Thursday, January 10, 2013

கண்ணன் மறுக்கிறான்!


ஆம், துரோணர் தன் மகனை துரியோதனனுக்கு அளித்து வரும் ஆதரவில் இருந்து விலகச் சொல்லிக் கேட்டிருக்கலாம்;  ஏன் அவனிடம் அதிக அன்பும், பாசமும் மிகுந்த துரோணர் குமாரனை வற்புறுத்தி இருக்கலாம்.  தன் ஆதரவு யுதிஷ்டிரனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் எனத் திட்டவட்டமாகக் கூறி இருக்கலாம்.  ஆனால்??? அவர் அவ்விதம் செய்யவில்லை.  கிருஷ்ணனுக்கு இப்போது நிலைமை தெள்ளத் தெளிவாகப்புரிந்தது.  மெல்ல யோசனையுடன் அவன் பேசினான்.

"நான் தாத்தா பீஷ்மரைச் சந்தித்தேன்.  குரு வம்சத்தினரின் தாயாதிச் சண்டையைத் தவிர்க்க வேண்டியே பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்தில் இருந்து வாரணாவதம் அனுப்பியதாகவும், இதன் மூலம் பாண்டவர்களின் உயிர் காக்கப்படும் என நம்பியதாகவும் தெரிவித்தார்.  "

"ஆஹா, வாசுதேவா, நீ இன்னமும் துரோணரைப் புரிந்து கொள்ளவே இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது." எனச் சொன்னான் துருபதன்.

"இது ஒரு கஷ்டமான சூழ்நிலை என்பதைப்புரிந்து கொள்கிறேன். குழப்பமானதும் கூட.  மாட்சிமை பொருந்திய மன்னரே, எப்படி இருந்தாலும் என்னால் உமக்கு எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.  கங்கைக்கரையிலும், யமுனைக்கரையிலும் என் வாழ்நாள் முழுதும் கழிவதற்கும் நான் விரும்பவில்லை.  யாதவர்களுக்கு துவாரகை நகரம் மிகப் பிடித்துவிட்டது.  அங்கிருந்து அவர்களை இனி வெளியேற்றுவது மிகக் கடினம்.  மேலும் நான் குரு வம்சத்தினருடன் போர் செய்யப் போவதில்லை.  அது மிகவும் அதர்மமான ஒன்று."

"உன்னுடைய தர்மம் என்பது தான் என்ன, வாசுதேவா?" கொஞ்சம் எரிச்சலுடனேயே கேட்டான் துருபதன்.

"முறைகேடில்லா நேர்மையான, நீதிக்குக் கட்டுப்படும் அரசுகளையும், அரசர்களையும் ஊக்குவிப்பது;  அவர்களுக்கு ஆதரவளிப்பது.  நேர்மை எங்கே இல்லையோ அங்கே ஒழுக்கமும் இருக்காது. "

அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கோபம் மிக வேகத்துடன் கிளம்பியது துருபதனுக்கு.  அடுத்து வந்த அவன் பேச்சிலிருந்து அது வெளிப்பட்டது.   ஆவேசம் கொண்ட அலைகடலின் அலைகள் கரையில் வந்து வேகமாய் மோதுவதைப் போல அவனுடைய வார்த்தைகள் சீற்றத்துடன் வெளிப்பட்டன. "வாசுதேவா, நேர்மையற்ற ஒன்றை நான் இன்று வரை, இந்த நிமிடம் வரை செய்ததில்லை.  என்னுடைய அரச தர்மம் எதுவோ அதை நான் இந்த நிமிடம் வரை கடைப்பிடித்தும் வருகிறேன்.  பிராமணர்களையும், மஹரிஷிகளையும் மிகவும் மதித்துப் போற்றி வணங்கி வருகிறேன்.  பழைய சம்பிரதாயஙகளையோ, சடங்குகளையோ இகழாமல் பின்பற்றி வருகிறேன்.  என் தேசத்து மக்கள் மகிழ்வுடனும் திருப்தியுடனும் இருக்கிறார்களா என்பதைக் கண்காணீத்து வருகிறேன்.  அவர்கள் மகிழ்ச்சியில் நான் திருப்தி அடைகிறேன்.  என் அரசாட்சியில் என்னுடைய குடிமகன்கள் எவரும் பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். நீ மட்டும் என் உதவிக்கு வந்தாயானால், நாம் இருவரும், நம் பலமும் சேர்ந்து ஆர்யவர்த்தத்தைச் சொர்க்கபுரியாக்குவதோடு உன்னதமான நிலைக்கும் கொண்டு செல்லலாம். " தன்னுடைய பேச்சை எல்லாம் பரிதாபம் கலந்த நோக்குடன் கேட்டுக் கொண்டிருக்கும் கண்ணனிடம் தன் மனதைத் திறந்து காட்டிய துருபதன் அவனுடைய உடனடியான பதிலையும் எதிர்பார்த்தான்.

"மாட்சிமை பொருந்திய மன்னரே, எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் யாதவர்கள் எந்த வகையில் பாஞ்சாலத்துக்கு உதவ முடியும் என்பதை என்னால் இன்னமும் புரிந்து கொள்ள இயலவில்லை."

"நீ என் பக்கம் எனக்கு ஆதரவு மட்டும் காட்டி நில் கிருஷ்ணா!  உன் வலுவான துணையுடன் நான் அதர்மத்தை இன்னமும் வலுவாக எதிர்த்து நிற்பேன்.  துரியோதனனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் துரோணர் கொடுக்கும் ஆதரவு தர்ம விரோதமான ஒன்று.  நியாயத்துக்குப் புறம்பானது.  நீ மட்டும் எங்கள் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு ஒத்துக்கொண்டால், பாஞ்சாலம் வலிமை பொருந்தியதாக விளங்கும்.  அதன் பின்னர் பீஷ்மர் என்னுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு துரோணரை விலக்கி வைக்கவும் முன் வரலாம்."

"துரோணரை மாற்ற வேறு வழியே இல்லையா?"  கண்ணன் கேட்டான்.

"ஹா,"  மிகுந்த மனக்கசப்புடன் சிரித்த துருபதன், "துரோணரை மாற்றுவதா?  நான் மிகச் சிறு வயதிலிருந்து அவரை நன்கறிவேன். மிகவும் அகந்தையுள்ளவர் மட்டுமல்ல; எவரையும் எதற்காகவும் எளிதில் மன்னிக்காதவரும் கூட.  அது மட்டுமா? அவருக்குக் கோபம் வந்துவிட்டால், ஒருவர் மேல் வெறுப்பு வந்துவிட்டால், எளிதில் அவரை அமைதியடையச் செய்யவும் இயலாது.  அவரால் இயன்றால், முடிந்தால், அவருக்கு இது தான் ஒப்பும் எனத் தோன்றினால், இவ்வுலகை எரிக்கக் கூடத் தயங்க மாட்டார்."

"மன்னரே, மன்னரே, மன்னரே, அமைதி அடையும்.  ஒருவேளை நீங்கள் மிகவும் கடுமையாகப் பேசி விட்டீர்களோ?" கிருஷ்ணன் சாந்தமாய்க் கேட்டான்.  "எவ்வளவு கடின மனதுள்ளவனாக இருந்தாலும் அந்த மனிதனுக்குள்ளும் எங்கோ ஓர் ஓரத்தில் மென்மையும் இருக்கும்.  ஏதோ ஒன்றுக்கு மனம் இளகுவான். அது ஒரு மகத்தான காரணத்துக்காகவும் இருக்கலாம்."

"ம்ஹூம், வாசுதேவா, உன்னுடைய இந்தப் பேச்சுக்களின் மூலம் துரோணர் போன்ற ஒரு மனிதனை நீ இன்று வரை சந்திக்கவே இல்லை என நினைக்கிறேன்.  சரி, இதன் மூலம் நீ என்னுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டாய் என்றே கொள்ளலாமா?"

"என் மனம் இதை ஏற்க மறுக்கிறது மாட்சிமை பொருந்திய மன்னரே.  இதை ஒத்துக்கொள்ளத் தகுதி உனக்கு இல்லை என்றும் கூறுகிறது.  நான் தக்க காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்."

"அப்படி என்றால், நீ திரெளபதியை மணக்க ஒத்துக்கொள்ளவில்லை எனில், நான் வேறு வழிகளை நாடத்தான் வேண்டும்." கண்ணனின் முன்னால் வயதில் மிகவும் இளையவன் முன்னால் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறதே என்ற வருத்தம் துருபதன் குரலில் தெரிந்தது.

"நிச்சயமாய்!  நீங்கள் திரெளபதி போன்ற அழகு வாய்ந்த இளவரசிக்கு உகந்த மணாளனைத் தேர்ந்தெடுங்கள். அது தான் நன்மை பயக்கும்."

"எனில் நான் ஜராசந்தனின் வேண்டுகோளை ஏற்கும்படியாய் இருக்கும்."  துருபதன் இதைக் கூறிக்கொண்டே கிருஷ்ணனின் ஜன்ம விரோதியான ஜராசந்தனின் வேண்டுகோளைத் தான் ஏற்கப் போவதாய்க் கூறுவது கண்ணனை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தான்.


1 comment:

ஸ்ரீராம். said...

ஜராசந்தன் பெயர் சொன்னாலும் நடக்கப் போவது என்னவென்று கண்ணன் அறியாததா என்ன!