தன்னைத் தானே மிகச் சிரமப் பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டான் உத்தவன். என்றாலும் அவன் மனதின் வேதனையானது கண்களின் வழியே எந்நேரமும் கொட்டத் தயாராக இருந்தது. ஷ்வேதகேதுவோ, “உத்தவா, எனக்கு நன்றாய்த் தெரியும். என் பொருட்டு நீயும், ஷாயிபாவும் உங்கள் மனதைக் கட்டுப் படுத்திக்கொள்கிறீர்கள். இருவருமே அதில் சாமர்த்தியசாலியாகிவிட்டீர்கள். ஆனால் மன்மதனின் பாணங்களுக்கு முன் யார்தான் என்ன செய்ய இயலும்? நான் உனக்காக ஷாயிபாவை விட்டுக்கொடுக்கிறேன். பூரண மனதோடு முழு மனமொப்பி அவளை உன்னிடம் ஒப்படைக்கச் சித்தமாயிருக்கிறேன்.” ஷ்வேதகேது வெளிக்கு இதைச் சொல்லும்போது கம்பீரமாய்த் தோன்றினாலும் உள்ளுக்குள்ளாக சுக்குநூறாக உடைந்து போயிருந்தான். எங்கே அந்த உடைந்த பாகங்கள் வெளியே சிதறி விடுமோ எனக் கஷ்டப் பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டிருந்தான். உத்தவனுக்கு ஆச்சரியம் எல்லை கடந்தது.
விழி பிதுங்குவது போல் ஷ்வேதகேதுவைப் பார்த்தான். அவன் இதயமே படபடவென அடித்துக்கொண்ட வேகத்தில் உத்தவன் தன் காதுகளே அந்தச் சப்தத்தால் செவிடாகிவிடுமோ என நினைத்தான். அத்தனை வேகமாய் அடித்துக்கொண்டது அவன் இதயம். ஆஹா, ஆஹா, இது உண்மையா? ஷாயிபா எனக்கே எனக்கா? கடைசியில் என் நண்பனும் குருவுமான ஷ்வேதகேது மாபெரும் தியாகம் ஒன்றைச் செய்து ஷாயிபாவை என்னிடம் ஒப்படைக்கிறானா? இது நன்மைக்கா? தீமைக்கா?? புரியவே இல்லையே? நன்மை, தீமை ஒருபக்கம் இருக்கட்டும். இது நியாயமான ஒன்றா?? ஷாயிபாவை அவ்வளவு தீவிரமாய்க் காதலித்த ஷ்வேதகேது, அவளுக்கும், அவனுக்கும் நிச்சயமே முடிந்த பின்னர் அவளை நான் என் சொந்தமாக்கிக் கொள்வது நான் பிறந்த இந்த ஆரிய குலத்திற்கு உரியதொரு தர்மம் ஆகுமா?
அவன் மனதைப் படித்தவன் போல ஷ்வேதகேது பேசினான்:”அவ்வளவு மனதொடிந்து போகாதே. ஒன்றும் நடக்கவில்லை. நான் ஷாயிபாவை மனமார விரும்பியதும், திருமணம் செய்து கொள்ள நினைத்ததும் உண்மைதான். ஆகவே இதன் மூலம் எனக்கு ஏமாற்றம் கிடைக்குமே என யோசிக்கிறாய் போலும். ஆனால் என்னை விட நீ அவளுக்கு ஒரு சிறந்த கணவனாக அமைவாய். தேவபாகனின் மகனான உன்னை மணப்பதன் மூலம் ஷாயிபா என்றென்றும் ஒரு இளவரசியாகவே இருந்து வருவாள். அவள் தகுதியில் சற்றும் மாற்றம் இருக்காது. அதோடு அவளின் உயர்நிலைக்கு என்னைப் போன்றதொரு ஏழை பிராமணகுருவை, பிற மன்னர்களையும், அரசர்களையும் அண்டிப் பிழைப்பவனை ஏற்றால் நிச்சயமாய் அவள் துன்புறுவாள். அவள் ஆசைகள், கோரிக்கைகள் எதையும் என்னால் நிறைவேற்ற இயலாது. “
“உன்னைப் பற்றியே நீ நினைக்கவில்லையா ஷ்வேதகேது?? உன் ஆசைகள், உன் குறிக்கோள்கள், இவை என்ன ஆகும்?? நீ எப்பாடுபட்டேனும் உயர்நிலைக்கு வர எண்ணியது ஷாயிபாவுக்காகத் தானே? அவற்றுக்கு என்ன நேரிடும்? உன்னுடைய வாழ்க்கையை நீ தியாகம் செய்து எனக்கு ஷாயிபாவை அளிக்கிறாயா?” உத்தவன் வருந்தினான்.
“என் பக்கத்தை நினையாதே. என் பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் அதை மற. எனக்கு ஷாயிபாவின் மேல் எவ்வளவு அன்பும், பாசமும் இருக்கிறதோ அத்தனை அன்பும், பாசமும் உன்னிடமும் உள்ளது. ஆகவே என் அன்புக்குரியவர்களுக்கு நான் செய்யும் ஒரே உதவி இதுதான். உங்கள் இருவரின் சந்தோஷத்துக்காக எதுவும் செய்யத் தயாராகிவிட்டேன்.” ஷ்வேதகேது கூறினான்.
“ஷ்வேதகேது, ஒரு உண்மையை இப்போது நான் சொல்லட்டுமா? சற்றே பொறுமையுடன் கேளும். உம் வாழ்நாளில் மிகவும் விரும்பிய ஒன்றை எனக்காக விட்டுத்தர நீர் நினைக்கிறீர். அதையே உமக்காக நான் எப்போதோ விட்டுக் கொடுத்துவிட்டேனே! என்னை நீர் எடுத்துக்கொள்ள விரும்பும் ஒன்றை நான் எப்போதோ உமக்காக என விட்டு விட்டிருக்கிறேன் என்பதை நீர் அறிய மாட்டீரா? உம்முடைய நெஞ்சம் வடிக்கும் ரத்தக்கண்ணீரால் உம் முகமும், மார்பும், தோள்களும், கை,கால்களும் எப்படித் துடிக்கின்றன பாரும். உம்மால் உம் நெஞ்சு வடிக்கும் ரத்தக்கண்ணீரை மறைக்கக் கூட இயலவில்லையே! என்ன பரிதாபம்!”
“ஐயா, ஒரு காலத்தில் என் நெஞ்சும் ரத்தக்கண்ணீர் வடித்தது. ரத்தமே கொட்டியது. உண்மைதான். ஆனால் அந்தக் காயம் மெல்ல மெல்ல ஆறி வருகிறது. இப்போது மேலே காய்ந்து பொறுக்குத் தட்ட ஆரம்பித்துள்ளது. உம்முடைய துன்பத்தில் என் எதிர்காலத்தை நான் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அதில் எனக்கு எந்த சந்தோஷமும் கிட்டாது. இம்மாதிரியான எண்ணங்களை விட்டொழிக்கவேண்டும், மறக்கவேண்டும் என என்றோ நான் முடிவு செய்துவிட்டேன். எனக்கும், என் அருமை சகோதரனும், நண்பனும் ஆன கிருஷ்ணனுக்கு இவை உகந்தவை அல்ல. இதை கிருஷ்ணன் என்னிடம் பேசியபோதே நான் புரிந்து கொண்டு விட்டேன். அவன் என்னிடம் என்ன கூறினான் தெரியுமா?”
“பூகம்பமே நேர்ந்தாலும், ஆழிப்பேரலையே ஏற்பட்டாலும் கலங்காமல் திடகாத்திரமாய் இருப்பவனே மனிதருக்குள் உயர்ந்த மனிதன் ஆவான். அவனை உலகம் போற்றுவதோடு அன்றி, எந்தவிதமான குறைகளும் இன்றி இருப்பதால் அவன் பலமும் வலிவும் பெற்றுத் திகழ்வான்.”
“ஓ, நாம் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே அல்ல உத்தவா. ஆனால் நீ ஒரு க்ஷத்திரியன். கண்ணனின் அருமை நண்பன். இணைபிரியாத் தோழன். உன் மனதை நான் நொறுக்கி அதில் இன்பம் காண மாட்டேன். நானோ ஒரு பிராமணன். என் தர்மமோ என்னை அதிகம் ஆசைப்படாதே என்றே கூறுகிறது. ஆகவே இவ்வுலகத்தின் இந்த ஆசைகளாகிய மாயைகளின் பிடியிலிருந்து நான் என்னைக் கட்டறுத்துக்கொண்டாலே நான் நினைத்த பிராமணத்துவத்தை அடைய முடியும்.”
அருகிலிருந்து ஓர் புதரில் ஏதோ சலசலப்புக் கேட்க இருவரும் திரும்பினார்கள். அங்கே இருந்து வெளியே வந்தாள் திரிவக்கரை.
5 comments:
இந்த அத்தியாயம் 70 படிச்சாச்சு., பதிவுக்கு நன்றி கீதாம்மா
இதென்ன இந்த உத்தவன் , ஷ்வேதகேதுஇரண்டு பேரும் ஷாயிபாவை நீ கட்டி கொள் ,நீ கட்டி கொள்
என்கிறார்கள் ;இதில் ஷாயிபா வின் விருப்பம் முக்கியம் அல்லவா !
கண்ணன் தொடர் விரிவாக அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி..
ஷாயிபாவின் விருப்பம் மெல்ல மெல்ல வெளிவரும். :D
வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
இன்றில் இருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன் கீதாம்மா !
இடையில் ஏற்பட்ட படிக்காமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் :(
Post a Comment