Thursday, March 26, 2015

தலை அலங்காரம் புலப்பட்டது!

இருட்டு கருமையாக எங்கும் அப்பிக் கிடந்தது. விண்ணில் இருந்து தெரிந்த நட்சத்திரங்கள் பீமன் செல்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டன. அதாவது அப்படி பீமன் நினைத்துக் கொண்டான்.  மரங்களின் பசுமையான செழுமையான கிளைகளுக்குள்ளே இருந்து கிளம்பினாற்போல் காற்று மிக மென்மையாகவும் நறுமணப் பூக்களின் வாசத்தைச் சுமந்து கொண்டும் வீசிக் கொண்டிருந்தது. இரவே அழகாய்த் தோன்றியது. எங்கும், எதிலும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் விரவிக் கிடந்தது பீமனின் மனதைப் போல. தன்னுள்ளே பொங்கிப் பிரவாகிக்கும் சந்தோஷத்தையே இயற்கையும் பிரதிபலிப்பதாக பீமன் நினைத்தான்.  ஆனாலும் அவனுக்குள்ளே ஜாலந்திராவின் நினைவு வந்து சென்றது. எதற்காக அவள் தன்னைத் தனியே பார்க்க விரும்புகிறாள்? பீமனின் ஆவல் அதிகரித்தது.

அவள் இந்த இரவில் தனியாக பலியாவின் மல்யுத்த மைதானத்தில் தன்னைச் சந்திக்க வருவதோ, அல்லது வந்து சந்தித்துச் சென்ற பிறகோ அது  வெளியே தெரிந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  வாழ்நாள் முழுமைக்கும் அவமானத்தைச் சுமந்து கொண்டு இருக்க வேண்டும் ஜாலந்திரா! அவள் நற்பெயரும் கெடுவதோடு அல்லாமல் காசி தேசத்தின் மீதும் களங்கம் ஏற்படும். எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த வண்ணம் பலியாவின் வீட்டினுள் நுழைந்த பீமனுக்கு பலியா அங்கே திறந்திருந்த ஓர் அறைக்கதவைக் காட்டினான். இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் தெரிந்தோ என்னமோ வாய்திறந்து பேசவே இல்லை அவனும். உள்ளே நுழைந்த பீமனுக்கு அங்கிருந்த மங்கிய விளக்கொளியில் அரண்மனைச் சேடிப் பெண்களின் உடைகளை அணிந்த இரு பெண்கள் நிற்பது தெரிந்தது. உயர்குடிப் பெண்கள் அல்லாத மற்றச் சேடிப் பெண்கள் தங்கள் சேலையின் முந்தானையின் ஒரு பகுதியால் தலையையும், மார்பையும் மூடிக் கொள்வதோடு ஆண்களுடன் பேசுகையில் முந்தானையின் நுனியால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும்.  தலை குனிந்தே பேச வேண்டும். இது பொதுவான மரபு. இவர்கள் இருவருமே சேடிகளா?

அங்கிருந்த இரு பெண்களில் சற்று வயதானவள் பீமனைக் கண்டதுமே அவனை நமஸ்கரித்தாள். பின்னர் அறை வாசலுக்காகச் சென்று அறைக் கதவைச் சார்த்தி மூடிவிட்டு அதன் மேல் சாய்ந்த வண்ணம் நின்று கொண்டாள். வயதில் இளையவளோ தன் கைகளைக் கூப்பிய வண்ணம் அடக்கமாக நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்த கயிறுகளால் பின்னப்பட்ட ஆசனத்தில் பீமன் அமர்ந்து கொண்டான்.  அவன் எடையைத் தாங்க முடியாமல் அது ஆட்டமாக ஆடியது. நின்ற இளம்பெண்ணைப் பார்த்து, “என்னைப் பார்க்க விரும்பிய இளம்பெண் நீதானா?” என வினவினான் பீமன். இதை அவன் சம்பிரதாயமாக சம்பாஷணையை ஆரம்பிக்க வேண்டிக் கேட்டாலும் அந்தப் பெண் ஜாலந்திராதானா என்னும் அவன் ஆவல் அதில் மீதூறிக் கிடந்ததை அவனால் மறைக்க முடியவில்லை. அந்த இளம்பெண்ணோ வாயையே திறக்காமல் தலையை மட்டும் ஆட்டி பதிலைத் தெரிவித்தாள். “ஆஹா! நீ ராக்ஷச அரசன் வ்ருகோதரனைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தாயாம்.  நீ வ்ருகோதரனால் உண்ணப்படுவாயே! அதை அறிய மாட்டாயா?  அவன் உன்னைக் கொன்று தின்று விட்டால் என்ன செய்வாய்?” சிறு பிள்ளைத் தனமான குரலில் அதே சிறுபிள்ளைத்தனமான சிரிப்புடன் கேட்டான் பீமன்.

அந்த இளம்பெண்ணோ மீண்டும் தன் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்து விட்டுப் பின்னர் வாய் விட்டுச் சிரித்தாள். பீமனுக்கு அந்தச் சிரிப்பைக் கேட்டதும் மனம் சந்தோஷத்தில் குதித்தது.  அந்த அறையே நடனம் ஆடுவதாகத் தோன்றியது அவனுக்கு.


“அது சரி, பெண்ணே! இந்த அர்த்த ராத்திரியில் என் போன்ற ஓர் இளைஞனைத் தனியாகச் சந்திப்பது எவ்வளவு பயங்கரமான ஒரு விஷயம் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லையா? இதில் உள்ள ஆபத்து உனக்குப் புலப்படவில்லையா?”

“ஓ, அப்படி ஏதேனும் என் மேல் அவதூறு கிளம்பினால் ராக்ஷச அரசன் வ்ருகோதரன் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்?  என்னைக் காப்பாற்ற மாட்டாரா?” அவள் அவன் எதிரில் தரையில் உட்காருவதை பீமன் கண்டான்.

“எல்லாம் சரி பெண்ணே! முதலில் நீ யார் என்பதை எனக்குத் தெரிவிப்பாய்! முன் பின் தெரியாத எவருடனும் என்னால் பேசவோ அவர்களுக்கு உதவுவதோ இயலாத ஒன்று. எனக்குத் தெரியாத பெண்களிடம் நான் பேசக் கூட மாட்டேன்.”


சிரித்தாள் அந்தப் பெண். கண்களில் குறும்பு பளிச்சிட்டது.”நான் யார் என்றா கேட்கிறீர்? ம்ம்ம்? எங்கள் நாட்டில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?  நீர் அதை அறிவீரா?  வ்ருகோதர அரசன் தனக்கு முன் பின் தெரியாத ஒரு இளம்பெண்ணை ஆற்றில் மூழ்குவதிலிருந்து  காப்பாற்றியதோடு அல்லாமல் அவளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டும் சென்றான் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.  அதை நீர் அறிவீரா? அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்பின் தெரியுமா?  எப்போதிலிருந்து வ்ருகோதரர் இப்படி மாறினார்?”


அவள் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து  கொண்டான் பீமன். அவனும் விடாமல், “பெண்ணே! உன்னை எனக்குத் தெரியும் எனில், நீ ஏன் சேடிப் பெண்களைப் போல் உன் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.  ஜாலந்திரா மெல்லத் தன் முகத்தை மூடிக் கொண்டிருந்த சேலையின் முந்தானையை விலக்கினாள்.  மேகங்களால் சூழப்பட்டிருந்த சந்திரன் மேகங்கள் விலகியதும் ஒளி வீசிப் பிரகாசிப்பது போல் அவள் அழகான முகம் பளிச்சிட்டது.  அதோடு அவள் தலையில் கவனமுடன் பூக்களை வைத்துச் செய்து கொண்டிருந்த தலை அலங்காரமும் புலப்பட்டது.


அவள் மூக்கில் அணிந்திருந்த வைர மூக்குத்திகளின் ஒளி அந்த விளக்கொளியில் மிக அதிகமாகச் சுடர் விட்டுப் பிரகாசித்ததோடு அவள் கன்னங்களையும், முகத்தின் பக்கவாட்டையும் பிரகாசிக்க வைத்தது.  அவள் முகத்தின் இயற்கையான ஒளியோடு இந்த வைரங்களின் ஒளியும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக பீமன் நினைத்தான்.  எத்தனை வைரங்களை அணிந்திருந்தாலும் அவை இந்தப் பெண்ணின் முகத்தின் ஒளிக்கு ஈடாகாது என்பதையும் உணர்ந்தான். அப்போது பீமனைப் பார்த்து அவள், “நான் என்ன சேடிப் பெண்ணைப் போலவா தோற்றமளிக்கிறேன்? நன்றாகப் பாருங்கள்!” என்ற வண்ணம் முந்தானையை முழுதும் விலக்கினாள் ஜாலந்திரா.

“காஷ்யா, காஷ்யா, நீ ஒரு சேடியைப் போல் அல்லவோ உன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாய்!  சரி போகட்டும், ஏன் என்னைச் சந்திக்க விரும்பினாய்?”

“உங்களை மீண்டும் பார்க்கும் ஆவலில் தான்!” வெகு சாமர்த்தியமாகச் சொன்னாள் ஜாலந்திரா.

“ஆஹா, என்னை முட்டாள் என்றா நினைத்தாய் ஜாலந்திரா?  என்னைத் திரும்பவும் பார்க்க வேண்டி நீ இத்தகையதொரு ஆபத்தான செயலில் இறங்குவாய் என என்னை நம்ப வைக்க  முயற்சி செய்கிறாயா? எந்த மூடனும் அதை நம்ப மாட்டானே! ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து நீ என்னுடன் பேச விரும்புவதாக ரேகா என்னிடம் சொன்னாள். என்ன அந்த முக்கியமான விஷயம்?  அதிலும் வாழ்வா, சாவா என்பதைப் பற்றியது என்றும் கூறினாளே! அத்தகைய முக்கியமான விஷயம் தான் என்ன?”

“நான் கிருஷ்ண வாசுதேவனைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.  அதற்குத் தங்கள் உதவி தேவை!” என்றாள் ஜாலந்திரா.