Friday, December 9, 2011

கண்ணன் என்னைக்கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக்கொண்டான்!

கருவறையில் அன்னபூரணி விக்ரஹத்திற்கு இரு பக்கங்களிலும் நெய் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் ஒளியைத் தவிர வேறு ஒளி அங்கே காணப்படவில்லை. பெரிய பெரிய தீவட்டிகள் எல்லாம் கருவறைக்கு வெளியேயே நிறுத்தப்பட்டுவிட்டன. உள்ளே ருக்மிணியும் இன்னும் முக்கியமான சிலரும் மட்டுமே சென்றனர். அவர்களில் ருக்மிணியைப் போலவே ஆடம்பரமாக அலங்காரம் செய்துகொண்டிருந்த ஷாயிபாவும் ஒருத்தி. அவள் தலை அலங்காரத்தைச் சுற்றிலும் மலர்களால் ஆன திரை காணப்பட்டது. உள்ளே நுழைகையில் அந்தத் திரையால் தன் முகத்தை மறைத்த வண்ணம் ஷாயிபாவும் உள்ளே செல்பவர்களோடு கலந்து கொண்டாள். உள்ளே ருத்ராசாரியார் வேத மந்திரங்களைச் சொல்லி ருக்மிணிக்கு வழிபாடுகள் நடத்தி ஆசிகள் வழங்கி தரிசனம் செய்து வைத்தார். அதன் பின்னர் கருவறையைச் சுற்றிப் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தனர். ருக்மிணிக்கு முன்னால் ஷாயிபா சென்று அங்கிருந்த ஒரு மூலையில் நின்று கொண்டாள். பிரகாரத்தின் வடக்குக்கோடியிலிருந்து வெளியே செல்லும் வாயிலுக்கு அருகே ஷ்வேதகேது காவலுக்கு நிற்பவனைப் போல் நின்று கொண்டிருந்தான். அரச குடும்பத்தின் தலைமை குருவானவர் ருக்மிணியை அழைத்துச் செல்கையில் கூடவே ருத்ராசாரியாரும் சென்றார், ஒரு திருப்பத்தில் சற்றே இருட்டாக இருந்த இடத்தில் சரேலென ஷாயிபா வந்து கலந்து கொள்ள ருக்மிணியை இழுத்தவண்ணம் ருத்ராசாரியார் அந்த இடத்தில் மறைந்து கொண்டார். அனைத்தும் கண்மூடித்திறக்கும் முன்னர் நடந்து முடிந்துவிட்டது.

ஊர்வலம் அதிவேகமாய்ச் சென்றது. ருத்ராசாரியார் மெல்ல வெளியே வந்து ருக்மிணியை அழைத்துக்கொண்டு ஷ்வேதகேதுவிடம் சென்றார். அவளை ஷ்வேதகேதுவிடம் ஒப்படைத்துவிட்டு அவசரம் அவசரமாக ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தார். அங்கே மீண்டும் மணப்பெண் அன்னபூரணிக்கு எதிரே மண்டியிட்டு நமஸ்கரித்தவண்ணம் பிரார்த்தனைகள் செய்துகொண்டிருந்தாள். அவள் வாய் திறந்து எதுவும் சொல்லாததால் மனதிற்குள்ளாகப் பிரார்த்திக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அனைவரும் மெளனம் காத்தனர். இங்கே ருக்மிணி பின் தொடர ஷ்வேதகேது மாந்தோப்பை நோக்கி ஓட்டமாய் ஓடினான். இரு பெரிய மரங்களின் அடர்த்தியில் மறைந்திருந்த உத்தவனும் சாத்யகியும் வெளியே வந்தனர். நதிகளின் சங்கமத்துறையில் அவர்களுக்காகக் காத்திருக்கும் படகை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர். ருக்மிணியோ உத்தவனைப் பார்த்து, “உத்தவா, நான் உங்களுடன் வர விரும்பவில்லை. வாசுதேவன் எங்கே சென்றானோ அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன். ஆசாரியரே, நான் சதியாகித் தீக்குளித்து உயிரை விட விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னை அந்தச் சிதையின் பக்கம் அழைத்துச் செல்லவும்.” என வேண்டுகோள் விடுத்தாள்.

உத்தவன் தன்னால் ஆன மட்டும் தடுத்துப் பாரத்தான். ஆனால் ருக்மிணியோ கிருஷ்ணனையே தான் நினைத்து வந்ததால், இன்னமும் நினைத்திருப்பதால் தான் மணமாகாவிட்டாலும் அவனுடைய மனைவி என்றும், வாசுதேவ கிருஷ்ணனின் இளைய சகோதரன் என்னும் முறையில் இந்தச் சிதையை மூட்டித் தான் இறங்குவதற்குத் தயார் செய்யவேண்டியது உத்தவனின் கடமை எனவும் கம்பீரமாய்க்கூறினாள். பின்னர் உத்தவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஷ்வேதகேது பின் தொடரச் சிதையை நோக்கி நடந்தாள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருபக்கம் ஷாயிபா ருக்மிணியின் இடத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் தேடிக்கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கம். இன்னொரு பக்கம் உயிரைவிடத் துணிந்துவிட்ட ருக்மிணியைக் காப்பாற்றி ஒருவருக்கும் தெரியாமல் துவாரகைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்ற குழப்பம். அவர்கள் வருவதைக் கண்ட அப்லவனும், ஜாஹ்னுவும் நெய்யை ஊற்றிச் சிதையில் அக்னியை வளர்த்தனர். ருக்மிணி சிதையின் அருகே வந்து சூரியனை வணங்கிவிட்டுக் கண்களை மூடி தர்மராஜனையும் பிரார்த்தித்துக்கொண்டாள். நதிக்கரையில் சற்றுத்தூரத்தில் ஒரு ரதம் வேகமாய் வரும் சப்தமும் குதிரைகளின் குளம்படிச் சப்தமும் கேட்டன. ருக்மிணியோ இவை எவற்றாலும் பாதிக்கப்படாதவளாய் அக்னியில் இறங்க முன்னேறினாள்.

ருக்மிணியைப் பிடிக்கும் ஆட்கள் தானோ என்ற எண்ணத்தோடு திரும்பிய உத்தவனும் ஷ்வேதகேதுவும் ரதத்தில் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே சமயம் குதிரைகளை அடிக்காமலேயே அவற்றை வேகமாய் ஓட வைத்துக்கொண்டு வாசுதேவ கிருஷ்ணன் அமர்ந்திருந்தான். சொல்லமுடியாத சந்தோஷத்தோடு ஷ்வேதகேது பாய்ந்து சிதையில் காலடி எடுத்து வைத்துவிட்ட ருக்மிணியை வேகமாய் அப்புறம் தள்ளினான். ருக்மிணி அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் வேகமாய் வந்து கொண்டிருந்த ரதத்தையும் அதில் வீற்றிருந்த கிருஷ்ணனையும் கண்டாள். அதன் பின்னர் அவள் கண்களுக்கு வேறு எதுவும் தெரியவில்லை; அவள் நினைவுகளில் கண்ணனைத் தவிர வேறு எவரும் இல்லை. சுற்றிலும் காணப்பட்டவர்கள் மறைந்தனர். அங்கிருந்த சிதை மறைந்தது. நதியும் மறைந்தது. வாசுதேவன் ஒருவனே விச்வரூபம் எடுத்து அவள் கண்களில் தெரிய தன்னை மறந்து சுற்றி இருப்பவர்களையும் மறந்து ருக்மிணி ரதத்தை நோக்கி ஓடினாள். ரதத்தின் சக்கரங்களில் ருக்மிணி மாட்டிக்கொள்ளப் போகிறாளே எனப் பயத்தோடு செய்வதறியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் உத்தவன், சாத்யகி, ஷ்வேதகேது, அப்லவன், ஜாஹ்னு அனைவரும். ஆனால் அந்த முடுக்குத் திரும்பியதும் ரதம் வேகமாய் நிறுத்தப்பட்டது என்பதை அதன் கிரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சென்ற சப்தமும் சக்கரங்கள் உராயும் சப்தமும் தெரிவித்தன. வாசுதேவன் ரதத்தில் இருந்து குதித்தான். தன்னிருகரங்களால் ருக்மிணியைத் தூக்கினான். ரதத்தின் பின்னிருக்கையில் அமர்த்தினான்.

அனைவரும் சந்தோஷத்தில் கிருஷ்ண வாசுதேவனுக்கு மங்களம் என கோஷமிட்டவண்ணம் நதிக்கரையின் சங்கமத்துறையில் படகு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு ஓடோடிச் சென்றனர். கிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த பஹூகாவிடம் ரதத்தை ஓட்டச் சொல்லிச் சாட்டையைக் கொடுத்திருந்ததைத் திரும்பபெற்றுக்கொண்டு வேகமாய் ரதத்தைத் திருப்பினான். வேகமாய் நதிக்கரையைக் கடந்தான். அக்கரைக்குச் சென்றான். குதிரைகளை நிறுத்தினான். தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக்கொண்டான். தன் எதிரிகளுக்குத் தன் வரவால் கிலி ஏற்படும்படியும், அதே சமயம் நண்பர்களுக்கு பலத்தைக் கொடுக்கும்படியும் அந்தப் பாஞ்சஜன்யத்தால் “பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என்று சப்தமெழுப்பினான். கண்ணன் வந்துவிட்டான். அவன் வெற்றி அந்த நாதத்தின் தொனியில் தெரிய வந்தது.

சுற்றுப்புறமே அமைதியாக அங்கே ஒலித்தது, பாஞ்சஜன்யம்.

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

6 comments:

அப்பாதுரை said...

அருமை. தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். (திடீரென்று பாஞ்சஜன்யம் க்ருஷ்ணணதா அர்ஜூனனதானு சந்தேகம் வந்துவிட்டது)

priya.r said...

இதை தான் எதிர் பார்த்து கொண்டு இருந்தோம்!
பதிவுக்கு நன்றி

priya.r said...

ருக்மணிக்கு தான் எவ்வளோ கஷ்டம் :(

அவ்வளோ கஷ்டமும் கண்ணனை கண்டதும் காணாமல் போய் இருக்கும் :)


ருக்மணி இடத்தில் இருக்கும் ஷாயிபா வை காப்பாற்ற கண்ணன் வருவானா ?!

sambasivam6geetha said...

அப்பாதுரை, சந்தேகமே வேண்டாம். பாஞ்சஜன்யம் கிருஷ்ணனுடையதே தான். :)))))))

sambasivam6geetha said...

வாங்க ப்ரியா, இதோடு 2-ஆம் பாகம் முடிவடைகிறது. அடுத்து ஓரிரண்டு பதிவுகளுக்குப் பின்னர் 3-ஆம் பாகம் ஆரம்பம். நன்றிங்க

ஸ்ரீராம். said...

ஸூப்பர்.