Monday, October 31, 2011

துன்பம் இன்றெங்கும் இனி நினக்கென்னால் எய்திடாது!

"தேவகி அம்மாவிடமும், தந்தை வசுதேவரிடமும் நான் எப்போதும் அவர்களோடு இருப்பதாய்ச் சொல். அண்ணன் பலராமனை ரேவதியைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் இருக்கச் சொல். ரேவதியிடம், ஒரு மருமகளாகத் தன் கடமைகளைச் செய்யும்படியும், என் தாயையும், தகப்பனையும் கவனித்துக்கொள்ளவும் சொல்வதோடு, என்னை இழந்தால் அதற்காக அவர்கள் வருந்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளச் சொல். அவள் மிகவும் தைரியமான பெண்மணி. நன்கு கவனித்துக்கொள்வாள். எனக்குத் தெரியும்." கண்ணன் மிகவும் உணர்ச்சிமிகுந்த குரலில் கூறினான். சாத்யகி மிகவும் கஷ்டத்தோடு தனக்குள் எழுந்த விம்மலை அடக்கிக் கொண்டான். "அண்ணன் பலராமன் யாதவர்களை நன்கு கவனித்துக்கொள்வார்." கண்ணன் தொடர்ந்தான்.

"என் நமஸ்காரங்களை அண்ணனுக்குத் தெரிவித்துவிடு. சாத்யகி! மேலும்....." கண்ணன் தயக்கத்தோடு நிறுத்த, சாத்யகி, "உன் கட்டளை என்னவோ அதைச் சொல் கிருஷ்ணா!" என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டான்.

"இப்போது உனக்குத் தான் நான் சொல்ல வேண்டியது இருக்கிறது. நீ தைரியமானவன்; விசுவாசம் மிகுந்தவன்; நேர்மையானவன்; பெருந்தன்மை உள்ளவன். நீ இவ்வாறு இருப்பதிலேயே திருப்தி அடையலாம். உத்தவன் வலுவான மனமும், உடலும் கொண்டவன். அவன் மனதளவில் ஒரு துறவியாகத் தெரிந்தாலும் நான் இல்லை எனில் தனியாக உணருவான். தான் தன்னந்தனியாக விடப்பட்டதாய்க் கருதுவான். அவனைக் கை விட்டுவிடாதே! இப்போது அவன் எவ்வாறு என்னோடு இணைபிரியாமல் நிழல் போல் இருக்கிறானோ அவ்வாறு நீ அவன் நிழல் போல் அவனோடு இரு; ஒரு கணமும் பிரியாதே. "

"என் பிரபுவே, என் கடவுளே, அவ்வாறே ஆகட்டும்." சாத்யகியால் இப்போது தன் அழுகையை நிறுத்த முடியவில்லை. "வா, சாத்யகி, என்னைக் கட்டி அணைத்துக்கொள்வாய். எதற்கும் கவலைப்படாதே! மரணம் வந்தால் வரட்டும். பயந்து பயந்து வாழ்வதை விடத் துணிவோடு மரணத்தை எதிர்கொள்ளலாம். " கிருஷ்ணன் கூறினான். அவ்வளவில் சாத்யகியைக் கட்டி அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்த கண்ணன் அவனுக்கு ஆசிகள் கூறினான். மென்மையான குரலில், " இன்னும் ஒன்றே ஒன்று கூறியாகவேண்டும்." என்றான். சாத்யகி நிமிர்ந்து பார்க்க, கிருஷ்ணன், "பீஷ்மகனின் மகள் ருக்மிணியை நீ அறிவாய் அல்லவா? அவள் என்னைத் தன் தலைவனாக, பிரியத்துக்கு உகந்தவனாகத தேர்ந்தெடுத்துவிட்டாள். இத்தனைக்கும் நான் ஒரு இடையன் என்பது அவளுக்குத் தெரியும். அவள் ஓர் ராஜகுமாரி என்பதையும் அறிந்திருக்கிறாள். ஆனால் இது நடந்தது சில வருடங்கள் முன்னர். நான் என் மாமா கம்சனைக் கொன்றேனே! அப்போது தான் முதன்முதல் மதுரா வந்தேன். அப்போது தான் இது நடந்தது. அப்போது எனக்குப் பதினாறு வயதுக்குள்ளே தான். அவளும் பதினைந்து வயதே ஆனவள். அப்போதிலிருந்து அவள் உடலால் தனியாக அவள் நாட்டில் வசித்தாலும் உள்ளத்தால் என்னோடுதான் இருந்து வருகிறாள்."

சற்று நிறுத்திவிட்டுப் பெருமூச்சு விட்ட கண்ணன் மேலே தொடர்ந்து, " சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள இந்நிலையிலும், அவளைச் சுற்றிலும் கூட எதிரிகளை நிறைந்துள்ள நிலையிலும், அவள் நான் செய்யும் தர்ம யுத்தத்திற்கு எனக்குத் துணை நிற்கிறாள். என்னோடு கூடவே வருவதாய்ச் சொல்கிறாள். ஒரு செண்பக மலரைப் போல் அழகும், வடிவும், வனப்பும், மணமும், குணமும், எழிலும், நளினமும் நிறைந்த இந்த மங்கை தன்னந்தனியாக விதர்ப்ப நாட்டில் நமக்காக ஜராசந்தனையும், அவன் படைகளையும் எதிர்த்து வருகிறாள். அவள் மட்டும் சற்று வளைந்து கொடுத்திருந்தாளானால், ஒரு கண்ணிமை சற்றே ஜராசந்தன் பக்கம் இமைத்திருந்தாளானால், நாம் இன்று இப்படித் தப்பிக் கூட ஓட முடிந்திருக்காது. என்றோ இறந்தவர்களாகி இருப்போம்."

சாத்யகி கண்ணன் மேலே கூறப்போவதற்காகக் காத்திருந்தான். கண்ணன் கூறினான்:"மதுராவை நாசம் செய்துவிட்டு ஜராசந்தன் சும்மா இருக்க மாட்டான். ருக்மிணியை சிசுபாலனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்துவான். ருக்மிணி சம்மதிக்க மாட்டாள்; அது என்னவோ உறுதி. எந்தவிதமான பாசபந்தங்களுக்கும் கட்டுப்படாமல் என் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள். நான் தர்மத்தின் பாதையில் செல்லப் போகிறேன்; என் வாழ்க்கையை அதற்காகவே வாழப்போகிறேன் என்பது தெரிந்த அந்த விநாடியில் இருந்து என்னைப் பின் தொடரத் தயாராகிவிட்டாள்; பின் தொடரவும் செய்கிறாள்."

இப்போது கண்ணன் குரலே உணர்ச்சி மயமாக இருந்தது. தன்னைப் பூரணமாய்க் கட்டுப்படுத்தியவண்ணம் கண்ணன் கூறினான்: அண்ணா பலராமரிடம் இது என் கடைசிச் செய்தி எனக் கூறு சாத்யகி! உத்தவன் மற்றும் உள்ள அனைத்து யாதவத் தலைவர்களிடமும் கூறு. எப்படியேனும் ருக்மிணி காப்பாற்றப்பட வேண்டும். ஜராசந்தன் கைகளில் அவள் மாட்டிக்கொள்ளக் கூடாது. எந்த விலை கொடுத்தேனும் அவளைக் காப்பாற்ற வேண்டும். ஒரு வேளை.... ஒருவேளை..... நம்மால் காப்பாற்றப்படுவதற்கு முன்னரே அவள் இறக்க நேரிட்டால்.....அவளுடைய அஸ்தியை நாம் இப்போது செல்லும் துவாரகை நகருக்கு எடுத்து வாருங்கள். அங்கே அந்த அஸ்தியைப் போட்டு அதன் மேல் ஒரு கோயிலைக் கட்டுவோம். தர்மதேவதை அவள் உருவில் அவதரித்திருக்கிறாள். அவளுடைய ஆசிகள் நம் குலத்து யாதவர்களுக்கு நன்மையையும், வளமான வாழ்வையும் கொண்டு வரும்."

சாத்யகியால் பேசவே முடியவில்லை.

3 comments:

priya.r said...

கண்ணன் சொல்வதை பார்த்தால் ருக்மணிக்கு பேராபத்து காத்திருக்கும் போல இருக்கிறதே :(

priya.r said...

சரியாக பதிவில் வராத ஒரு அத்தியாயத்தையும் சேர்க்கும் போது இத்தோடு

111 அத்தியாயம் படித்து முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் கீதாமா

sambasivam6geetha said...

தெரியலை: நான் எண்ணி வைச்சுக்கறதில்லை. பலரும் பலமுறை சொல்லியும் எண்ணிக்கை சில சமயம்/பல சமயமும் தப்பாயிடுது. நேரடியாகப் போஸ்ட் போடுவதால் எடிட்டிங்கில் போய்ப் பார்க்கிற வழக்கமே வரதில்லை! :(