Tuesday, January 18, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

தன் தலையைக் குனிந்த வண்ணம் சற்று நேரம் யோசித்தவாறு இருந்த உக்ரசேனர் பின் நிமிர்ந்து கர்காசாரியாரைப் பார்த்து, “ஆசாரியரே, நான் என்ன செய்யட்டும்?? எங்கள் யாதவகுலமே சபிக்கப் பட்ட குலம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அன்றோ? அதோடு மட்டுமா?? என் மகன் கம்சனின் கொடூரமான நடத்தைகளாலும் மொத்த யாதவ குலமுமே அவமானப்பட்டதோடு அல்லாமல் துன்பமும் அடைந்தனர். அந்தக் காரணத்தாலேயே கண்ணன் கம்சனைக் கொன்றபோது நான் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாததோடு ஆழ் மனதில் கொஞ்சம் ஆறுதலையும் அடைந்தேன். பின்னர் ஒருவழியாக நாட்டையும், பொறுப்பையும் கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு நான் நகர்ந்தால் அதுவே மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் எண்ணினேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. மேலும் இப்போது கண்ணன் இருக்குமிடமும் தெரியவில்லையே? நானும் நாளாக நாளாகப் பலவீனம் அடைந்து வருகிறேன்.”

உக்ரசேனர் வருத்தத்துடன் பேசியதைப் புரிந்து கொண்ட கர்காசாரியார், “ மாட்சிமை பொருந்திய மன்னா! கவலை வேண்டாம். கிருஷ்ணனுக்கு எதுவும் ஆகாது. அவன் செளக்கியமாயும், சுகமாயும் இருப்பான். அவனுக்கு எதுவும் நடந்திருக்காது. அவன் இவ்வுலகில் வந்து பிறந்த காரணம் கம்சனை அழிப்பது மட்டுமல்ல. தர்மத்தை நிலைநாட்டுவதே. ஆகவே அவன் வந்த காரியம் பூர்த்தி ஆகும் முன்னர் அவனுக்கு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் அரசே, என் நம்பிக்கையை உங்களிடம் எப்படிப் புகுத்துவது என்பது தான் எனக்குத் தெரியவில்லை.” என்றார் கர்காசாரியார்.

“அப்படியே இருக்கட்டும், ஆசாரியரே, ஆனால் அவன் ஏன் என் மகனுக்குக் குறுக்கே வருகிறான்?” கோபத்தோடு தலையிட்டாள் கம்சா. தன் தகப்பனின் கட்டிலின் தலைமாட்டில் நின்ற வண்ணம் தகப்பனுக்கு விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். “ கண்ணன் தர்மத்தை நிலைநாட்டுவதற்கு என் மகன் தடை ஒன்றும் சொல்லவில்லையே? என் மகனா குறுக்கே நிற்கிறான்? அப்படி இருக்கையில் அவன் பட்டம் ஏற முடியாமல் இவனல்லவோ தடுத்துக்கொண்டிருக்கிறான்?” கம்சாவின்கோபம் அடங்கவே இல்லை.
“யாராலும் கண்ணனைத் தடுக்க இயலாது. “ உக்ரசேனரின் குரல் பலவீனமாய்த் தொனித்தாலும் உறுதி தெரியச் சொன்னார். “ஆனால் கண்ணன் இல்லாத இந்தச் சமயம் பார்த்து இந்த நாட்டுக்கு ஒரு யுவராஜாவை நியமிக்க எனக்கு என்னமோ பிடிக்கவில்லை. அது அவ்வளவு சரியானதாய்த் தெரியவில்லை. கண்ணன் இல்லை எனில் எத்தனையோ யாதவர்கள் காப்பாற்றப் பட்டிருக்கவே இயலாது.”

“அவனால் வரவே முடியவில்லை எனில்?” கம்சாவின் குரலில் சற்றும் இரக்கமே தெரியவில்லை. கடுமையான குரலில் கேட்டாள்.

கர்காசாரியாரோ அவளுடைய நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தலையை வேகமாய் ஆட்டித் தன் மறுப்பைத் தெரிவித்தார். அப்போது அருகே காவலர்கள் இருந்த அறையில் ஏதோ கசமுசாவென்று ஒரே சப்தம். யாரோ உணர்ச்சிகள் பொங்கப் பேசும் குரல் கேட்டது. சற்று நேரத்தில் ப்ரத்யோதாவின் இடத்துக்கு நியமிக்கப் பட்டிருந்த ஷங்கு என்பவன் ஓடோடி வந்தான். “பிரபுவே, பிரபுவே, அவன் வந்துவிட்டான். அவன் வந்துவிட்டான்.” ஷங்குவால் பேசக் கூடமுடியவில்லை. உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீர் ஒருபக்கம் வர, இன்னொரு பக்கம் முகமோ மலர்ச்சியால் விகசித்துக் காணப்பட்டது. உக்ரசேனரோ தூக்கிவாரிப் போட்டு எழுந்து அமர்ந்தார். தான் மரணத்தை அல்லவோ வரவேற்றுக்கொண்டிருக்கிறோம். இது யார் வந்திருப்பது? “யார் அது?” என்று கேட்டார்.

“கிருஷ்ண வாசுதேவன் . பிரபுவே, ஜராசந்தனை வென்று விட்டானாம்.” ஷங்குவின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. ஆனந்தத்தில் ஆடுவான் போல் காணப்பட்டான்.

“மஹாதேவா, எங்களையும், எங்கள் குலத்தையும் காப்பாற்றி விட்டாய்.” உக்ரசேனர் வாய்விட்டுத் தன் நன்றியைதெரிவித்த வண்ணம் மனதில் நிம்மதி பிறக்கப் படுக்கையில் சாய்ந்தார். கர்காசாரியாரோ மெளனமாய்ப் பிரார்த்தனையில் ஆழ்ந்தார். கம்சாவின் கோபம் அதிகமாக அவளுக்குக் கண்ணீர் பொங்கியது. தன் நெற்றியில் பளார் பளார் என்று அறைந்த வண்ணம், தன்னையும் மீறிக்கொண்டு வந்த கேவல்களை அடக்கியவண்ணம் அங்கிருந்து விரைவாக வெளியேறினாள்.

பிருஹத்பாலனோ தன் நண்பர்களோடு சதுரங்கம் ஆடிக்கொண்டும், குடித்துக்கொண்டும், விளையாட்டுப் பேச்சுக்கள் பேசிக்கொண்டும் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான். அவனுக்குத் தன்னை விட்டால் வேறு எவரும் யுவராஜா ஆகமுடியாது என்று சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருந்ததால், சம்பிரதாயமான அறிவிப்புக்குக் காத்திருந்ததோடு தன்னுடைய யுவராஜ பட்டாபிஷேஹத்தைக் கொண்டாடவேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வந்தான். அப்போது சாத்யகி கோபத்துடனும், ஆங்காரத்துடனும் உள்ளே நுழைந்தான். “முட்டாள்கள் நீங்கள் அனைவரும், ப்ருஹத்பாலா, நிறுத்து உன் விளையாட்டுக்களை. “ என்று கோபமாய்க் கத்தினான். அவன் முகம் கடுகடுவென்று இருந்ததோடு கண்கள் ஆழ்ந்த சிந்தனையையும் காட்டின. “வா, வா, நீயும் வந்து கொஞ்சம் பானம் அருந்திவிட்டு, இந்த விளையாட்டிலும் பங்கு கொள்வாய், வா நண்பா!” அளவுக்கு மீறிய குடியால் குழறிக் குழறி வந்தன ப்ருஹத்பாலனின் பேச்சுக்கள். “இது இந்த நாட்டு யுவராஜாவின் கட்டளை! வா!” என்று அதிகாரமாய்க் கூறினான்.

அவன் கைகளிலிருந்து கோப்பையையும், சதுரங்கம் விளையாடும் பொருட்களையும் பிடுங்கி வீசி எறிந்தான் சாத்யகி. “நீயோ, நானோ யாருமே யுவராஜா என்ன? தளபதியாகக் கூட ஆகப்போவதில்லை. முட்டாள். சர்வ முட்டாள்.” கத்தினான் சாத்யகி. “எல்லாருமே முட்டாள்கள் தான்.” அந்த நண்பர்கள் கூட்டத்தில் யாரோ குடிபோதையில் இளித்துக்கொண்டு பேச, சாத்யகியின் கோபம் அதிகம் ஆனது. “என்ன நடந்த்து?” ப்ருஹத்பாலன் சாத்யகியின் இந்த அதிரடி நடவடிக்கையால் போதை தெளிந்து நிதானத்துக்கு வந்திருந்தான். சாத்யகி கூறினான்.

“அவன் வந்துவிட்டான்.”

“யார் வருகின்றார்கள்?”

“கிருஷ்ண வாசுதேவன். இப்போதுதான் தூதுவர்களிடமிருந்து செய்தி வந்தது. ஜராசந்தனைத் தோற்கடித்து அவனை விரட்டி விட்டுக் கிருஷ்ண வாசுதேவன் மதுராவை நோக்கி வந்து கொண்டிருக்கிறானாம்.”

சற்று நேரம் அங்கே ஒரே அமைதி. பின்னர், விராடன்,”விளையாடாதே சாத்யகி! உன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்ட்து!” என்று கத்தினான்.

“நான் ஒன்றும் விளையாட்டுக்கோ, அல்லது சிரிக்கவோ சொல்லவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன். ஜராசந்தனை விரட்டியதோடு மட்டும் அல்ல. கரவீரபுரத்தின் ஸ்ரீகாலவ வாசுதேவனையும் கிருஷ்ணவாசுதேவன் கொன்றுவிட்டானாம். அங்கிருந்து கிளம்பி இப்போது அவந்தி வரை வந்துவிட்டானாம். இன்னும் ஓரிரு வாரங்களில் மதுராவை வந்து அடைந்து விடுவான். “ சாத்யகி நிறுத்தினான்.

அனைவருமே இப்போது நிதானம் அடைந்துவிட்டனர். ப்ருஹத்பாலனின் முகம் கொடூரமாக மாறியது. கடித்த பற்களுக்கிடையே அவன், “கிருஷ்ண வாசுதேவன்! அவன் இன்னும் இறக்கவில்லையா? இறந்திருப்பான் என்றல்லவோ நினைத்தேன்!” என்றான்.

7 comments:

திவாண்ணா said...

பட்சாச்!

sambasivam6geetha said...

ada????????ஆச்சரியமா இருக்கே இங்கே வந்ததுக்கு. முதல் வரவுக்கு நன்றி.

பித்தனின் வாக்கு said...

வணக்கம் அம்மா, நான் தொடர்ந்து படித்துக் கொண்டுதான் உள்ளேன். மிக அருமையாக எழுதுகின்றீர்கள். மிக்க நன்றி.

priya.r said...

நல்ல பதிவு;பதிவுக்கு நன்றி கீதாம்மா ;
அத்தியாயம் 38 படித்து முடித்து விட்டேன்
அந்த காலங்களிலும் அரச பதவிக்கு இவ்வளோ போட்டியா! வியப்பாக தானிருக்கிறது

sambasivam6geetha said...

வாங்க பித்தனின் வாக்கு, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ப்ரியா, தொடருக்கு வரிசைக்கிரமப்படி எண்கள் கொடுத்து வந்தேன். ஆனாலும் சில சமயம் தவறு ஏற்படுகிறது. :( நான் வேர்ட் டாகுமெண்டில் எழுதிட்டு அதிலிருந்து போடுவதால் சில சமயம் எண்களை மாற்றிவிடுகிறேன். அப்புறமாய் சரிபண்ணலாம்னா மறந்துடுது! அதான் இப்போப் போடறதே இல்லை! :))))))))))

இராஜராஜேஸ்வரி said...

தெளிவான எழுத்து நடை.