தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்ட உத்தவன் மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினான்: "பெரியோர்களே! கண்ணன் மேலும் கூறியதாவது: ' என் பேச்சைக் கேட்க விரும்புவர்களுக்குச் சொல் உத்தவா! அவர்களைக் காக்ககப் போவது நான் அதாவது கண்ணன் அல்ல; தர்மம் ஒன்றே காக்கும்! தர்மத்தின் மேல் அவர்கள் வைக்கும் நம்பிக்கை காக்கும். அந்த தர்மத்தைக் காக்கவேண்டி என் உயிரைக் கொடுக்க வேண்டி இருந்தாலும் கொடுப்பேன்; என்னால் செய்ய முடிந்த உயர்ந்ததொரு தியாகத்தைச் செய்யத் தயாராக உள்ளேன். தர்மம் ஜெயிக்கிறதை அப்போதாவது புரிந்து கொள்வார்கள்."இதைச் சொல்லி விட்டு அவன், தன் ஆபரணங்களையும், ஆயுதங்களையும் தன் பிரிவுப் பரிசாகக் கொடுத்துவிட்டு இங்கிருந்து சென்றுவிட்டான்." உத்தவன் தன் அழுகையைத் தொடர்ந்தான். வசுதேவருக்கும், மற்ற யாதவத் தலைவர்களுக்கும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
"விலை உயர்ந்த தியாகம் என்று கண்ணன் எதைக் கூறுகிறான்? "கத்ரு கேட்டான். அப்போது கிருதவர்மன்," கண்ணன் கிளம்புவதற்கு முதல்நாள் தான் யமுனைக்கரையில் உள்ள மக்களிடம் கண்ணன் தான் உயிரோடு இருக்கும்வரையில் அவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர்களுக்கு எந்தத் தீங்கும் நேராது என்று கூறி இருக்கிறான். என் மகன் அங்கே அப்போது இருந்தான். அவன் என்னிடம் எல்லாவற்றையும் விபரமாய்க் கூறினான்." என்றான். சாத்யகியால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. "நாம் அனைவரும் கோழைகளாகி விட்டோம். நம்மால் கண்ணனுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ஏன் கூற முடியவில்லை? நாம் கண்ணனிடம் அவனுக்காக நாம் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்திருக்க வேண்டும்." என்றான். சத்ராஜித்திற்குக் கோபம் வந்தது. "நாம் கோழைகள் அல்ல!" என்று கத்தினான்.
"நீ கோழையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கோழையாகி விட்டேன்." சாத்யகி கூறினான். மேலும் தொடர்ந்து, "அன்று நான் கண்ணனோடு சேர்ந்து பொது இடங்களில் காட்சி கொடுப்பதையும் தவிர்த்தேன். பயந்தேன்; கண்ணனோடு காட்சி கொடுப்பதை யாரேனும் பார்த்துவிடுவார்களோ எனக் கவலை அடைந்தேன். தினமும் அவனோடு நதிக்கரைக்குப் போய்க்கொண்டிருந்தவன் அன்று தவிர்த்தேன். நான் மாபெரும் கோழை! நான் முதலில் என் உயிரைக் கொடுக்க வேண்டும். அதுவும் கண்ணனுக்காகக் கொடுக்க வேண்டும். எனக்கு வெட்கமாக உள்ளது; முதலில் தியாகம் செய்வது நானாக இருக்க வேண்டும்."
யோசனையோடு அமர்ந்திருந்த கத்ரு, "போனமுறை கண்ணன் கோமந்தக மலைப்பக்கம் சென்று மதுராவைக் காப்பாற்றிக் கொடுத்தான். இம்முறையும் அவ்வாறே ஏதேனும் செய்திருப்பான்." என்றான். வசுதேவர் பலமாக அதை மறுத்தார். "சென்ற முறை வேறு வழி இருக்கவில்லை. மதுரா பலஹீனமான நிலையில் வலுவிழந்த நிலையில் இருந்தது. இம்முறை முற்றிலும் வேறுபட்ட நிலைமை. காலயவனனும், ஜராசந்தனும் மதுராவையும், கண்ணனையும் அழிக்க ஒற்றுமையாகக் கை கோர்த்திருக்கின்றனர். யாதவர்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிடுவார்கள். கண்ணன் இங்கிருந்து செல்வதனால் மதுரா காப்பாற்றப்படும் என எவரும் நினைக்க இயலாது." வசுதேவர் கூறினார்.
"வசுதேவா! கிருஷ்ண வாசுதேவன் சென்றிருக்கும் இடம் தான் எது? ஜராசந்தனிடம் தன்னை ஒப்புக்கொடுக்கச் சென்றிருக்கிறனா? "உக்ரசேன மஹாராஜா கேட்டார். "என்னால் பல விதங்களிலும் ஊகிக்கத் தான் முடிகிறது, பெரிய தந்தையாரே!" வசுதேவர் தொடர்ந்தார். "ஜராசந்தன் அவ்வளவு எளிதில் அமைதியடையப் போவதில்லை. அவனுக்குத் தேவை கண்ணனின் உயிர். மதுராவை நாசமாக்க அவன் எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுக்கத் தயங்க மாட்டான். யாதவர்களிடம் உள்ள கோபத்திலிருந்து அவனை மாற்றுவதற்கு கண்ணன் தன்னை ஜராசந்தனிடம் ஒப்படைக்கவும் தயங்க மாட்டான். இது நடக்கக் கூடியதே!"
"அவன் காலயவனனோடு நேரடியாக சந்திப்பை ஏற்படுத்திக்கொள்ள ஷால்வனைச் சந்திக்கவும் சென்றிருக்கலாம்." அமைதியாக அமர்ந்து கொண்டு அனைத்தையும் உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்த கர்காசாரியார் மெதுவாகக் கூறினார். அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
1 comment:
அவர்களைக் காக்ககப் போவது நான் அதாவது கண்ணன் அல்ல; தர்மம் ஒன்றே காக்கும்! தர்மத்தின் மேல் அவர்கள் வைக்கும் நம்பிக்கை காக்கும். அந்த தர்மத்தைக் காக்கவேண்டி என் உயிரைக் கொடுக்க வேண்டி இருந்தாலும் கொடுப்பேன்; என்னால் செய்ய முடிந்த உயர்ந்ததொரு தியாகத்தைச் செய்யத் தயாராக உள்ளேன். தர்மம் ஜெயிக்கிறதை அப்போதாவது புரிந்து கொள்வார்கள்."//இவர்களில் தனித்துத் தெரிந்தாள் சத்யா என அழைக்கப்படும் சத்யபாமா//
பாமா வின் வருகை இங்கே இருந்து தான் ஆரம்பமாகிறதா ?
கண்ணன் தர்மத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் உணர முடிகிறது
Post a Comment