கப்பல் செல்லும்போதே கரையில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தது. வெகுவிரைவில் குஷஸ்தலையின் கடலும் வந்துவிட்டது. பிக்ரு எதிர்பார்த்ததுக்கு மாறாகப் பாதி வழியிலேயே புண்யாஜனாக் கப்பல் அவர்களை முழுவேகத்தோடு தாக்கி பிக்ருவின் கப்பலின் சுக்கானைத் தூளாக்கியது. ராதுவுக்கு ஒரு அரைநாள் தேவைப்பட்டது சுக்கானைச் சரியாக அமைப்பதற்கு. பிக்ரு இதை எதிர்பார்க்கவே இல்லை. அதை வாய்விட்டும் கூறிக்கொண்டான். பலராமன் புண்யாஜனாக்கப்பல் இருளில் மறைந்து நிற்கிறது என்பதையும் விரைவில் அவர்கள் கப்பலைத் தாண்டி நகருக்குள் சென்று எச்சரிக்கை செய்வார்கள் எனவும் புரிந்துகொண்டான். அந்தக் கப்பலைத் தடுக்கவேண்டுமே, அதோடு இந்தக் கப்பல் முன்னால்கிளம்பவேண்டும், ஏனெனில் காற்று சுத்தமாய் நின்று போய்விட்டது. காற்றுச் சாதகமாய் இருந்தால் தான் கப்பல் நகரவே முடியும். காற்று மட்டும் வீசினால்?? மேலும் புண்யாஜனாக் கப்பல் உதவிக்கு வருவதற்கு முன்னாலேயே நகரைத் தாக்கவேண்டும். ஆகவே அவர்களுக்கு முன்னால் தாங்கள் துறைமுகம் செல்லவேண்டும் என நினைத்தான். ஆனால் பிக்ருவோ அது இயலாத ஒன்று எனத் திட்டவட்டமாய்த் தெரிவித்தான். பலராமனின் கோபம் எல்லை மீறியது. பிக்ருவிடம் கத்தினான். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கண்ட மற்ற வீரர்களும், மாலுமிகளும் செய்வதறியாது தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பலராமன் அசரவில்லை. தன்னுடைய முழு பலத்தையும் இந்தச் சண்டையில் பிரயோகிக்க எண்ணினான். மேலும் தான் அநந்தன் என்பதையும் காட்டிக்கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பம் எனவும் நினைத்தான். ஆகவே மிகவும், வலுவான குரலில், “நான் அநந்தன், இந்த பூமியையே நான் தான் தாங்குகிறேன். ஆகவே காற்றுத் தேவதைகளே, உங்களுக்கு நான் ஆணையிடுகிறேன். இங்கே விரைவில் புயல்சின்னங்கள் தோன்றவேண்டும் . அது எங்களுக்குச் சாதகமாக அமையவேண்டும். சீக்கிரத்தில் காற்றை அனுப்பி எங்களை விரைவில் குஷஸ்தலையின் துறைமுகத்தை அடையச் செய்வாய்!” கோபம் கொண்ட பலராமன் தன் கால்களை ஓங்கி உதைத்தான். அலைகளின் ஓசைக்கும் மேல் அவன் குரல் கேட்டது, “ஏ, மருத்துக்களே, நான் ஆதிசேஷன், உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். விரைவில் காற்றை அனுப்பி எங்கள் கப்பலை நகரச் செய்வாய்.” என்று ஓங்கிக் கத்தினான். அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டது போல தென்றல் மெதுவாக வீசத் தொடங்கியது. மெல்ல மெல்ல பலராமன் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான் வருணன். மெல்ல மெல்ல வீசத் தொடங்கிய விரைவில் வலுவான புயல்காற்றாக மாறியதோடல்லாமல் காற்று அவர்களுக்குச் சாதகமாய் அவர்கள் செல்லும் திசைக்குச் செல்ல வசதியாகவே வீசத் தொடங்கியது. வானம் மப்பும், மந்தாரமுமாய்க் காணப்பட்டது. விரைவில் பெருமழையும், புயலும் வீசும் என அறிகுறிகள் தென்பட்டன. பிக்ருவும், அவன் மாலுமிகளும் இந்த மிக மிக உயரமான மனிதன் சிறிது நேரத்தில் செய்த அதிசயத்தைக் கண்டு திகைப்பும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் திடீரென வீசிய இந்தக் காற்றை எதிர்பாராத புண்யாஜனாக் கப்பல்கள் தடுமாற ஆரம்பித்தன. கடல் சீற ஆரம்பித்தது, அதே சமயம் பெரிய சப்தத்தோடு இடியும் இடிக்க ஆரம்பிக்க, மின்னல் வானின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு அதிவேகமாய்ப் பிரயாணம் செய்த்து.
பிக்ரு தன் ஊழியர்களை விரட்டி விரட்டி வெகு விரைவில் வேலை செய்ய வைத்தான். இந்தக் கடும்புயலில் இருந்து தப்பிக்க அவன் செய்த முயற்சிகளை எல்லாம் மீறிக்கொண்டு ஒரே ஒரு கப்பல் மட்டுமே தப்ப முடிந்தது. மூழ்கிக்கொண்டிருந்த மற்றக்கப்பலில் இருந்தவர்களை எல்லாம் அவசரம் அவசரமாக மீட்டு இந்தக் கப்பலுக்குக் கொண்டுவரப்பட்டனர். கப்பல் தன் படைவீரர்களோடு காற்றை அநுசரித்துக்கிளம்பியது. விரைவில் கடலின் கொந்தளிப்பு அடங்க, மெல்ல மெல்ல விடியலின் கிரணங்கள் விண்ணில் தெரிந்தன. காலை இளங்காற்று சுகமாக வீசியது. பிக்ருவின் கப்பல் ஆநந்தமாய்ப் பயணம் செய்தது. அவ்வளவு நேரமும் பலராமன் அங்கேயே நின்றுகொண்டு கப்பலின் மாலுமிகளுக்கு உத்தரவுகள் கொடுத்தான். அதே சமயம் தன்னையும் உற்சாகப் பானத்தால் குளிப்பாட்டிக்கொண்டான். சீக்கிரத்திலேயே குஷஸ்தலையின் கடற்கரை வந்தது. துறைமுகத்தில் யாருமே இப்படி ஒரு கப்பல் படைவீரர்களோடு வருவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் நினைத்தது சாதாரணமாய் எப்போதும்போல் வரும் ஒரு கப்பல் எனச் சற்று அலக்ஷியமாகவே இருந்தனர். பலராமனின் கட்டளையின் பேரில் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு கப்பலின் மேல் பிக்ருவின் கப்பல் வேகமாய் மோதி அந்தக் கப்பலில் இருந்த அனைவரையும் கடலில் தள்ளியது. விரைவிலேயே அந்தக் கப்பல் பிக்ருவின் வசத்துக்கு வந்தது.
பலராமன் தலைமையில் தாமகோஷனின் வீரர்களும், மற்ற மாலுமிகளும் சேர்ந்து கீழே இறங்கிக் கண்ணில் பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். தாக்கிக்கொண்டே மெல்ல மெல்ல நகருக்குள் நுழைந்த்னர். நகரில் நுழையும்போது அவர்கள் நாலு பிரிவாய்ப் பிரிந்து கொண்டனர். பலராமன், உத்தவன், குக்குட்மின், ரேவதி ஆகிய நால்வரும் தலைமை வகிக்கப் படை பிரிந்து சென்று அனைவரையும் தாக்க ஆரம்பித்தது. பலராமனின் போர்த்தந்திரமும் அவன் வீரமும் மட்டுமல்லாமல் ரேவதிக்கு இந்த மாதிரியான சண்டை முறையும் மிகவும் பிடித்தது. அவள் மிகவும் ரசித்துச் சண்டை போட்டாள். அதற்குள் கப்பலில் இருந்த பிக்ரு தன் மற்ற வீரர்களை வைத்துக்கொண்டு அங்கே நின்றிருந்த அனைத்துக்கப்பல்களையும் சிறைபிடித்தான். பெரும்பாலான கப்பல்கள் வணிகக் கப்பல்களாய் இருந்தமையால் வெகு எளிதில் அவர்களை வெல்ல முடிந்த்து.
2 comments:
ஹ்ம்ம் தொடருங்கள்
பதிவுக்கு நன்றி கீதாம்மா ., கதை நன்றாக போகிறது .,குஷஸ்தலையினை
கைப்பற்றிய செய்தியினை விரிவில் தெரிய படுத்துங்கள்
முடிந்தால் சம்பவம் நடை பெரும் இடத்தை தற்போது அழைக்கும் பெயரோடு வரைபடமிட்டு காட்டினால் புரிந்து
கொள்ள வசதியாக இருக்கும் கீதாம்மா
Post a Comment