பலராமன் ரேவதியின் தந்தையைப் பார்த்தே தீருவது எனத் தீர்மானித்தான். அரசன் குக்குட்மின் நல்ல உயரமாய் இருந்தான். சொல்லப் போனால் பலராமனே உயரமான இளைஞன். அவனையும் விட அதிக உயரமாய் இருந்தான். குக்குட்மின் வசித்த குகைக்கு குரு சாந்தீபனியோடு கண்ணனும், பலராமனும் வந்தார்கள். குக்குட்மின் அசையாமல் விறைப்பாக அமர்ந்திருந்தான். சாந்தீபனி இருவரையும் அறிமுகம் செய்து வைத்தபோதும் அவன் முகம் உணர்வுகள் அற்றே காணப்பட்டது. இருவரையும் சற்று வெறுப்புடனே பார்த்தான். மனிதர்களைக் கண்டாலே பிடிக்காமல் போய்விட்டது அவனுக்கு. சாந்தீபனி சகோதரர்கள் இருவரின் சாகசங்களையும் பற்றி அவனுக்குக் கூறினார்.
குக்குட்மின் கண்களில் அவ்வப்போது தெரிந்த ஒளியைத் தவிர வேறு உணர்ச்சிகளை அவன் வெளிக்காட்டவில்லை. ரேவதி அப்போது உள்ளே வந்து தந்தையின் கட்டளைக்குக் காத்திருந்தாள். பலராமன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது அவளோ தன் தந்தையை மிகவும் மதிப்போடும், மரியாதையோடும், அதே சமயம் கனிவு தெரியப் பார்த்துக்கொண்டிருந்தாள். கிருஷ்ணனுக்குப் பலராமனுடைய மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நன்கு புரிந்தது. இதுவரைக்கும் பலராமன் பார்த்த பெண்கள் எவரும் அவனுடைய பிரம்மாண்டமான உருவத்திற்கும், பலத்துக்கும், தோற்றத்துக்கும் பொருந்திவரவில்லை. பொம்மைகள் போல் காட்சி அளித்தனர்.
அந்தப் பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிட்டாது என பலராமன் நினைத்தான். இப்போதுதான் முதல் தடவையாக பலராமன் அவனுடைய உயரத்துக்கும், பலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறான். அதுவும் மிக அழகியும் கூட. ஓர் இளவரசியும் ஆவாள். கண்ணன் இதுவரைக்கும் அவன் அண்ணன் பலராமன் இப்படி ஒரு பெண்ணை விடாமல் உற்று நோக்கியதைக் கண்டதே இல்லை. இதுவே முதல்முறை. தனக்குப் பொருத்தமான ஜோடியை பலராமன் கண்டுகொண்டான் என்பது கண்ணனுக்குப் புரிந்தது. ஆனால் அந்தப் பெண்??? கண்ணன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இதுவரையிலும் அவர்கள் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கண்ணன் ஒருவனையே பொறுப்பாளியாகவும், காரணகர்த்தாவாகவும் ஆக்கிவந்தனர். பலராமனுக்குக் கண்ணனிடம் துளிக்கூடப் பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதில்லை. இத்தனைக்கும் பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கும் பலராமனின் வீரமும், பலமும் இப்போதாவது வெளிப்படவேண்டும். அவன் மனதில் கொஞ்சமாவது இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருந்தால் அத விலகவேண்டும். பலராமன் எதற்கும், எவருக்கும் குறைந்தவன் இல்லை. அதை நிரூபிக்கவேண்டும். கண்ணன் குக்குட்மின்னைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.
“மாட்சிமை பொருந்திய அரசே, நாளை குருதேவரின் தேர்ந்தெடுத்த சீடர்களுக்குள் ஒரு போட்டி நடக்கப் போகிறது. உங்கள் குமாரி அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பதாய் குருதேவர் கூறினார். அவளும் எங்களுடன் கலந்து கொள்வாள் என எதிர்பார்க்கிறேன்.” என்றான் கண்ணன்.
ரேவதிக்குத் தூக்கிவாரிப் போட்டது. விளையாட்டுக்குச் சொல்கின்றனரா?? கண்ணன் இதைக் கவனித்துவிட்டு, மீண்டும் குக்குட்மினிடம் வற்புறுத்தினான். “இம்மாதிரிப் பயிற்சிக்கான சண்டைகளில் எல்லாம் ரேவதி கலந்துகொள்ளமாட்டாள். சமயம் வரும்பொழுது உண்மையான சண்டையிலேயே ஈடுபடப் போகிறாள்.”தீர்மானமாக வந்தது குக்குட்மினின் குரல். கண்ணனோ விடவில்லை. “என் பெரிய அண்ணன் கதையை எப்படி உபயோகிப்பது என்பதையும் அதில் உள்ள சில நுணுக்கங்களையும் உங்கள் குமாரிக்குச் சொல்லிக் கொடுப்பார். கதையை வைத்துச் சண்டை போடுவதில் அவர் நிபுணர்.” பலராமனின் இதயம் படபடத்தது. ரேவதி என்ன சொல்லப் போகிறாளோ? என்றாலும் அவன் வாய் திறக்காமல் காத்திருந்தான். குக்குட்மினின் மனம் சிறிது மாறியது. உடனே ரேவதியைப் பார்த்து, “குழந்தாய், புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது நன்மை தரும். நீயும் சென்று வா. “ என்று கூறினான்.
“தங்கள் விருப்பம் தந்தையே!” என்றாள் ரேவதி.
கண்ணனும் பலராமனும் தங்கி இருந்த அரண்மனைக்குத் திரும்பினார்கள். கண்ணன் பலராமனிடம், “அண்ணா, பாவம் அந்த அரசர், மிகவும் நல்லவராய் இருக்கிறாரே? அவர் இப்படி அனைத்தையும் இழந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. அவரிடம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை, ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. தந்தைக்கும், மகளுக்கும் இடையில் உள்ள அருமையான உறவின் பிணைப்பைப் பார்த்தாயா?? அருமை! அற்புதம்!” என்றான் கண்ணன்.
“பாவம், எப்படித் திரும்பக் குஷஸ்தலையை மீட்கப் போகின்றனரோ?? அந்தப் பெண்ணை நினைத்தால் மிகவும் வருத்தமாய் உள்ளது.” பலராமன் கூறினான்.
கிருஷ்ணன் புன்னகையோடு, “நாம் உதவி செய்தால் நன்றாக இருக்கும், ஆனால் நாமோ உடனே மதுராவுக்குச் செல்லவேண்டுமே? அங்கே நமக்காகக் காத்திருக்கின்றனரே? ம்ம்ம்ம்??? நீ மதுரா சென்றாயானால், நான் செளராஷ்டிரா போய் அங்கே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வருவேன்.” என்றான் கண்ணன் சற்றே கபடமாக. பலராமனின் முகம் பிரகாசம் அடைந்தது. உடனே அவன் வேகமாய்ப் பேச ஆரம்பித்தான்:” கண்ணா, என்னை விட உன்னைத் தான் மதுராவில் அதிகம் எதிர்பார்ப்பார்கள். வேண்டுமானால் நான் போகிறேனே செளராஷ்டிராவுக்கு. குக்குட்மினுக்கு நான் உதவுகிறேனே?”
“ஓ, அண்ணா, உனக்குப் புரியவே இல்லையே?? மதுராவுக்கு நான் மட்டும் தனியாகப் போய் என்ன செய்யமுடியும்? நீ இல்லாமல் என்னால் எதுவும் இயலாது. “ கண்ணன் மறுத்துப் பேசினான்.
“ரொம்பவே பணிவைக் காட்டாதே தம்பி. இதையே வேறுவிதமாய்ச் சொன்னால்?? “நான் என்ன செய்யமுடியும் நீ இல்லை எனில்??” யோசி தம்பி, யோசி! பலராமன் கூறக் கண்ணன் நீண்ட பெருமூச்சு விட்டான். “எதிர்காலத்தில் நமக்குக் குஷஸ்தலை போல் ஓர் இடம் தேவைப்படும். எப்போதுமே கோமந்தகமலைத் தொடரில் பத்திரமாய் இருக்கலாம் என நினைக்க முடியாது. “
“நல்ல யோசனை தம்பி, குஷஸ்தலை குக்குட்மினின் கைகளுக்கு வந்துவிட்டால் நமக்கு அங்கே எப்போதும் நல்வரவு கிடைக்கும்.”
“அதே, அண்ணா, அதே! நீ குக்குட்மினுக்கு உதவினாய் எனில் நிச்சயமாய் அவருக்குக் குஷஸ்தலை கிடைத்துவிடும். ஆனால் நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்??”
4 comments:
புதிதாய் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.,.
வாங்க எல்கே, நன்றி.
நல்ல பதிவு கீதாம்மா
கண்ணன் சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள்
ஒரே குழப்பமாக உள்ளது. இதுக்கு அடுத்து பலராமன் கத்துக் கொடுப்பதாக சொல்லும் பதிவையும் நான் படித்த மாதிரி ஞாபகம், ஆனால் இப்ப இந்த பதிவுதான் கடைசியா இருக்கு. புரியலை, கடைசி பதிவை நீக்கி விட்டீர்களா?
Post a Comment