Monday, May 2, 2011

கண்ணன் வருவான், 2-ம் பாகம்! ஷாயிபாவுக்கு பயம்

ஆஹா, பரம்பொருளே, ஸ்ரீகாலவ வாசுதேவரே, இது என்ன?? சுபத்ராவின் குரல் போல அன்றோ உள்ளது? கண்ணன் மேல் மிகவும் பாசம் வைத்திருப்பவள் ஆயிற்றே. எந்நேரமும் கண்ணனின் கைகளை ஊஞ்சலாக்கி அதில் ஏறிக்கொண்டு ஆடி மகிழ்வாளே! இனி என்ன செய்யப்போகிறாள்? இருதயமே பிளக்கும் அளவுக்கு அல்லவோ அவள் அழுகைக் குரல் கேட்கிறது. நமக்கே இப்படி இருந்தால் அவளுக்கு இதயமே சுக்குச் சுக்காகி இருக்குமே. ஷாயிபா செய்வதறியாது குனிந்து பார்த்தாள். எங்கு நோக்கினும் உடல்கள் உடல்கள் உடல்கள்! இது என்ன?? இங்கே உத்தவன் கிடக்கிறானே! அதிர்ச்சியில் இறந்துவிட்டானோ? ஷ்வேதகேது தன்னைத் தானே மாய்த்துக்கொண்டு விட்டான் போலும். அவள் அறிவாள் ஏன் இப்படிச் செய்து கொண்டான் என. மெல்ல மெல்ல அவன் அருகே சென்றாள் ஷாயிபா. திடீரென ஷ்வேதகேது தலையைத் தூக்கி அவளையே உற்று நோக்கினான். அதே பார்வை. அவள் மேல் அவன் வைத்திருந்த மாறாக் காதல் கொஞ்சமும் குறையவே இல்லை. “ஷாயிபா, ஷாயிபா, நீயா?? நீயா? இவ்வாறு செய்தாய்?? நீ இப்படிச் செய்யலாமா? உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே! என் அருமை கிருஷ்ணனை நீ கொன்றுவிட்டாயே, அதன் மூலம் என்னையும் அல்லவோ கொன்றுவிட்டாய்! உன் ஒரு கொலை எத்தனை கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணமாய் அமைந்துவிட்டது!”

ஓட்டமாய் ஓடினாள் ஷாயிபா. அங்கிருந்து தூரமாய், வெகு தூரமாய் ஒருவர் கண்ணுக்கும் தெரியாதபடிக்குத் தொலை தூரமாய் ஓடினாள். யாரோ அவளைப் பின்னிருந்து துரத்துவது போன்ற வேகத்தோடு ஓடினாள். சொல்லத் தெரியாத பயம் அவள் மனதில் புகுந்து கொண்டது. நூறு, ஆயிரம், இல்லை, இல்லை, கோடி, கோடி இனம் தெரியாத ஆவிகளும், பேய்களும் அவளைத் துரத்துவது போல் தோன்றிற்று. ஓட்டமாய் அங்கிருந்து மாளிகையை நோக்கி ஓடினாள். எப்படியேனும் மாளிகையை அடைந்துவிட்டால் பாதுகாப்புக் கிடைக்கும் என்பது அவள் எண்ணம். ஆனால், ஆனால், இது என்ன?? மாளிகையின் மேல்மாடத்துக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டுவிட்டதா? இல்லை, இல்லை, உக்ரசேனரும் அவருடைய ஆட்களும் சர்வாயுதபாணியாக ஒரு யுத்தத்திற்குத் தயாராவது போய் தயாராகக்காத்திருக்கின்றனரே! இங்கே சென்றால் இவர்கள் கைகளில் மாட்டிக்கொள்வோம். புலிக்கூட்டத்தின் நடுவே தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட புள்ளிமானைப்போலச் சுற்றும் முற்றும் பார்த்தாள் ஷாயிபா.

யமுனைப் படித்துறைக்குச் செல்லும் வழி கண்களில் பட்டது. அந்தப் பக்கமாய் ஓடினாள். இந்த யமுனையில் தான் கண்ணன் தினமும் நீச்சலடித்துக் குளிப்பான். இப்போது,இப்போது தன் குழந்தையைத் தொலைத்த தாயைப் போல் யமுனை பொங்கிக் கொண்டிருப்பாளோ! அலை ஓசை போல் பெரும் சப்தம் கேட்டது ஷாயிபாவுக்கு. சற்று நிதானித்துக்கொண்டு உற்றுக்கவனித்தாள். மதுராவின் மக்கள் அனைவரும் அங்கே ஓவென்று அலறி அழுது கொண்டு இருந்தனர். அனைவரும் மார்புகளில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டனர். பெண்கள் தங்கள் தலைகளில் அடித்துக்கொண்டனர். எல்லாருமே அலறி அழுது கொண்டிருந்தனர். அனைவரின் துக்கமும் பெருகிக்கொண்டிருந்த வேளையில் அனைவருமே ஒரே முகமாக ஷாயிபாவுக்கு சாபத்தை அளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை நக்ஷத்திரம், அவர்களின் ரக்ஷகன், பாதுகாவலன், கண்ணின் கருமணி போல் அவர்கள் நினைத்த கண்ணனை இந்தப் பெண்ணரசி கொன்றுவிட்டாளே. இனி அவர்கள் கதி என்ன?? அங்கிருந்தும் ஓடிவிட நினைத்த ஷாயிபா கம்சாவின் கரங்களில் சிக்கிக் கொண்டாள். அப்பாடா! ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் ஷாயிபா. கம்சாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அதிர்ச்சி அடைந்தாள். இது என்ன?? கம்சா சிரித்துக்கொண்டு சந்தோஷமாய் இருப்பாள் என எதிர்பார்த்தால் விவரிக்க ஒண்ணாத சோகத்தோடு, கோபமும், வலியும் காணப்படுகிறதே அவள் முகத்தில். ஷாயிபா திணறினாள்.

அதோ, அங்கே பலராமன், பெரியண்ணா என அனைவராலும் அழைக்கப்படுபவன் தன்னுடைய கலப்பையைத் தூக்கிக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறான். அவன் முகத்தில் துக்கத்தை விட வெறுப்பும், கோபமும் மண்டிக் கிடக்கிறதே. அவன் கண்களால் அவளைப் பார்த்த பார்வையில் அவளைச் சுட்டெரித்துவிடுவான் போல்தெரிகிறதே. அந்தப் பார்வையின் தகிப்பைத் தாங்கமுடியாத ஷாயிபா அங்கிருந்தும் ஓடினாள். வழியெல்லாம் சின்னஞ்சிறு சிறார்கள், கண்ணா, கண்ணா, எங்கள் அன்புத் தோழா! நீ இல்லாமல் நாங்கள் எங்கள் துக்கத்தை எல்லாம் யாரிடம் பகிர்ந்து கொள்வோம்?? எங்கே இருக்கிறாய் நீ?” என அலறும் குரல்கள். வயது முதிர்ந்த பெரியோரோ, “ஏ, வாசுதேவா, பரமாத்மா, பரம்பொருளே, ஏ நாதா, எங்கள் ப்ரபு! எங்கேயப்பா சென்றாய்?” எனத் தேடினார்கள். அனைவரின் குரலிலும் அக்ரூரரின் அவலக் குரல் தனித்துத் தெரிந்தது.

பாலைவனமாகிவிட்டனவா மதுராவின் தெருக்கள்? ஷாயிபா ஓடின வழியெல்லாம் மனித நடமாட்டமே இல்லை. பெயரே தெரியாததொரு பயங்கரமான சாபத்தில் இருந்து தப்ப வேண்டி இலக்குத் தெரியாமல் ஓடினாள் ஷாயிபா. அவள் கால்கள் களைத்துவிட்டன. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது அவளுக்கு. தூரத்தில் தொலைதூரத்தில் வானும், பூமியும் சேரும் தொடுவானத்தில் சின்னதாய்ச் சிவப்புப் பொட்டு ஒன்று தெரிய ஆரம்பித்து வர வரப் பெரிதாகிக்கொண்டே வந்தது. கால்கள் தடுமாறின ஷாயிபாவுக்கு. சற்று நேரத்தில் எல்லா வீடுகளிலேயும் அக்னிதேவன் குடி வந்தானோ என்னும்படியாக வீடுகளெல்லாம் சிவந்த வண்ணம் பெற்றுத் திகழ்ந்தன. ஆஹா, இது தான் மஹா ப்ரளயமோ?? அந்த மஹாதேவர் தன்னுடைய மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறந்து பூமியை எரிக்க ஆரம்பித்துவிட்டாரோ?? ஏனெனில் கண்ணன் தர்மத்தைக் காக்க வந்திருப்பதாய்க் கூறுவான். இப்போது அவன் இறந்துபட்டதால் தர்மமும் வீழ்ச்சி அடைந்து கடைசியில் கடைசியில் அந்த ஊழிக்காலமே வந்துவிட்டதா?? ஷாயிபாவுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த குரல் ஒன்று,

“ஒழிந்தான் கண்ணன், அவனுடன் தர்மமும் அழிந்தது!” எனக் குதூகலமான குரலில் கூறிற்று.

7 comments:

priya.r said...

படிக்கும் நமக்கே பயமாகவும் வருத்தமாகவும் இருக்கிறதே
ஷாயிபா பேரில் கோபமும் வருகிறதே :(

priya.r said...

இதெல்லாம் ஷாயிபா வின் கனவு தானே !

தி. ரா. ச.(T.R.C.) said...

இதுவரை நான் கேள்விபடாத புதுக்கதையாக இருக்கே நல்ல ஸஸ்பென்ச் வேறும்ம்ம்ம்ம் நடக்கட்டும். அது சரி யாரையோ கடத்தின்டு போனாங்கண்னு ஊரே தேடரது அவுங்க இங்கே இருக்காங்க. எல்லாம் உங்க வேலையா

Ashwin Ji said...

ம்.ம்.ம்.ம்.அப்பறம்?

Ashwin Ji said...

ம்.ம்.ம்.ம். அப்பறம் ?

priya.r said...

ஹ ஹா
TRC சார் கேள்விக்கு பதில் சொல்லுங்க கீதாம்மா

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 65 மீண்டும் ஒரு முறை படித்து விட்டேன்
அப்போ தானே தொடர்ச்சியாக படிக்க நன்றாக இருக்கும்