Tuesday, December 6, 2011

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை!

திருமணக்கொண்டாட்டங்களில் முதல்நாள் விருந்து நடைபெறுகையிலேயே ஜராசந்தன் ஒருவனே அங்கிருந்த அனைவரையும் ஆட்டி வைப்பவன் என்பது புரிந்துவிட்டது. எல்லா அரசர்களும், சிற்றரசர்களும், பட்டத்து இளவரசர்களும் அவனைச் சுற்றிக் குழுமிக்கொண்டு அவன் சொல்வதற்கெல்லாம் “ஆமாம்” போட்டுக்கொண்டும், அவனைப் புகழ்ந்து கொண்டும் இருந்தனர். இரண்டாம் நாள் சாஸ்திர, சம்பிரதாயப்படி வேத கோஷங்களோடு திருமண மண்டபமும், சுயம்வர மண்டபமும் வழிபாடுகள் செய்யப்பட்டு முறைப்படி அலங்கரிக்கப்பட்டது. சுயம்வரம் நடப்பதற்கான நேரத்தை ஜோசியர்கள் அலசி ஆராயந்த தேர்ந்தெடுத்தனர். அக்ஷய த்ரிதியை அன்று நடுப்பகல் வேளையில் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி சிசுபாலன் அம்பை விடவேண்டும். அவன் அம்பை விட்டதுமே அவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ருக்மிணி சுயம்வர மாலையை அவனுக்குச் சூட்ட வேண்டும். அதற்கு முன்னர் அன்று காலை போஜர்களின் குலதெய்வமான அன்னபூர்ணா தேவிக்குத் திருமணப் பெண் வழிபாடு நடத்த வேண்டும். அன்னபூர்ணா தேவி குண்டினாபுரத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் பூர்ணா நதியும், தப்தி நதியும் சேரும் சங்கமத் துறையில் கோயிலில் குடி கொண்டிருக்கிறாள். அவள் கடவுளருக்கெல்லாம் கடவுளான, ஏகப்பரம்பொருளான மஹாதேவரின் மனைவியும், போஜ நாட்டரசர்களின் வழிவழியாக வந்த குலதெய்வமும், காவல் தெய்வமும் ஆவாள். ஆகவே போஜ மன்னர்களின் சம்பிரதாயப்படி சுயம்வர மண்டபத்திற்குப் போகும் முன்னர் மணப்பெண் காலையில் குறிப்பிடப்படும் முஹூர்த்த காலத்தில் அந்தக் கோயிலில் வழிபாடு நடத்தவேண்டும். இதன் மூலம் அவள் திருமண வாழ்க்கையும், அவள் செல்லும் இடத்தின்/நாட்டின் சிறப்பும் மேம்படும் என மனப்பூர்வமாக நம்பினார்கள்.

சுயம்வர தினம். அன்று அதிகாலை இருட்டிலேயே இன்னமும் கிழக்கு வெளுக்கும் முன்னரே, உத்தவனும், சாத்யகியும் ஒரு சிறுபடகைச் சத்தமில்லாமல் கைகளால் துடுப்புப் போட்டுக்கொண்டு சங்கமத்துறைக்கு வந்தார்கள். படகைக் கரையில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவிட்டுப் பின்னர் கோயிலுக்குப் பின்னாலும் கோயிலைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த மாந்தோப்புக்குள் சென்று மறைந்தார்கள். அதே சமயம் அப்லவனும், ஜாஹ்னுவும் சந்தனக் கட்டைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். சேகரம் செய்த கட்டைகள், பூர்ணா நதிக்கரையில் அன்னபூர்ணா கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் தள்ளி இருந்த சுடுகாட்டிற்குக் கொண்டு சேர்த்தார்கள். கட்டைகளை அடுக்கி இருந்த விதம் பார்த்தால் யாருக்கோ சிதை தயார் செய்வதாய்த் தெரிந்தது. மேலும் ஒரு மண் பாண்டம் முழுதும் நெய்யையும் அங்கே கொண்டு வந்து வைத்தார்கள். யாரோ தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளப் போகின்றார்கள் அல்லது யாரையோ அங்கே எரிக்கப் போகிறார்கள்? யாருக்கு? ருக்மிணிக்குத் தான். இது அவளுடைய கட்டளையின் பேரில் தயார் செய்யப்படுகிறது.

அரண்மனை. நேரம் அதே அதிகாலை இருட்டு: ருக்மிணியின் கன்னிமாடம்: வெளியே மங்கலவாத்தியங்கள் முழங்கி தோழியர் அனைவரும் இனிய கீதங்கள் பாடி மணப்பெண்ணை எழுப்புகின்றனர். உள்ளே தன் கட்டிலில் படுத்திருந்த ருக்மிணிக்கு அந் தகீதங்கள் நாராசமாய்க் காதில் விழுந்தது. அவள் எங்கே தூங்கினாள்? தூங்கிப் பல யுகங்கள் ஆகிவிட்டனவே! இசையோடு கூடவே வேத கோஷமும் கேட்க ஆசாரியர்களைக்காக்க வைப்பது சரியில்லை என்பது புலப்பட ருக்மிணி எழுந்து தன்னைத் தயார் செய்து கொள்ள ஆரம்பித்தாள். தோழிப்பெண்கள் உதவி செய்ய ருக்மிணியை மிகவும் அழகாகவும், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்காளாலும் அலங்கரித்தனர். மலர்களால் ஆன முகத்திரையால் ருக்மிணியின் முகம் மூடப்பட்டது. இது அவள் அன்னபூர்ணா தேவியை வழிபடுகையில் மட்டும் நீக்கிக்கொள்ளலாம். பின்னர் அவள் மணமகனைத் தேர்ந்தெடுத்து மாலையிடும்வரை முகத்திரையோடு இருக்கவேண்டும். மலர்களால் ஆனதென்றாலும் அது அடுக்கு அடுக்காக நான்கைந்து அடுக்குகளால் ஆகி மிகவும் கனமானதொரு திரையாகக் காணப்பட்டது.
நேரம் ஆக ஆக, ருக்மிணிக்குப் பதட்டமும், ஆவலும், அவசரமும் அதிகரித்தது. இனி நகரும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகத் தோன்றியது அவளுக்கு. எப்போது இதெல்லாம் முடியும்? நான் என் கண்ணனிடம் அவன் இருக்குமிடம் போய்ச் சேர்வேன்? இப்போதே நேரே போய்ச் சிதையில் விழுந்துவிடலாமா என்றிருந்தது அவளுக்கு. அவளுடைய அவசரத்தைப் பார்த்த சுவ்ரதா, இந்தக் கொண்டாட்டங்களிலும், ஆடம்பர அலங்காரங்களிலும் மனதைப் பறி கொடுத்த ருக்மிணி சிசுபாலனைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்துவிட்டாள் என்றே எண்ணிக்கொண்டாள். ருக்மிணி சுயம்வர மண்டபத்திற்குக்கிளம்ப வேண்டிய நேரம் வருவதற்கு முன்னால் கோயிலுக்குச் செல்ல வேண்டிய வேளை வந்துவிடவே ஆசாரியர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து வணங்கி, ஆசிகளைப் பெற்றுக்கொண்டு ருக்மிணி தனக்கென வந்து காத்திருந்த ரதத்தில் ஏறிக்கொண்டாள். அவளுடன் சுவ்ரதாவும், இன்னும் இரண்டு இளவரசிகளும் கூடவே ஏறிக்கொண்டனர். இதைத் தவிரவும் பத்துப்பனிரண்டு பல்லக்குகளில் வேற்று நாட்டரசிகளும், இளவரசிகளும் வந்திருந்தனர். அனைவரும் திருமணப்பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக ருக்மிணியின் ரதத்தைப் பின் தொடர்ந்தனர். ரத ஊர்வலம் மிகவும் ஆடம்பரமாகக் கண்களைக் கவரும் விதத்தில் இருந்தது. ரதங்களே மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது குண்டினாபுரத்தின் செல்வ வளத்தையும், செல்வாக்கையும் காட்டியது. சுவ்ரதாவிற்கு ருக்மிணியின் மேல் ஒருபக்கம் கோபம். இந்தச் சிசுபாலனை மணக்க இவளுக்கு இவ்வளவு அவசரமா என நினைத்துக்கொண்டாள். ரதம் அன்னபூர்ணா கோயிலுக்கு வந்து சேர்ந்தது. ருக்மிணி ரதத்தை விட்டு இறங்க ருத்ராசாரியாரும், ஷ்வேதகேதுவும் அவளை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

7 comments:

priya.r said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

உங்கள் ஞானமும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.
விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

Unknown said...

Its nice to read your writing...flow is fair and good...congrats and all the best...

Unknown said...

Nice to read your blog...good flow and flair of writing...Vazhuthukkal.

priya.r said...

அத்தியாயம் 127 படிச்சாச்சு .,

/நேரம் ஆக ஆக, ருக்மிணிக்குப் பதட்டமும், ஆவலும், அவசரமும் அதிகரித்தது. இனி நகரும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகத் தோன்றியது அவளுக்கு. எப்போது இதெல்லாம் முடியும்? நான் என் கண்ணனிடம் அவன் இருக்குமிடம் போய்ச் சேர்வேன்//

பதட்டம் ஆவல் அவசரம் பரபரப்பு நம்மையும் தான் தொட்றி கொள்கிறது .,அடுத்த அத்தியாயம் காண

BUZZ இன் மேல் விழி வைத்து காத்து இருக்கிறேன் கீதாமா :)

கடந்த சில நாட்களாக இந்த தொடர் பதிவை படிக்கும் பேறு பெற்றேன் என்று தான் சொல்ல வேண்டும்

இந்த மாதிரி இதிகாச நிகழ்வுகளை படிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ;தமிழில் சுவைபட எழுதி வரும்

கீதா மாமி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

பதிவுக்கு நன்றி கீதாம்மா !

பித்தனின் வாக்கு said...

good article and very suitable title.

sambasivam6geetha said...

பாராட்டிய அனைவருக்கும், முதல் வருகை தந்த வெங்கட் அவர்களுக்கும் என் நன்றி.