என்னதான் தன் உள்ளத்து அன்பை எல்லாம் கொட்டிக்கண்ணனுக்குக் கடிதம் அனுப்பினாலும் ருக்மிணி இன்னமும் தான் தனித்துவிடப்பட்டதாயும், தனக்கு உதவ யாருமே இல்லை எனவும் நினைத்தாள். அவள் அனுபவித்த தனிமை அவளைக் கொன்று தின்றுவிடும்போல் ஆனது. செய்வது என்னவெனப் புரியாமல் அவள் ஷாயிபாவின் துணையை நாடத் தீர்மானித்தாள். உடனே ஒரு கடிதம் எழுதி ஷாயிபாவுக்கு அப்லவன் மூலம் கொடுத்து அனுப்ப நினைத்தாள். கரவீரபுரத்தின் ஷாயிபாவுக்கு ருக்மிணி கீழ்க்கண்டவாறு எழுதினாள்.
"ஷாயிபா, என் அருமைச் சகோதரி, உன் இளைய சகோதரியான குண்டினாபுரத்தின் இளவரசி, பீஷ்மகனின் மகள் ஆன ருக்மிணி எழுதிக்கொண்டது,"
"அக்கா, என் அருமை அக்கா! என்னைச் சுற்றி இருள் சூழ்ந்துவிட்டது. சூரியனின் கிரணங்கள் என் மீது இனிப் படவே படாது என நான் அஞ்சுகிறேன். நான் இங்கே தன்னந்தனிமையாக நாட்களைக் கழிக்கிறேன். உதவவும் எவரும் இல்லை. அக்கா, என் அருமை அக்கா, என் வாழ்க்கையே பாழாகிவிட்டது. இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் என்னருகே இருந்து எனக்கு ஆறுதல் சொல்லவோ, அன்பு காட்டவோ, இன்முகத்தோடு சில சொற்களைப் பேசி என்னைத் தேற்றவோ எவருமே இல்லையே! நம்பிக்கை என்னும் சூரியன் இருக்கும் திசை நோக்கி என்னை வழிநடத்த எவரும் முன்வரவில்லை. கவிந்து கிடக்கும் இந்த இருளினால் போகவேண்டிய திசையும் எனக்குப் புரியவில்லை. அக்கா, அக்கா, மரணத்தின் நகரத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். ஆனால் அங்கேயும் நான் செல்கையில் எனக்காகத் துயரப்படுபவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்."
"எவ்வளவு விரைவில் உன்னால் வர இயலுமோ அவ்வளவு விரைவில் நீ புறப்பட்டு இங்கே வா. அக்கா! அந்தக் கண்ணன், கோவிந்தன், வாசுதேவ கிருஷ்ணனின் பெயரால் ஆணையிட்டு உன்னை இங்கே அழைக்கிறேன். மயில் பீலிகளைச் சூடிக்கொண்டிருக்கும் அவனையும், அவனின் சிரிக்கும் கண்களையும், மலர்ந்த முகத்தையும் நினைத்துக்கொண்டு உருகும் என்னைக் காக்க உடனே கிளம்பி வா. அக்கா, அக்கா, ஒரு ரகசியம் சொல்லட்டுமா? எனக்குத் தெரியும். உன்னுடைய உயிரும் அவனிடமே உள்ளது. நீயும் அவனிடம் உன்னை ஒப்புக் கொடுத்துவிட்டாய் என்பதை நான் அறிவேன். அவன் தான் நம் வாழ்க்கையின் ஒளி விளக்கு என்பதையும் நான் அறிவேன். அவன் பெயரால் மீண்டும் உன்னை இங்கே அழைக்கிறேன். கிளம்பி வா அக்கா. உன்னையே எதிர்பார்க்கும்,"
அபலை ருக்மிணி.
அப்லவன் இந்தச் செய்தியை எழுதி வாங்கிக் கொண்டால் எப்படியானும் மாட்டிக் கொள்வோம் என நினைத்து மனப்பாடம் செய்து கொண்டு ஓலையைக் கிழித்து எரித்துவிட்டான். கரவீரபுரத்திற்குச் செல்வதையும் வெளியே சொல்லாமல் சாதாரணமாகக்கிளம்பிக் காட்டு வழியில் காவீரபுரத்தை நோக்கிப் பயணம் ஆனான். சில நாட்கள் கழிந்தன. ஒரு மாபெரும் அடி விழுந்தது ருக்மிணிக்கு. ஷ்வேதகேதுவிடமிருந்து செய்தி வந்தது. ஏன் வந்தது?
குண்டினாபுரத்தின் இளவரசி ருக்மிணிக்கு,
"குரு சாந்தீபனியின் முதன்மை சீடன் ஆன ஆசாரிய ஷ்வேதகேது சகல செளபாக்கியங்களையும், ஆசீர்வதித்து எழுதுவது. தாயே, மூன்று உலகங்களும் தகர்ந்து தூள்தூளாகிவிட்டனவே! தர்மம் சுக்கு நூறாகக் கிழித்து எறியப்பட்டுவிட்டது அம்மா. சூரிய, சந்திரர்கள் தங்கள் கடமையைச் செய்யவென்றே உதிக்கின்றனர் போலும்."
"தாயே, கிருஷ்ண வாசுதேவன், காலயவனன் என்னும் பிசாசு அரசனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அம்மா, கடைசியில் ராகு , சூரியனை விழுங்கியே விட்டான் போலும். இப்படியும் நடக்குமா? கிருஷ்ணனுக்காக அழுது அழுது எங்கள் நாட்கள் கடக்கின்றன. தாயே, இனி அழுவதிலும் பிரயோசனமே இல்லை; அவன் ஒரு நாளும் திரும்பி வரப்போவதில்லை. அவனுக்காகக்காத்துக் காத்து எங்களுக்கு அலுத்துவிட்டது. அம்மா, அவன் இறந்தவர்கள் இருக்க வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான். நம் வாழ்க்கையின் நம்பிக்கை என்னும் ஒளி விளக்கு நிரந்தரமாக அணைந்து போய்விட்டது."
"இளவரசி, உன் தைரியத்தை இழந்துவிடாதே; அக்ஷயத்ரிதியை அன்று சுயம்வரம் எனக் கேள்விப் பட்டேன்; அன்று உன்னை நான் எப்படியேனும் சந்திப்பேன். அம்மா, நீ என்ன சொல்கிறாயோ அது எனக்குக் கட்டளை. அதன்படியே நடப்பேன். அம்மா, கிருஷ்ணன் என்னில் பாதியாக இருந்தான். வாழ்ந்தான், அவன் உண்மையாகவே என்னைப் பொறுத்தவரை அந்தப் பரவாசுதேவனே தான். சந்தேகமே இல்லை."
ருக்மிணி உடைந்து போனாள். இனி அவள் வாழ்வதில் அர்த்தமே இல்லை. எங்கே சென்று யாரிடம் எவ்விதமான அறிவுரையைப் பெறுவது என்றும் புரியவில்லை. நம்பிக்கை இழந்த ஒரு நடைப்பிணமாகக் கண்களில் உறைந்த கண்ணீருடன் அவள் மாளிகையில் அங்குமிங்கும் இலக்கின்றி அலைந்தாள். மாக மாசமே உறைந்துவிட்டதோ என்னும்படி ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு ஒரு யுகமாய்க் கடந்தது. ஆயிற்று, பால்குனி மாதம் பிறந்துவிட்டது. சில நாட்களில் வசந்தம் வந்துவிடும். அவள் வாழ்க்கையில்??
வசந்தம் வருமா?
1 comment:
பாவம் ருக்மணி
இவ்வளவு கஷ்டபட்டு கொண்டு இருக்கிறதால் என்று படிக்கும் போது
ரொம்ப வருத்தமாக தான் இருக்கிறது
Post a Comment