சென்ற அத்தியாயத்துடன் இரண்டாம்பாகம் முடிந்து விட்டாலும் அதன் பின்னர் நடந்த ஒரு சில சம்பவங்களைச் சொல்வதற்காக இந்தப் பின்னுரை.
துவாரகையில் மாளிகையின் உப்பரிகை. எதிரே கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் கடல். அதையே நோக்கிய வண்ணம் நின்று கொண்டிருந்த ருக்மிணிக்குக் கடந்த இரு மாதங்களின் நிகழ்வுகள் கண்ணெதிரே ஒவ்வொன்றாய்த் தோன்றிக்கொண்டிருந்தன. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் அந்தக் காட்சிகளை அவள் கண்டாள். திடீரென அவள் பல யுகங்கள் வாழ்ந்துவிட்டது போல் உணர்ந்தாள். எவ்வளவு சங்கடமான காலங்களைக்கடந்திருக்கிறாள். மீண்டும் அவள் சுயம்வர தினம் அவள் கண்ணெதிரே விரிந்தது. அவளைத் தன்கைகளால் தூக்கிய வாசுதேவன் ரதத்தின் பின்னிருக்கையில் அவளை அமர வைத்துவிட்டுப் பூர்ணா நதியில் வேகமாய் ரதத்தை ஓட்டினான். அப்போது கோடைக்காலம் என்பதால் நதியில் நீர் இல்லாமல் ஆங்காங்கே பாறைகளும், கற்களுமே தெரிந்தன. அவற்றின் மேல் ரதத்தை வேகமாய்க் கண்ணன் ஓட்டுகையில் ருக்மிணி அங்கும் இங்கும் தூக்கி எறியப்பட்டாள். அவள் உடல் அங்குமிங்கும் மோதியதில் வலி பொறுக்க முடியவில்லை. ஆனால் கண்ணனின் முகத்தில் தெரிந்த புன்முறுவல் அவள் மனக்காயங்களை மட்டுமின்றி உடல் வேதனையையும் மறக்கடித்தது. ஆஹா! இந்த நாளுக்குத்தானே அவள் காத்திருந்தாள். கண்ணனின் அருகாமை அவளுள் புத்துணர்ச்சியை ஊட்டியது. இனி சுயம்வரம் என்ற அந்தக் கொடிய நிகழ்வு இல்லை. அவள் கண்ணன் அவளிடம் வந்துவிட்டான்.
அதன் பின்னர் அவர்கள் பலராமன் இருக்குமிடம் சென்று அவனைச் சந்தித்தனர். ருக்மிணி முதல் முதல் மதுராவில் கண்ணனைப் பார்த்த சந்திப்பின்போதும் கண்ணனே அவள் மனதில் நிறைந்திருந்ததால் பலராமனை அவள் இப்போதே முதலில் சந்திப்பதாய் உணர்ந்தாள். இவ்வளவு பெரிய ஆகிருதியோடும், பலத்தோடும் விளங்கும் இந்த மனிதனின் உள்ளத்துக்குள்ளேயா இத்தனை கருணையும், பெருந்தன்மையும். தன் பெரிய உடலில் காணபட்ட பெரிய முகத்தின் பெரிய கண்களில் உலகத்து அன்பை எல்லாம் தேக்கிக்கொண்டு பலராமன் தன் பெரிய குரலால் சத்தமாய் அவளை ஆசீர்வதித்தான். தப்தி நதியின் வடக்குக் கரையோடு பயணப்பட்டார்கள் அவர்கள். அப்போது தான் ருக்மி தன் படையோடு அவர்களை எப்படியோ கண்டுபிடித்து எதிர்கொண்டான். அவள் யாதவர்களும், தன் அண்ணனோடு வந்த தன் சொந்த நாட்டுப் படைவீரர்களும் போட்டுக்கொண்ட சண்டையைப் பார்த்துக் கலவரம் அடைந்தாள். அதே சமயம் ருக்மி மிக வேகமாய்த் தன் ரதத்தை ஓட்டிக்கொண்டு கிருஷ்ணனை நோக்கிப் பாய்ந்தான். ருக்மிணி பயத்தோடு தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தபோது கண்ணன் துளியும் பயமில்லாமல் ருக்மியை எதிர்கொள்வதைக் கண்டாள். அவளுக்கோ ருக்மியின் கோபத்தை நினைத்து தலையோடு கால் நடுங்கியது. ஆனால் அவள் அங்கே கண்டதோ ஒரு புதிய கண்ணனை. இவனை இதுவரை அவள் கண்டதே இல்லை. அவன் உடலே முறுக்கிக் கொண்டு கண்களின் அந்தச் சிரிப்பு மறைந்து போய், கண்களிலிருந்து பாயும் ஒளியாலேயே எதிரியைத் தொலைத்துவிடுவான் போல, தன் கைகளில் சாட்டையைப் பிடித்த வண்ணம் போருக்கு ஆயத்தமாய் இருக்கும் கண்ணன் அவளுக்குப் புதியவன். ருக்மியின் அம்பு கிருஷ்ணனை நோக்கிப் பாய்ந்ததைக் கண்டு மீண்டும் அஞ்சினாள் ருக்மிணி. ஆனால் கண்ணன் அதிலிருந்து தப்பியதோடு தன் சுதர்சனத்தை எடுத்துக்கொண்டு போருக்குத் தயாரானான்.
ருக்மிணிக்கு சுதர்சன சக்கரத்தைக் குறித்த கதைகள் நினைவில் வந்தன. ஆஹா! இந்தச் சக்கரம் ஏவப்பட்டால் குறி தவறாமல் எதிரியைத் தாக்கும் என்பார்களே. ஒருமுறை கூடக்குறி தவறியதில்லையாம். உடனேயே ருக்மிணிக்கு நிலைமையின் விஸ்வரூபம் புரிய, ஆஹா, இது என்ன, என் சொந்தத் தமையனின் மரணத்திற்கு நானே காரணமாகப் போகிறேனா? துடித்துப் போனாள் ருக்மிணி. உடனே அவள் மெல்லத் தவழ்ந்து சென்று நின்று கொண்டிருந்த கண்ணனின் காலடியைச் சென்றடைந்து அவன் கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவன் கீழே பார்த்தான். “என் கடவுளே, என் தலைவா, அவனை விட்டுவிடு. என் சகோதரன் அவன். அவனைக்கொன்றுவிடாதே!” என்று கெஞ்சினாள். கண்களில் இருந்து கண்ணீர் பொங்கியது. அடக்கமுடியாமல் விம்மினாள். கண்ணன் முகத்தில் மீண்டும் இளநகை. அவளுக்கு அவன் பார்வையே உறுதிமொழி அளிக்க,அதை நிரூபிப்பது போல் குதிரையின் சாட்டையை பஹூகாவிடம் கொடுத்த கண்ணன், தன் சார்ங்கம் என்னும் வில்லை எடுத்து அம்புகளைப் பூட்ட ஆரம்பித்தான். அம்பு ருக்மியைத் துளைக்குமோ என பயந்தாள் ருக்மிணி. இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டாள். கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெய மங்களம் என்ற கோஷம் எழுந்தது. ரதங்கள் நின்றன. குதிரைகள் கூடக் கனைக்க மறந்தன. ருக்மி ரதத்திலிருந்து கீழே விழுந்து கிடந்தான்.
8 comments:
இதை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் நீங்கள்.
:-)
வாங்க அப்பாதுரை, நன்றி.
வா.தி. என்ன சிரிப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
அது சரி, மயக்கம் மறுபடி வந்துடும்போலிருக்கு உங்க மயக்க ஊசி போடாமலேயே! இப்படியா பதிவுக்கெல்லாம் வந்து ஆச்சரியப்"படுத்தறது"?
பதிவுக்கு நன்றி கீதாமா
ருக்மணி கண்ணனால் காப்பாற்றப்பட்டாள் என்பதே மிகவும் சந்தோசமான விஷயம்
எனக்கென்னமோ பல அத்தியாயங்கள் வர வேண்டியதை சுருக்கி கூறுகிறீர்களோ என்று மனதில் படுகிறது :)
ஏன் கீதாமா!
ஒரு வேளை கண்ணன் அவரை சிரிக்க வைக்கிறாரோ என்னவோ :)
வாங்க ப்ரியா, குறைக்கல்லாம் இல்லை; நீங்க வேறே! நான் எழுதறது நிறையப் பெரிசா இருக்குனு எல்லாரும் சொல்றாங்க. :P
வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை. சந்தேகம் வரும் சமயம் சரி பாரத்துக்கொள்கிறேன். ஆகவே எதையும் சுருக்கவில்லை. :))))))
ஒரு வேளை கண்ணன் அவரை சிரிக்க வைக்கிறாரோ என்னவோ :)//
இருக்கும்! இருக்கும்! :)))))
Post a Comment