Saturday, May 7, 2011

ஷாயிபாவின் பழி தீர்க்கும் படலம், கண்ணன் வருவான் 2-ம் பாகம்

என்ன இது?? இது எங்ஙனம் சாத்தியம்?? நான் தேவகி அம்மாவின் உடலைப் பார்த்தேனே. ஆனால் தேவகி அம்மாவோ இங்கே வாசுதேவா, வாசுதேவா எனக் கதறிக்கொண்டிருக்கிறார்களே?? அந்தக் குழந்தைக்கிருஷ்ணன் சிலையை வழிபடுகையில் எவ்வாறு முழு ஈடுபாட்டுடன் கூறுவார்களோ அப்படியே கூறினாலும் இதில் உள்ள இனம் தெரியாத சோகம் என் நெஞ்சத்தைப் பிழிந்து எடுக்கிறதே. வாசுதேவன் எங்கே இருக்கிறான்?? அவன் தான் போய்ச் சேர்ந்துவிட்டானே! இந்த அவலக் குரலுக்கு என்ன பதில் சொல்லுவது?? இருக்க இருக்க அதிகமாகிக்கொண்டு வருகிறதே! ஷாயிபா அங்கிருந்து ஓட்டமாய் ஓட, குரல் அவளைத் துரத்தியது. எங்கு சென்றாலும் தேவகி அம்மாவின் குரல் வாசுதேவா, வாசுதேவா, என் கிருஷ்ணா, வாசுதேவக் கிருஷ்ணா! என்றே எதிரொலித்தது. ஷாயிபாவுக்கு அவளையும் அறியாமல் மனதில் இனம் தெரியாத பயம் சூழ்ந்தது. அவள் வாய்விட்டுக் கத்த விரும்பினாள். அந்தக் குரலின் ஓலத்தை அடக்க விரும்பினாள். ஆனால் என்ன இது?? அவளுக்குக் குரலே எழும்பவில்லையே?? பேசவே வரவில்லையே?? வார்த்தைகளையும் சேர்த்துக் கண்ணனோடு கொன்றுவிட்டேனா?? என் குரல்! என்ன ஆயிற்று?? தொண்டையில் என்ன அடைக்கிறது?? பாறாங்கல்லா?? இல்லை, இல்லை, கல்லெல்லாம் இல்லை. நான் பேச வேண்டிய வார்த்தைகள் தான் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. வெளிவரமுடியாமல் தவிக்கின்றன. அவற்றை எவ்வாறு வெளிக்கொண்டு வருவேன்?? அப்படியே சரிந்து அமர்ந்தாள் ஷாயிபா. தன் கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். தொண்டையைச் சரி செய்ய முயன்றாள். குரல்வளையைத் தடவிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல, “வாசுதேவா!” என்று கூப்பிட முயன்றாள். ஆனால்,…….ஆனால்……… ம்ஹும், அவளுக்குக் குரலே வரவில்லை.


“நான் உன்னைப் பயமுறுத்திவிட்டேனா ஷாயிபா?” எங்கிருந்தோ கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட்டது ஷாயிபாவுக்கு. யார் குரல் இது?? அடிக்கடி கேட்டிருக்கிறோமே! ரொம்பவே தெரிந்த நபரின் குரல் தான். ஆனால்….. ஆனால்…… எங்கிருந்து வருகிறது? அந்தக் குரல் அங்கேயே அப்படியே நிலைபெற்று நின்று விட்டிருப்பதாய் ஷாயிபாவுக்குத் தோன்றியது. திடீரென ஒரே மெளனம். குரல் அடங்கிவிட்டதா?? எங்கே இருக்கிறேன் நான்?? தன் கண்களைச் சிரமப்பட்டுத் திறந்தாள் ஷாயிபா. அவளுக்குத் தான் இருக்குமிடம் எதுவெனப் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். மாலை அஸ்தம சூரியன் தன் செங்கிரணங்களோடு கொஞ்சம் தங்கக் குழம்பையும் சேர்த்து வார்த்து அந்த இடத்தை ஒரு சொப்பனபுரியாக மாற்றிக்கொண்டிருந்தான். சிவப்பும், மஞ்சளும் கலந்து காட்சி அளித்த அந்த அதி அற்புத ஒளியிலே அவள் கண்கள் எதிரே ஒரு மஞ்சள் பட்டாடை தான் முதலில் தெரிந்தது; பின்னர் விருந்தாவனத்துத் துளசி மாலை! மயில் பீலி; அதோ, அந்த அளவான மெல்லிய அதே சமயம் உறுதியான உடல். சரியான கட்டமைப்புடன் கூடிய அந்த உடல், கைகள், கால்கள்; என்றும், எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் மறையாதிருக்கும் அந்த இளமுறுவல்; உன் துன்பம் என்னவென எனக்குப் புரிகிறது; நான் இருக்கிறேன்; கவலை வேண்டாம்; என உறுதியளிக்கும் சிரிக்கும் கண்கள். உலகத்திலுள்ள அனைத்து மாந்தர்களுக்கும் கொடுத்தாலும் உனக்கும் என்னிடம் கருணை மீதமுள்ளது; கவலைப்படாதே எனச் சொல்லாமல் சொல்லின அந்தக் கண்கள். அவன் தோள்களில் சவாரி செய்து கொண்டிருந்தாள் அவன் அன்புத் தங்கை சுபத்ரா! கண்ணனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான் ஷ்வேதகேது.

“கிருஷ்ணா!” மிக மிக மெதுவாக வந்தது ஷாயிபாவின் குரல். அவளுக்கே கேட்குமா என்னும்படி மெதுவாக வந்த அந்தக் குரலில் கொஞ்சம் பயம் மீதி இருந்தாலும் பெருமளவு நிம்மதியே தெரிந்தது. ஷாயிபாவின் தலை சுற்றியது போல் இருந்தது அவளுக்கு. தன்னிரு கரங்களாலும் தலையை அமுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

“சகோதரி! சொல், என்ன வேண்டும் உனக்கு?”

கண்ணன் குரல் கேட்டது ஷாயிபாவுக்கு. அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. முதலில் இது கனவா அல்லது நினைவா?? சிறிது நேரத்திற்கு முன் கண்டவை எல்லாம் கனவா? நனவா? பிரமையா?? அவள் கால்கள் நடுங்கின. எது கனவு, எது நனவு என்பதே அவளுக்குப் புரியவில்லை. மெல்ல எழுந்திருக்க முயற்சித்தாள். ஆனால் அவள் கால்கள் அவளை ஏமாற்றின. நடுங்கித் தொலைத்தன அந்தக் கால்கள். “ஓ, கண்ணனை நான் கொன்றேன் அல்லவோ?” அவளுக்கு இப்போது எல்லாமே நினைவில் வந்து தொலைத்தது. ஆனால்……ஆனால்………இதோ கண்ணன், கிருஷ்ண வாசுதேவன். ரத்தமும், சதையுமாக சிரிப்பும், கிண்டலுமாக, கருணையையும் அன்பையும் அளவில்லாமல் காட்டிக் கொண்டு தான் பிறப்பெடுத்திருப்பதே ஷாயிபாவின் துன்பங்களைத் தீர்க்கவே என்பது போல் நடந்து கொண்டு…. இதோ எதிரே கண்ணன்! இவனால் இப்படித் தான் இருக்க முடியும்,. வேறு மாதிரி இவனால் இருக்க இயலாது. இதுதான் இவன் இயல்பு. யதார்த்தம், உண்மை! இவன் நடிக்கவில்லை; நான் நினைத்தது எல்லாம் தப்பு!

“ஷாயிபா, எழுந்திரு, விழித்துக்கொள்! நான் கிருஷ்ணன் வந்துவிட்டேன்! விழித்துக்கொண்டு என்னைப் பார்!” குரலில் தொனித்த உறுதியும், நிச்சயமும் அவன் உயிரோடு தான் இருக்கின்றான் என்பதைப் பறை சாற்றின. அகல விரிந்த கண்களோடு எழுந்த ஷாயிபா கண்ணனையே சற்று நேரம் விழித்துப் பார்த்த வண்ணம் நின்றாள். சட்டென்று என்ன தோன்றியதோ, அப்படியே கண்ணன் பாதத்தில் சரிந்தவள், அந்தப் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தன் கண்ணீரால் அவற்றிற்கு அபிஷேஹம் செய்தாள். “ஓஹோ, ஷாயிபா, என்ன இது?? நீ தைரியமான பெண்மணி அல்லவோ?? குழந்தையாக மாறிவிட்டாயே! அழாதே, அழுகையை நிறுத்து. நான் இங்கே தான் இருக்கிறேன்.” கண்ணன் அவளுக்கு உறுதியளித்தான். சுபத்ராவைக் கீழே இறக்கிவிட்ட கண்ணன், அவளருகே அமர்ந்தான். அவள் தலையைத் தூக்கி அவள் முகத்தை மறைத்த அவள் தலைமயிரை அகற்றிவிட்டு அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் தலையைத் தன் கரங்களால் தடவிக் கொடுத்தான். “ஷாயிபா, அழாதே, அழுகையை நிறுத்து. நான் சொல்கிறேன். அழுகை வேண்டாம். உன்னை எவரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள். அதுவும் நான் இருக்கையில். உனக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பம்?? அதை மட்டும் சொல்லு!” கண்ணன் குரலின் கருணையும், பரிவும் ஷாயிபாவை ஆட்டி வைத்தது. அவள் நெஞ்சத்தினுள்ளே மறைந்திருந்த வஞ்சத்தைச் சுக்கு நூறாக்கியது. அவளைக் கண்டு அவளே வெட்கமடைந்தாள்.

சுபத்ரா தன் தளிர்நடையால் அவளிடம் ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “ஷாயிபா அக்கா” என்று தன் மழலையால் இனிமையாக மிழற்றினாள். ஷாயிபாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “கோவிந்தா, கோவிந்தா,” பெருத்த விம்மல்களோடு வெளி வந்தன இவ்வார்த்தைகள். ஷாயிபா பொங்கும் விம்மல்களோடு பேசமுடியாமல் தவித்துக்கொண்டே, “ கோவிந்தா, கோவிந்தா, இப்போது என்னை எதுவும் கேட்காதே! உன்னை மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பொறுத்துக்கொள். நீ என்னை என்ன செய்யவேண்டுமெனச் சொல்கிறாயோ அப்படியே செய்கிறேன். நீ சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.” திக்கித் திணறி வெளி வந்தன வார்த்தைகள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு தன் துக்கத்தையெல்லாம் வெளிப்படுத்தினாள் ஷாயிபா. சுபத்ராவைச் சமாதானம் செய்யும் அதே கனிவோடு கண்ணன் அவளையும் சமாதானம் செய்தான். “உன்னை ஒருவரும் வற்புறுத்த மாட்டார்கள் ஷாயிபா. நன்கு ஆலோசித்து முடிவு எடுத்துக்கொள். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் யோசி. அதன் பின்னர் உனக்கு யாரைத் திருமணம் செய்து கொள்ள இஷ்டமோ அவரைத் திருமணம் செய்து கொள். உன் விருப்பம் தான் முக்கியம்.” என்றான் கண்ணன்.

“என் கடவுளே, என் கடவுளே, இத்தனை நாட்களாக உன்னை நான் அறியவில்லையே!” ஷாயிபாவுக்கு அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது. கண்ணன் காலடிகளில் மீண்டும் வீழ்ந்தாள்.

3 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 68 படித்து விட்டேன்
ஷாயிபா திருந்தியது படிக்க நிறைவா இருக்கு கீதாம்மா

priya.r said...

அடடே !67 க்கு பதில் 68 என்று தவறாக குறிப்பிட்டு விட்டேனே

sambasivam6geetha said...

நான் கணக்கே வச்சுக்கறதில்லை. :))))