Monday, November 14, 2011

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!

உள்ளே நுழைந்த காலயவனனின் கண்களுக்கு மஞ்சள் பீதாம்பரத்தைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த உருவம் கண்களில் பட்டது. கிருஷ்ணன் தான் அங்கே வந்து படுத்துவிட்டான் என்றே எண்ணிய காலயவனன் தன் இடையில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை வெளியே எடுத்தான். தூங்கிக் கொண்டிருந்த மனிதனிடம் ஒரே ஓட்டமாய் ஓடி அவனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினான். "மோசக்காரா! வஞ்சகா!" கூவினான் காலயவனன். தூங்கிக் கொண்டிருந்த அந்த வயதான மனிதன் மெல்ல எழுந்தான். அவன் ஒரு பக்கத்துத் தோளில் காலயவனனின் கத்தி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவன் தன் கண்களைத் திறந்தான். புருவம் கூட மஞ்சள் நிறமாக மாறிப் போய்க் காணப்பட்டது. அந்த மஞ்சள் நிற அடர்த்தியான புருவங்களின் கீழே காணப்பட்ட அவன் கண்கள் தீச்சுடரைப் போல் ஒளிர்ந்தன. அந்த மனிதனின் வயதுக்குச் சிறிதும் பொருத்தமின்றி அவன் இளைஞனைப் போல் துள்ளி எழுந்தான். காலயவனன் மேல் பாய்ந்தான். கத்தியைப் பிடித்திருந்த அவன் கையைத் தோளோடு சேர்த்து முறுக்கினான். தன் முழு பலத்தோடு அவனைக் குகையின் ஒரு மூலையில் சுவரோடு சேர்த்துத் தள்ளி நசுக்கினான். அங்கே அணையாமல் நீறு பூத்துக் கொண்டிருந்த நெருப்பில் அவனைத்தள்ளி அந்தச்சூட்டில் அவனை அழுத்தினான். சூடுதாங்காமல் காலயவனன் அலற ஆரம்பித்தான்.

காலயவனன் அலறிய அலறலில் குகைக்கு வெளியே இருந்து நான்கு நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஓடோடி வந்தனர். அவர்கள் கைகளில் செம்பாலான கூரிய திரிசூலம் போன்றதொரு ஆயுதம் இருந்தது. அதைக் காலயவனன் மேல் வீசினார்கள். நாலாபக்கமிருந்தும் குறிதவறாமல் பாய்ந்த அந்தத் திரிசூலங்கள் காலயவனன் உடலில் பட்டு ரத்தம் கொப்பளித்தது. அவன் அப்படியே மயக்கமானான். அவன் உடலோ அந்தத் தீயில் பட்டு கருக ஆரம்பித்தது. நெருப்பில் வாட்டப்பட்ட காலயவனனின் நினைவு தப்பிய உடலைச் சற்றும் இரக்கமில்லாமல் மலையின் உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்டான் அந்த வயதானவன். கிருஷ்ணன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அந்த வயதானவனை நமஸ்கரித்தான். அவன் ஒரு துறவி எனக் கிருஷ்ணன் எண்ணியது சரியாக இருக்கும் எனத் தோன்றியது அவனுக்கு. தன்னுடைய பீதாம்பரத்தைக் கிழித்து அந்த வயதானவன் கால்களில் பட்டிருந்த காயத்தைக் கட்டுவதற்கு முனைந்தான் கண்ணன்.

"ஹர ஹர மஹாதேவா!" தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது போல் சொன்ன அந்த வயதானவன் கண்ணனைப் பார்த்து, " நீ யாரப்பா?" என வினவினான். "மாட்சிமை பொருந்திய குருவே, நான் கிருஷ்ண வாசுதேவன்." பதில் சொன்ன கண்ணன் தன் வேலையிலேயே கவனமாக அந்தக் கிழவனின் காயத்தைக் கட்டுவதில் முனைந்தான். "கிருஷ்ண வாசுதேவன்!" மீண்டும் தனக்குள்ளேயே முணுமுணுத்த அந்தக் கிழவன் எதையோ நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தான். "பத்ரா! பத்ரா!" தன்னுடைய சீடர்களில் ஒருவனை அழைத்தவண்ணம் அவனிடம், "கிருஷ்ண வாசுதேவன்! வாசுதேவன்! எங்கே கேட்டோம் இந்தப் பெயரை? பத்ரா நினைவிருக்கிறதா உனக்கு?" என்று கேட்டான். " மரியாதைக்குரிய குருவே, இரண்டு வருடங்கள் முன்னர் நாம் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் சென்றபோது அங்கே மக்கள் அனைவருமே ஒரு பிரசித்திபெற்ற வீரக் கதாநாயகனைப் பற்றிக் கூறினார்கள்." பத்ரனும் கொஞ்சம் யோசனையோடேயே இருவருடத்துக்கு முன்னர் நடந்ததை நினைவில் கொண்டுவர முயற்சித்தான்.

"அங்கே தான் கேள்விப்பட்டோம். யமப்பட்டணத்துக்கே போய் யமனையே ஜெயித்துவந்தான் கிருஷ்ண வாசுதேவன் என்று கூறினார்கள். அதோடு... அதோடு, அந்தக் கொடூரமான மகத அரசன்! ஆஹா, அவன் பெயர் என்னவோ! மறந்தேன். அவனைக் கூட விரட்டிவிட்டான் என்றார்களே!" பத்ரன் கஷ்டப்பட்டு நினைவு கூர்ந்தான்.

"இதோ பார், நீ ஏன் உன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்று கூறிக்கொள்கிறாய்?" வயதான துறவிக் கிழவன் கண்ணனைப் பார்த்துக் கேட்டான்.

"ஏனெனில் நான் தான் அவன். அவன் தான் நான். நான் ஒரு வீரனுமில்லை; கதாநாயகனுமில்லை. மதுராவின் ஒரு யாதவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் இளைய குமாரன். ஆனால் நீங்கள் கேள்விப்பட்டது என்னவோ உண்மைதான். நான் நாகலோகம் சென்றிருந்தேன். அங்கே தன்னை யமன் என்றும் மரணத்தின் கடவுள் என்றும் அழைத்துக்கொண்டவனை வெற்றி கொண்டிருக்கிறேன். அதோடு மகதத்தின் அரசன் ஜராசந்தனை மகதத்துக்கு ஓட ஓட விரட்டி அடித்தேன்."

"ஆஹா, இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. அந்தக் கொடுங்கோல் அரசன் பெயர் ஜராசந்தன்." கிழவனின் சீடன் கூறினான்.

"இங்கே ஏன் வந்தாய்?" கிழவன் கண்ணனைக் கேட்டான். கண்ணனும் தன் கதையைக் கூறி அனைத்தும் விளக்கித் தான் எவ்வாறு அங்கே வர நேர்ந்தது என்பதையும் கூறினான். அவன் கூறி முடித்ததும் கிழவன் தன் சீடரக்ளைக் கண்ணனுக்குக் குகையில் தங்கத் தேவையான செளகரியங்களைச் செய்து தருமாறு கூறினான். கண்ணன் அன்றிரவு அங்கே தங்கினான்.

2 comments:

priya.r said...

கண்ணன் காலயவனனை வதம் செய்ய வில்லையா !

அந்த பாக்கியம் கூட அவனுக்கு தர கண்ணன் விரும்பவில்லை போலும் !

sambasivam6geetha said...

பாகவதக் கதைப்படி முசுகுந்தன் தான் காலயவனனை வதம் செய்வார். அது எப்படி எனில், முசுகுந்தன் தவம் இருப்பார். பின்னர் காலநிலை கடந்து தூங்குவார். அவர் தூங்கும்போது எவர் எழுப்பினாலும் அவர்கள் அவர் கண்பார்வையில் சாம்பலாகிவிடுவார்கள். தவத்தின் வலிமை அப்படி.

பாகவதக் கதைப்படி இதைத் தெரிந்து வைத்துள்ள கண்ணன், தந்திரமாக முசுகுந்தன் தவம் செய்துவிட்டுத் தூங்கும் குகையில் போய் ஒளிந்து கொள்வான்; கண்ணனைத் தேடி வரும் காலயவனன் தவறுதலாக முசுகுந்தனை எழுப்ப விளைந்தது அநர்த்தம்.

அது தான் இங்கே லாஜிகலாகச் சொல்லப்படுகிறது. நன்றி முன்ஷிஜிக்கு. எனக்கில்லை. :)))))