அனைவரும் நடுவில் குறுக்கிட்ட நதி ஒன்றை அபாயம் ஏதுமில்லாமல் கடந்தனர். இன்னும் சிலர் கடக்கவேண்டி இருந்ததால் நதிக்கரையில் முகாம் இட எண்ணினார்கள். கிருஷ்ணன் சாத்யகியைக் கூப்பிட்டு ரகசியமாக, "சாத்யகி, நான் இங்கே உங்கள் அனைவரையும் பிரிந்து செல்கிறேன்." என்றான். சாத்யகி ஆச்சரியத்துடன், "பிரபுவே, நாம் சீக்கிரம் இந்த நதியைக் கடந்துவிடுவோம். கவலை வேண்டாம்.. " என்றான். கண்ணனோ அதைக் கவனியாமல், "கவனி, சாத்யகி, அனைவரும் பேராபத்தில் இருக்கின்றனர். நான் இரண்டு நாட்களாகவே மேற்கே தெரியும் தொடுவானத்தைக் கவனித்து வருகிறேன். அங்கே நேற்றும், இரண்டும் வெளிச்சம் தெரிந்தது. இன்று மீண்டும் கூர்ந்து கவனித்ததில் எனக்குத் தோன்றியது என்னவெனில், காலயவனன் சமீபத்தில் எங்கேயோ முகாமிட்டிருக்கிறான். இந்த நதிக்கரைப் பிரதேசத்தை அவனும் நமக்கு எதிர்ப்பக்கமிருந்து கடக்கிறான் என எண்ணுகிறேன். அப்படி என்றால் நாள அல்லது நாளை மறுநாள் நம்மைக் கடக்கக் கூடும். அதற்குள்ளாக மீதமிருக்கும் மக்கள் அனைவரும் இந்த நதியைக் கடக்க இயலாது." கண்ணன் குரலில் வருத்தமிருந்தது.
அதற்குள்ளாக அந்தப் பிரதேசத்தைக் கடக்க வழிகாட்டி வந்தவர்களிடம் கேட்டதில் மேல்வானில் தெரியும் வெளிச்சம் தூரத்தே எங்கேயோ முகாமிட்டிருக்கும் கூடாரங்களில் இருந்து வருவதே என்று தெரிந்தது. சாத்யகி மேல் வானை உற்றுக் கவனித்தவண்ணம், " ஆம், கிருஷ்ணா, நீ சொல்வது சரிதான், இந்தப் பிரதேசத்தை நாம் விரைவில் கடந்து செல்லவேண்டும் என்றான். அதற்குக் கண்ணன், " இங்கே இப்போது கடந்து கொண்டிருக்கும் மக்களால் இரண்டு நாட்களுக்குள் இந்தப் பிரதேசத்தைக் கடக்க இயலாது. இவர்கள் போர்வீரர்கள் அல்ல; சாமானிய மக்கள். மிகச் சாதாரணமானவர்கள். இவர்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்படும். இவர்களை நாம் அவசரப்படுத்த முடியாது.:" என்று கூறினான். "எனில் இவர்கள் வரும்போது வரட்டும்; நாம் முன்னே செல்வோம்; முக்கியமான யாதவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்கள். காலயவனன் பாடு; இவர்கள் பாடு." சாத்யகி கூற, கண்ணனோ, "இவர்கள் நம் மக்கள்; நம்மில் ஒருவர். அந்தக் காலயவனன் கைகளால் இவர்கள் இறக்க அனுமதிக்க முடியாது. அதோடு நாம் அனைவரும் சேர்ந்து இந்த இடத்தைக் கடக்கவில்லை எனில், காலயவனனுக்கு நம்மைப் பற்றித் தெரிந்து போய் அவன் மதுரா செல்லாமல் நம்மைத் தொடரவும் ஆரம்பிக்கலாம். கொடூரக் கொலைகாரன் அவன்." கண்ணன் கவலை மிகுந்த குரலில் கூறினான்.
"என்ன செய்யலாம்?" சாத்யகி கேட்டான். "நான் இங்கே உங்களைப் பிரிந்து சென்று காலயவனனைச் சந்திக்கிறேன். அல்லது வேறு வழியில் அவனைத் தடுத்து நிறுத்த முயல்கிறேன். அப்போது உங்கள் அனைவருக்கும் இந்தப் பிரதேசத்தைக் கடக்க நேரம் கிடைக்கும். நாம் அனைவரும் இப்படிக் கூண்டோடு தப்பிச் செல்வதை அவன் அறியாமல் இருக்க வேண்டும். இது ஒன்றுதான் வழி." என்றான் கண்ணன். "ஆனால், கிருஷ்ணா, நீயே நேரில் சென்று காலயவனனைச் சந்திப்பது மிகவும் ஆபத்து." சாத்யகி நடுங்கினான். "ஓஹோ, சாத்யகி, அவன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்பதை மறவாதே! ஏற்கெனவே தாமதம் செய்து விட்டோம்; நான் இப்போது போயே ஆகவேண்டும்." கண்ணன் உறுதியாகச் சொன்னான். சாத்யகி கண்ணனுக்கு நேரக் கூடிய கதியை நினைத்துக் கலங்கினான். கண்ணனோ, நிதானமாக, "அதனால் என்ன? எத்தனை முறை இறப்பேன்? ஒரே முறைதானே! இந்த உடம்பை விடுத்து இன்னொரு உடம்பில் புகுந்து கொள்வேன்; பழைய ஆடைகளைக் களைந்துவிட்டுப் புத்தாடை உடுப்பது போல."
"ஆனால் உன் வழிகாட்டுதல் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?" சாத்யகியின் குரலில் திகில் மிகுந்திருந்தது. " அப்படி எல்லாம் பேசாதே! நான் ஏற்கெனவே உனக்கு வழியைச் சொல்லிவிட்டேன். தர்மத்தின் பக்கமே எப்போது நிலையாக நின்று கொள். தர்மத்தை விட்டுச் சிறிதும் பிறழாதே. அது உன்னை எப்போதுமே காக்கும். அந்த நம்பிக்கையில் தான் நான் வாழ்கிறேன்; உன்னையும் வாழ வழிகாட்டுகிறேன்.." கண்ணன் கூறினான். சாத்யகியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. கண்ணனை அணைத்தவண்ணம், என் பிரபுவே, என் பிரபுவே என்று புலம்பினான். அவனையொத்த இளைஞரக்ள் அனைவரும் இப்போது கண்ணனைத் தங்கள் பிரபுவாக நினைக்கத் தொடங்கி இருந்தனர்.. சாத்யகியைப் பார்த்துக் கண்ணன், மேலும் பேச நேரமில்லை என்றும், தான் இந்த வழிகாட்டியை உடன் அழைத்துச் செல்வதாயும் கூறினான். சாத்யகி கண்ணன் கால்களில் விழுந்து கதறினான். கண்ணனோ, அவனை எழுப்பி ஆசீர்வதித்து, உக்ரசேன மஹாராஜாவிடம் யாதவர்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள் என்றும் அவர்கள் இன்னமும் வலுப்பெற்று ஜராசந்தனை அழைக்கவேண்டும் எனவும், அவனை அழிக்கும் வரையிலும் ஆர்யவர்த்தத்தில் தர்மம் நிலைக்காது; அதர்மமே தலைவிரித்தாடும் எனவும் கூறுமாறு வேண்டிக்கொண்டான்.
2 comments:
தர்மத்தின் பக்கமே எப்போது நிலையாக நின்று கொள். தர்மத்தை விட்டுச் சிறிதும் பிறழாதே. அது உன்னை எப்போதுமே காக்கும். அந்த நம்பிக்கையில் தான் நான் வாழ்கிறேன்; உன்னையும் வாழ வழிகாட்டுகிறேன்//
தர்மத்தை பற்றி கண்ணன் அடிக்கடி கூறுவதில் இருந்து அதன் மேன்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை
பதிவாசிரியை நமக்கு அறிவுறுத்துகிறார் போலும் :)
இல்லை ப்ரியா, கண்ணன் ஒருத்தனுக்கே அந்தத் தகுதி! :)))))
Post a Comment