Saturday, September 25, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஷாயிபாவின் ஆவேசம்!

ஸ்ரீகாலவனும் ஸ்வேதகேதுவின் மூர்க்கமான பதிலால் ஆச்சரியம் அடைந்தான். அதோடு கிருஷ்ண வாசுதேவனை ஸ்வேதகேது முன்னமே அறிவான் என்பதும் அவனுக்குப் புதிய செய்தியாக இருந்தது. ஸ்வேதகேதுவைப் பார்த்து, “கிருஷ்ண வாசுதேவன் எவ்வாறு உன் சிநேகிதன் ஆனான்?” என வினவ, ஸ்வேதகேதுவும், சாந்தீபனியின் ஆசிரமத்தில் இருவரும் இருந்ததையும், தான் வேதங்கள் கிருஷ்ணனுக்குக்கற்பித்து வந்ததையும் நினைவு கூர்ந்தான். மேலும் கிருஷ்ணனைத் தான் தன் உயிருக்கும் மேலாய் நேசித்ததையும் கூறி, இன்னமும் அவ்வாறே கிருஷ்ணனை நேசிப்பதாயும் அதில் சிறிதும் மாற்றமில்லை எனவும் கூறினான். “ஆஹா, அவன் உனக்கு இன்னமும் நண்பனா?? எனில் அவனுடன் சேர்ந்து நீயும் மரணத்தைத் தழுவுவாய்!” என்றான் ஸ்ரீகாலவன்.

தன் வீரர்களைப் பார்த்து, “இந்த்த் துரோகியை இழுத்துச் சென்று நரகத்தில் தள்ளுங்கள்!” என ஆணையிட்டான். வீர்ர்களிடம் தன் ஆயுதங்களை ஒப்படைத்த ஸ்வேதகேது அவர்களைப் பின் தொடர்ந்தான். ஷாயிபாவின் தொண்டையிலிருந்து ஓர் அவலக்குரல் எழும்பி அடங்கியது. அதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த ஸ்வேதகேது தன் கண்களாலேயே அவளுக்குத் தன் எதிர்ப்பைக் காட்டினான். அந்த நிமிடமே ஷாயிபா தன்னைச் சுற்றிப் பின்னியிருந்த மாயவலை பட்டென அறுந்து அவள் தன் மேல் செலுத்தி வந்த ஆதிக்கத்திலிருந்தும் முழுமையாய்த் தாம் மீண்டுவிட்டோம் என்றும் புரிந்து கொண்டான் ஸ்வேதகேது.

ஸ்ரீகாலவன், ஆணவத்துடன், “நல்லது. நாம் நம்முடைய இந்தப் புனிதமான திருக்கரங்களாலேயே அந்த மாட்டிடையனுக்கு மரணத்தைத் தருவோம். வேறு வழியில்லை. எங்கே ரத சாரதி?? சாரதி, என்னுடைய மிகச் சிறந்த போர் ரதத்தைத் தயார் செய்து கொண்டுவாரும்! ஆயுதக் களஞ்சியக் காவலரே! மிகச் சிறந்த வில்லாயுதத்தையும் அதற்கேற்ற அம்புகளையும் தயார் செய்யுங்கள். இந்த மூவுலகுக்கும் ஒரே உற்ற கடவுளான நாம் இப்போது மரணக் கடவுளான யமனாகவும் மாறவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அந்த யாதவகுல இடைச்சிறுவனுக்கு மரணம் நெருங்கிவிட்டது! “ என்றான்.

சீக்கிரமே ஒரு அழகான மாய, மந்திரங்களில் சிறந்த ரதம் ஒன்று வந்தது. முழுக்க முழுக்கத் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட அந்த ரதம் இரண்டு குட்டையான , அதே சமயம் வலுவான குதிரைகளால் இழுக்கப் பட்டு வந்தது. ரத சாரதிகளும் இருவர் இருந்தனர். இருவருமே தங்கக் கவசங்கள் அணிந்திருந்தனர். கனமான உருட்டுக்கட்டைகள் தாங்கிய எட்டு மெய்க்காவலர்கள் சூழ்ந்திருந்தனர். ரதத்தின் மேலே ஸ்ரீகாலவனின் கொடி பறந்து கொண்டிருந்தது. தன்னுடைய மாட்சிமை பொருந்திய வில்லையும், அம்புகளையும் எடுத்துக்கொண்ட ஸ்ரீகாலவனின் அம்புறாத்தூணியில் விலை மதிக்க முடியாத கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. அந்த அம்புறாத்தூணியை எடுத்துக்கொள்ளத் தனியே ஒரு காவலன் நியமிக்கப் பட்டிருந்தான். இத்தனை ஆடம்பரங்களோடு ரதத்தில் ஏறிய ஸ்ரீகாலவன் அதன் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டான். அவன் உடலிலும் தங்கமும், நவரத்தினங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஜொலிப்பதைப் பார்த்தால் பணமும், அதிகாரமும் அங்கே ஸ்ரீகாலவனுக்குக் கைகட்டிச் சேவகம் புரிவதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கூடியிருந்த மக்கள் அனைவரும், “ஜெயவிஜயீபவ, ஸ்ரீகாலவ வாசுதேவருக்கு மங்களம்!” என்றெல்லாம் கோஷங்கள் இட, அதைப் பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் பெருமையோடு பயணித்த ஸ்ரீகாலவன் வெகு சீக்கிரமே, தான் அமர்ந்திருந்த உயர்ந்த பீடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒரு ரதத்தில் மெல்லிய உருவம் கொண்ட ஒரு சிறுவன் அமர்ந்திருந்ததைப் பார்த்தான். தன்னுடைய பதிலுக்காகவே அவன் அங்கே காத்திருக்கிறான் என்பதையும் புரிந்துகொண்டான். ஸ்ரீகாலவன் மேற்கொண்டு ஏதும் பேசும்முன்னரே, அவன் ரதத்தில் விரைந்து வருவதைப் பார்த்த கிருஷ்ணன், தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினான். பின்னர், “ஹே ஸ்ரீகாலவ வாசுதேவரே, உமக்கு நமஸ்காரம்! நான் கிருஷ்ண வாசுதேவன், வசுதேவனின் குமாரன் உம்மை வணங்குகிறேன். என் தந்தை சார்பாக வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.” என்றான்.

ஸ்ரீகாலவன் அதற்குப் பதிலாகத் தன் காவலனிடமிருந்து ஒரு அம்பைப் பெற்றுக்கொண்டு வில்லில் பூட்டிய வண்ணம் வில்லின் நாண் ஏற்படுத்தும் சப்த்த்துக்கும் மேலாக உரத்த குரலில், “மூவுலகிலும் வாசுதேவன் என இருப்பவன் நான் ஒருவனே! வேறு எந்த வாசுதேவனையும் என்னால் ஏற்க முடியாது!” என்று கூறிக்கொண்டே அம்பைச் செலுத்தினான். அம்பு வரும் நோக்கத்தையும், அதன் விரைவையும் வெகு சீக்கிரம் கணக்கிட்டுக்கொண்ட கிருஷ்ணன் தன் ரதத்தைச் சற்றே அப்பால் நகர்த்த, அம்பு கிருஷ்ணனின் தோள்பட்டையை உரசிக்கொண்டு சென்றது. அவன் இடது தோளில் சற்றே காயத்தை அது ஏற்படுத்த பார்த்துக்கொண்டிருந்த கருடன், க்ரீச்சிட்டான். அந்தக் குரலைக் கேட்ட சுற்றுவட்டாரமே நடுங்கியது.

கிருஷ்ணன் தன் ரதத்தை மெல்ல மெல்ல ஸ்ரீகாலவனின் ரதத்துக்கு அருகே கொண்டு சென்றான். கிருஷ்ணனின் குதிரைகள் நன்கு பழக்கப் படுத்தப் பட்டிருந்தன. ஸ்ரீகாலவனின் குதிரைகளோ நேர்மாறாக முரட்டுத் தனமாய்ப் பழக்கி இருந்தார்கள். ஆகவே அந்தக் குதிரைகளைப் பழகிய கிருஷ்ணனின் குதிரைகள் லேசாக ஒரு இடி இடிக்க, அவை நிலை தடுமாறிச் சுற்றிச் சுற்றி வந்தன. ரதமும் சேர்ந்து சுற்றியது. ரதத்தில் உள்ளவர்கள் நிதானித்துக்கொண்டு குதிரைகளை அடக்க முயற்சிக்கும் முன்னரே, கிருஷ்ணன் தன் குதிரைகள் உதவியோடு அந்தக் குதிரைகளை ரதத்திலிருந்து பிரித்தான். தறிகெட்ட குதிரைகள் மிரண்டு நிற்கத் தன் ரதத்தில் ஏறி நின்றுகொண்ட கிருஷ்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் சக்ராயுதத்தை எடுத்தான்.

நிலைமையைப் புரிந்து கொண்டு ஸ்ரீகாலவன் தன்னை நிதானப் படுத்திக்கொண்டு அடுத்த அம்பை எடுத்துக் கிருஷ்ணனின் மார்புக்குக் குறி வைத்தான். ஆனால் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதே அறியாதவண்ணம் கிருஷ்ணன் செலுத்திய சக்ராயுதம் ஸ்ரீகாலவனின் கழுத்தை வெட்டித் தள்ளிவிட்டுத் திரும்பக் கிருஷ்ணனின் கைகளுக்கே போய்ச் சேர்ந்தது. ஸ்ரீகாலவனின் உடல் ரதத்தின் இருக்கையில் தத்தளித்துத் தடுமாறியது.
ரத சாரதிகள் என்ன செய்வது எனப் புரியாமல் குதிரைகள் சென்ற திசை நோக்கி ரதத்தைச் செலுத்த முற்பட, குதிரைகளோ வேறுபக்கம் ஓடி விட்டிருந்தன. இப்படி அவர்கள் குழம்பிக்கொண்டிருந்தபோதே கிருஷ்ணன் கரவீரபுரத்துக்குள்ளே தன் ரதத்தைச் செலுத்திக்கொண்டு நகருக்குள் நுழைந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே பலராமனும், தாமகோஷனும் சேர்ந்து கொள்ள தளபதியான ஸ்வேதகேதுவோ, அரசன் ஆன ஸ்ரீகாலவனோ இல்லாமல் விழித்துக்கொண்டிருந்த கரவீரபுரத்துப் படைகள் எதிர்ப்பின்றிச் சரண் அடைந்தன. கிருஷ்ணன் முதலில் நரகமான சிறைச்சாலைக்குள் இருந்த ஆசாரியர்களையும், புநர்தத்தனையும் ஸ்வேதகேதுவையும் விடுவித்தான். உத்தவனும் இதற்குள் வந்து சேர்ந்து கொண்டு கரவீரபுரத்தில் நடந்தது அனைத்தையும் கிருஷ்ணனுக்குத் தெரிவித்தான். ராணி பத்மாவதியை அழைத்து அவளுக்கு உரிய மரியாதையைச் செலுத்திய கிருஷ்ணன் அவள் மனம் நோகாவண்ணம் அவள் கணவனின் மரணச் செய்தியையும் தெரிவித்து அவளை ஆசுவாசப் படுத்தினான். அவர்களின் ஒரே குமாரன் ஆன ஷக்ரதேவனுக்கு உடனடியாகப் பட்டம் கட்டி அரசன் ஆக்கலாம் எனவும் ஆறுதல் கூறினான். தான் வேறு வழியில்லாமலே ஸ்ரீகாலவனைக் கொல்ல நேர்ந்ததாயும், அவனுடைய நட்பையே நாடி வந்த தன்னைக் கொல்ல அவன் மேலும் மேலும் முயற்சிக்கவே அவனைக் கொன்றதாயும் கிருஷ்ணன் கூறினான்.

ஷக்ரதேவனை ஒரு நல்ல ஆசாரியரிடம் சேர்ப்பித்து நல்லதொரு அரசனாக அவனை மாற்றி நல்ல அரசாட்சியைதரும்படி மாற்றுவதாயும் உறுதி கூறினான். நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கெனச் சிறப்பு வழிபாடுகளோ தனி வழிபாடுகளோ இல்லை என்றும் அவரவர் அவரவருக்குப் பிடித்த கடவுளரை, பிடித்த முறையில் வணங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கச் செய்தான். விடுவித்த ஆசாரியர்கள் இஷ்டப்பட்டால் அங்கேயே தங்கிக் குடிமக்களுக்கு அனைத்துத் தர்மங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், வேத, வேதாந்தங்கள், ஆயுதப் பயிற்சி, சங்கீதப் பயிற்சி, மற்றக் கலைகளைக் கற்பிக்கலாம் எனவும் அதற்கென அவர்கள் ஆசிரமம் ஏற்படுத்திக்கொள்ள மக்கள் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் எனவும் அறிவிக்கச் செய்தான். அங்கே தங்க இஷ்டப் படாத ஆசாரியர்கள் அவரவர் விரும்பும் இடத்துக்குச் செல்லலாம் எனவும் கூறச் செய்தான்.

இறந்த ஸ்ரீகாலவனுக்கு உரிய அரசமரியாதைகளுடன் எரியூட்டவும் ஏற்பாடுகள் செய்தான். அரசமரியாதைகளோடு ஒரு பேரரசனுக்குரிய மரியாதைகளோடு எரியூட்டப் பட்ட ஸ்ரீகாலவ வாசுதேவனின் இறுதிச் சடங்குகளைக் கிருஷ்ண வாசுதேவன் அருகில் இருந்து ஆசாரியர்கள் உதவியுடன் ஸ்ரீகாலவனின் குமாரன் ஷக்ரதேவனைச் செய்ய வைத்தான். எல்லாம் முடிந்து அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அங்கே ஒரே சப்தம். இனம் புரியாததொரு அமர்க்களம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் யோசனையுடன் தனக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடத்தில் உத்தவனோடும், புநர்தத்தனோடும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். தடால் என்ற சப்தத்துடன் கதவு திறக்கப் பட்டது. அலங்கோலமான ஆடையுடன் காற்றில் கேசமும், சேலைத் தலைப்பும் பறக்க, கண்கள் கோபத்திலும், அழுகையிலும், சிவந்திருக்க முகம் அவமானத்தில் வெந்து துடிக்க, கண்மணிகளோ அவை நெருப்புக் கட்டிகளோ என்னும்படியான அனல் உமிழும் பார்வையோடு ஷாயிபா அங்கே நுழைந்தாள்.

4 comments:

frutarians said...

அலங்கோலமான ஆடையுடன் காற்றில் கேசமும், சேலைத் தலைப்பும் பறக்க, கண்கள் கோபத்திலும், அழுகையிலும், சிவந்திருக்க முகம் அவமானத்தில் வெந்து துடிக்க, கண்மணிகளோ அவை நெருப்புக் கட்டிகளோ என்னும்படியான அனல் உமிழும் பார்வையோடு ஷாயிபா அங்கே நுழைந்தாள்

Hysteria?

priya.r said...

நல்ல பகிர்வு
பாருங்கள் ;கண்ணன்
விரோதியை வீழ்த்திய விதமும் வென்ற விதமும் வர்ணிக்க
வார்த்தைகள் போதவில்லை! நன்று நன்று
ஹரே கிருஷ்ணா !

sambasivam6geetha said...

Ashwinji, in a way! :))))))

sambasivam6geetha said...

Priya, Thank Youma.