Sunday, September 19, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

கண்ணன் வந்துவிட்டான்!

தொடர்ந்து தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளால் ராணி பத்மாவதி மிகுந்த மனக்கஷ்டத்திலும் உடல் கஷ்டத்திலும் இருப்பதைப் புரிந்து கொண்ட உத்தவனுக்கு அவள் மேல் பரிதாபம் தோன்றியது. அதற்குள்ளாக ஸ்ரீகாலவனுக்குப் பாதபூஜைகள் நடக்க அவன் பாதங்களுக்குச் செய்யப்பட்ட அபிஷேஹ நீர் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு ராணி பத்மாவதியிலிருந்து அங்கு கூடியிருந்த அனைவரும் அதைப் புனித நீராகக் கருதி உட்கொண்டனர். இயந்திரத்தனமாய் இயங்கிய பத்மாவதியும் அதற்கு நேர்மாறாக உணர்ச்சிப் பெருக்கோடும், பக்திபூர்வமாயும் இயங்கிய ஷாயிபாவும் உத்தவனைக் கவர்ந்தனர். ஷாயிபாவின் முழு ஈடுபாடும், தான் பிறப்பெடுத்திருப்பதே ஸ்ரீகாலவனுக்கு வழிபாடுகள் நடத்தவென்று அவள் காட்டிய பக்தியும் உத்தவனை வியக்க வைத்தது. ஸ்ரீகாலவன் பேரில் பக்திப்பாடல்கள் பாடப்பட்டன.

மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தும், தனித்தனியாகவும் தூப,தீப ஆரத்திகள் எடுத்தனர். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீகாலவன் முகம் பெருமையில் பிரகாசித்த்தை உத்தவன் புரிந்து கொண்டான். மெல்ல மெல்ல பாடல்களும், ஆடல்களும் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. அந்தச் சமயம் முன்னறிவிப்பு இல்லாமல் கோட்டையின் காவலன் ஒருவன் யாரோ பிடித்துத் தள்ளுவது போல் குதிரையில் வேகமாய் நுழைந்தான். ஆடல்,பாடல்களில் ஈடுபட்டிருந்த சாமானியர்கள் எவரும் சரியாய்க் கவனிக்கவில்லை என்றாலும், அவர்கள் கவனித்திருந்தாலும் ஸ்ரீகாலவனின் அநுமதியோ, ஷாயிபாவின் அநுமதியோ இல்லாமல் பாடல்களையோ, வழிபாடுகளையோ நிறுத்த முடியாதென்பதால் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் தன் ஒரு கண்ணசைவால் ஸ்ரீகாலவன் கோட்டைக்காவலனின் அவசரமான நுழைவைக் கவனித்துக்கொண்டான். உடனே தன் கைகளை மேலே உயர்த்தினான். மந்திரம் போட்டது போல் கூட்டம் மெளனமானது.

அந்தக் காவலனைத் தன்னருகே அழைத்தான் ஸ்ரீகாலவன். அவனும் அருகே வந்து, “ஸ்ரீகாலவ பரவாசுதேவருக்கு மங்களம்! உமக்கே ஜெயம்! கிருஷ்ண வாசு……….” சற்றே தயங்கிய காவலன், “யாதவ குலத்துக் கிருஷ்ணன் மதுராவில் இருந்து நம் கோட்டை வாயிலுக்கு வந்து காத்திருக்கிறான். மேன்மை பொருந்திய பரவாசுதேவராகிய உம்மை வணங்கிச் செல்லவேண்டும் என அநுமதி கேட்கிறான். “ என்றான். இதைச் சொல்வதற்குள் அவன் குளறிவிட்டான். உதடுகள் துடிதுடிக்கக் கால்களும், கைகளும் நடுங்கின. ஸ்ரீகாலவனின் முகத்தில் சின்னதாக ஒரு வியப்புக்குறி. அதைக் கேட்டுக்கொண்டிருந்த உத்தவனுக்கோ நாம் எச்சரிக்கும் முன்னர் கிருஷ்ணன் வந்துவிட்டானே! இந்த ஸ்ரீகாலவன் என்ன பண்ணப் போகிறானோ, இங்கே உள்ள நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் கண்ணன் வந்திருக்கிறான். என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

ஸ்ரீகாலவனோ, “சேச்சே, இடைக்குலத்தில் பிறந்த நீசனான மனிதனை எல்லாமா இங்கே இந்தப் புனிதமான இடத்தில் அநுமதிப்பது! கேள்விக்கே இடமில்லை. ஸ்வேதகேது, வாரும் இங்கே!” என்று அழைத்தான். ஸ்வேதகேதுவுக்கு ஒரு பக்கம் கண்ணன் வருகை மனமகிழ்வைத் தந்தாலும் இன்னொரு பக்கம் மனதில் இனம் புரியாத சஞ்சலமும் ஏற்பட்டது. எனினும் ஸ்ரீகாலவனை மீற முடியாமல் அவனருகே சென்றான்.

“உமக்குத் தான் புரியும் அல்லவா அவன் மொழி?? போம், போய் அவனை யார் என்றும், ஏன் இங்கே வர விரும்புகிறான் என்றும் கேட்டுவிட்டு வாரும்! போம், உடனே போம்!”
ஸ்வேதகேது ஏனோ தயங்கினான். ஆனால் ஸ்ரீகாலவனோ, அவனை உடனே செல்லும்படி நிர்ப்பந்தம் செய்தான். மேலும் பாதியில் நிறுத்தப்பட்ட தன்னுடைய வழிபாட்டுப் பாடல்களையும், ஆடல்களையும் மீண்டும் தொடரும்படி சைகையும் செய்தான். வேறுவழியில்லாமல் அவனை வணங்கிவிட்டு ஸ்வேதகேது செல்ல, ராணி பத்மாவதி, தயங்கின குரலில், “ஸ்வாமி, நம் கோட்டை வாயிலில் ஒரு விருந்தினர் வந்து நம்மை வணங்க விரும்பினால் அவரை நாம் வரவேற்பது தானே முறை?” என்றாள். அந்த இடத்திலேயே அடித்துவிடுவான் போல ஸ்ரீகாலவன் அவளைப் பார்த்த கடுமையான பார்வையில் ராணி பத்மாவதி மயங்கி விழாமல் நல்லவேளையாக ஷாயிபா பிடித்துக்கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்த உத்தவனுக்கு ராணி பத்மாவதி ஒரு சிறு எதிர்ப்புக் காட்டினாலும் அவளுக்குக் கிடைக்கும் தண்டனைகளின் கொடூரத்தைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. ஷாயிபா அதற்கொரு கருவியாகப் பயன்பட்டாள் என்பதையும் அறிந்து கொண்டான். அருவருக்கத் தக்க இகழத்தக்கதொரு கீழ்ப்படிதலை அவள் ஸ்ரீகாலவனை வழிபடுவதில் மிகச் சிறந்த பூஜாரிணி என்ற பெயரால் மறைக்க முயல்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஸ்வேதகேது அந்த இடத்தை விட்டுச் சென்றான். வழிபாடுகள் தொடர்ந்தாலும் அதில் முன்பிருந்த உற்சாகமும், ஈடுபாடும் குறைந்தே காணப்பட்டது. மெளனத்திலேயே பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அங்கு கூடியிருந்த அனைவருக்குமோ ஏதோ நடக்கக் கூடாத புதிய ஒரு ஆபத்து அல்லது சர்வ நாசம் ஒன்று விளையப் போகிறது எனப் புரிந்தது.

சற்று நேரத்தில் குதிரையில் திரும்பி அங்கே வந்த ஸ்வேதகேதுவிற்கு மிகுந்த மனக்கிளர்ச்சி உண்டாயிருந்தது அவன் முகத்திலே தெரிய வந்தது. குதிரையில் இருந்து கீழே இறங்கிய அவன் ஸ்ரீகாலவனிடம் வந்தான்.

“அந்த மனிதன் என்ன கூறுகிறான்?” ஸ்ரீகாலவன் அதிகாரத் தொனியில் கேட்டான்.

"ஸ்வாமி, பரவாசுதேவரே! சர்வசக்தி வாய்ந்த கடவுளே!" ஸ்வேதகேதுவின் குரலில் நடுக்கம் காணப்பட்டது. "வந்திருக்கும் விருந்தாளி தங்கள் விருப்பத்தைக் கேட்டதும் சொன்னது என்னவெனில்:
"நான், கிருஷ்ணன், யாதவ குல ஷூரர்கள் இனத்துத் தலைவன் ஆன வசுதேவனின் குமாரன். நான் இங்கே தன்னந்தனியாகவே வந்துள்ளேன். என்னுடன் வந்திருக்கும் என் மூத்த சகோதரன் ஆன பலராமன், மற்றும் என் அத்தை கணவர் ஆன சேதிநாட்டு அரசர் ஆகியோரை நான் என்னுடன் அழைத்துவரவில்லை. அவர்கள் பரிவாரங்களும், எங்கள் பரிவாரங்களும் கூட அங்கேயே தான் தங்கி உள்ளது. நான் கரவீரபுரத்தின்........."இந்த இடத்தில் சற்றே தயங்கிய ஸ்வேதகேது தன்னைச் சமாளித்துக்கொண்டு, "கடவுளான ஸ்ரீகாலவ வாசுதேவனின் நட்பை நாடி வந்துள்ளேன்." இதுதான் அவன் சொன்னது பரவாசுதேவரே! ம்ம்ம்ம்ம் மேலும் ஒரு வரமும் கேட்டுள்ளான். "என் சிநேகிதனும் சித்தப்பன் மகனுமான உத்தவனை விடுவிக்க வேண்டும். அவனை என்னிடம் திருப்பி அனுப்பவேண்டும். மற்ற ஆசாரியர்களையும், அவர்களோடு சிறைப்பட்டிருக்கும் புநர்தத்தனையும் விடுவித்து அவரவர் இருப்பிடம் அனுப்பி வைக்கவேண்டும். இது என் வேண்டுகோள்" இது தான் அவன் சொன்னவை, பரம்பொருளே!" ஸ்வேதகேது நடுங்கும் குரலில் சொல்லி முடித்தான்.

ஏளனமாய்ச் சிரித்த ஸ்ரீகாலவன், "அந்த முட்டாள் இடையனை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டாயல்லவா?" என்று கேட்டான்.

"ஸ்வாமி, தங்கள் அநுமதியோ உத்தரவோ இல்லாமல் எவ்வாறு அனுப்புவேன்?" என்ற ஸ்வேதகேது, "ஆனால் உத்தவனிடம் நீங்கள் சொன்னதை நானும் அப்படியே அந்தக் கிருஷ்ணனுக்கும் சொல்லிவிட்டேன். எங்கள் மாமன்னர், அவர் மன்னரே அல்ல, மூவுலகையும் ஆளும் பரம்பொருள், ஒப்பற்ற கடவுள், பரவாசுதேவர், அவரை அவ்வாறு நீயும் ஒப்புக்கொண்டு உன் சிநேகிதர்களையும் ஒப்புக்கொள்ள வைப்பாயாக. அதற்குப் பின்னர் ஒருவேளை பிரபுவும் தயாளுவும் ஆன ஸ்ரீகாலவ பரவாசுதேவர் அவர்களை விடுவித்து அனுப்பச் சிந்திக்கலாம்." என்று சொன்னேன் ஸ்வாமி!"

இதைச் சொல்லும்போதே கண்ணனுக்கும், தனக்கும் நடுவே நடந்த சம்பாஷணை ஸ்வேதகேதுவின் நினைவில் வந்தது. கிருஷ்ணன் பார்த்த உடனேயே ஸ்வேதகேதுவை அடையாளம் புரிந்து கொண்டான். அவன் நிலைமையையும் சரியான கோணத்தில் புரிந்து கொண்டான். ஒரு தாய் தன் மகன் கோபமாய்ச் சென்றவன் திரும்பக் கிடைத்ததும் காட்டும் அளவற்ற பாசத்தையும் அன்பையும் காட்டிய கண்ணன், ஸ்வேதகேதுவைப் பார்த்ததுமே,"ஸ்வேதகேது, என் சகோதரரே, நீர்..... ஆஹா, எந்த இடத்தில் எவரைப்பார்க்கவேண்டாமோ அந்த இடத்தில் அவரே! நீர் என்னை இப்போது எந்தக் கடவுளை ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்?? நாம் குருகுலத்தில் இருக்கும்போது காலை, மதியம், மாலை, இரவு நேர வழிபாடுகளில் சேர்ந்து வழிபடுவோமே, அந்த வாசுதேவனையா?? அல்லது இப்போது புதியவராய் நீர் அறிந்தவரையா?" என்ற வண்ணம் மிகவும் இரக்கமான குரலில் கேட்டான். கண்ணன் குரலின் சோகம் ஸ்வேதகேதுவின் மனதில் முள்ளாய்த் தைத்தது. இதைவிடக் கண்ணன் உத்தவனைப் போல் சண்டை பிடித்திருக்கலாமோ?? உத்தவன் சண்டை போட்டபோது கூட ஸ்வேதகேதுவால் அவனுக்குச் சரியாகப் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் கண்ணனின் இந்தச் சோகம் ஸ்வேதகேதுவின் மனதில் ஆழமாய்ப் பாய்ந்தது.

அவன் நினவோட்டத்தைக் கலைத்துக்கொண்டு ஸ்ரீகாலவன், "என்ன பதில் சொன்னான் அந்த இடையன் ?" என்று கேட்டான். ஸ்வேதகேது தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "யாதவ குலக் கிருஷ்ணனா? ஸ்வாமி, அவன் சிரித்தான் நான் சொன்னதுக்கு. அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா?" நான் இன்னும் திருக்கைலைப் புனித யாத்திரைக்குச் செல்லவில்லை. அதற்குரிய நேரம் கிட்டும்போது அங்கு சென்று அனைவருக்கும் மேலான கடவுளான அந்த மஹாதேவரை அங்கே நிச்சயமாய் வணங்குவேன். அதற்குக் காத்திருக்கவும் செய்கிறேன்." என்று சொல்லிவிட்டான், மகாப் பிரபு!" என்றான் ஸ்வேதகேது.

"இவ்வளவு போக்கிரியா அவன்?? துஷ்டன், கொடூர மனம் படைத்தவன், பாவம் நிறைந்தவன், அதிகப் பிரசங்கி!" என்று சரமாரியாகக் கண்ணனை ஆத்திரம் தீர வைதான் ஸ்ரீகாலவ வாசுதேவன். "அவன் என்ன ஆயுதங்கள் தரித்துப் பூரண ஆயுதபாணியாக வந்துள்ளானா?" என்றும் கேட்டான்.

1 comment:

priya.r said...

நல்ல பகிர்வு
ஆஹா !
கண்ணன் வருவான்
எங்கள் குல மன்னன் வருவான்
கவலைகள் விட்டதம்மா !!