Tuesday, January 4, 2011

கண்ணன் வருவான் கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

பலராமன் அந்த அரசனிடம் பத்து ரதங்கள் கூட இருக்காது என்றும், ஒரு வாளின் எடைக்குக் கொடுக்கும் அளவுக்குக் கூடப் பொன்னும் இருக்காது என்பதையும் அறிவான். ஆனால் ஜராசந்தனைத் தானும், கண்ணனும் தோற்கடித்த விபரமும், குஷஸ்தலையைப் பிடித்துவிட்ட விஷயமும் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என எதிர்பார்த்தான். அதோடு மேலும் பலராமன் தான் ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷன், என்பதும் அவர்கள் மனதில் பதிய வைக்க நினைத்தான். பலராமன் விரும்பிய வண்ணமே அனைத்தும் நடந்தது. பலராமன் அனுப்பிய தூதுவன் மக்களிடமும் எல்லா விஷயங்களையும் கூறினான். பலராமன் தூதுவன் மூலம் அனுப்பிய இந்த மிரட்டலைக் கேட்ட மக்கள் பயந்து நடுங்கினார்கள். தங்கள் வீடுகளை விட்டு வெளிவர மறுத்தார்கள். அரசனுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, செய்தால் பலராமன் தங்களை ஏதேனும் செய்துவிடுவான் என்று அஞ்சினார்கள். ஆனால் அரசன் தன் மெய்க்காவலர்களுடனும் ஒரு சிறு படையுடனும், வில்லையும் அம்புகளையும் ஏந்திக்கொண்டு ரதங்களில் ஏறிக்கொண்டு கோட்டை வாசலைத் திறந்துகொண்டு வெளியே வந்து பலராமனின் மேல் பாய்ந்தனர். பலராமன் இதை எதிர்பார்த்தவன் போலத் தன் வீரர்களை விட்டு அவர்களை எதிர்க்கச் செய்தான்.


அனைவருக்கும் முன்னிலையில் பலராமன் தலைமையில், ரேவதியும் உடன் இருக்க உத்தவனும், மற்றப் படை வீரர்களும் அவர்கள் மேல் கடும் தாக்குதல் நட்த்தினார்கள். பலராமனின் கலப்பைக்கு அன்று நல்ல வேலை இருந்தது. உத்தவனின் அம்புகளும், நாகர்களின் அம்புகளும் சரியான இடத்தைப்போய்த் தாக்கின. ரேவதியும் தன் தாக்குதலைத் திறமையாக நடத்தினாள். கோட்டையை விட்டு வெளிவந்த வீரர்கள் சுதாரித்துக்கொள்ளும் முன்னரே பலராமனும் அவன் ஆட்களும் நடத்திய கடும் தாக்குதலில் நிலைகுலைந்தனர் கிரிநகரின் வீரர்கள். மேலும் அவர்கள் போரையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் சரியான திட்டத்தோடு வந்திருந்த பலராமனைச் சமாளிக்க முடியவில்லை. இறந்து விழுந்த வீரர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பலத்த காயங்களும் ஏற்பட்டது. அனைவரும் அலறிக்கொண்டு திரும்பினார்கள். அரசன் பலராமனால் கொல்லப்பட்டான். தன் கலப்பையால் பிளந்து கோட்டையின் கதவுகளைத் திறந்துகொண்டு பலராமன் உள்ளே நுழைந்தான். மெல்ல மெல்லப் பொதுமக்கள் ஒவ்வொருவராய் வந்து புதிய அரசனான பலராமனுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதைக் கண்ட பலராமன் ரேவதியின் முதுகில் ஓங்கி அடித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவனுக்கு ரேவதி ஒரு பெண் என்பதே பல சமயங்களிலும் மறந்துவிடுகிறது. மேலும் அடிக்கடி மதுபானம் செய்துகொண்டு அந்த மயக்கத்தில் இருந்ததாலும் அருகில் இருப்பது ரேவதி என்னும் பெண் என்பதும், அவள் தான் இந்த நாட்டின் உரிமைக்குப்பாத்திரமான இளவரசி என்பதும் புரிவதில்லை. அவளைத் தன் நெருங்கிய தோழர் போலவே நடத்தி வந்தான். ஆனால் ரேவதி அவனுடைய செயல்களை உள்ளூற விரும்பினாலும் வெளிப்படத் தன்னை அதிகம் பலராமனை நெருங்காமல் பாதுகாத்துக்கொண்டாள். நான்காம் நாள் குக்குட்மின் அங்கே வந்தார். ஒரு காலத்தில் அவருடைய கோட்டையாக இருந்த கிரிநகரை மீண்டும் பார்த்த அவர் கண்கள் கண்ணீரில் நனைந்தன. தான் இழந்த நகரம் மீண்டும் தன் வசமானது அவருக்கு மகிழ்வைத் தந்தது. பலராமனையும் அவன் படைவீரர்களையும், உத்தவனோடு அங்கே சில நாட்கள் தங்கச் சொல்லி வேண்டினார்.

பலராமன் ஒரு மாசம் அங்கே இருந்தான். குக்குட்மின் பலராமனுக்குட் தினமும் பலத்த விருந்து படைத்தார். எதற்கும் ஒரு முடிவு வரவேண்டுமே. ஆகவே பலராமன் மதுராவுக்குத் திரும்ப எண்ணினான். பலராமன் கிளம்பும் நாளும் வந்தது. குக்குட்மின் தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் பலராமனிடம், “ பலராமா, நீர் உண்மையாகவே அந்த அநந்தன் தான். சந்தேகமே இல்லை. உன்னிடம் உள்ள பலமும், தைரியமும் அவற்றை நிரூபித்துவிட்ட்து. எனக்கோ வயதாகிவிட்டது. இனி என்னால் இந்த நகரின் நிர்வாகத்தைக் கவனிப்பது இயலாது. ஆகவே நீர் இந்த நாட்டின் பொறுப்பை ஒப்புக்கொள்ளும். நான் பிரமனை வழிபடுபவன் . வேதங்களை ஓதும் பிரமன் நான் என் நாட்டையும், நகரத்தையும், கோட்டையையும் இழந்து சுற்றத்தாரையும் இழந்த சமயம் எனக்கு வாக்குறுதி கொடுத்தார். நான் இறக்கும் முன்னர் இழந்த நாட்டைத் திரும்பப்பெறுவேன் என்றார். ஆகவே இப்படி ஒரு நாளை நான் எதிர்பார்த்துக்காத்திருந்தேன் எனினும் இப்போது தன்னந்தனியாக நாட்டை ஆளும் அளவிற்குப்பலம் இல்லை என்னிடம். மேலும் என் போன்ற வயதானவர்கள் உங்களைப் போன்ற இளையவர்களுக்கு வழிவிடவேண்டும். இப்போது உங்களைப் போன்ற இளையவர்களின் காலம். “

“என்னுடைய ஒரே கவலை ரேவதியைப் பற்றித்தான். அருமையான பெண் அவள். திறமையானவளும் கூட. நீங்கள் அவளை ஏற்றுக்கொள்ளவேண்டும். “

கடைசியில் தான் நினைத்த விஷயத்துக்கே வந்தது குறித்து பலராமனுக்கு சந்தோஷம். என்றாலும் கொஞ்சம் பெருந்தன்மையாக மறுத்துப் பார்த்தான். ஆனால் குக்குட்மினோ அவனை அங்கேயே இருந்து ரேவதியுடன் சேர்ந்து நாட்டை ஆளும்படி கூறினான். பலராமனோ, “மாமனார் வீட்டில் இருந்தால் அடிமையாகிவிடுவேனே?” என்று கூறிவிட்டுப் பெருங்குரலில் நகைத்தான். பின்னர் கொஞ்சம் யோசனையோடு, “அரசே, இந்த விஷயத்தை இப்போதைக்குக் கொஞ்சம் தள்ளிப் போடுவோமே. நான் இப்போது உடனே மதுரா செல்லவேண்டும். மதுராவையும், அதன் மக்களையும் காக்கவேண்டும். எப்படியாவது இதைச் செய்து முடிக்கவேண்டும். அதுவரையிலும் உங்கள் பெண் எனக்காகக் காத்திருந்தால் நான் என் வேலையை முடித்துவிட்டு வந்து உங்களிடம் ரேவதியைப் பெண் கேட்பேன். ஆனால் அதுவரை அவள் காத்திருக்க நேரிடுமே? ரேவதி, நீ என்ன சொல்கிறாய்?? எனக்காகக் காத்திருப்பாய் அல்லவா? உன் தந்தை பிரமன் அளித்த வரத்துக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தார். நீ ஒரு சில வருடங்கள் எனக்காகக் காத்திருக்க மாட்டாயா?? என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான். ரேவதி நாணம் பொங்கச் சிரித்தவண்ணம் கண்களால் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

4 comments:

எல் கே said...

அட போரில் ஒரு காதலா ??

பித்தனின் வாக்கு said...

மிக அருமையாக உள்ளது. நான் மலை யாத்திரை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. இன்று அனைத்தையும் படித்து விட்டேன். மிக அருமை.
தொடர்ந்து எழுதுங்கள். தனுர் மாத முடிவில் அரங்கன் கோதையை ஆட்கொள்வதற்க்குள், நாம் இங்கு கண்ணனையும் ருக்குமினியும் கதையில் சேர்த்து விடலாம்.
முடியுமா என்று முயற்ச்சி செய்யவும். நமஸ்காரம்.

priya.r said...

நல்ல பதிவு கீதாம்மா ;
பலராமன் ரேவதி சம்பந்த பட்ட நிகழ்ச்சிகள் சற்று சுவாரஸ்யமாக தான் இருக்கிறது !
கீதாம்மா ! தாமதமாக வந்ததால் எது வரை படித்து இருக்கிறேன் என்று தெரியாமல் பழைய பதிவுகளையும் படித்து வந்தேன்;
நீங்க ஒன்று செய்யாலாமே!
சென்ற வருடத்தில் மொத்த பதிவுகள் 35 ;அதில் முதல் ஒன்றை விட்டு விட்டு ஆகஸ்ட் 7 ஆரம்பித்த பதிவை ஒன்றாம் அத்தியாயம் என்று கணக்கிட்டால் இந்த பதிவு 35 ஆம் அத்தியாயமாக வைத்து கொள்ளலாமே

இராஜராஜேஸ்வரி said...

விறுவிறுப்பான கதை!