ஆழ்மனதில் தோன்றிய பொறாமையைக்கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்ட ருக்மிணி, “அக்கா, கண்ணனை நாங்கள் மதுராவில் நுழைந்த அன்றே கண்டோம். அன்றே அவனுடைய வீரத்தையும், சாகசத்தையும் பார்த்து வியந்தேன். அன்றிலிருந்தே நான் என்னை ஒரு வித்தியாசமான பெண்ணாக உணர ஆரம்பித்துவிட்டேன். அதன் பின்னர் தன் மாமனான கம்சனையும், அவனது வீரர்களில் ஒருவனான சாணூரனையும் கண்ணன் கொன்றதை என் கண்களால் பார்த்து வியந்தேன். அதே கண்ணன் தேவகியின் நீட்டிய கரங்களுக்குள் ஒரு குழந்தை போல் ஒடுங்கியதையும் கண்டேன். அந்தக் கணம் கண்ணன் என் மனதில் புகுந்து விட்டான். அதோடு இல்லை; என்னில் ஒருவனாக மாறிவிட்டான். சகோதரி, அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை நான் நினைப்பது கண்ணனைத் தான். உண்பதும், உறங்குவதும் அவனுக்காகவே. அவ்வளவு ஏன்? என் மூச்சுக் காற்றுக் கூட கோவிந்தா, கோவிந்தா என அவனைத் தான் அழைக்கும். நான் தூங்கிப்பல இரவுகளாகி விட்டன. தூங்கக் கண்களை மூடினால் தலையில் மயில்பீலியைச் சொருகிய வண்ணம் கிரீடம் அணிந்து, மஞ்சள் பட்டாடை உடுத்திய குறும்புச் சிரிப்பு ததும்பும் கண்களோடு கண்ணன் வந்து விடுகிறான். அதன் பின்னர் தூங்குவது எங்கே?? அக்கா, அக்கா, நான் கண்ணனை நினைந்து நினைந்து ஒரு பைத்தியக்காரியாகி விட்டேன். நீ புத்திசாலி;விவேகமுள்ளவள்; என்னைப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். உன்னைப் போல் நான் புத்திசாலி இல்லை.”
நீண்ட பெருமூச்சு விட்ட ருக்மிணியின் பேச்சைக் கேட்ட ஷாயிபா பதிலேதும் கூறாமல் அவளை சோகத்தோடு பார்த்துவிட்டு அவள் பெருமூச்சின் எதிரொலி போல் தானும் நீண்டதொரு பெருமூச்சை விட்டாள். “ஆஹா, அக்கா, அக்கா, நான் கோவிந்தனைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவனைத் தவிர வேறு எத்தனை உயர்ந்த மனிதன் வந்தாலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். “ தீர்மானமாகப் பேசிய ருக்மிணியின் கண்களிலும் அந்தத் திட உறுதி தெரிந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு ஷாயிபா, “கண்ணன் இப்போது யாரையும் திருமணம் செய்து கொள்வதாயில்லை.” என்றாள். ருக்மிணிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன்?? என்னைக் கண்டால் பிடிக்கவில்லையா கண்ணனுக்கு?? என்னிடம் என்ன குறையைக் கண்டானாம்?? “ ருக்மிணியின் குரலில் துக்கம் ததும்பியது. கண்கள் நீரை வர்ஷிக்கத் தயாராக இருந்தன.
“உன்னிடம் எந்தக் குறையையும் காணவில்லை; தன்னிடமே தன் நிலைமையிலேயே அவனுக்குக் குறை. அவனிடமே அவன் குறை காண்கிறான். என்னிடமும் அப்படித் தான் கூறினான்.” ஷாயிபா கூறினாள். ருக்மிணிக்குச் சந்தேகம் அதிகமானது. அவளுடைய சிவந்த முகம் மட்டுமல்லாது மொத்த உடலுமே சிவந்து உதயகால சூரியனைப் போல் ஜ்வலித்தது. அவள் தன் பொறாமையை மறைக்க இயலாமல், “ஆம், ஆம் அறிவேன்; அவனுக்குப் பெண்கள் என்றால் தனிப் பாசம் எனவும் அறிந்திருக்கிறேன்.” என்றாள். கோபமும், துக்கமும் குமுறியது அந்தக் குரலில். ஷாயிபா சிரித்தாள்;”பொறாமைப் படாதே இளவரசி ருக்மிணி!” தன் முழு மனதோடு பேச ஆரம்பித்த ஷாயிபா மேலும், “நான் அவனுடைய அடிமை. அவ்வளவே. மற்றபடி நான் அவனுக்கு யாரும் இல்லை.” இதைச் சொல்லிவிட்டுத் தன் உள்ளார்ந்த சோகத்தில் ஆழ்ந்து போனாள் ஷாயிபா.
“ஓஹோ, அதுவும் அப்படியா?? எனில் நீ ஏற்கெனவே அவனை உனக்காக வென்றுவிட்டாயோ?” தன் குரலின் கசப்பை மறைக்க விரும்பவில்லை ருக்மிணி. “இளவரசி, அப்படி எல்லாம் தப்பாய்ப் பேசாதே! நீ கண்ணனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் நீ எவ்வளவோ செய்ய வேண்டும்; அதன் பின்னரே கண்ணன் உனக்குக் கிடைப்பான். அவன் உனக்குக் கிடைக்க வேண்டுமானால் முதலில் அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆரம்பி.”
“அதெல்லாம் சரி, கண்ணன் ஏன் உன்னிடம் கூறினானாம்? தனக்கு இப்போது மணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என?? அது எப்படி உனக்குத் தெரிந்தது? உனக்கும் அவனுக்கும் நடுவில் என்ன நடந்தது? அவை என்ன ரகசியமா?? எனக்குத் தெரியக் கூடாத ஒன்றா? “ ஆத்திரம் மீதூரக் கேட்டாள் ருக்மிணி. கண்ணனுக்கு இவள் அவ்வளவு நெருங்கியவளா? தன் விருப்பம், அந்தரங்க ஆசை அனைத்தையும் கண்ணன் இவளிடம் பகிர்ந்து கொள்கிறானே?
3 comments:
கண்ணன் ப்கிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி ராஜராஜேஸ்வரி
இந்த அத்தியாயம் 75 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,
ஷாயிபா விடம் ஆறுதல் தேடி ருக்மணி வந்ததை ஷாயிபா புரிந்து கொண்டு பேசி இருக்கலாம் என்று சென்ற அத்தியாயத்தில் தோன்றியது .,இப்போது ஷாயிபா ருக்மணியிடம் ,“உன்னிடம் எந்தக் குறையையும் காணவில்லை; தன்னிடமே தன் நிலைமையிலேயே அவனுக்குக் குறை. அவனிடமே அவன் குறை காண்கிறான். என்னிடமும் அப்படித் தான் கூறினான்.”என்று தெளிவாக கூறியும்
ருக்மணி பொறாமை யோடு தான் நடந்து கொள்கிறாளே !
பதிவுக்கு நன்றி கீதாம்மா
Post a Comment