“கண்ணா, நீ திரெளபதியைச் சந்திக்க
த்ருஷ்டத்யும்னன் உதவி செய்வான். அவன் உன்னை
அவளிடம் அழைத்துச் செல்வான்.” துருபதன் கண்ணனை
த்ருஷ்டத்யும்னனோடு திரெளபதியைச் சந்திக்க அனுப்பவேண்டி எழுந்தான். அப்போது ஒரு மெல்லிய காலடி ஓசை அந்த அறையிலிருந்து
திரும்பும் வழியில் செல்வது கேட்டது. உற்றுக்
கேட்ட துருபதனுக்குக் கோபமும், எரிச்சலும் மேலோங்கியது. தன் உதட்டைக் கடித்துக் கொண்டான். யாரோ, எவரோ ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். சமாளித்துக் கொண்ட மன்னன் துருபதன் கண்ணனை த்ருஷ்டத்யும்னனும், அமைச்சரும் காத்துக்
கொண்டிருந்த அறையில் கொண்டு விட்டான் .
கண்ணன் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்க்க, இளம் அரசகுமாரன் ஆன ஷிகண்டின்
அவர்கள் வந்த வழியில் இருந்து வெளிவந்து தோட்டத்தில் மாந்தோப்புக்குள் நுழைந்து கொண்டிருப்பதைக் கண்டான். இவன் தான் துருபதனும் தானும் பேசிக் கொண்டிருக்கையில்
ஒட்டுக்கேட்டவனா? ம்ம்ம்ம்ம்??? இந்த இளைஞனைக் குறித்த மர்மம் ஏதோ இருக்கிறது. இங்கே ஒருவருக்கும் வேண்டாதவனாகவும் உள்ளானே? ஏன் இப்படி?
கண்ணன் மனம் தீவிர யோசனையில் ஆழ்ந்தது.
கண்ணன் துருபதனின் பெருந்தன்மையையும், அவன் நீதி நிர்வாகத்தையும் கண்டு
அதன் பால் தன் மனதைப் பறி கொடுத்திருந்தான்.
துவாரகையிலிருந்து கிளம்புகையில் வடக்கே நமக்கு எதிரிகள் இருக்கக் கூடாது என்ற
ஒரே எண்ணமே கண்ணனிடம் இருந்தது. ஆர்ய வர்த்தத்தில் தர்மத்தை நிலை நாட்டுவதற்கு அதன்
அரசர்கள் உதவி தேவை என்ற ஒரே கருத்திலும் இருந்தான். ஆனால் இப்போதோ கண்ணன் ஒரு மாபெரும் உணர்ச்சிக் குவியல்களால்
ஆனதொரு குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்களில் தன்னையும் அறியாமல் பங்கெடுத்துக் கொண்டிருந்தான். அதன் வேகமும், அவர்களின் விவரிக்கவொண்ணா வெறுப்பும்,
அந்த வெறுப்புக்குக் காரணமான ஆணிவேரைக் களைய எடுத்த முயற்சிகளும், அதன் காரணமாக அந்தக்
குடும்பத்து உறுப்பினர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றும் ஒரு பிரளய
அலை போலக் கண்ணனைத் தாக்கியது. அதில் மூழ்காமல்
இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்தான் கண்ணன்.
சாத்யகியையும், ஷ்வேதகேதுவையும் தனிமையில் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சூறாவளிக்கு
முன்னர், அதுவும் அதர்மம் என்னும் சூறாவளிக்கு முன்னர் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வேண்டும் என்று வலியுறுத்திச்
சொன்னான்.
“இது எப்படி அதர்மச் சூறாவளியாகும்
கண்ணா?” சாத்யகி இதன் வெளிப்படையான நல்ல விஷயங்களையும்
அதன் மூலம் கிடைக்கப் போகும் பலன்களை மட்டுமே சிந்தித்தான். “ ஓ, ஓ, சாத்யகி, இந்த விஷயம் நம்மை வெறுப்பு என்னும்
சுழலில் ஆழ மூழ்கடிக்கப் பார்க்கிறது. இந்தச்
சுழலில் அகப்பட்டுக் கொண்டு நாம் சுற்றிச் சுற்றி வரப் போகிறோம். மூழ்காமல் வெளியே வருவது நம் திறமையைப் பொறுத்தது.” என்றான் கண்ணன். சற்றே யோசனையுடன் அனைத்தையும் விவரித்தான் கண்ணன். “ இதோ பார்,
எவ்வளவு முட்டாள்தனமான விஷயங்கள் நடந்துள்ளது என்பதைக் கவனி. ஒரே ஒரு சிறு வெறுப்பு என்னும் தீ இன்று ஊழிப் பெரும்
தீயாக மாறி விட்டிருக்கிறது. இரண்டு முட்டாள்கள்,
ஒருவன் க்ஷத்திரிய இளவரசன், இன்னொருவன் அந்தணன், இருவரும் ஒருவருக்கொருவர் முட்டாள்
தனமான வாக்குறுதிகளை இளம் வயதில் செய்து கொள்கின்றனர். அந்த வாக்குறுதியே முட்டாள்தனமானது எனில் அந்த
இளவரசனும் முட்டாள் தான். சற்றும் யோசனையில்லாமல்
அந்த அந்தணனை அவமதிக்கிறான். இந்த அவமதிப்பே
அந்த அந்தணன் மனதில் வெறுப்பு என்னும் ஊற்றாக மாறுகிறது. அது இன்று மாபெரும் பிரளய வெள்ளமாக மாறி இந்தப்
பாஞ்சாலத்தையும், அதன் மக்களையும், அதன் அரசர், இளவரசர்கள், இளவரசி என அனைவரையும் மூழ்கடிக்கப்
பார்க்கிறது. “
“அந்த அந்தணனோ மோசமானவன். முட்டாள் தனத்தில் சற்றும் குறைந்தவன் அல்ல. தன் வாழ்நாள் முழுவதையும், தன் வித்தையின் சிறப்பு
முழுவதையும் இந்த அரசனைப் பழிவாங்கவென்றே செலவு செய்கிறான். அதற்காகவே தன்னிடம் வரும் தன் மாணாக்கர்களை இந்த
அரசனைத் தோற்கடித்துப் பழிவாங்கவே தயார் செய்கிறான். இதை அடைவதற்காகத் தன் பிராமணத்துவத்தின் மகத்துவத்தையே, அவ்வளவு ஏன்?
அவர்களின் நியமங்களை, கட்டுப்பாடுகளை, தவத்தை, ஒரு உண்மையான பிராமணன் வாழ்க்கை
நடத்த வேண்டிய முறையை என அனைத்தையும் மீறுகிறான்.
அதோடு மட்டுமல்ல. அவன் சார்ந்திருக்கும்
அரசாங்கத்தில் அவன் வலிமையானதொரு ஆசானாகவும் திகழ்கிறான். இதை முன் வைத்து இந்த மரியாதைக்குரிய அரசனை இகழ்ந்து
பேசி அவனைத் தோற்கடித்து அவனை இழிவுக்கு ஆளாக்கித் தேர்க்காலில் கட்டி இழுத்து எனப்
பல விதங்களிலும் அவமரியாதை செய்கிறான். பின்னர்
அவன் நாட்டையே, அதன் ஒரு பகுதியையே அவனுக்குத் தானமாகவும் தருகிறான். அரசனால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. என்னதான் நாட்டின் ஒரு பகுதி திரும்பக் கிடைத்தாலும்,
தன் முழுநாட்டையும் மீட்கும்வரை அவனுக்கு நிம்மதியில்லை. அதற்காகவென்றே பிள்ளைகளைப் பெற்றுத் தன் பழைய நண்பனும்,
இப்போதைய எதிரியும் ஆன அந்த பிராமணனைப் பழிவாங்க வென்றே அவர்களைத் தயார் செய்கிறான். ஒவ்வொரு முறை உணவூட்டுகையிலும் இந்த வெறுப்பையும்
சேர்த்தே தன் குழந்தைகளுக்கு ஊட்டுகிறான்.
அந்தக் குழந்தைகள் இன்று வாழ்வதே தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்துப்
பழிவாங்கவேண்டும் என்றே. வெறுப்பை மேலும் மேலும்
வளர்த்துக் கொண்டே போகும் அந்த அந்தணனோ இன்று ஹஸ்தினாபுரத்தில் ஒரு அசைக்க முடியா சக்தியாகிவிட்டான். அங்குள்ள அரசகுமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு
அல்லாமல் தானும் ஒரு சிறந்த போர்வீரனாக இருக்கிறான். அவன் சக்தி இன்று அளப்பரியதாக உள்ளது. இங்குள்ள அரசனோ அவனை அடியோடு ஒழிக்க விரும்புகிறான். தன் பலத்தைப் பெருக்கிக் கொள்ள நினைக்கிறான். ஷ்வேதகேது! சாத்யகி! இருவரும் கேளுங்கள். பாஞ்சாலமும், குருவம்சத்தினரின்
அஸ்தினாபுரமும் இன்று பிரிந்து ஒருவருக்கொருவர் எதிரிகளாகத் திகழ்கின்றனர். எந்த நேரமும் அவர்களுக்குள் யுத்தம் மூளலாம். நாம் இவற்றுக்கு நடுவில் மாட்டிக் கொண்டுள்ளோம்.” என்றான் கண்ணன்.
“ஓஹோ, கண்ணா, அப்படியெல்லாம்
விரைந்து முடிவெடுக்காதே. யாதவர்கள் நினைத்தால் மட்டுமே இதில் கலந்து கொள்ள இயலும். ஒதுங்கி இருக்க
நினைத்தால் தடுப்பவர் யார்?” ஷ்வேதகேது சொன்னான்.
“இல்லை, ஷ்வேதகேது, துருபதனின் வேண்டுகோளை நான் ஏற்றால் இந்தச் சுழலில்,
மாபெரும் சுழலில் யாதவர்களை நானே இழுத்துவிடுவேன். ஆனால் இதை நான் ஏற்கவில்லை என்றாலோ, துருபதன் தன்னுடைய
பேரத்தை ஜராசந்தனிடம் பேசுவான். அவனுடன் ஒப்பந்தம்
செய்து கொள்வான். அவனுடன் நட்புப் பாராட்டுவான். இதன் மூலம் நமக்கு நன்மை கிட்டாது அப்பனே. இந்தச் சுழலின் ஆழமும், அகலமும் அதிகம் ஆகும். நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி
சுழலில் மாட்டிக் கொண்டே தீருவோம். வேறு வழியே
இல்லை.”
“என்றால் நாம் இந்த மாயச் சுழலை
விட்டு நீங்கித் திரும்பச் சென்றுவிடுவோம்.
நாம் துவாரகையில் இருந்தவரைக்கும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தோம். வா, கிருஷ்ணா, நாம் துவாரகைக்கே சென்றுவிடுவோம்.”
சாத்யகி அழைத்தான்.
“அது அவ்வளவு சுலபமல்ல, சாத்யகி”
, என்றான் கண்ணன்.
6 comments:
தொடந்து படிக்க முடியுமா என்று எனக்கும் கவலையாத்தான் இருக்கு... நன்றி...
வாங்க டிடி, ஏன்?? என்ன காரணம்?? மின் வெட்டினாலா? அல்லது வேலைப்பளுவா? உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படியுங்கள். ஒன்றும் அவசரம் இல்லை. :))))
ஒரு பாராவில் முன்கதைச் சுருக்கம் முடித்து விட்டீர்கள். ஷ்வேதகேது யார்?
ஸ்ரீராம், நீங்க கண்ணன் வந்தான் இரண்டாம் பாகம் படிக்கலைனு நினைக்கிறேன். :)))) கண்ணனின் குருவான சாந்தீபனியின் முதன்மைச் சீடர், கண்ணனுக்கு ஆசாரியராகவும், அதே சமயம் நண்பராகவும் இருந்தவர். ஷாயிபாவை நினைவில் இருக்கிறதா? அவள் முதலில் ஷ்வேதகேதுவைத் தான் தன்வயப் படுத்தி வைத்திருந்தாள் அடிமையாக. :))))))
சாத்யகி-கண்ணன் உரையாடல், ஒரு தேர்ந்த அரசதந்திர வித்வத்தைப் படிப்பது போலிருக்கிறது. ஒவ்வொரு பேராவும் அருமை. கண்ணனை மாயாஜாலம் அவிழ்த்த மன்னனாகப் பார்க்க வைத்திருக்கிறீர்கள்.
Post a Comment