கடும் வெயில், மழைக்காலம் என்ற பல இயற்கை உற்பாதங்களையும் தாண்டிக் கடைசியாக கிருஷ்ணனும், தாமகோஷனும், தங்கள் படைகளோடு மதுராவை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க முதிய வயதிலும் கூட உக்ரசேன மஹாராஜாவே நேரில் வந்திருந்தார். வசுதேவன் தன் பரிவாரங்களோடு வந்திருந்தார். மதுராவின் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் வந்து நின்று கொண்டனர். இளம்பெண்கள் தங்கள் சின்னஞ்சிறு குழந்தையைக் கூடத் தூக்கி வந்து, கிருஷ்ணனை அவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தனர். அரண்மனையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு வரவேற்பு கீதங்களை இசைத்துக்கொண்டிருக்க, கர்காசாரியார் போன்ற ரிஷிகளும், முனிவர்களும், அந்தணர்களும் பலவிதமான வேத கோஷங்களைச் செய்து இறைவனின் அருள் கண்ணனிடம் பரிபூரணமாக நிலைத்திருக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தனர். பணிப்பெண்கள் தங்கள் தலையில் பூரணகும்பம் தாங்கிக்கொண்டு அவற்றில் நீரும், தேங்காயும், மாவிலைக் கொத்துகளோடு அலங்கரித்துக் கொண்டு கிருஷ்ணனுக்குப் பூரணகும்ப மரியாதை அளித்தனர். ஆங்காங்கே ஆரத்திகளும் எடுக்கப் பட்டன. தேங்காய்கள் உடைபட்டன.
மதுரா நகரமே அன்று வரை கண்டிராத இந்த வரவேற்பு நிகழ்ச்சி அனைவர் மனதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபடச் செய்தது. ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை அநாயாசமாகத் தோல்வி அடைய வைத்துவிட்டு வந்திருப்பவன் யாதவகுல ரக்ஷகன். யாதவகுலத்தின் மானம், மரியாதையே அவனால் காப்பாற்றப் பட்டிருக்கிறது. மேலும் கண்ணனுக்கு இந்த உயர்ந்த பரிவாரங்களான குதிரைகள், யானைகள், ரதங்கள், காலாட்படை வீர்ர்கள், அவர்களோடு சேர்ந்து வந்த நவரத்தினக் குவியல்கள், பொற்காசு மூட்டைகள், ஆடை, ஆபரணவகைகள் அனைத்துமே ராணி பத்மாவதியால் கொடுக்கப்பட்டவை என்பதும் ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கண்ணன் கொன்றதும் ஒரு கதை போல் ஆங்காங்கே மக்களால் உற்சாகத்துடன் பேசப்பட்டது. அனைவரும் தங்களுக்கே இத்தகைய மரியாதை கிடைத்த்து போல் மகிழ்ந்தனர்.
ஆனால் கண்ணனோ எப்போதும் போலவே தலையில் மயில் பீலியுடன், மஞ்சள் வண்ணத்தில் ஒரு வேட்டியும் அதற்கேற்ற மேலாடையும் தரித்திருந்தான். மலர்மாலைகளைக் கழுத்தில் அணிந்திருந்த கண்ணன் ரதத்திலிருந்து கருடன் ஒருவனோடு இறங்கினான். இறங்கியதுமே மரியாதையோடும், விநயம் மாறாமலும் ஆசாரியர்களையும், தன் தகப்பனையும், பாட்டனையும் மற்றப் பெரியவர்களையும் நமஸ்கரித்தான். பின்னர் தன் அருமைத் தாய் தேவகியையும் நமஸ்கரித்தான். அதற்குள் திரிவக்கரை அவன் காலடியில் விழுந்து வணங்க மற்றப் பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் எனக் கிருஷ்ணன் காலடியில் விழுந்து வணங்க ஆரம்பித்தனர். பூக்கள் மழையெனப்பொழிய கண்ணனுடன் வந்த குரு சாந்தீபனிக்கும், ராஜா தாமகோஷனுக்கும் இப்படிப்பட்ட ராஜ மரியாதை கிடைத்தது. உக்ரசேனரும், வசுதேவரும் ஆசாரியருக்கு தங்கள் வந்தனங்களைச் சமர்ப்பித்து தாமகோஷனை மார்போடு இறுகத் தழுவித் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். அப்போது……..
இதென்ன மின்னலே ஒரு பெண்ணுருக்கொண்டு இறங்குகிறதா?? நடப்பவை அனைத்தையும் பார்த்தவண்ணம் ஷாயிபா ஒரு தேரிலிருந்து கீழே இறங்கினாள். வயதான உக்ரசேனரையே அவள் அழகு அசர வைத்தது எனில் மற்றவர் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அவள் கண்களில் தெரிந்த கடுகடுப்பும், தனக்கு நிகரில்லை என்பதைத் தெரிவிக்கும் பார்வையைக் கொண்ட அவள் கர்வமும், ருத்திராக்ஷ மணிகளால் ஆன ஒரே ஒரு மாலையையும், கைகளிலும் வளையல்களோ, கங்கணமோ இல்லாமல் ருத்திராக்ஷமே வளையல்களாய்க் காட்சி அளித்துக் கொண்டு வேறுஆபரணங்கள் எதுவுமே அணியாமல் வெள்ளை நிறத்தில் ஆடை புனைந்துகொண்டு காட்சி அளித்த இவள் யாராய் இருக்கும்?? எல்லாருக்கும் இந்தக் கேள்வி மனதைக் குடைந்தது. தாமகோஷனே அதைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உக்ரசேனருக்கும், வசுதேவனுக்கும் ஷாயிபா பற்றிய தகவல்களைக் கூறிவிட்டு அவளை தேவகி அம்மாவிடம் ஒப்படைத்தான்.
கண்ணன் தனியாய்த் தன் தாயைச் சந்தித்தபோது அவளுக்கு ஒரு புதிய மகளைக் கூட்டி வந்திருப்பதாய்க் கூறி தேவகியின் சந்தேகங்களைத் தவிர்த்தான். மேலும் திரிவக்கரையிடம் ஷாயிபாவைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். அவளிடம்,”திரிவக்கரா, இந்த ஷாயிபா ஓர் இளவரசி! அவள் இனி உன் பொறுப்பு. அவள் எவ்வளவு அழகாய் இருக்கிறாளோ அவ்வளவுக்கு பயங்கரமான குணங்களையும் உடையவள். அவள் குணம் எவ்வளவு கொடூரமாய் எப்போது மாறும் என்பதை எவராலும் கணிக்க இயலாது. எனினும் நீ தேவகி அம்மாவின் சொந்த மகளான சுபத்ரையை எவ்வாறு பாசத்துடனும், அன்புடனும் நடத்துகிறாயோ அவ்விதமே இவளும் தேவகி அம்மாவுக்கு இன்னொரு பெண் என்று நினைத்துக்கொள்! அவ்விதமே இவளை நடத்தவேண்டும். “ கண்ணன் சொல்லுக்கு மறுப்பே தெரிவிக்காத திரிவக்கரை அப்படியே நடந்து கொள்வதாய் வாக்களித்தாள்.
கண்ணன் மதுராவின் மக்களுக்கு இடையே புகுந்து சிலரை நலம் விசாரித்தும், சிலரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டும், சிலரை வணங்கியும், குழந்தைகளிடம் அன்பு காட்டியும் தன் மகிழ்வைத் தெரிவித்துக்கொண்டான். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவன் கவனித்தமாதிரியும் அவரவர் வயதுக்கும், பொறுப்புகளுக்கும் வகிக்கும் பதவிகளுக்கும் ஏற்ப அவன் மரியாதை செலுத்துவதாயும் அனைவரும் பேசி மகிழ்ந்தனர். கண்ணன் தங்களைக்கவனிப்பானா என்ற கவலையே படவேண்டாம். அவனே வந்து நம்மை விசாரிப்பான் என்று அனைவரும் நம்பிக்கையும் கொண்டனர். ஒவ்வொருவரையும் கண்ணன் விசாரித்த தோரணையிலிருந்தும் அவன் ஒரு போதும் அவர்கள் நலத்தைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லாமல் இருந்தான் என்று அவர்களுக்குப் புரியும் வண்ணம் இருக்கவே அனைவருக்கும் மகிழ்ச்சியும் கண்ணனிடம் பெரும் அன்பும் தோன்றியது. கண்ணனுக்கும் இதன் பிரதிபலிப்பு இருந்தது. ஒவ்வொருவரும் தன்னிடம் வைத்திருக்கும் அன்பைக் கண்டு மகிழ்ந்தான் கண்ணன்.
ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு முக்கியமோ அவ்விதமே அவர்களும் தனக்கு முக்கியம் என்பதையும் உணர்ந்தான். ஆனால், ஆனால்???? அங்கே இருந்த கம்சாவையும், அவள் மகன் ப்ருஹத்பாலனையும் கண்ணன் கண்டு தன் வந்தனங்களைத் தெரிவித்துக்கொண்டபோது அவன் உள் மனம் அவனை எச்சரித்தது. எனினும் தன் முகம் மாறாமால் தன் அன்பும் மாறாத வண்ணம் கண்ணன் அவர்களையும் நலம் விசாரித்தான். ஆனாலும் கம்சாவும், ப்ருஹத்பாலனும் வெளிப்படையாகவே தங்கள் விரோத மனப்பான்மையைக் காட்டிக்கொண்டனர். கண்களாலேயே தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள். அனைவரும் அவரவர் மாளிகைகளுக்குச் செல்ல நகரில் ஆங்காங்கே விருந்தும், நடனமும், பாட்டும் அமர்க்களப்பட்ட்து. தாமகோஷன் கொண்டாட்டங்கள் முடிந்த்தும் தன் நாட்டுக்குத் திரும்பினான்.
இலக்கில்லாமல், தன்னை ஆள சரியான நபர்கள் இல்லாமல் இருந்து வந்த மதுரா நகருக்குக் கடைசியில் ஒரு ஆன்மா, உண்மையான ஆன்மா, தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஆன்மா கிடைத்துவிட்ட குதூகலத்தில் இருந்தது. நகரமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. அனைவரும் கண்ணனையே நம்பி இருந்தனர். அவனைப் பார்க்கவும், பேசவும், அவன் வீரச் செயல்களைக் குறித்து விசாரிக்கவும் ஆர்வம் காட்டினர். இந்த மக்களுக்கு நடுவே கம்சாவும், ப்ருஹத்பாலனும், அவன் நண்பர்களும் கண்ணனிடம் எவ்விதம் பழகுவது? என்ன சொல்வது? எப்படி நடந்து கொள்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர். வெகு விரைவில் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது. கண்ணன் ஒரு பயிற்சி முகாம் ஆரம்பிக்கவேண்டும் என எண்ணிப் பெரியோர்களின் ஆசிகளோடும் சம்மதத்தோடும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவென ஒரு முகாம் ஆரம்பித்தான். ஆயுதப் பயிற்சிகளும், வாள், வில், கதை போன்றவற்றைக் கொண்டும், மல்யுத்தங்களில் பயிற்சியும் ரதங்களில் இருந்து யுத்தம் பண்ணப் பயிற்சியும், குதிரைகள், யானைகளைப் பழக்குவதில் பயிற்சிகளும் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கப் பட்டன. . ராணி பத்மாவதி அளித்த தங்கத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து போர்க்குதிரைகள் வரவழைக்கப் படுவதாயும், அவற்றைப் பழக்கவும், போர் செய்யவும் பயிற்சி அளிக்கப் படும் எனவும் அறிவிக்கப் பட்டது.
மேலும் வீட்டில் எவரும் சும்மா உட்கார்ந்து கொண்டு பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது எனவும், அவரவர் அவரவருக்கு நியமிக்கப் பட்ட பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றவேண்டும் எனவும், ஒவ்வொரு யாதவனும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்யப் பட்ட்து. எல்லாவற்றிலும் அதிர்ச்சி அடைய வைத்த நிகழ்வே போர் ரதங்களைச் செலுத்துவதில் நடைபெற்று வந்த போட்டியைத் தடை செய்திருந்தான் கம்சன். இப்போது அந்தப் போட்டி கார்த்திகை மாதப் பெளர்ணமி அன்று நடைபெறும் எனவும் அனைவரும் தங்கள் போர் ரதங்களை அதற்கேற்ப ஆயத்தம் செய்யுமாறும் அறிவிக்கப் பட்டனர். மேலும் மதுராவின் கோட்டைச் சுவர்களை பலப்படுத்தவும் ஆயத்தங்கள் நடந்தன. பல யாதவர்களுக்கும் கண்ணனின் இந்த முயற்சிகள் சந்தோஷத்தையே கொடுத்தன. ஆனால் ப்ருஹத்பாலனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இது மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் கொடுத்தது. இது வரையிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த யாதவ மக்கள் சிறியோரிலிருந்து பெரியோர் வரை அனைவரும் இப்போது கண்ணனின் பின்னாலேயே செல்கின்றனர். அவன் வார்த்தைகளுக்கு பெரும் மதிப்புக் கொடுக்கின்றனர். அவன் கண்ணால் சுட்டிய வேலையை உடனே முடிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அவனை ஒரு கடவுளாக நினைத்துத் தொழவும் செய்கின்றனரே!
9 comments:
வடை எனக்கு.... ப்ரிசாதம் தான....
பாட்டி உங்கப் பதிவுலயும் எழுத்துப்பிழை இருக்கிறது.... ///கண்ணன் ரத்த்திலிருந்து கருடன் ஒருவனோடு இறங்கினான்/// ரதத்திலிருந்து என்பதற்கு பதிலாக ரத்த்திலிருந்து என்று இருக்கிறது.... அதனாலே 10000 முறை imposition எழுதணும்....... :P
எப்புடி......
வாங்க அங்கிள், முதல் வரவுக்கு நன்னி ஹை!
அப்புறம் அது எ.பி, இல்லை, வேர்ட் டாகுமெண்ட்டில் தட்டச்சும்போது விண்டோஸ் 7-ல் மட்டும் அப்படிப் புள்ளி எல்லா எழுத்துக்களிலேயும் விழுகிறது. அப்புறம் அதை நோட்பாடில் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டு அதை நீக்குவேன். இது கண்ணிலே பட்டிருக்காது. :))))) விண்டோஸ் எக்ஸ்பியில் இந்தப் பிரச்னை வரதில்லை. :D
தட்டச்சுப் பிழை :P
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே... :P
படிச்சுட்டேன்.
எழுத்துப் பிழையிருந்தால் பரவாயில்லை. இம்போசிஷன் எல்லாம் எழுத வேண்டாம். :))))))
மிக மிக புதிய தகவல்கள்... அருமையான நடை ..... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.. உங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நன்றி .. காரணம் என்னுடைய பதிவை பார்க்கவும் .......
கண்ணா என்று கண்ணனை சேவிப்போமாக(வ
நல்ல பதிவு
இந்த 41 அத்தியாயத்தை படித்து விட்டேன்
எழுத்து பிழை எல்லாம் எங்க தலைவி
நீங்க எல்லாம் சரியா படிக்கரீங்களான்னு டெஸ்ட் வைச்சதாக்கும் !
//ஒவ்வொருவரையும் கண்ணன் விசாரித்த தோரணையிலிருந்தும் அவன் ஒரு போதும் அவர்கள் நலத்தைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லாமல் இருந்தான் என்று அவர்களுக்குப் புரியும் வண்ணம் இருக்கவே அனைவருக்கும் மகிழ்ச்சியும் கண்ணனிடம் பெரும் அன்பும் தோன்றியது. கண்ணனுக்கும் இதன் பிரதிபலிப்பு இருந்தது. ஒவ்வொருவரும் தன்னிடம் வைத்திருக்கும் அன்பைக் கண்டு மகிழ்ந்தான் கண்ணன்.
ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு முக்கியமோ அவ்விதமே அவர்களும் தனக்கு முக்கியம் என்பதையும் உணர்ந்தான்//
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி ணங்குவோமாக!)
ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கண்ணன் கொன்றதும் ஒரு கதை போல் ஆங்காங்கே மக்களால் உற்சாகத்துடன் பேசப்பட்டது//
இக் கதையைப் படித்தாலோ, கேட்டாலோ கடும் ஜுரம் நீங்குமாம்.
Post a Comment