திரிவக்கரை தன் சாமர்த்தியமான பேச்சின் மூலம் ஷாயிபாவைப் பற்றிய முக்கியச் செய்திகளையும் கேட்டறிந்ததோடு உத்தவனிடம் அவள் அழகைப்புகழ்ந்தும் பேசினாள். ஆனால் உத்தவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. இருவரையும் சந்திக்க வைக்க முயன்றாள். ஆனால் உத்தவனோ ஷாயிபாவுடனான சந்திப்பையே அறவே தவிர்த்தான். அவள் பக்கமே திரும்பவில்லை. திரிவக்கரை தவித்தாள். இந்த ஷாயிபாவின் அழகில் கண்ணன் எங்கேயானும் மயங்கிவிட்டானெனில்?? என்ன செய்வது? எப்படியானும் உத்தவனை ஷாயிபாவுக்குத் திருமணம் செய்து வைத்துவிடவேண்டும். அதற்காக உத்தவனைத் தயார் செய்யவேண்டும். திரிவக்கரை முடிவு செய்துவிட்டாள். கண்ணனை இந்த ஷாயிபாவின் பிடியில் இருந்து முழுமையாகக் காக்கவேண்டுமெனில் வேறு வழியே இல்லை. அரண்மனையிலும் உத்தவனின் திருமணம் குறித்த பேச்சுக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இந்த உத்தவன் அங்கங்கே ஊர் சுற்றிக்கொண்டிருப்பதால் யாராலும் உடனடியாக உத்தவன் திருமணம் குறித்து எந்த முடிவையும் செய்ய முடியவில்லை.
திரிவக்கரை தன் அதிசாமர்த்தியமான பேச்சுக்களினால் உத்தவன் குறித்து ஷாயிபா என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். ஷாயிபாவுக்கு உத்தவன் மேல் எந்தக் கோபமும் இல்லை. அவன் திறமைசாலி, வீரன், கருணை நிறைந்தவன். அவன் மட்டும் எனக்கு வழித்துணையாக வரவில்லை எனில் நான் வழியிலேயே இறந்திருப்பேன். என்னை அவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொண்டான்.” இதெல்லாம் ஷாயிபா உத்தவன் குறித்துச் சொன்ன கருத்துக்கள். இதிலிருந்து உத்தவனிடம் ஷாயிபாவுக்குக் கோபம் எதுவும் இல்லை என்பது திரிவக்கரைக்குத் திருப்தியை அளித்தது.
அதோடு குக்குட்மின்னை விட்டு உத்தவன் திரும்ப மதுரா வந்ததும் ஷாயிபாவுக்குப் பிடிக்கவில்லை. இங்கே வந்ததும் உத்தவனுக்குக் கண்ணனின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப ஆடத் தான் சரியாய் இருக்கும், என்றும், என்னைத் திரும்பிக் கூடப்பார்க்க மாட்டான் என்றும் திரிவக்கரையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். திரிவக்கரையைப் பொறுத்தவரையில் இது போதும் எனத் தோன்றினாலும் உத்தவன் தரப்பில் இருந்து எந்தவிதமான ஆமோதிப்பையும் காணமுடியவில்லை. அதோடு உத்தவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் இருந்து கொண்டே இருந்தன. வேலைகளைச் சாக்கிட்டுக் கொண்டு அவன் ஒரு நாளில்பாதி நேரம் வீட்டை விட்டோ, நகரத்தை விட்டோ வெளியே இருந்து கொண்டிருந்தான். எல்லாம் நம் கைகளைமீறிவிடுமோ எனத் திரிவக்கரை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில் ஷ்வேதகேது அங்கே வந்தான். வந்தவன் ருக்மிணியிடம் இருந்து திரிவக்கரைக்கும் செய்தி கொண்டு வந்தான். மேலும் ஷ்வேதகேதுவுக்கு ஷாயிபாவை மணக்கும் ஆசையும் இருந்ததைப் புரிந்து கொண்டாள். வெகு விரைவில் ஷ்வேதகேது எப்படி ஷாயிபாவின் வலையில் வீழ்ந்தான் என்பதையும் புரிந்து கொண்டுவிட்டாள்.
உத்தவனிடம் ஒரு நாள் பேச்சுவாக்கில் ஷ்வேதகேது ஷாயிபாவை மணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் இருப்பதைக் குறித்துக் கேட்டாள். தனக்கு இது குறித்து எந்த விதமான ஆவலும் இல்லை என்பதைப்போல் உத்தவன் காட்டிக்கொண்டாலும், அவன் மனதில் இது போய்த் தாக்கியது என்பதை திரிவக்கரை உணர்ந்து கொண்டாள். உத்தவன் மனதில் மறைத்து வைத்திருக்கும் ஆசையை ஷ்வேதகேது புரிந்து கொண்டிருக்கிறானா என்பதை வெகு சாமர்த்தியமாக திரிவக்கரை சோதித்துப் பார்த்தாள். ஷ்வேதகேதுவுக்கு உத்தவன் துரோகம் செய்ய விரும்பவில்லை என்பதையும் புரிந்து கொண்டாள். ஆனால் ஷ்வேதகேதுவுக்கு உத்தவனின் ஆசை குறித்து அறிய நேர்ந்த போது அவனுக்குப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஷாயிபாவை அவன் ஒரே மனதாகக் காதலித்து வந்தான். அவளை ஒரு மனிதப் பெண்ணாக அல்லாமல், தன் இஷ்ட தெய்வத்தைப் போல் வழிபட்டு வந்தான். அவளை மணந்து கொண்டு அவள் உதவியுடன் ருக்மிணி கண்ணனை மணக்க உதவி செய்ய வேண்டும் என்று கனவுகள் கண்டும் வந்தான். அவனுக்கு உத்தவனின் இந்த ஆசை குறித்து அறிய நேர்ந்தபோது அது ஓர் பேரிடியாக இருந்தது. மெல்ல, மெல்ல உத்தவன் மேல் அவனுக்குப் பொறாமையும் ஏற்பட்டது. இருந்திருந்து இத்தனை நாட்களுக்கும் மேல் காத்திருந்தது ஷாயிபாவை உத்தவனிடம் ஒப்படைப்பதற்கா?
இது ஓர் பேரிடியாக இருந்தாலும் இதன் நன்மை, தீமைகள் குறித்து அலசி ஆராயும் அளவுக்கு ஷ்வேதகேதுவிற்கு தாராள மனம் இருந்தது. ஷாயிபாவின் அழகும், அறிவும், வீரமும் யாரை வேண்டுமானாலும் அவள் பக்கம் ஈர்க்கும். மன்மதனின் பாணங்களைச் சாதாரண மனிதரால் தடுக்க இயலுமா?? ஆணோ, பெண்ணோ ஓர் காலத்தில் காதல் வயப்பட்டே ஆகவேண்டி உள்ளதே. இதற்கு உத்தவன் விதிவிலக்கா என்ன?? ஹூம், அதுவும் ஷாயிபாவை நான் ஏமாற்றி விட்டேனே. கரவீரபுரத்தில் அவள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையைத் தூள்தூளாக்கிவிட்டேனே. ஆனால் உத்தவன் அப்படி அல்லவே. அவன் தன்னம்பிக்கை மிகுந்தவன், நிதானம் உள்ளவன், விவேகி, அறிவாளி, நல்ல வீரன். அப்படி ஷாயிபாவிற்கு உத்தவனைத் திருமணம் செய்து கொள்ள ஆசைஇருந்தால் அதைத் தடுக்க நான் யார்?? ஹா, மன்மதனின் கிரணங்களால் உத்தவன் மட்டும் தாக்கப் படக் கூடாதா என்ன?? ஒரு வேளை…. ஒரு வேளை…… அதுவே எல்லாம் வல்ல அந்த மஹாதேவனின் விருப்பமாகவும் இருக்கலாம். உத்தவன் ஷாயிபாவிற்கு மிகவும் பொருத்தமானவனே. நான் ஷாயிபாவை விரும்புவது உண்மையெனில், மனப்பூர்வமாக அவள் மகிழ்ச்சியை மட்டும் விரும்புகிறேன் எனில், அவள் யாரை மணந்து கொண்டால் மகிழ்வுடன் இருப்போம் என எண்ணுகிறாளோ, அவர்களைத் தான் மணக்கவேண்டும். ஷ்வேதகேதுஒரு தீர்மானத்திற்கு வந்தான்.
3 comments:
படிச்சாச்ச்ச்ச்....
அத்தியாயம் 69 படிச்சாச்சு கீதாம்மா
//இதன் நன்மை, தீமைகள் குறித்து அலசி ஆராயும் அளவுக்கு ஷ்வேதகேதுவிற்கு தாராள மனம் இருந்தது.//
//நான் ஷாயிபாவை விரும்புவது உண்மையெனில், மனப்பூர்வமாக அவள் மகிழ்ச்சியை மட்டும் விரும்புகிறேன் எனில், அவள் யாரை மணந்து கொண்டால் மகிழ்வுடன் இருப்போம் என எண்ணுகிறாளோ, அவர்களைத் தான் மணக்கவேண்டும்.//
ரசிக்க வைத்த வரிகள் ;
பதிவுகளுக்கு நன்றி கீதாம்மா
வாங்க அஷ்வின் ஜி, வரவுக்கு நன்றி.
நன்றி ப்ரியா.
Post a Comment