Tuesday, May 10, 2011

திரிவக்கரையின் கலக்கம்! கண்ணன் வருவான் 2ஆம் பாகம்!

திரிவக்கரை அந்த அரசமாளிகைகளில் சும்மா வாசனைத் திரவியங்களை மட்டும் கொடுத்துக்கொண்டு சென்றுவிடும் சாதாரண வியாபாரப் பெண்ணாக இருக்கவில்லை. அரண்மனை வளாகத்தினுள் நுழைந்ததுமே தன் கண்களையும், காதுகளையும் தாராளமாய்ப் பயன்படுத்தினாள். அவள் கண்களில் இருந்து எந்தச் சம்பவமும் தப்பியதில்லை. அதே போல் அவள் காதுகள் கேட்காத செய்திகளும் இல்லை. அவள் மூக்குக் கூட இப்படியான செய்திகளை மோப்பம் பிடித்து உணரும் சக்தியைப் பெற்றிருந்தது என்றே சொல்லலாம். அவள் நாக்கோ எனில் தேவைப்பட்டால் சாட்டையாகவும் சுழலும், தேவை இல்லை எனில் வெண்ணையாகக் குழையும். பட்டுப் போன்ற மிருதுவான சொற்களும் வரலாம்; கர்ணகடூரமான குரலில் அவள் வசைபாடுவதையும் கேட்கலாம். அதே நாக்குச் சில முக்கியமான சமயங்களில் அவள் ஊமையாகிவிட்டாளோ என்னும்படிக்கு அமைதியாகவும் இருந்ததுண்டு. தற்சமயம் அவளுக்கு அளிக்கப் பட்டிருந்த முக்கியமான பொறுப்புக்கள் நிறைந்த வேலையில் அவள் பெருமை அடைந்திருந்தாள். தேவகி அம்மாவின் வலக்கை போல் செயல்பட்டு வந்தாள். வசுதேவரைத் தலைவராய்க் கொண்ட அந்த மஹாப் பெரிய குடும்பத்தில் வசுதேவரின் ஐந்து சகோதரர்கள், அவர்களின் மனைவிகள், குழந்தைகள், பேரன், பேத்திகள், வசுதேவரின் சகோதரிகளின் வருதல், போதல், மற்றும் மற்ற உறவின் முறைகளின் வருகை, அவர்களை அண்டி இருக்கும் ஏழைகளின் விருப்பங்கள் அனைத்தையும் அறிந்திருந்தாள். யார் யாருக்கு எந்தச் சமயங்களில் எந்த உதவியை எப்போது எவ்வாறு செய்து முடிக்கவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருந்தாள். அதற்கேற்றவாறு தேவகி அம்மாவின் கண்ணசைவிலும், வசுதேவரின் விருப்பத்தைப் புரிந்து கொண்டும் நடந்து வந்தாள்.

திரிவக்கரையின் முக்கியமான நோக்கம் எல்லாம் கண்ணனைச் சுற்றியே, கண்ணனுக்காகவே என்றே இருந்தாலும், கண்ணனால் அழைத்துவரப்பட்ட ஷாயிபாவை அவள் முழுமனதோடு வெறுத்தே வந்தாள். அவளுடைய அசர அடிக்கும் அழகு, திரிவக்கரையைக் கவரவே இல்லை. இந்த வீட்டிலே பல இளைஞர்கள் திருமணமே ஆகாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு நடுவே இப்படி ஒரு அழகான மணமாகாத இளம்பெண்ணா?? பஞ்சு மூட்டைகளுக்கு நடுவே அகல்விளக்கை ஏற்றினாலே பஞ்சிலே எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளும். இதுவோ காட்டுத் தீயாகவன்றோ இருக்கிறது? அதிலும், அவளும், அவளின் மனப்போக்கும்! சீச்சீச்சீ, திரிவக்கரை ஷாயிபாவின் கடுமையான, கோபமான மனப்போக்கை அறவே வெறுத்தாள்; தேவகி அம்மா மிக மிக மென்மையாகப் பேசுபவர். அவர் இருக்குமிடமே தியானமண்டபத்தில் இருப்பது போன்ற அமைதியைத் தரும் இடமாகத் தோன்றும். அப்படிப் பட்ட கோயில் போன்ற இல்லத்தில் இவளைப் போன்ற ஒருத்திக்கும் இடம் கொடுத்துவிட்டானே இந்தக் கண்ணன்? அதோடு கண்ணனை அவள் மிகக் கடுமையாக நிந்தனை செய்ததும் திரிவக்கரைக்குப் பிடிக்கவே இல்லை. இவள் என்ன அழகாய் இருந்தால் தான் என்ன?? இந்தக் கருநிற அழகி உடல் மட்டும் கருமை இல்லை; உள்ளமும் கருமைதான். இவள் கண்ணனை இந்தப் பாடு படுத்தி எடுக்கிறாளே?

ம்ம்ம்ம்?? ஆனால் இந்தக் கண்ணனும் சும்மாவே இருக்கிறான். கம்சனைக் கொல்லக் கண்ணன் மதுராவுக்கு வந்தபோது தானே ருக்மிணியைக் கண்டான்?? ஆம், ஆம், நானும் அப்போது தான் ருக்மிணியை முதன் முதல் கண்டேன். விதர்ப்பநாட்டு இளவரசியான அவளே கண்ணனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி ஆவாள். ருக்மிணியோடு அறிமுகம் ஆனதில் இருந்தும், ருக்மிணியின் மனதைப் புரிந்து கொண்டதில் இருந்தும் திரிவக்கரை எப்போது ருக்மிணிக்கு ஆதரவாகவே நடந்து வந்தாள். எப்போதுமே கண்ணனைக் குறித்து மிக உயர்வாகப் பேசியும், ருக்மிணி கண்ணனை விரும்புவதை வெளிப்படையாக ஆதரித்தும், கண்ணன் செய்து வந்த வீரதீரப் பிரதாபங்களைப் பற்றி ருக்மிணியோடு விவாதித்தும், பலவகைகளிலும் அவள் ருக்மிணிக்கு ஆதரவாகவே இருந்தாள். இப்படி எல்லாம் கூடி வந்த இந்தச் சமயத்தில் இந்தக் கரவீரபுரத்தின் இளவரசி ஒரு பிசாசு போல் எங்கிருந்தோ வந்து விட்டாளே? இது ஒரு நல்ல செய்தியாகத் தோன்றவில்லை திரிவக்கரைக்கு. இந்த ஷாயிபாவின் அழகு மிக மிக ஆபத்தான ஒன்று. இவள் எப்போவும் கண்ணனை நிந்தித்து வந்தாள் என்பதும் உண்மைதான். ஆனால்…… ஆனால்….. பெண்களுக்கே உரிய சூக்ஷ்ம புத்தி திரிவக்கரையை எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. இவ்வளவு கோபமும், வன்மமும் உள்ளார்ந்த அன்பை, காதலை, தன்னையே எப்போதும் கவனத்தில் இருத்த வேண்டும் என்ற எண்ணத்தை மறைக்கும் ஒரு முகமூடி என்றே நினைத்தாள். புரிந்தும் கொண்டாள். மேலும்……மேலும்……. இந்தக் கண்ணன் நடந்து கொள்வதும் சரியில்லை. ஷாயிபாவையே எப்போதும் தனியாகக் கவனித்து வருகிறான். அவளைச் சந்தோஷப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்துகிறான். தினந்தோறும் ஷாயிபாவைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளான்; அவள் கோபத்தையும், கத்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோடு, ஒரு புன்னகையால் மட்டுமே பதிலளிக்கிறான். இறந்து போன தன் பெரியப்பாவை நினைத்துக்கொண்டு பழிவாங்கத் துடிக்கும் இந்தக் கொடூரமனம் கொண்ட பெண்ணிடம், அன்பான வார்த்தைகள் அல்லவோ கூறுகிறான். ஹூம், போகிற போக்கைப்பார்த்தால் ஷாயிபா கண்ணனின் மனைவியாக ஆகிவிடுவாளோ?? இதற்கு ஏதேனும் செய்தாகவேண்டும்.

தீவிரமாய்ச் சிந்தித்தாள் திரிவக்கரை. உத்தவன் மதுராவுக்கு வந்தபோது அவன் ஷாயிபாவிடம் பழகும் விதத்தை உன்னிப்பாய்க் கவனித்துக்கொண்டாள். மிகக் கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளுகிறானோ என்று தோன்றியது திரிவக்கரைக்கு. மேலும் ஷாயிபாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க உத்தவன் மறுத்தான். அவளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களை அறவே தவிர்த்தான். ஒரு நாள் பேச்சுவாக்கில் திரிவக்கரை ஏதோ சொல்லப்போகக் கண்ணன் அதற்குக் கொடுத்த மறுமொழியின் மூலம் உத்தவனுக்கு இருந்த சங்கடமான சூழ்நிலை தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தது திரிவக்கரைக்கு. நடந்தது இதுதான்;


சாதாரணமாக ஒருநாள் பேசுகையில், “உத்தவன் இப்போதெல்லாம் வேற்றாளாய்த் தெரிகின்றானே பிரபு,” என்று கண்ணனிடம் சொன்னாள் திரிவக்கரை. அதற்குக் கண்ணன்,”அதைக் குறித்துச் சிந்திக்கவேண்டியதில்லை. அவன் விரைவில் தானே சரியாகிவிடுவான்.” என்று கூறினான். இதன் மூலம் கண்ணன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கை புரிந்தாலும் உத்தவனின் மனநிலையும் புரிந்தது திரிவக்கரைக்கு. அதோடு உத்தவனிடமும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். ஷாயிபா எவ்வாறு மதுரா வந்தாள், கரவீரபுரத்தில் நடந்தது என்ன எனப் பலவகையிலும் கேட்டுப் பார்த்தாள். ஷாயிபாவைக் குறித்துப் பேசுவதையே உத்தவன் தவிர்த்தான்.

2 comments:

priya.r said...

அத்தியாயம் 68 படிச்சாச்சு கீதாம்மா
திரிவக்கரை பற்றியே இந்த அத்தியாயம் முழுவதும் சொல்ல பட்டு இருக்கிறது
அவளின் அறிவு ,அவள் மற்றவர்களை கவனிக்கும் விதம், கணிப்பது, அவள் குணங்கள் எல்லாம் அருமை

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா.