கண்ணனின் உதவி!
கிருஷ்ணனின் தந்திரம் பலராமனுக்குப் புரிந்துவிட்டது. ஓங்கிக் கண்ணன் முதுகில் அன்போடு ஒரு அடி அடித்தான். “கவலைப்படாதே சகோதரா! சில சமயங்களில் நான் இல்லாமலும் எவ்வாறு வாழ்வது என நீயும் புரிந்து கொள்ளவேண்டாமா??” சிரித்தான் பலராமன். சந்தோஷம் அவனைத் திக்குமுக்காட வைத்தது. கண்ணன் ஏற்கெனவே குஷஸ்தலையைப் பிடிக்கத் திட்டம் தயாரித்திருந்தான். இப்போது அவன் கவனம் எல்லாம் அவன் சிற்றப்பன் மகனும், நெருங்கிய தோழனுமான உத்தவன் பற்றியது தான். கொஞ்ச நாட்களாகவே விசித்திரமாய் நடந்து கொள்கிறான். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாளை இரவு அவன் என்னோடு படுக்க வரும் வேளையில் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். பலராமனுக்கு அவன் பலத்தையும், வீரத்தையும் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது போல் உத்தவனுக்கும் தேவை எனில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அவனையும் உற்சாகப் படுத்தவேண்டும். சூழ்நிலைகளில் மாற்றங்களும், தான் செய்யும் செயல்களில் ஒரு தன்னிறைவும் ஏற்பட்டால் உத்தவன் சரியாகிவிடுவான். ஏன் ஒவ்வொரு மனிதனுக்கும் இது தேவையானது தானே?? கெட்டிக்காரனும், விசுவாசியுமான உத்தவன் அருகிலிருந்தால் பலராமன் கட்டாயம் குஷஸ்தலையை வென்று மீட்டு விடுவான்.
“நல்லது அண்ணா, ஒரு மாவீரனைப் போல் பேசுகிறாய். வெற்றியோடு திரும்பி வா! ம்ம்ம்ம்ம்?? உன் இடத்தில் நான் இருந்தால் உத்தவனைத் துணைக்கு அழைத்துக்கொள்வேன். பிக்ருவை நினைவிருக்கிறதல்லவா உனக்கு? பாஞ்சஜனா கப்பலின் மாலுமி?? அவனையும் அவன் துணை மாலுமிகளையும் உத்தவன் நன்கு அறிவான். நீ செல்லப் போவதோ ஒரு துறைமுகம். அங்கே ஒரு கப்பலின் துணை கட்டாயம் வேண்டும் உனக்கு. யோசி!” அவ்வளவில் இருவரும் அவர்கள் இருப்பிடம் திரும்பிவிட்டனர். மறுநாள் குரு சாந்தீபனியின் சீடர்களுக்குள் போட்டி ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் திறமையைக் காட்டி வந்தார்கள். கண்ணன் சீக்கிரமே போட்டியிலிருந்து விலகினான். பலராமனோ முழு உற்சாகத்தில் இருந்தான். ரேவதியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அதுவும் அன்று ரேவதி புலித்தோலால் ஆன ஒரு உடையைப் போட்டிக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டதை அணிந்து வந்திருந்தாள். அவளைப் பார்க்கும்போதே ஒரு பெண்புலியைப் பார்ப்பது போல் இருந்தது பலராமனுக்கு.
ரேவதி சற்றும் தயக்கமில்லாமல் பலராமனை நேருக்கு நேர் பார்த்தாள். அவளுக்குள் முழு உற்சாகமும், வீரமும் பொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே மிகவும் தைரியமாக பலராமனை எதிர்கொண்டு அவனோடு போட்டிக்குத் தயாரானாள். பலராமனோ முதலில் அவளை ஒரு பெண் என்பதால் மிகவும் சாதாரணமாகவே சண்டை போட்டான். ஆனால் ரேவதியின் வீரத்தையும், பலத்தையும் பார்த்துவிட்டு அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. தான் ஒரு துடிப்பும், வீரமும், நுட்பமும் நிறைந்த எதிரியோடு போட்டியிடுகிறோம் என்பதை உணர்ந்தான். ஆகவே போகப்போகத் தான் போட்டியிடுவது யாரிடம் என்பதையும் மறந்து முழு வீரத்தோடு போட்டியிட்ட பலராமன் சீக்கிரமே ரேவதியின் கதையைத் தன் கதையால் வீழ்த்தி அவளைத் தோற்கடித்தான். ரேவதியின் கதை விண்ணில் பறக்க, அவள் கண்ணிலோ கண்ணீர் வெள்ளம். அன்று வரையிலும் அந்த குருகுலத்தில் கதை வைத்துச் சண்டை போடுவதில் அவளை மிஞ்ச எவரும் இல்லை. ஆனால் இன்றோ?? சுத்தமாக அவளை ஒன்றுமில்லை என ஆக்கிவிட்டான் பலராமன். தோல்வியின் கனத்தைத் தாங்க முடியாதவளாய் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழுதவண்ணமே அங்கிருந்து சென்றாள் ரேவதி.
அப்போது தான் தன்னிலைக்கு வந்த பலராமன் தன்னை ஒரு முட்டாள் போல் உணர்ந்தான். அவன் மனதில் வருத்தம் மேலோங்கியது. போட்டி மும்முரத்தில் யாருடன் போட்டி போடுகிறோம் என்பதையும் மறந்து தான் செய்த செயலை நினைத்து வருந்தினான். என்ன இருந்தாலும் அவள் என்னைவிடவும் அநுபவம் குறைந்தவள், சிறியவளும் கூட. மேலும் ஒரு அழகான, புத்திசாலியான பெண்ணும் கூட. பலராமன் யோசித்துக்கொண்டே நிற்க, கண்ணன் நிலைமை மோசமாவதற்குள் அண்ணனை உசுப்பி விட்டான். “அண்ணா, ஏன் தயங்குகிறீர்கள்? போய் அவளைச் சமாதானம் செய்து இந்தக் கலையைத் தாங்கள் அவளுக்குக் கற்பிப்பதாய்க் கூறுங்கள். இதில் உள்ள ரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பதாயும் கூறுங்கள். புதிய புதிய உத்திகளைக் கற்பிப்பதாய்ச் சொல்லுங்கள். அப்படியே, உங்கள் இதயத்தையும் தருவதாய்க் கூறுங்கள். இதுவே நல்ல சமயம். விட்டுவிடாதீர்கள்.” பலராமனை ரேவதி சென்ற திசையில் தள்ளிவிட்டான் கண்ணன். பலராமனும் என்ன செய்வது என அறியாமலும் ரேவதியிடம் எப்படிச் சொல்வது எனப் புரியாமலும் அவளைப் பின் தொடர்ந்து அவளும், அவள் தகப்பனும் வசிக்கும் குகைக்குச் சென்றான்.
அங்கே ரேவதி தன் தகப்பன் மடியில் சாய்ந்து இதயமே வெடிக்கும்படியாக அழுது கொண்டிருந்தாள். தான் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போய்விட்டதாயும், தந்தையை ஏமாற்றி விட்டதாயும், அவரின் முயற்சிகள் பலனற்றுப் போனதாயும் கூறி வருந்தினாள். குக்குட்மின் அவளைச் சமாதானம் செய்யும் விதமாய் அவள் தலையைக் கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தான். ரேவதியின் பின்னாலேயே வந்த பலராமன் இந்த உருக்கமான காட்சியைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே நுழையும் சமயம் எது எனப் புரியாமல் திகைத்துக்கொண்டே, குக்குட்மின்னைப் பார்த்துவிட்டு, “மன்னியுங்கள் அரசே, நான் தவறு செய்துவிட்டேன்” என்றான். அவனைப் பார்த்துக் குக்குட்மின், “போ வெளியே!” என்று தன் கடினமான குரலில் கூறினான். ஆனால் பலராமன் விடாமல், “ரேவதி ஒரு சிறந்த வீரப் பெண்மணி!நன்றாய் வீரத்தோடும், விவேகத்தோடும் சண்டையிட்டாள்." என்று பாராட்டும் குரலில் கூறினான்.
6 comments:
:)
krishna leelaigal nanraaga irukinnradhu...
thenodu kalandha pazhaachulayai ponru....
தேனில் ஊறிய பலாக்கணியை போன்றுள்ளது ....
நன்றாக உள்ளது. இதுவரை நான் ரேவதி அவர்களின் கதையைப் படித்தது இல்லை. உங்கள் மூலமாக பல அருமையான கதைகளைப் படிக்கின்றேன். மிக்க நன்றி.
கதை நன்றாக போய் கொண்டு இருக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள் கீதாம்மா.நன்றி
பித்தனின் வாக்கு, நவம்பர் பதினெட்டாம் தேதிக்குப் பின்னர் இந்தப் பக்கங்களில் பதிவு இடமுடியவில்லை. கூகிளில் பிரச்னை. இன்று தான் திறந்தது. நான் கொடுத்தவரைக்கும் எல்லாப் பதிவுகளும் சரியாகவே உள்ளன. எதையும் நீக்கவில்லை. இன்று அடுத்த பதிவை எப்படியாவது போட்டுவிட முயல்கிறேன். நன்றி, கவனத்துக்கும், எச்சரித்ததுக்கும்.
Post a Comment