ஆபத்து சூழ்ந்து வருவதும், பொறியில் சிக்கிய எலியைப் போல் நாம் மாட்டிக்கொண்டிருப்பதும் எனக்கு மட்டுமே தெரியும்; இதை நான் எவரிடமும் சொல்லிவிடாமல் அதி கவனமாக இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பும் வழியையும் நானே கண்டுபிடிக்கவேண்டும். யாதவர்களில் எவரேனும் அறிந்தால் நிலைமை படுமோசமாகிவிடும். மதுராவின் மென்மையான வாழ்க்கைமுறையே மாறிவிடும். அனைவரும் பயந்து பீதியில் உறைந்து போவார்கள். அப்போது திடமானதொரு முடிவையும் என்னால் எடுக்க இயலாமல் போகும். ஆனால்…..ஆனால்….. இது ஒரு மலையை நெஞ்சில் சுமக்கிறாப்போல் பாரமாக என்னை அழுத்துகிறதே! இமயத்தையே என் நெஞ்சில் சுமக்கிறாப் போல் இருக்கிறதே! மஹாதேவா! நான் கடந்து வந்த இந்தப் பாதையில் இன்று வரை என் தர்மம் என்ன; நான் செய்ய வேண்டியது என்ன என்பதை நீ தெளிவாகச் சுட்டிக்காட்டி அதன்படியே நான் செல்ல எனக்கு உதவி வந்திருக்கிறாய். இனி வரும் நாட்களிலும் என் தர்மத்தின்படியே நான் செல்ல நீதான் அருள் புரிய வேண்டும். சம்போ மஹாதேவா! நீயே சரணம்!
தர்மம் என்னமோ மெல்ல மெல்லக் குறைந்தும் அழிந்தும் தான் வருகிறது. ஹஸ்தினாபுரத்தையே எடுத்துக்கொண்டால் அங்கே என்ன நடக்கிறது! அதர்மத்தின் துணை கொண்டு துரியோதனாதியர் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு பீஷ்ம பிதாமஹரும், சித்தப்பா விதுரரும், பெரியப்பா திருதராஷ்டிரரும் சும்மாத் தான் இருக்கின்றனர்; அவ்வளவு ஏன்! ஆசாரியர் துரோணர் பாண்டவர்களிடம் மிகவும் பிரியம் கொண்டவர். அவருமன்றோ சும்மா இருக்கிறார். துரோணரைவிடவும், தவங்களிலும், ஜபங்களிலும் நியம நிஷ்டைகளிலும் சிறந்தவரும், பர வாசுதேவகிருஷ்ணனின் மறு அவதாரம் எனப்படுபவருமான மஹாமுனியும், ரிஷி முனிகளுக்குள் சிரேஷ்டரும் ஆன வேத வியாசரே இதில் தலையிட்டுப் பாண்டவர்களின் பக்கம் பேசவே இல்லையே! அப்படி இருக்கையில் கொடூரன் ஆன ஜராசந்தனைக் குறித்து என்ன சொல்வது! ஜராசந்தன் கால யவனனின் துணையோடு தன் பழைய வழிமுறைப்படி, கொலை, கொள்ளை, கற்பழித்தல், உயிரோடு எரித்துக்கொல்லுதல், அடிமைப்படுத்துதல் எனத் தன் கொடுங்கோலாட்சியை நிலை நிறுத்தப் போகிறான் போலும். அதுதான் நடக்கப் போகிறது.
ஒரு சிலநாட்கள் இந்த மாபெரும் சுமையைக் கிருஷ்ணன் தாங்கிக்கொண்டு அமைதியற்ற முறையில் தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவனையே நம்பி கோபர்களும், கோபியர்களும் கழித்த நாட்கள் எல்லாம் அவன் நினைவில் மோதின. கோவர்தன மலையைத் தூக்கியதன் மூலம் கோபர்களையும், அவர்கள் குடியிருப்பையும் காப்பாற்றியதையும், கோமந்தக மலையில் நடந்தவையும், கம்சனைக் கொன்ற முறையையும் எண்ணி எண்ணிப் பார்த்த கிருஷ்ணன், அவை எல்லாம் தன் முன் பிறவிக் கனவோ என்றே எண்ணினான். தன்னாலா இவ்வளவு நடந்தது என உள்ளூர வியப்பும் கொண்டான். அவை எல்லாம் கழிந்து போன இன்ப நாட்கள்; இனி அவ்விதம் வராதோ எனவும் எண்ணிக்கொண்டான். இவ்விதம் பலவும் யோசித்து யோசித்து மனம் தளர்ந்து போன கிருஷ்ணனுக்குத் திடீரெனத் தன் மீதே வெட்கம் வந்தது. ஆஹா! நாம் இவ்வளவு கோழையா என நினைத்து வெட்கம் அடைந்தான். அதர்மத்தை வேரோடு அறுத்து தர்மத்தை நிலைநாட்டுவதென்றால் இவ்விதம் தன்னிரக்கம் கொண்டு சும்மாப் புலம்புவதில் அர்த்தம் இல்லை! இப்போது உடனடியாக அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும்; என் யாதவக் குடிமக்களையும், உறவின் முறையினரையும் காக்க வேண்டும். உடனடியாக உறுதியானதொரு, உயர்ந்த முடிவினை எடுப்பதன் மூலமே என் மக்களை நான் காக்க முடியும். அதற்கான மன உறுதியே இப்போதைய முக்கியத் தேவை! நானே இப்படிச் சுயப் பச்சாத்தாபம் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும்! வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்; அனைத்தையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது தவிர்க்க இயலாத நியதி! அந்தப் போராட்டத்தில் நானே சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால் என் மக்கள் என்ன செய்வார்கள்! நான் உறுதியாகத் தலைமை ஏற்று அவர்களை ஜராசந்தனின் கொடூரத்திலிருந்து காக்க வேண்டும். அவன் ஆயுதங்களையும், அவன் கொடுமைகளையும் நிர்மூலமாக்கவேண்டும். ஆனால் அது எங்கனம்! எப்படி! அதற்கான வழி எங்கிருந்து வரப் போகிறது!
மழைக்காலம் முடிந்ததுமே ஜராசந்தன் மாபெரும் படையுடன் மத்தியப் பிரதேசத்தின் வழியாக மதுராவை நோக்கி அணி வகுத்து வருகிறான் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. இம்முறை ஆர்ய வர்த்தத்தின் எந்த அரசர்கள் உதவியையும் அவன் நாடவில்லை. எந்தப் படைகளும் கூட அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. இதன் உண்மையான பொருள் கண்ணன் ஒருவன் மட்டுமே அறிந்திருந்தான். காலயவனன்! கொடூரன்! கொடியவன்! பிசாசைப் போன்றவன். சற்றும் மனசாட்சி இல்லாமல் அனைவரையும் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லக்கூடியவன். அவன் கடுமையான பாலைவனங்களைக் கடந்தும், கடலோரப் புதைமணலைக் கடந்தும் ஜராசந்தனுக்கு உதவியாக மாபெரும் ராக்ஷசப் படையோடு வந்து கொண்டிருக்கிறான். கண்ணனை சுக்கு நூறாகக் கிழித்துக் கழுகுகளுக்கும், ராஜாளிகளுக்கும் இரையாகப் போட ஜராசந்தனோடு அவனும் துடித்துக்கொண்டிருக்கிறான். சால்வனும் அவர்களோடு சேர்ந்து கொண்டு மதுராவை அழிக்கக் காத்திருக்கிறான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற தைரியமே ஜராசந்தனைத் தனியாக மகதப் படைகளோடு மதுராவை நோக்கி வரச் செய்திருக்கிறது.
மதுராவின் யாதவத் தலைவர்களுக்கு பீதியும், பயமும் ஏற்பட்டாலும் கண்ணன் உத்தரவுப்படி அனைவரும் உக்ரசேனரின் தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள். அனைவருக்கும் இந்த இக்கட்டிலிருந்து தப்பும் விதம் தான் தெரியவில்லை; புரியவில்லை. மஹான் ஆன அக்ரூரரே ஆடிப் போய்விட்டார் என்பது அவர் பேச்சிலிருந்து புரிந்தது. பாஞ்சாலத்துக்கும், ஹஸ்தினாபுரத்துக்கும் உடனடியாகச் செய்திகளை அனுப்பி பீஷ்ம பிதாமகரையும், துருபதனையும் தங்கள் உதவிக்கு உடனே வரச் சொல்லலாம் என ஆலோசனை தெரிவித்தார். கண்ணனிடம் அக்ரூரரும் நம்பிக்கை இழந்துவிட்டாரா?
கண்ணன் நிதானமாக, பீஷ்ம பிதாமகரே பிரச்னைகளில் மூழ்கி இருப்பதையும் ஹஸ்தினாபுரமும், அதன் அரசாட்சியும் உடையாமல் பார்த்துக்கொள்வது அவர் கடமை எனவும், சகோதரச் சண்டையில் ஹஸ்தினாபுரம் அழிந்துவிடாமல் பாதுகாக்கவே அவருக்கு நேரம் சரியாய் இருக்கிறது எனவும் தெரிவித்தான். துருபதனோ துரோணரால் ஏற்பட்ட அவமானத்தில் மனம் புழுங்கிக்கொண்டிருப்பதாய்க் கூறினான். இருவராலும் தற்சமயம் எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் திட்டவட்டமாய்க் கூறினான். உக்ரசேனர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க, வசுதேவரோ, சேதிநாட்டரசன் தாமகோஷன் இத்தகையதொரு நடவடிக்கை எடுப்பதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தான் எனப்ப் புரியவில்லை என்று வருந்தினார்.
கண்ணனோ சேதி நாட்டரசருக்கு எந்த விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இந்தச் சமயம் ஆர்ய வர்த்தத்தின் எந்த அரசர்களையும் ஜராசந்தன் நம்பவில்லை எனவும், காலயவனனையும், சால்வனையும் மட்டுமே நம்பி இந்த மாபெரும் படையெடுப்பை ஆரம்பித்துள்ளான் எனவும் கூறினான். நாம் எவ்வகையில் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்கள் வழியை அடைத்துக்கொண்டு முற்றுகையில் ஈடுபடுவார்கள் என்ற தனது கருத்தையும் கூறினான்.
"ஆஹா! அடியோடு ஒழிந்தோம்! இனி தப்ப வழியே இல்லை!" ஷங்கு என்னும் யாதவத் தலைவன் கூற கிருஷ்ணன் பதிலே பேசவில்லை.
1 comment:
இந்த அத்தியாயம் 99 ஐ படித்து விட்டேன் கீதாமா..
கண்ணனின் மன ஓட்டங்களை இந்த பதிவின் வாயிலாக காண முடிந்தது ..
Post a Comment