Sunday, January 6, 2013

துருபதன் மனம் திறக்கிறான்.


ஹூம், கிருஷ்ணா!  நீ சொல்வது சரியே!  எனினும் துரோணரும், அவருடைய சீடர்களும்  எதிர்பாராமல் எவருடைய தூண்டுதலும் இல்லாமல் என்னைத் தாக்கிய போதும்  சரி,  என்னைச் சிறைப்படுத்தி, என்னிடமிருந்து என் நாட்டைப் பிடுங்கியபோதோ, என் நாட்டு மக்களை ஓட ஓட விரட்டியப்போதோ எவரும் இது குறித்துச் சிந்திக்கக் கூட இல்லை.  நான் தன்னந்தனியனாக நின்றேன்!”  துருபதனின் மனக்கசப்பு அவன் குரலில் தெரிந்தது.

“அது முற்றிலும் தவறே!  “ கண்ணன் தன் சொல் வன்மையால் துருபதனின் மனக்கசப்பை நீக்க முயன்றான் எனலாம்.  “தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானத்தை துரோணர் பெரிய மனதோடு மன்னித்து மறந்திருக்க வேண்டும்.  அதைப் பெரிது படுத்தி இருக்கக் கூடாது.  ஹூம்,  ஆயுதப் பயிற்சி பெற்ற ஒரு  சிறந்த அந்தண ரிஷியான அவர் இப்படி நடந்திருக்கவே கூடாது.  உண்மையான சிறந்த ப்ராமணனுக்கு கோபத்தை வெல்வது தான் சிறந்தது எனத் தெரிந்திருக்கும்.  துரோணருக்கும் தெரியாமல் இருந்திருக்க முடியாது.  ஆனாலும் அவர் தன் ஆயுதப் பயிற்சியை இவ்விதம் பயன்படுத்தித் தன் கோபத்தைக் காட்டி இருக்கக் கூடாது.  பிராமணர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றாலும் மற்றவருக்கெதிராக ஒரு நாளும் ஆயுதப் பிரயோகம் தேவையில்லாமல் செய்யக் கூடாது என்பதை மறந்துவிட்டார்.  மற்றவர்கள் கண்ணெதிரே நல்லதொரு குருவாக, வழிகாட்டியாக அமைய வேண்டியவர் கோபத்தில் தன்னை, நிதானத்தை இழந்து விட்டார்.  ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாக நான் அறிவேன் மன்னரே!  தன் குருவின் ஆணை இல்லை எனில் அர்ச்சுனன் ஒருக்காலும் உங்களை இவ்விதம் நடத்தி இருக்க மாட்டான்.  வேறு எவரும் உங்களைக் கேவலப்படுத்த அனுமதித்திருக்கவும் மாட்டான்!”

சிறிது நேரம் வரை தீர்க்கமாகத் தரையையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் துருபதன்.  பின்னர் தலை நிமிர்ந்து மீண்டும் நெரிந்த புருவங்களோடு கிருஷ்ணனைப் பார்த்தான்.  “துரோணரும் அவருடைய சீடர்களும் ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் வரையில் பாஞ்சாலத்துக்கும், குரு வம்சத்துக்கும் இடையில் அமைதி என்னும் பேச்சுக்கே இடமில்லை!” எனத் தன் தீர்மானமான குரலில் அறிவித்தான்.  பின்னர் திடீரெனக் கிருஷ்ணனிடம் கடுமையான குரலில், “ நீ திரெளபதியை மணக்கச் சம்மதிக்கவில்லை எனில் நான் வேறு எந்த ராஜகுமாரனையாவது பார்க்க வேண்டும்!” என அறிவித்தான்.

“மாட்சிமை பொருந்திய மன்னா!  உங்கள் வேண்டுகோள் மிகவும் அற்புதமானது.  பெருந்தன்மை கொண்டது.  தங்கள் உதாரகுணத்தையும் எடுத்துக் காட்டுவது.  ஆனால் யாதவர்களுடன் நீங்கள் செய்து கொள்ள ஆசைப்படும் இந்த உறவினால் என்ன பலன் விளையும்?  நீங்கள் எங்களை மத்ராவிலேயே மீண்டும் குடியேற உதவினால், எங்கள் உதவிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை எனும் பக்ஷத்தில்,  மகத நாட்டுப் பேரரசன் ஜராசந்தனின் கோபத்தை உங்கள் மேல் திருப்பி விடுவோம்.  அது ஒன்று தான் கிடைக்கப் போகும் ஒரே நன்மை!”  அனைவரையும் கவர்ந்திழுக்கும் சிரிப்பு கண்ணனின் முகத்தில் படர்ந்தது.

துருபதன் தனக்குத் தானே தலையை ஆட்டிக் கொண்டான்.  “அப்படி ஜராசந்தன் பாஞ்சாலத்தை ஊடுருவினால், பீஷ்மர் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்.  ஹஸ்தினாபுரத்தைக் காக்க வேண்டி அவர் ஜராசந்தனை எவ்வகையிலும் தடுப்பார்.  துரோணரைக் குறித்தோ, அவருடைய பகை குறித்தோ அச்சமயம் அவர் சிந்திக்கக் கூட மாட்டார்.  ஆகவே நாங்கள் வலிமையோடு தான் இருக்கிறோம்!”  என்றான் துருபதன்.  மேலும் தொடர்ந்து, “ஆனால் நான் பீஷ்மரின் உதவியை விரும்பவில்லை.  அதைக் குறித்துக் கவலைப்படவும் இல்லை.  நீ மட்டும் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாயானால், நான் எதைக் குறித்தும் கவலை கொள்ள மாட்டேன்.  இருவரையும் ஒரு கை பார்த்துவிடுவேன்.”

“மன்னரே, நாம் பீஷ்மருடன் உடன்படிக்கை செய்து கொள்வது நல்லது அல்லவா?  ஜராசந்தனைக் குறித்தும் கவலைப் பட வேண்டியதில்லை.  பீஷ்மருக்கும் இது சம்மதமாக இருக்கும்.”

“நீ தவறு செய்கிறாய் வாசுதேவா!  துரோணருக்கு அங்கே உள்ள செல்வாக்கின் ஆழம் உனக்குப் புரியவில்லை.  ஆகவே என்னுடன் எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ள துரோணர் விட மாட்டார்.  அதே சமயம் நானும் அதே மனநிலையில் தான் உள்ளேன்.  எதற்காகவும், எப்போதும், எந்நிலையிலும் துரோணருடன் எந்த உடன்படிக்கையும் ஏற்பட நான் சம்மதிக்க மாட்டேன்.  ஹஸ்தினாபுரத்துடன் உடன்படிக்கை என்பது துரோணருடன் உடன்படிக்கை செய்து கொள்வதாகும்!”  துருபதன் உறுதியாகக் கூறினான்.

“ஆஹா, பாண்டவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்!”  கண்ணன் தன் கருத்தைக் கூறினான்.

“அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடப் போவதில்லை, வாசுதேவா!  பாண்டவர்கள் ஐவரும் ஒருநாளும் என்னுடன் சிநேகிதமாக இருந்திருக்கப் போவதில்லை.  அவர்கள் துரோணருக்கு மிகவும் கடன்பட்டவர்கள்.  குரு பக்தியில் சிறந்தவர்கள்.  அவருக்கு துரோகம் நினைக்க விரும்ப மாட்டார்கள்.  ஒருவேளை நியாயம், அநியாயம் புரிந்து கொண்டு அவர்கள் என்னுடன் சிநேகிதம் பாராட்டினாலும் துரோணர் அவர்களை சும்மா விட மாட்டார்.  துரியோதனன் மூலம் பாண்டவர்களை எப்படியேனும் அழித்துவிடுவார்.  அவருக்கு என்னுடைய பகைமை தான் முதல் இடத்தில் உள்ளதே தவிர, ஐந்து சகோதரர்களைக் குறித்து அவர் கவலைப்பட மாட்டார். “ என்ற துருபதன் மேலும் தொடர்ந்தான்.

“எனக்குக் கிடைத்த தகவல்களின் படிப் பார்த்தால் துரோணருடைய ஆதரவைப் பெற்றதாலேயே துரியோதனனை எதிர்க்க முடியாமல் பீஷ்மர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதன் மூலம் அவர்கள் இறக்கக் காரணமாகிவிட்டார் எனச் சொல்கின்றனர்.”   கிருஷ்ணன் துருபதன் எவ்வளவு கெட்டிக்காரனாகவும் திறமைசாலியாகவும், செய்திகளை உடனுக்குடன் பெறுவதில் வல்லவனாகவும் இருப்பதைப் புரிந்து கொண்டான்.  ஆம், துருபதன் சொல்வது சரியே.  துரோணர் மட்டும் ஐந்து சகோதரர்களையும் முழு மனதோடு ஆதரித்திருந்தாரானால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்க மாட்டார்கள்தான். அஸ்வத்தாமாவுக்கும் துரியோதனனுக்கும் உள்ள ஆழ்ந்த நட்பின் காரணமாக, அஸ்வத்தாமாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி துரோணர் ஐந்து சகோதரர்களையும் நிர்க்கதியாய் விட்டு விட்டார்.

1 comment:

ஸ்ரீராம். said...

முழுசாக மறுபடிப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் வலுக்கிறது. நேரம்தான் கிடைக்க மாட்டேனென்கிறது. துரியோதனன், அஸ்வத்தாமன் நட்பு என்கிற செய்தியெல்லாம் புதிதாக இருக்கிறது.