Tuesday, July 5, 2011

ருக்மிணியின் ஏக்கம்! கண்ணன் வருவான்

ருக்மிணியின் கோபத்தையும் பொறாமையையும் புரிந்து கொண்ட ஷாயிபா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே மேலே பேசினாள்:” இதோ பார் ருக்மிணி! கண்ணன் என்னிடம் சொன்னது அவன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டப் பிறந்திருப்பதாய்க் கூறினான். அதர்மம் அவனைத் தலை தூக்க விடாமல் ஒரேயடியாக விழுங்கிவிட முயற்சி செய்வதாயும், அதிலிருந்து தான் தப்ப வேண்டும் எனவும் கூறினான். அதோடு நீ ஒரு இளவரசி! அவனோ இடையர்களிடையே வளர்ந்த ஒரு இடைச்சிறுவன்! உன்னைப் போல் ஒரு இளவரசியின் வாழ்க்கையை வீணடிக்கவும் அவன் விரும்பவில்லை!”

“ஓஓஓ, அவன் தைரியமானவன் பயமே இல்லாதவன் என்றெல்லாம் எண்ணினேனே! யாரைக் கண்டு அவன் இவ்வளவு பயப்படுகிறான்?? ஆஹா! நானும் ஒரு இடைச்சிறுமியாகப்பால் கறக்கும் பால்காரியாகப் பிறந்திருக்கக் கூடாதா? எத்தனை இன்பமான வாழ்க்கை வாழலாம்! கண்ணனோடு அவன் மாடுகளை மேய்க்கையில் கூடவே சென்று மேய்த்துவரலாம். காடுகளுக்குச் சென்று மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் புல் அறுத்துவரலாம். நான் புற்களை அறுத்தால் கண்ணன் அவற்றைக் கட்டித் தலையில் தூக்கி வருவான்; வீட்டில் வந்து நான் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன்; அந்த வெண்ணையைத் தின்னக் கண்ணன் என் வீட்டிற்கு வருவான்; அப்படித்தானே விருந்தாவனத்து கோபியர்களும், கோபர்களும் செய்தனர்?? ஆம், ஆம், அப்படித்தான் நான் கேள்விப் பட்டேன். அவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆனால் நான் ஒரு துரதிர்ஷ்டக் காரி. ஒரு அரசனின் மகளாய்ப் பிறந்து தொலைத்துவிட்டேன். இங்கே அந்தப்புரத்தில் சிறைக்கைதியைப் போல் வாழ்க்கை வாழ்கிறேன்; அதோடு இல்லாமல் ஜராசந்தனின் சதுரங்க விளையாட்டின் ஒரு முக்கிய அங்கமாக, அவன் ஈடுகட்டி அடமானம் வைக்கும் பொருளாக மாறிவிட்டேன். “ ஒரு சின்னப் பெண்ணுக்கே உரிய வெகுளித்தன்மை மாறாமல் தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகக் கொட்டி விட்டாள் ருக்மிணி. அவள் உணர்ச்சிகளின் வேகம் ஷாயிபாவை அசர அடித்தது.

“ரொம்பவே உணர்ச்சிவசப் படாதே இளவரசி! நீ பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்து தான் கண்ணனை வெல்ல வேண்டும். உன் பதட்டமோ, அவசரமோ அவனை வெல்ல உதவாது.” என்றாள் ஷாயிபா.

“ஆனால் இவ்வுலகிலேயே என்னைக் காப்பான் என நான் நம்பிய ஒரே மனிதன் என்னைக் காக்க முன்வரவே இல்லையே!” ருக்மிணியின் ஏமாற்றம் அவள் குரலில் தெரிந்தது. தன் பலத்தை எல்லாம் இழந்துவிட்டவள் போல் பேசினாள். ஷாயிபா புன்னகை மாறாமல், புதிர் போடுவதைப் போன்ற குரலில், “இளவரசி, கண்ணனை வெல்ல வேண்டி நீ என்ன செய்தாய்? அவனை அடையத் தக்க தகுதியான காரியங்கள் எதையேனும் நீ செய்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

“என்ன?? கண்ணனை அடைய எனக்குத் தகுதி வேண்டுமா? அது சரி! அந்தச் சேதிநாட்டு இளவரசன் மட்டும் என்ன தகுதி………..”அவளை முடிக்க விடவில்லை ஷாயிபா. “அவன் ஒரு இடையன்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஷாயிபா. “ஓ, ஓ, மன்னித்துக்கொள் ஷாயிபா அக்கா. நான் ஒரு இளவரசியாக இருப்பதற்கு என்னை நானே வெறுக்கிறேன். ஆனால் நான் ஒரு இளவரசி என்பதே உண்மை. நான் ஒரு முட்டாள்; மூடப்பெண்.” தன்னைத் தானே வெறுத்துக்கொண்ட ருக்மிணியின் குரலின் கவர்ச்சி ஷாயிபாவைக் கவர்ந்திழுத்தது. மீண்டும் சிரித்த அவள், “ருக்மிணி, உனக்கு நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று கேட்டாள். “நீ கண்ணன் உனக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறாயா? உன் முழு மனதும் கண்ணனின் உதவியை எதிர்பார்க்கிறதா? உன் வாழ்நாள் முழுதும் கண்ணனின் பாதுகாப்பில் இருக்க விரும்புகிறாயா? எனில் நீ அதை உன் ஒவ்வொரு நாடியிலும் உணரவேண்டும்; உன் வாழ்நாளின் ஒவ்வொரு விநாடியிலும் அதை நீ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அப்படி எனில் நீ அழைக்காமலேயே கண்ணன் உன் உதவிக்கு வருவான். இது நிச்சயம்.” என்றாள்.

“இது என்ன அக்கா? கண்ணன் எனக்கு உதவவேண்டும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேனே!” என்றாள் ஷாயிபா. “இல்லை, இளவரசி. நீ அவ்வாறு நினைக்கவே இல்லை. இதோ பார், கரவீரபுரத்தில் நான் ஒரு தீண்டத் தகாதவளாக அனைவராலும் நினைக்கப் பட்டேன். ஒரு பொல்லாத, பிடிவாதக்கார, தன்னலமும், அகம்பாவமும் கொண்ட இளவரசியாகவே அனைவரும் என்னை அறிந்திருந்தார்கள். கண்ணன் என் உதவிக்கும் என்னைக் காக்கவும் வந்தான்.” ஷாயிபாவின் குரலின் தொனியைக் கேட்ட ருக்மிணியால் மீண்டும் அவளுக்கு ஏற்பட்ட பொறாமையை மறைக்க இயலவில்லை.

“நான் எனக்கென அந்தரங்கமான நண்பர்கள் யாருமே இல்லாமல் தனியே இருந்து வந்தேன்.” தொடர்ந்தாள் ஷாயிபா. தன்னுள்ளே மலர்ந்த பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள் ஷாயிபா. தனக்குத் தானே பேசிக்கொள்பவள் போல, “கோவிந்தன் வந்தான்; ஆம், என்னைக் காக்கத் தான் வந்திருக்கிறான்; ஆனால் எனக்குத் தான் அது முதலில் புரியவே இல்லை; என்ன செய்யவில்லை அவன் எனக்காக! வசுதேவரின் உருவில் ஒரு தகப்பனைக் கொடுத்தான்; தேவகி என்னும் அன்பின் வடிவில் ஒரு அன்னையைக் கொடுத்தான். இத்தனைக்கும் நான் பதிலுக்கு என்ன செய்ய இருந்தேன், தெரியுமா? கண்ணனைக் கொல்ல நினைத்தேன்; பழிக்குப் பழி வாங்கத் துடித்தேன். என் பெரியப்பனை அவன் கொன்றுவிட்டான் எனப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தேன். என் பெரியப்பா தன்னைத் தானே கடவுள் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்; நானும் அப்படியே நினைத்தேன். அந்தச் சமயம் தான் நான் அழையாமலேயே கண்ணன் வந்தான் என்னைக் காக்கவேண்டியே. என்னைக் காக்க மட்டுமில்லாமல் என்னுள்ளே இருந்த துர் எண்ணங்களை நீக்கி என்னை முழுமையாகப் புதுமையாக்கினான். புதியவளாக்கினான்.”

“ஆஹா, ஆஹா, இத்தனை நடந்திருக்கிறதா? அக்கா, நான் உன்னைக் கண்டு எவ்வளவு பொறாமைப் படுகிறேன், என்று உனக்குப் புரியுமா?? இளவரசி ஷாயிபா, அவன் என்னையும் புத்தம்புதியவளாக மாற்றி என்னையும் புனிதப் படுத்த வேண்டுமென நானும் விரும்புகிறேன். “

“ருக்மிணி, நீ உன் முழு மனதோடு விரும்பினாலொழிய இது நடவாத ஒன்று.” என்று திட்டவட்டமாகக் கூறினாள் ஷாயிபா.
“ஓ, அப்படியா? எனில் அக்கா, நீ அவ்வாறு தான் எண்ணினாயா? உன் முழு மனதோடு உன் உடல், பொருள்,ஆவி அனைத்தும் கண்ணன் வரவை எண்ணி ஏங்கித் தவித்தனவா?”
“ஆம், ருக்மிணி, என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், என் இமைகளின் ஒவ்வொரு இமைப்பிலும், என் மூச்சு உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும், நான் கண்ணன் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவனைக் கொல்ல வேண்டும் என்றே அவன் வரவை எதிர்நோக்கினேன். கண்ணனும் வந்தான்; இந்த ஏழையின் கண்ணீரையும் துடைத்தான்; என் வெறுப்புகளில் இருந்து என்னை முழுமையாக விடுவித்து, என்னைப் புனிதப் படுத்திப் புதியவளாக மாற்றினான்.”

ருக்மிணிக்கு மேலும் நடந்தவற்றை அறியும் ஆவல் மேலிட்டது. எனினும் அவள் வெளிப்படையாகத் தன் இனிய குரலில், “ஓ அவன் உன்னை மணந்து கொள்கிறேன் எனச் சொன்னானோ என நினைத்துவிட்டேனே!” என்று சொல்லிவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போலக் கலகலவென நகைத்தாள்.

4 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

கண்ணனின் திருவிளையாடல்களில் ருக்மிணியை ஷாயிபா வழியாக சீண்டியதும் ஒன்றோ ?

வாழ்த்துக்கள்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

sambasivam6geetha said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

good posting. i read all the balance articles. eppadi irukkinga?. sir kuda nalama?

priya.r said...

இந்த அத்தியாயம் 76 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

பிடித்த வரிகள்

//உன் வாழ்நாள் முழுதும் கண்ணனின் பாதுகாப்பில் இருக்க விரும்புகிறாயா? எனில் நீ அதை உன் ஒவ்வொரு நாடியிலும் உணரவேண்டும்; உன் வாழ்நாளின் ஒவ்வொரு விநாடியிலும் அதை நீ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அப்படி எனில் நீ அழைக்காமலேயே கண்ணன் உன் உதவிக்கு வருவான். இது நிச்சயம்.” //