Friday, April 26, 2013

உத்தவன் தேடக் கிளம்பி விட்டான்.


வெகு நாட்களாக நாம் உத்தவனைக் காணவே இல்லை.  அவன் எங்கே போனான், என்ன செய்கிறான் என்பதை இப்போது பார்ப்போமா?  உத்தவன் பார்க்க மிகவும் ஒன்றும் தெரியாதவனாகவும், அவ்வளவு விரைவில் முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவனாகவுமே இருந்தான்.  எனினும் சில சமயங்களில் அவன் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியகரமானதாக இருக்கும்.  அதே சமயம் அந்த முடிவின்படி நடந்து கொள்ளவும் ஆரம்பிப்பான்.  இப்போது அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் தருணம் இது.  கிருஷ்ணன் அவனிடம் எப்போது பாண்டவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்றும், அரக்கு மாளிகையிலிருந்து தப்பி எங்கோ ஒளிந்து வாழ்ந்து வரலாம் என்னும் சந்தேகத்தைத் தெரிவித்தானோ அப்போதே அவன் தங்கள் தந்தைமார்களின் தாய்வழிப் பாட்டன் ஆன நாகர்களின் அரசன் ஆர்யகனைச் சந்திக்க முடிவு செய்தான்.  ஆர்யகன் கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட இடங்களில் செழித்துக் காணப்பட்ட காடுகளுக்குள்ளாக வசித்து வந்தான்.  ஆகவே அவனால் மட்டுமே அரக்கு மாளிகை எரிக்கப் பட்டபோது அங்கிருந்து தப்பிய பாண்டவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்ற இயலும்.

தெளமிய முனிவரின் ஆசிரமத்தில் நடந்த வேத வியாசரின் சந்திப்பின் போது வியாசர் அடுத்து நாககூடம் செல்லப் போவதை அறிந்தான் உத்தவன்.  முனி சிரேஷ்டரின் மூலம் இந்தப் புதிரின் விடையை அவிழ்க்க முடிவு செய்த உத்தவன் அனைவரும் உறங்கிய பின்னர் அன்று வியாச முனியைத் தனிமையில் சந்தித்து அவருடன் தானும் நாககூடம் வர அனுமதி கேட்டான்.  உத்தவனின் நோக்கத்தை அறிந்தோ என்னமோ வியாசர் உடனடியாகச் சம்மதம் கொடுத்துவிட்டார்.   ஜைமினி மஹரிஷியின் தலைமையில் வியாசரின் முக்கியமானப் பத்து சீடர்களும், நாகர்களின் முக்கியத் தலைவர்களும் உடன் வர வியாசரின் குழு அங்கிருந்து கிளம்பிப் படகுகளின் மூலமாக மூன்று நாட்களில் ஏக சக்ரதீர்த்தக்கரையை அடைந்தது.  வியாசருக்கு ஆரியர்களிடம் மட்டுமில்லாமல், நாகர்கள், நிஷாதர்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்த செல்வாக்கை உத்தவன் நன்கறிந்தான்.  வியாசரின் வரவை அறிந்த மக்கள் அந்த அந்த ஊரின் நதிக்கரைகளில் கூடி இருந்து வியாசரை வரவேற்று நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றதோடு அல்லாமல் அவருக்கும், சீடர்களுக்கும் வேண்டிய உணவு, உடை போன்ற வசதிகளையும் தந்து பெருமைப் படுத்தினார்கள்.  வியாசரும் அவ்வப்போது படகில் இருந்து கீழே இறங்கி மக்களை ஆசீர்வதித்தும், அவர்களின் விருந்தோம்பலை ஏற்றும், தக்க உபதேசங்களைச் செய்தும், அவர்களின் குறைகளைக் கேட்டும் அவர்களை உற்சாகப் படுத்தி வந்தார்.

இரவு தங்கும் இடத்தில் ஹோமம் செய்ய வியாசர் மறக்கவில்லை.  தன் வெண்கலக் குரலால் வேத மந்திரங்களை முழக்கிய ஜைமினி மஹரிஷியும், யாகங்களை முன்னின்று நடத்திய வியாசரின் சீடர்களும் அனைவர் மனதிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தினர்.  அஸ்வினி தேவர்களை வேண்டிக் கொண்டு வியாதியஸ்தர்களுக்குப் பெருமளவு மருத்துவ உதவியும் செய்தனர்.  மேலும் அனைவருக்கும் வியாசர் நேரிலேயே தன் கைகளால் உணவு அளித்தது அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கை ஒளி தோன்றியது.  ஏகசக்ர தீர்த்தத்தில் இருந்து அனைவரும் கால்நடையாகவே நாககூடத்துக்குச் சென்றனர்.  செல்லும் வழியெங்கும் நாகர்கள் கூடி இருந்து அவர்களை வரவேற்று நமஸ்கரித்து மரியாதை செய்தனர்.  சிறு வயதில் இருந்தே வியாசரைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான் உத்தவன்.  எனினும் அவரின் பெருமையை இப்போதே நன்கு உணர்ந்தான்.  அவருடைய இருப்பே அனைவர் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை ஒரு அதிசயமாக உணர்ந்தான்.  எத்தனை வருடங்கள் எனச் சொல்ல முடியாத வருடங்களாக வியாசர் கங்கையின் கரைகளிலும், யமுனையின் கரைகளிலும் ஆசிரமம் ஆசிரமமாகச் சென்று அங்குள்ள ரிஷி, முனிவர்களுக்கு உபதேசித்து வந்தார்.  ஆரியர்களை ஒரு நல்வழிப் படுத்தி வந்ததோடு காடுகளிலேயே வசித்த நாகர்களையும் நன்முறையில் திருப்பி அவர்களையும் ஆரியர்களின் பாதையில் மெல்ல மெல்ல மாற்றி வந்தார். 

நான்கு நாட்கள் நடைப்பயணத்தின் பின்னர் அவர்கள் நாககூடம் வந்தடைந்தனர்.  ஆர்யகன் தன் பேரன் ஆன கார்க்கோடகனுடன் வியாசரையும் அவர் குழுவையும் எதிர்கொண்டு அழைத்தான்.  நூறு வயதைத் தாண்டிய ஆர்யகனைப் பார்க்கக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.  உடலில் எலும்பும், தசைகளும் இருக்க வேண்டிய அளவை விடக் கொஞ்சமாகவே இருந்தன.   முடக்கு வாதத்தால் வளைந்த கால்கள், நீண்ட எலும்புகள் துருத்திக் கொண்டு தெரியும் கைகள்,  உயிர்க்களையே இல்லாத சுருங்கிய முகம், மஞ்சள் வண்ணக் கண்கள், ஆனால் அந்தக் கண்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டே இருந்தது எப்படி இருந்தது எனில்   அவன் மூளை மட்டும் எப்போதும் தயார் நிலையில், எந்தவிதமான சூழ்நிலையையும் ஈடு கொடுக்கும் விதத்தில் இருக்கிறது என்பதைக் காட்டின.  கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட  அந்தப் பிரதேசத்தில் அவன் வைத்தது தான் சட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவன் கண்கள். ஆறு மனைவிகளும், பதினோரு பிள்ளைகளையும் கணக்கற்ற பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்த ஆர்யகன், பார்க்க எலும்புக்கூடாக உயிரோடு நடமாடும் பிணம் போன்று தெரிந்தாலும் இன்னமும் அந்த உலகை அவனே கட்டி ஆண்டு கொண்டிருந்தான் என்பதும், அவன் சொல்லை மீறி அங்கு எதுவும் நடக்காது என்பதும் தெரிந்தது.

Saturday, April 20, 2013

கண்ணன் என் ஆசான்!



“பொறுமையை இழக்காதீர்கள் மன்னரே.  உங்களுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவேண்டும் என்பதே உங்கள் சபதம்.  உங்களை வலுவான நிலையில் நிறுத்திக் கொண்டு துரோணரை இருந்த இடம் தெரியாமல் செய்வதில் உங்கள் சபதம் நிறைவேறியதாகாதா? யோசியுங்கள்.”

கண்ணன் பேசிய தொனியும், அவன் குரலும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியும், உண்மையும் துருபதன் மனதைக் கவர்ந்தது.  சிறு பிள்ளை போல் பால்வடியும் முகம் கொண்ட இந்த இளைஞன், என்னவெல்லாம் சொல்கிறான்!  அவனுடைய அதிகாரத்தை எப்படி எல்லாம் அழகாய்க் காட்டுகிறான்.  பிறருக்குத் துன்பமோ, வருத்தமோ விளைவிக்காமல் தன் பேச்சை ஒப்புக்கொள்ள வைக்கிறானே.  இவனுடைய சக்தியை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  துருபதன் மனம் கண்ணன் பால் சென்றது.  கண்ணனின் யோசனைக்கு அவன் ஒத்துக் கொண்டான். அவன் மனம் கண்ணனின் சொற்களால் சமாதானம் அடைந்தது.

“எனில் என் சபதம் நிறைவேறும் என உறுதியாகச் சொல்கிறாயா? “ துருபதன் கேட்டான். 

“நிச்சயமாய்.  நான் உறுதியாகச் சொல்கிறேன்.  நானும் இருந்து உங்கள் சபதம் நிறைவேறுவதைப் பார்க்கப்போகிறேனே!’
“நீயும் சுயம்வரத்தில் கலந்து கொள்வாயா கண்ணா?”  துருபதன் மனம் இன்னமும் கண்ணனையே மருமகனாக ஏற்க விரும்பியது.  

“அப்போது அதற்கு ஏற்ற மனநிலையில் நான் இருந்தேன் எனில் பங்கேற்பேன்.  இல்லை எனில் இல்லை. ஆனால் மன்னரே, யாராக இருந்தாலும் இந்தப்போட்டியில் ஜெயிப்பவர்கள் சிறந்த வில்லாளியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.”

துருபதன் யோசனையுடன் கண்ணனையே பார்த்தான். அவன் மனம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையோ, அவன் மனதின் ஆழத்தையோ துருபதனால் உணரமுடியவில்லை.    திடீரென அவன் ராஜ்யாதிகாரம் அதிகரித்து விட்டதைப் போலவும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாகவும் தன்னை உணர்ந்தான் துருபதன்.  இந்த நம் இளைய விருந்தாளியின் கூற்றுக்கேற்ப திரெளபதியின் சுயம்வரம் மட்டும் நடந்து முடிந்தால்?? இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கும் இந்தத் துன்ப நிலை மாறி துரோணரைப் பழிவாங்க மட்டுமின்றி ஆர்யவர்த்தத்திலேயே வல்லமை பொருந்தியதொரு அரசனாகவும் திகழலாம்.  நன்றியுடன் கண்ணனைப் பார்த்தான் துருபதன்.

“வாசுதேவா, நீ கூறியபடியே திரெளபதியின் சுயம்வரத்தை நடத்துகிறேன்.  நீ கூறியவற்றில் மட்டுமில்லாமல் உன்னிடம் எனக்கு மிக்க நம்பிக்கை உள்ளது.  அப்படி ஒருவேளை இந்த சுயம்வரத் திட்டத்தின் மூலம் தோல்வியையே அடைந்தாலும் எனக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.”

கிருஷ்ணன் சிறு புன்னகையோடு, “இந்த சுயம்வரம் மட்டும் தோல்வி அடைந்தால், இவ்வுலகிலேயே அனைத்தையும் இழந்தவனாக நான் மட்டுமே இருப்பேன்.  எனக்குத் தான் தோல்வி.”

“அனைத்தையும் இழந்துவிடுவாயா? வாசுதேவா, நீ என்ன சொல்கிறாய்?”

“ஆம், மன்னரே,   உங்கள் நட்பை முதலில் இழப்பேன்.  திரெளபதிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனவன் ஆவேன்.  இந்தப் பரந்த பரதகண்டத்தின் அனைத்து இளவரசர்கள், அரசர்கள் முன்னிலையில் யாதவர் குலத்துக்கே அபக்கியாதியைத் தேடிக் கொடுத்தவன் ஆவேன்.  யாதவ குலமே அவமானம் அடையும்.”

பின்னர் தனக்குத் தானே மெதுவாக, “பின்னர் கிருஷ்ணன் எதற்கு இவ்வுலகில் தோன்றி இருக்கிறான்?  தர்மம் எங்கே காக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அதற்குத் தக்கப் பாதுகாப்புக் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே அவன் பிறந்ததன் காரணம்.”

மிகவும் ஆவலுடனும், அன்புடனும் கிருஷ்ணனின் தோள்களில் தன்னிரு கரங்களையும் வைத்துக் கொண்டே துருபதன், “ வாசுதேவா, நீ என்ன சொல்கிறாயோ, அதன்படியே செய்கிறேன்.  உன் ஆலோசனையை அப்படியே ஏற்கிறேன்.  அவ்வப்போது உன் ஆலோசனைகளை உத்போதனனுக்கும், ஷ்வேதகேதுவுக்கும் வழங்கி வா. “

“இன்னொரு ஆலோசனையும் உள்ளது மன்னரே!”
“என்ன அது?”

“நாளையே அறிவிப்புச் செய்யுங்கள்.  திரெளபதிக்கு சுயம்வரம் நடத்தப் போவதாகவும், அந்தச் சுயம்வரம் அடுத்த வருடம் சைத்ர மாதத்தில் நடக்கப் போவதாகவும் அறிவியுங்கள்.  உடனடியாக இதைச் செய்யுங்கள்.”

மிகுந்த கிளர்ச்சியுடன் காணப்பட்ட துருபதன், “அப்படியே செய்கிறேன் வாசுதேவா!” என்றான்.

Sunday, April 7, 2013

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்! பண்பிலே தெய்வமாய்!


கண்ணனை துருபதன் பார்த்த பார்வையில் இப்போது புதியதொரு நேசமும், பரிவும், அன்பும் தென்பட்டன.  “எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, எதையும் திரும்பத் தனக்கெனக் கேட்காமல் தன்னுடைய நட்பையும், அன்பையும் மட்டுமே தருகின்றானே இந்த இளைஞன்!  இவன் எப்படிப் பட்டவன்! இது எனக்கு ஒரு சவாலாக இருக்கும் போலுள்ளதே!”  ஆம், இயல்பிலேயே நல்ல முறையில் வளர்க்கப்பட்ட துருபதனுக்குக் கண்ணனின் இந்தப் பெருந்தன்மையையும் விசாலமான மனப்போக்கையும் கண்டு தான் கண்ணனிடம் திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததைக் கண்டு தன் மேலேயே கோபம் வந்தது.  துருபதனின் பழிவாங்கும் எண்ணமெல்லாம் கட்டோடு மறைந்து இந்தக் கருநிறத்து இளைஞனின் மேல் அளவற்ற அன்பும், மரியாதையும் மிகுந்தது.  கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, எனக்கு ஒரு வாக்குறுதி அளிப்பாயா?  நீ எப்போதும் எனக்கும், என் குழந்தைகளும், என் நாட்டுக்கும் நண்பனாகவே இருக்க வேண்டும்.  எந்நிலையிலும் இதற்கு மாற்றம் கூடாது.  திரெளபதியை சுயம்வரத்தில் மேஹசந்தி வென்றாலும், அவ்வளவு ஏன்?  துரியோதனனோ, சிசுபாலனோ இந்தப் போட்டியில் வென்று திரெளபதியை அடைந்தாலும், நீ மட்டும் எப்போதும் எங்கள் நண்பனாகவே இருக்க வேண்டும்.  இந்த வாக்குறுதியை மட்டும் அளிப்பாய்!” என்றான்.
“அப்படியே மன்னா! நான் சத்தியம் செய்கிறேன்.  என்றென்றும் உங்கள் நண்பனாகவே இருப்பேன்.  ஆனால் ஒரு விஷயம், நீங்கள் மேலே சொன்ன எவருக்கும் இந்தத் தேர்வில் வெற்றியடைவது கடினமே!” என்றான் கண்ணன்.

“எப்படிச் சொல்கிறாய் கண்ணா?” துருபதன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான்.

“மன்னா, நீங்கள் அநுமதி அளித்தால் நான் ஆசாரிய ஷ்வேதகேதுவை இங்கே விட்டுச் செல்கிறேன்.  சுயம்வரத்துக்கான ஏற்பாடுகளை அவர் கவனித்துக் கொள்வார்.  பின்னால் ஆசாரியர் சாந்தீபனி அவர்கள் வந்து சேர்ந்ததும், எப்படிப் பட்ட வில் வித்தை வைக்கலாம் என்பதை அவர் முடிவு செய்யட்டும்.  ஆனால், மன்னரே, மீண்டும் உங்களை ஒரு விஷயத்தில் எச்சரிக்கிறேன்.  சுயம்வரம்  நடைபெறப்போகிறது, அதற்கு ஒரு போட்டி உண்டு என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்.  எப்படிப்பட்ட போட்டி என்றோ, அது வில் வித்தையில் போட்டி என்றோ சுயம்வரத்தின் ஆரம்பநாள் வரை கடைசி நிமிடம் வரை எவரும் அறியக் கூடாது.  அதை மட்டும் ரகசியமாகவே வைத்திருங்கள்.  வில் வித்தையில் சிறந்தவனை மட்டுமே திரெளபதி மணப்பாள் என்பது கடைசி நிமிடத்தில் தெரிந்தால் போதும்.”

“வாசுதேவா, அவர்கள் அனைவரும் திரெளபதி தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்ந்தெடுக்கப் போவதாய் அன்றோ  நினைப்பார்கள்?  அது சரியல்ல.  அப்படி எல்லாம் நியாயமில்லாமல் நடந்து கொள்ள என் மனம் சம்மதிக்கவில்லை.  அது ஏமாற்றுவது போல் ஆகிவிடாதா?”  துருபதன் மனம் கவலையில் ஆழ்ந்தது.

“ஏன், மன்னா?  ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசி தன் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவது கூடத் தவறா?  அவளுக்கு அந்த உரிமை இல்லையா?  அதைச் சுயம்வர நாளன்று அவள் அறிவித்தல் தவறா?”

“இல்லைதான். “ யோசனையுடன் துருபதன் கூறினான்.

“பின்னர் ஏன் கவலை அடைகிறீர்கள் மன்னரே?  இளவரசியவர்கள் சுயம்வர தினத்தன்று சுயம்வர மண்டபத்திற்கு வந்து தனக்கு வரப்போகும் கணவனுக்கு ஏற்படுத்தி இருக்கும் போட்டியைப் பற்றிக் கூறி அந்தப் போட்டியில் வெல்பவனையே மணமகனாக ஏற்கப் போவதாய் அறிவிக்கச் செய்யுங்கள்.  இது இளவரசியின் விருப்பம்.  இது தான் உண்மையும் கூட.”  என்றான் கண்ணன்.

“தெரியவில்லை வாசுதேவா, என்ன சொல்வது எனப் புரியவில்லை.  எப்படி இவ்வளவு விரைவில் உன்னிடம் நம்பிக்கை வைக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை.  அல்லது நான் சரியானதொரு செயலைத் தான் செய்கிறேனா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை.  உன்னுடைய யோசனையை ஏற்பது சரியா என்றும் தெரியவில்லை.  ஆனால் என் மனம் உள் மனம் அதை ஏற்கச் சொல்கிறது.  நீ மட்டும் என்னுடைய சபதத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டால், நான் உன்னுடைய யோசனையை ஏற்கிறேன்.  “

“கவலைப் படாதீர்கள் மன்னரே!   நான் நினைக்கிறாப்போல் சுயம்வரம் வெற்றி பெறட்டும்.  வெற்றி பெற்றுவிடும் என்றே எண்ணுகிறேன்.  அப்படி மட்டும் நடந்துவிட்டால்…….. மன்னா, நீர் மிக்க வலிமை பொருந்திய மன்னராக இந்த ஆர்யவர்த்தத்தில் திகழ்வீர்கள்.  எந்தவிதமான இடையூறுமின்றி உங்கள் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளலாம்.  ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியை உங்கள் மருமகனாய்ப் பெறுவதோடு அவன் நண்பர்கள் அனைவரும், அவன் உறவினர்களும் உங்களுக்கு உறுதுணையாய் வருவார்கள்.  இப்போது வெறுப்பிலும், விரக்தியிலும் ஆழ்ந்திருப்பவர்களால் எந்தவிதமான குறையையும் கூற இயலாது.”

“யாதவர்கள்?  கண்ணா அவர்களின் உதவி எனக்குக் கிட்டுமா?”

“வருவோம் மன்னா.  பலராமன் தலைமையில் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வந்து கூடுவோம்.  குரு வம்சத்தினரின் துணையும், பலமும் இருந்தாலும் துரோணர் பலமிழந்தவராகவே இருப்பார்.  நீங்கள் அவரைக் குறித்துச் சிந்தனையே செய்ய வேண்டாம்.”

“இதன் மூலம் என் சபதம் எப்படி நிறைவேறும்?” துருபதனின் முகம் வாட்டமுற்றது.  உள்ளூறக் கோபமும் வந்தது.

Friday, April 5, 2013

திரெளபதிக்கு சுயம்வரமா? துருபதனின் ஒப்புதல்!



“கண்ணா, சுயம்வரம் என்பது இப்போதெல்லாம் மிகப் பழமையான நாகரிகமாகி விட்டது.  அர்த்தமற்ற வெறும் சடங்காகி விட்டது.  அப்படியே சுயம்வரம் நடத்தினாலும் அதன் மூலம் திரெளபதிக்கு ஆர்யவர்த்தத்தின் மிக வலிமை வாய்ந்த வில் வித்தையில் சிறந்ததொரு வீரன் கிடைத்துவிடப் போகிறானா?”

“மன்னரே,  தாங்கள் புரிந்து கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் செய்ததைப்போன்றதொரு உண்மையான சுயம்வரத்தை நீங்கள் ஏன் நடத்தக் கூடாது? “ சற்றே குரலைத் தழைத்துக் கொண்டஅன் கிருஷ்ணன்.  “ ஒரு பரிக்ஷை வையுங்கள் மன்னா,  உண்மையானதொரு பரிக்ஷையாக அது இருக்கட்டும். வில் வித்தையிலேயே சிறந்ததொரு போட்டியைத் தேர்ந்தெடுங்களேன்.  அதன் மூலம் இந்தத் தேர்வில் எந்த வில்லாளி ஜெயிக்கிறானோ அவனை இளவரசி மணமகனாய்த் தேர்ந்தெடுக்க இயலும்.”

துருபதன் அசந்து விட்டான்.  அவனுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.  இதன் மூலம் ஏற்படப் போகும் தாக்கங்களை நினைத்துப் பார்த்தான்.  சிறந்த வில் வீரன் யார் எனவும் நினைத்துப் பார்த்தான்.  ஒரு புன்னகையுடன் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா, இப்போது உன்னையன்றிச் சிறந்த வில்லாளி வேறு எவர் இருக்கின்றனர்?”  என்றான்.

“எனக்குத் தெரியவில்லை மன்னா!  வில் வித்தையில் சிறந்த வீரன் யார் எவர் என்பது இன்னமும் நமக்குள் நிச்சயமாய்த் தெரியவில்லை.  இந்தப் போட்டி முடிவடைந்ததாகவும் தெரியவில்லை.  ஆனால் மற்ற வில்லாளிகள் நிறையப் பேர் இருக்கையிலே நீங்கள் அவர்கள் அறியாமல் என்னை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? எத்தனை அரசகுமஅரர்களை அழைக்க முடியுமோ அவ்வளவு பேரையும் அழையுங்கள்.  கடுமையானதொரு போட்டியை ஏற்படுத்துங்கள்.  அதன் மூலம் அரசகுமாரி சிறந்ததொரு வீரனைத் தன் மணமகனாய்த் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.”

துருபதன் தன் மனதிற்குள்ளாக இந்த யோசனையை  நன்கு ஆராய்ந்தான்.  இதன் மூலம் ஏற்படப் போகும் நிகழ்வுகள் அவன் மனதில் புரண்டு ஓடிக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் மேலே பேசிக் கொண்டிருந்தான்.  “உங்களுடன், உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் பல தேசத்து அரசர்கள், அரசகுமாரர்கள் என அனைவரும் இந்தச் சுயம்வரத்துக்கு வருவார்கள்.  நீங்கள் தவிர்க்கவே முடியாததொரு அதிகார மையமாக அவர்கள் நடுவில் விளங்குவீர்கள்.  மேன்மேலும் பற்பல அரசர்களின் உதவிகளும் அவர்களின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கும்.  அதன் மூலம் உங்கள் படைபலம் மேலும் வலுவடையும்.  நீங்கள் யாரையும் எவரையும் விரோதிக்கப் போவதில்லை.  இந்தச் சுயம்வரத்தின் மூலம் அனைவரையும் நீங்கள் சரிசமமாகப் பார்க்கிறீர்கள் என்றே உறுதியாகும்.  சுயம்வரத்தின் முடிவில் நீங்கள் மிகவும் வலுவடைவீர்க்கள்.  மனரீதியிலும், படை பலமும், மேலும் நண்பர்கள் வட்டமும் விரிவடைந்து வலுப்பெறுவீர்கள்.  இப்போது நீங்கள் என்னை உங்கள் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தீர்களானால், பல அரசர்கள், இளவரசர்களின் விரோதத்துக்கு ஆளாவீர்கள்.”

“எல்லாம் சரிதான் வாசுதேவா! ஆனால் எந்த அரசனாலும், இளவரசனாலும் இந்தப் போட்டியில் ஜெயிக்கவே முடியவில்லை எனில்?  என் பெண்ணுக்கு மணமகன் யார்?”

“பின்னர் உங்கள் மகளும், நீங்களும் வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களில் எவரேனும் தகுதி வாய்ந்த ஒருவரை உங்கள் மகளுக்கு மணமகனாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமே?”

“வாசுதேவா, அப்போது என் மகள் உன்னைத் தேர்ந்தெடுத்தால்?”  துருபதனின் முகத்தில் குறும்புச் சிரிப்பு. ஒரு கண நேரம் துரோணரையும், அவர் தன்னை அவமானம் செய்ததையும், தான் பழிவாங்க வேண்டியே உயிர் தரிப்பதையும் மறந்தவன் போல் காணப்பட்டான்.   ஆனால் கண்ணன் அசரவில்லை.

“மன்னா, இந்தப்போட்டியில் நான் கலந்து கொண்டு ஜெயிக்கவில்லை எனில்?”  கண்ணனும் சிரித்தான்.  “பின்னர் உங்கள் மகள் என்னை எப்படித் தன்மணமகனாய்த் தேர்ந்தெடுப்பாள்?  அவள் தான் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியை அல்லவோ மணக்க எண்ணுகிறாள்?  ஆனால் அரசே, யாதவர்களின் நட்பும், பலமும் என்றென்றும் உங்களுக்குக் கிடைக்கும்.  நான் உங்கள் மாப்பிள்ளையாக ஆகாவிட்டாலும் யாதவர்கள் உங்களை என்றும் நட்பாகவே கருதுவார்கள். அதில் சந்தேகமே வேண்டாம்.”

சற்று நேரம் யோசித்த துருபதன் பின்னர் கண்ணனிடம் மெதுவாக, “வாசுதேவா, நீ கூறியபடி சுயம்வரம் வைத்தால் நிச்சயமாய் என் பலம் கூடும்.  நட்பு வட்டமும் பெருகும். “ என்று ஒத்துக் கொண்டான்.

Tuesday, March 26, 2013

கண்ணனின் யோசனையும் துருபதனின் கவலையும்!


மறுநாள் துருபதன் தன் குடும்பத்து சோகத்தைக் கொஞ்சம் அடக்கிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்.  கிருஷ்ணனை அழைத்துத் தன் மகளுடன் சந்தித்துப் பேசிய பின்னர் அவன் என்ன முடிவுக்கு வந்தான் எனக் கேட்டான்.  கண்ணன், மன்னனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா, தங்கள் அழகிய மகளைச் சந்தித்துப் பேசினேன்.  நீங்கள் சம்மதித்தால், உங்களுக்கு உதவத் தயாராக இருப்பதாய் அவளிடம் வாக்குறுதி கொடுத்துள்ளேன்.” என்றான்.

துருபதனின் முகம் மலர்ந்தது.  “வாசுதேவா, நான் நினைத்தேன்.  திரெளபதியைச் சந்தித்த பின்னர் நீ அவள் பேச்சைத் தட்ட முடியாமல் எங்கள் உதவிக்கு வருவாய் என எதிர்பார்த்தேன். அற்புதமான பெண் அவள். என் மகளாய்க் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்!”

“மன்னா, நான் ஒளிவு, மறைவின்றிப் பேசி விடுகிறேன்.  சற்றுப் பொறுமையாய்க் கேளுங்கள்.  உங்கள் சபதம் நிறைவேற எவ்விதத்தில் உதவ வேண்டுமோ அதற்கெல்லாம் நான் தயாராகவே இருக்கிறேன்.  என்னை உங்கள் நண்பனாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் பக்கமே எப்போதும், என்றும் துணை நிற்பேன் என வாக்கும் கொடுக்கிறேன்.  ஆனால், மன்னரே, தயவு செய்து இந்தத் திருமணப் பேச்சை மட்டும் விட்டுவிடுங்கள்.  எனக்கு திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை.”

“ஏன் வாசுதேவா ஏன்?  என் மகள் அதற்குத் தகுதியுடையவள் இல்லையா?  அவளும் சம்மதிக்கிறாள் அல்லவா?  நீ எங்கள் பக்கம் நின்று எங்களுக்கு உதவச் சம்மதித்தால் அவளை மணக்கத் தடை என்னவோ?” துருபதன் முகம் வாடியது.

“ஓஹோ, மன்னரே, உங்கள் மகளை நான் குறை கூறவில்லை.  அவளுக்குத் தகுதி இல்லை என்றும் சொல்லவில்லை.  இந்த ஆர்யவர்த்தத்தின் இளவரசிகளில் அவள் ஒரு ரத்தினம்.  இவளைப் போன்ற இளவரசிகள் இந்த ஆர்ய வர்த்தம் மட்டுமின்றி இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதும் கிடைப்பது அரிது.  அவள் விரும்பினால் எந்த நாட்டு இளவரசனையும் மணக்கலாம்.  ஆனால் மன்னரே, அந்த இளவரசனும் அவளை மணக்கச் சம்மதிக்க வேண்டும் அல்லவா?”  கண்ணனின் புன்னகை புதிராக இருந்தது.

“ம்ம்ம்ம், அப்போது நீ அவளை உன் மனைவியாக ஏற்கத் தயாராக இல்லை? அல்லவா?”துருபதனின் கேள்வியில் அவன் வருத்தம் தெரிந்தது.  தன் மகளைக் குறித்து அவன் கொண்டிருந்த கர்வம் பங்கமடைந்து போனது போல் மனம் வருந்திக் காணப்பட்டான்.  “என்னைத் தவறாய் நினைக்க வேண்டாம், பிரபுவே..  எந்த வீரனையும் கல்யாணம் செய்து கொண்டு போவதற்கு அவள் ஒரு சாதாரணப் பெண்ணல்ல!  அதை நானும் அநுமதிக்க மாட்டேன்.  அவளே தன் மனப்போக்குப் படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாள்.ன்  இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு வீரனை மணக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாள். அதற்குத் தான் நாம் உதவ வேண்டும்.  நான் என்னாலான உதவி செய்து அவள் விரும்பிய வண்ணமே தக்கதொரு சுத்த வீரனை மணக்க உதவப் போகிறேன்.”

கண்ணன் ஏதேதோ பேசித் தன்னை ஏமாற்ற முயல்கிறானோ என்ற சந்தேகம் துருபதனுக்கு வந்துவிட்டது.  புருவங்களை நெரித்துக் கொண்டு, “பின் நீ அவளை மணக்க மறுக்கிறாய்?  அப்போது உன் உதவியும் எங்களுக்குக் கிட்டாதல்லவா?”  என்றான்.   “இல்லை, மன்னா, நான் எப்போதுமே உங்கள் பக்கம் தான் இருப்பேன்.  உங்களுக்கு என் பூரண ஒத்துழைப்புக் கிட்டும்.  உங்கள் மகள் எவரை மணந்தாலும் அதற்காக நான் மாற மாட்டேன்.”

“அப்படியா, வாசுதேவா, ஜராசந்தனின் பேரனை அவள் மணந்தாலுமா?” துருபதன் இகழ்ச்சியுடன் கேட்டான்.

“மன்னரே, நீங்கள் தான் அதைக் குறித்து முடிவு செய்ய வேண்டியவர்.  ஆனால் உங்கள் இடத்தில் நான் இருந்தால், “  சற்றே தயங்கிய கண்ணன், மேலே தொடர்ந்தான்;  “உங்கள் இடத்தில் நான் இருந்தால், என்னுடைய பழிவாங்கும் எண்ணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, அவளுடைய முழுத் தகுதிக்கு ஏற்றதொரு நல்ல இளவரசனைத் தேர்ந்தெடுப்பேன். “

துருபதன் மனம் கண்ணன் கூறியவற்றில் லயிக்கவில்லை.  இந்த வேறுபாடுகளைக் குறித்து யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.  “அவள் உன்னை மணக்க ஆசைப்பட்டால் என்ன செய்வது வாசுதேவா?” என மீண்டும் வினவினான்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே, அவள் தன் மனதை எப்படிப் பக்குவம் செய்து உறுதி கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?  துரோணரையும் அவருடைய சீடர்களையும் யுத்தத்தில் தோற்கடித்துச் சரணடைய வைக்கும் வல்லமை கொண்டதொரு வீரனைத் தான் மணக்கவேண்டும் என்ற உறுதி கொண்டிருக்கிறாள்.  அவளுக்கு அப்படி ஒரு மணமகன் தான் தேவை.  வேறு எவருடனும் அவள் சந்தோஷமாக இருக்க மாட்டாள்.”

“அது உண்மைதான்!” என ஒத்துக் கொண்டான் துருபதன்.  கண்ணன் தன் ஆலோசனையைச் சொல்ல ஆரம்பித்தான்.  “பின்னர் அவளுக்குத் தன் மணமகனைத் தேர்ந்தெடுக்க நீங்கள் ஏன் ஒரு சுயம்வரம் நடத்தக்கூடாது?”

Sunday, March 24, 2013

கண்ணனின் தீவிர சிந்தனை!


கண்ணன் கண் முன்னே பாஞ்சால நாட்டு அரசன் துருபதனின் குடும்பம் விரிந்தது.  எத்தனை அழகான காட்சி!  இந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பினாலும், பாசத்தினாலும் பிணைந்து இருக்கின்றனர்.  ஆனால் இந்த ஷிகன்டின் மட்டுமே தனித்துத் தெரிகிறானே?  அதோ பாஞ்சால மன்னன் சிம்மாசனத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கையில் அவன் காலடியில் அவன் முழங்காலில் கைகளைப் பதித்த வண்ணம் திரெளபதி.  தகப்பன் அருகே அவனுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல் த்ருஷ்டத்யும்னன் காணப்பட, சத்யஜித்தோ இனம் தெரியா வருத்தம் முகத்தில் துலங்கச் செய்வதறியாது தவிக்கும் தகப்பனை ஆதுரத்துடன் பார்த்தபடியே நிற்கிறான்.  இவர்கள் அனைவரும் பாசம் என்னும் மெல்லிய கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆச்சரியமான குடும்பம்!

ஷிகன்டின் இந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவன்.  எவராலும் அவனை அடக்க இயலவில்லை.  மிகவும் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குலத்தில் பிறந்தாலும் அதோடு ஒட்டவில்லை.  கிருஷ்ணன் இதை நினைத்து ஆச்சரியம் கொண்டாலும் இன்னொரு பக்கம் அவனுக்கு வருத்தமாகவும் இருந்தது.  அவனுடைய இந்த திடீர் மறைவு குடும்பத்தினருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் அதே சமயம் பல பிரச்னைகளுக்கும் பதில் சொல்ல இயலாத நிலையில் இருந்த துருபதனுக்கு ஒரு வகையில் நிம்மதியையும் கொடுத்திருக்குமோ?   கிருஷ்ணன் மனதில் இந்தக் குடும்பத்தின் மீது இரக்கம் சுரந்தது.  அவர்கள் அனைவரின் மனதிலும் வெறுப்பின் விளைவாக விளைந்த கோபமும், பழிவாங்கும் எண்ணமும் நிரம்பி இருந்தது தான்.  ஆனாலும் இத்தகைய பெரிய பாரம்பரியம் கொண்ட அரச குடும்பத்தினரிடம் அரிதாகவே காணப்படும் பெருந்தன்மையும்,  உயர் பண்புகளும் இவர்களிடம் அபரிமிதமாகவே காணக் கிடைக்கிறது.  இதை நினைத்துக் கண்ணனுக்கு  உவகையும், ஆச்சரியமும் ஏக காலத்தில் தோன்றியது.  திரெளபதியுடன் தனக்கு நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தான் கண்ணன்.  அதன் காரணமாகவே இப்போது அவன் முக்கியமான முடிவுகள் எடுத்தாக வேண்டும்.

இங்கே இப்போது இருக்கும் நிலைமை மிக மோசமாகக் காண்கிறது.  எந்த நேரத்திலும் நிலைமை முற்றி அதன் மூலம் கலகம் என்னும் பெருந்தீ உருவாகலாம்.  மனக்கசப்பு என்னும் உணர்வால் துருபதன் மனமும், அவன் பெண், பிள்ளைகள் மனங்களும் நிரம்பி வழிகின்றன.  பெருமையும், அகங்காரமும், கர்வமும், பேராசையும்  கொண்ட துரோணரை இவர்கள் ஒருக்காலும் தங்கள் நண்பராக ஏற்கப் போவதில்லை.

இதே வெறுப்பும், பேராசையும் தான் துரியோதனனையும், அவன் சகோதரர்களையும், நண்பர்களையும் பீடித்திருக்கிறது.  பாண்டவர்கள் மேல் வெறுப்பு, கோபம், பொறாமை. இந்த வெறுப்பும், கோபமும் பாண்டவர்கள் மேல் மட்டுமில்லாமல் பாண்டவர்களுக்கு ஆதரவாக யார் நின்றாலும், கெளரவர்களின் வழியில் குறுக்கே வருவதாகவே நினைத்து இன்னும் கோபம் கொள்கின்றனர்.  துரியோதனன் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்குகிறான்.  அவனே ஒரு பிரச்னை தான்.  தற்சமயம் குருக்ஷேத்திரத்தில் இருந்தாலும் விரைவில் ஹஸ்தினாபுரம் திரும்பிவிடுவான்.  அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவனே யுவராஜா.  ஹூம், இதன் மூலம் சர்வ வல்லமை கொண்ட பதவியில் அமர்ந்துவிடுவான்.  சகுனியின் ஆலோசனையின் பேரில் துரோணரும் ஆதரவு தெரிவிக்கத் தன் யுவராஜப் பதவியை நிச்சயம் செய்ய வேண்டிப் பாஞ்சாலத்தின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான்.

இவர்களுடைய இந்தப்  பிரச்னைகளால் ஆர்யவர்த்தம் முழுதும் நாசமாவதோடு அல்லாமல் ஜராசந்தனுக்கு இன்னமும் வசதியாகப் போய்விடும்.  மகதத்திலிருந்து கிளம்பிக் காசியை ஒரு நொடியில் வீழ்த்திவிட்டுப் பாஞ்சாலத்திற்குள் புகுந்து கொள்ள அவனுக்கு நேரமாகாது.  ம்ஹூம், மஹா பெரிய பிரச்னை.  நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  இதிலிருந்து நான் தப்ப முடியாது;  தப்பவும் கூடாது.  என்ன ஆனாலும், என்ன விலை கொடுத்தாவது இதைத் தடுக்கவேண்டும்.  என் கடமையை நான் ஆற்றியாகவேண்டும்.  இந்தப் பயங்கர நெருக்கடி நிலைமையைக் கொஞ்சம் தள்ளிப் போடப் பார்க்கலாம்.  முழுவதாய்த் தடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.  தள்ளிப் போடவேண்டுமெனில் புதியதொரு சூழ்நிலை உருவாக வேண்டும்.  துருபதனை முன்னிட்டுக் கொண்டே அது நடைபெறவும் வேண்டும்.  எப்படியாவது துருபதன் ஜராசந்தனுடனோ அல்லது மற்றப் பேராசை பிடித்த இளவரசர்கள், அல்லது அரசர்களுடனோ உடன்படிக்கை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டும்.  இதன் மூலம் துருபதனின் வெறுப்பைக் குறைக்க முயல வேண்டும்.  வெல்ல வேண்டும்.  அதற்கேற்ற சக்தி எனக்கு வேண்டும்.   துருபதனின் வாழ்க்கையின் குறிக்கோள் துரோணரை வெல்வது அல்ல எனக் காட்டி அவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தூண்ட வேண்டும்.  கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

Sunday, March 17, 2013

ஷிகன்டினைக் காணவில்லை!


“நேர்மையின் வடிவம் எனப்படும் பீஷ்மர் அப்போது எங்கே போனார்?  தூய்மைக்கும், நேர்மைக்கும் தன்னை ஒரு அவதாரம் எனக் கூறிக்கொள்வாரே?  அப்போது எங்கே போனார்? பரதனின் குலத்தில் பிறந்த மாபெரும் சக்கரவர்த்தி, அதுவும் குரு வம்சத்தினரின் சக்கரவர்த்தி என்ற பெருமையில் மூழ்கி இருக்கும் திருதராஷ்டிரர் என்ன செய்து கொண்டிருந்தார்?  அவர்கள் அனைவரும் துரோணர் ஏதோ ஒரு பெரிய அரசனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றி விட்டார் என எண்ணினார்களோ என்னவோ! ஹஸ்தினாபுரத்தில் துரோணருக்கு அப்படி ஒரு மாபெரும் வரவேற்புக் கொடுத்தனர்.  “  திரெளபதி தொடர்ந்தாள்.  கிருஷ்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.  இவ்வளவு மேன்மையான இதயமும், எண்ணங்களும் கொண்ட ஒரு இளவரசியின் வேண்டுகோளைத் தட்டுவது என்றால்……. கிருஷ்ணன் மனம் அவனையும் அறியாமல் திரெளபதியின் பால் கவரப்பட்டது.  ஆனால் அதே சமயம் அவளை மணந்து கொண்டு துருபதனின் நோக்கத்தை ஈடேற்றவும் கிருஷ்ணனுக்கு இஷ்டமில்லை.

திரெளபதியை நோக்கிய கண்ணன், “ஒருவேளை நான் ஒத்துக் கொண்டதன் பின்னரும்……. தோற்றுப் போனேன் எனில்?” என வினவினான்.  திரெளபதியின் முகம் புன்னகையால் மலர்ந்து விகசித்தது.  “உங்களைக் குறித்து நாங்கள் அனைத்தும் அறிவோம் வாசுதேவரே!  நீங்கள் ஒரு நாளும் தோற்க மாட்டீர்கள்.” என்றாள்.
“ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள் இளவரசி?”  கண்ணனும் புன்னகையோடு கேட்டான்.

“துரோணரின் சீடர்களில் இரண்டே பேர் தான் வில்வித்தையில் சிறந்து விளங்குபவர்கள்.  ஒன்று அர்ஜுனன், இன்னொருவன் கர்ணன்.  குரு சாந்தீபனியின் சீடர் ஆன கிருஷ்ணனின் சக்கரமோ எல்லாவற்றையும் அடியோடு அழிக்க வல்லது.  அந்த மஹாதேவனின் திரிசூலம் கூட அதன் முன் தோற்கும்.”

“ஓ, ஓ, மிகவும் மிகைப்படுத்திச் சொல்லி இருக்கின்றனர் இளவரசி.  அதுவும் குரு சாந்தீபனி அவர்கள் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டுபவர்.”  “அப்படி நீர் தோற்றால் நாங்கள் அதை ஏற்கத்தான் வேண்டும்.” கபடற்ற திரெளபதியின் பேச்சு கண்ணன் மனதைக் கவர்ந்தது. 

“இளவரசி, நான் உங்களுக்கு உதவ வேண்டுமெனில் உங்கள் கையைப் பிடித்து உங்களை மணந்தே ஆகவேண்டுமா?  வேறு விதத்தில் உங்களுக்கு உதவ முடியாதா?”

“ஏன் , என்னை உங்களுக்குப்பிடிக்கவில்லையா?  உங்கள் மனைவியாக ஆக நான் தகுதியற்றவளா?” திரெளபதியின் குறும்பான பேச்சைக் கேட்டுக் கண்ணன் சிரித்தான்.

“இளவரசி, நான் ஒரு மாட்டிடையன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என எண்ணுகிறேன்.  ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசியை நான் எவ்வாறு மணக்கமுடியும்?  அதற்கான தகுதியே எனக்கில்லை.  அதோடு இந்த ராஜாங்க விஷயங்களுக்காக இளவரசிகளின் வாழ்க்கையை பேரம் பேசுவதையும் நான் கட்டோடு வெறுக்கிறேன்.  திருமணம் என்பது ஒரு வியாபாரம் அல்ல.  நாம் திருமணம் குறித்துப் பேச வேண்டாம்.   உங்கள் தந்தையின் சபதம் குறித்துக் கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்த மணமகனை நீங்களே தேர்ந்தெடுங்கள் இளவரசி.  திருமணம் என்னும் பந்தம் இல்லாமலேயே நான் துருபதன் பக்கமே நின்று அவருக்கே உதவிகள் செய்வேன் என்னும் உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கிறேன்.  உங்களுக்கும் என்னுடைய உதவிகள் உண்டு இளவரசி, நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வேண்டும்.”

அவர்கள் பேச்சு திடீரென நின்றது.  கண்ணன் திரும்பிப் பார்த்தபோது துருபதன் வந்து கொண்டிருந்தான்.  அவன் ஏதோ முக்கியமான அதிர்ச்சியான விஷயத்தைக் குறித்துக் கேள்விப் பட்டு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இங்கே வந்து கொண்டிருக்கிறான் எனக் கண்ணனுக்குத் தோன்றியது.  எப்போதையும் விட இப்போது மிகவும் கடுமையாகவும், பயங்கரமாகவும் அவன் முகம் காட்சி அளித்தது.  தன் மகனைப் பார்த்து, “த்ருஷ்டத்யும்னா, ஷிகன்டின் மறைந்துவிட்டான்!” என்று அறிவித்தான்.  அவன் குரலில் தாள முடியாத கோபம் இருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.  த்ருஷ்டத்யும்னன், சத்யஜித், திரெளபதி மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  தங்கள் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டனர்.  


“என்ன, உண்மையாகவா?” எனக் கேட்க, துருபதனும், “ஆம், உண்மைதான்.  ஷிகன்டின் மறைந்து விட்டான்.  அவன் எங்கெல்லாம் ஒளிந்திருக்கக் கூடும் என்பதை அறிந்த அங்கெல்லாம் அவனைத் தேடினேன்.  ஆனால் அவன் எங்கும் காணப்படவில்லை.  எப்படி மறைந்தான் என்பதற்கான அடையாளங்களும் கிடைக்கவில்லை.”  சோர்வுடனும், மனக் கலக்கத்துடனும், அங்கிருந்த மரம் ஒன்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மேடையில் துருபதன் அமர்ந்து கொண்டான்.  “அவன் பிறந்திருக்கவே வேண்டாம்!” என்று வேதனை மிகுந்த குரலில் கூறிவிட்டுத் தன் தலையைத் தன்னிரு கரங்களாலும் பிடித்துக் கொண்டான்.  அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.  கிருஷ்ணன் நிலைமையை உணர்ந்தவனாய் எதுவுமே பேசாமல், எதுவுமே கேட்காமல் அங்கிருந்து மெல்ல வெளியேறினான்.