண்ட பீஷ்மர் அவனைத் தான் இருக்கும் அறைக்கே அழைத்து வரச் சொன்னார்.  அரச விருந்துக்கான ஏற்பாடுகளில் அவர் மூழ்கி இருந்தார் என்பதைப் பார்த்த உடனே பீமன் புரிந்து கொண்டான்.  சற்றும் வளையாத திடகாத்திரமான உடலைக் கொண்ட பீஷ்மருக்கு வயதானதன் அறிகுறி அவரின் தலைமயிரிலும், தாடியிலும் மட்டுமே தெரிந்தது.  அதைக் கண்ட பீமனுக்கு எப்போதும் போல் இமயத்தின்  பனி மூடிய சிகரங்களின் நினைப்பே வந்தது.  அவரைப் பார்க்கும் போதெல்லாம் திடமான இமயத்தின் நினைவே அவனுள் தோன்றும். அவர் கால்களில் விழுந்து வணங்கிய பின்னர் கைகளைக் கூப்பிய வண்ணம் அவரெதிரில் மிக மரியாதையுடன் நின்றான் பீமன்.


“என் ஆசிகள், குழந்தாய்!” என்று தன் கம்பீரமான குரலில் சொல்லிக் கொண்டு தன் வலக்கையைத் தூக்கி அவனை ஆசீர்வதித்தார் பீஷ்மர். பீமனும் தான் கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வ சந்நிதி முன் நிற்பது போன்ற பக்தியுடன் நின்றான். “என் முடிவு என்னவென்று தெரியுமா உனக்கு?” நேரடியாகக் கேள்வியைத் தொடுத்தார் பீஷ்மர். அவர் குரலில் ஒரு முரட்டுத்தனமான கம்பீரம் தொனித்தது இப்போது. தன் கைகளைக் கூப்பிய வண்ணமே நின்றிருந்த பீமன், “தெரியும், பாட்டனாரே, அறிவேன்.” என்று மிகப் பணிவுடன் கூறினான்.

“ம்ம்ம்ம், என் முடிவுகளினால் ஏற்படக் கூடிய சிக்கல்களை எதிர்நோக்கும் தைரியம் உன்னிடம் உள்ளதா?”

பீமன் மேலும் விநயத்தோடு, “பாட்டனாரே, சாதாரணமாகவே நான் ஒரு யானையைப் போன்ற பலத்தோடு இருப்பவன்.  இப்போது இவ்விஷயத்தில் உங்கள் ஆதரவும் இருப்பதால் சாதாரணக் காட்டு யானை என்ன? தேவலோகத்தின் ஐராவதத்தின் பலமே என்னிடம் இருக்கும். ஆம் இது நிச்சயம் பாட்டனாரே!” என்றான். “ஆஹா, பீமனிடம் அடக்கமா? இது உண்மையா? ஆம், ஆம், நீ உண்மையாகவே அடக்கமாகத் தான் இருக்கிறாய்.” எல்லோரிடமும் காட்டும் கம்பீரத்தையும் முரட்டுத் தனத்தையும் சிறுபிள்ளை போல் பணிவுடன் நிற்கும் இந்த ராக்ஷச உருவம் படைத்த இளைஞனிடம் பீஷ்மரால் காட்ட முடியவில்லை.  மெல்லப் புன்னகைத்தார்.

“ஆ, ஆ, நான் அடக்கத்தின் திருவுருவமே பாட்டனாரே. நீங்கள் தாராளமாக நம்பலாம். உங்களிடம் நான் உண்மையைத் தான் சொல்கிறேன். என்னிடம் சிறிதேனும் கர்வமோ, செருக்கோ இருந்ததெனில் நான் பேசி இருப்பதே வேறு விதமாக இருந்திருக்கும்.  என்னிடம் நூறாயிரம், லக்ஷம் யானைகளின் பலம் உள்ளதெனக் கூறி இருந்திருப்பேன்.”

“ம்ம்ம்ம், ராக்ஷசர்களிடம் தங்கி இருந்ததில் உன்னுடைய குணம் மற்றும் வளர்ச்சி சிறிதேனும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தெரியவில்லை, பீமா!”

“மன்னியுங்கள் பாட்டனாரே, மன்னியுங்கள். என்னிடம் முன்னேற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது தான். இதை விட நான் வளரவும் இயலாது.  இதோ பாருங்கள், இப்போதே நான் எவ்வளவு பெரிய உருவத்தோடு இருக்கிறேன்! இதை விட அதிக வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை, பாட்டனாரே!” தன்னையும் தன் உடம்பின் பலமான தசைகளையும் பார்த்து தனக்குள் தானே ரசித்த வண்ணம் கூறினான் பீமன்.  பீஷ்மரின் முகத்தில் இப்போது புன்னகை விகசித்தது. “ம்ம்ம்ம், உன்னைச் சிறிதேனும் மாற்ற வாய்ப்பு இருக்கிறது என எண்ணுகிறேன்.  சரி, சரி, உடனே இங்கிருந்து ஓடிப் போய் விருந்தில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து கொண்டு விருந்தில் கலந்து கொள்ளச் சரியான சமயத்துக்கு வந்து சேர். அதுமட்டுமல்ல, குழந்தாய், கலவரமோ சச்சரவோ நேர்ந்தால் அதைச் சரியானபடி எதிர்கொள்ளத் தயாராகவும் வா!” என்று கூறினார்.

3 comments:

ஸ்ரீராம். said...

பீஷ்மரே தன்னை மீறி ஏதோ நடக்கப் போவதாக எதிர்பார்க்கிறார் போலும்.

வல்லிசிம்ஹன் said...

ஓஓ போன பதிவை தவற விட்டுவிட்டேனா. ஆஹா இந்தப் பீமன் தான்
எத்தனை சாஹசம் செய்கிறான். மிக அருமை கீதா. பீஷ்மரை நேரில் பார்க்க வேணும் என்கிற
ஆசைவருகிறது வாழ்த்துகள் மா

பித்தனின் வாக்கு said...

Its too good. Please continue the same