மறுநாள் காலையிலே திருஷ்டத்யும்னன்
வந்து திரெளபதியைப் பார்த்துப் பேசக் கண்ணனை அழைக்க வந்தான். இரவு முழுவதும் தூங்காத அசதியும், சோர்வும் அவன்
முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனாலும்
கண்ணன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. தன்னுடைய
கிரீடத்தை எடுத்து வைத்துக் கொண்டு கண்ணன் திரெளபதியைச் சந்திக்கக் கிளம்பினான். திரெளபதி தனியாக அவனைச் சந்திக்கவில்லை என்றும்
தன் சகோதரர்கள் ஆன திருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் அருகில் இருக்கையிலேயே சந்திக்க
ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் கிருஷ்ணன் உணர்ந்தான். ஆனால் இப்போதும் இன்னொரு சகோதரன் ஆன ஷிகன்டின் அங்கே
காணப்படவில்லை என்பதையும் கவனித்துக் கொண்டான்.
அந்த இளைஞனைக் குறித்த மர்மம் ஏதோ உள்ளது!
அதற்குள்ளாகக் கண்ணனின் சிந்தனைகளைக் கலைத்துக் கொண்டு அவன் எதிரே அமர்ந்த திரெளபதி
தலையைக் குனிந்து அவனை வணங்கினாள். அவள் தலையில்
சூடியிருந்த மலர்களின் சுகந்தம் அந்த அறை முழுதும் நிரம்பி இருந்தது.
அவளைப் பார்த்துக் கிருஷ்ணன்,
“ஒருவேளை இது சம்பிரதாயத்துக்கு விரோதமாக இருக்கலாம், மாட்சிமை பொருந்திய இளவரசியே. ஆனால் மன்னர் நான் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும்
என விரும்பினார். ஆகவே அவர் விருப்பத்தின்
பேரிலேயே உங்களைச் சந்திக்கச் சம்மதித்தேன்.” என்றான். தன்னுடைய விசாலமான கண்களால் கண்ணனை நேருக்கு நேராகப்
பார்த்தாள் திரெளபதி. அவன் மனத்தின் ஆழத்தை
அந்தக் கண்களால் அளக்க முற்படுகிறாளோ? பின்னர்
சற்றே தயங்கிய மெல்லிய குரலில், “நான் என் தந்தையிடன் உங்களைக் கண்டு பேச வேண்டும்
என வற்புறுத்தினேன். ஒருவேளை ஒரு பெரிய நாட்டின்
அரசகுமாரிக்கு இதெல்லாம் உகந்தவையாக இல்லாமல் இருக்கலாம். சம்பிரதாய விரோதமாகவும் இருக்கலாம். பாரம்பரிய மிக்க அரசகுடும்பத்தில் பிறந்த எனக்கு
இது பாரம்பரியத்தைப் பின்பற்றாத ஒரு விஷயமாகவும் இருக்கலாம்.”
பின்னர் தன் உறுதியான குரலில்
தீர்மானமாகப் பேச ஆரம்பித்தாள். அவள் குரலின்
தன்மையைக் கண்ட கிருஷ்ணன் தன் தகப்பனிடமிருந்து இந்த குணத்தை அவள் பெற்றிருக்கிறாள்
என்பதை உணர்ந்தான். அவள் கண்ணனுக்குக் காட்டிய
பணிவான தன்மைக்கு நேர் விரோதமான குரலில் பேசினாள். “நான் எங்களுக்கு உதவ உங்களால் முடியுமா முடியாதா
என உங்களைக் கேட்க எண்ணினேன். அதுவும் நானே
நேரிடையாகக் கேட்க வேண்டும் என விரும்பினேன்.”
என்றாள். கிருஷ்ணன் முகத்தில் தவிர்க்க
முடியாத அந்தப் புன்னகை தோன்றியது. இந்தப்
பெண்ணின் மனோதைரியத்தையும், வெளிப்படையான பேச்சையும் கண்டு வியந்தான். உள்ளூர அவளைப் பாராட்டவும் செய்தான். “இளவரசி,
தாங்களும், தங்கள் தந்தையும் என்னிடம் காட்டும் கருணையால் நான் நெகிழ்ந்து விட்டேன். தங்களிடம் எதையும் மறுக்க இயலாதபடி செய்து விட்டீர்கள்.” என்றான்.
“ஆனால் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் உங்களுக்கு உதவ? அதை நான் தெரிந்து கொள்ளலாமா?”
இப்போது திருஷ்டத்யும்னன் குறுக்கிட்டான்.
“கண்ணா, உன்னைக் குறித்தும் உன் சாகசங்கள் குறித்தும் நாங்கள் இரண்டு வருடங்களாக யோசித்து வருகிறோம். உன்னைக் குறித்து இரண்டு வருடங்களாகச் சிந்தித்து
வருகிறோம். நீ எப்போது யாதவர்களை மதுராவிலிருந்து
தப்ப வைத்து செளராஷ்டிரம் அழைத்துச் சென்றாயோ அப்போதிலிருந்து வியந்து வருகிறோம்.” என்றான்.
“எவ்வகையில் நான் உதவ முடியும்??
யாதவர்கள் எங்கோ மேற்குக் கடற்கரைக்குப் பக்கம் தூரத்தில் இருக்கின்றனர். அவ்வளவு வலுவாக இருப்பதாகவும் சொல்ல முடியாது. மேலும் நானும் ஒரு அரசன் இல்லை.”
“நீங்கள் ஒரு அரசனை விடவும் மேம்பட்டவர். நீங்கள் ஒரு கடவுள். ரக்ஷகர்.
அப்படித்தான் ஆர்யவர்த்தம் முழுதும் பேசுகிறது. இந்த ஆரியர்களுக்குள்ளேயே உங்கள் ஒருவரைத்தான் மொத்த
ஆர்ய வர்த்தமும் மதிக்கிறது. மதித்து வணங்குகிறது.” வருத்தம் தோய்ந்த விழிகளுடன் பேசினாள் திரெளபதி. அவள் வருத்தத்திற்குக் காரணம் புரியவில்லை கிருஷ்ணனுக்கு.
தன் தந்தையின் நிலை குறித்தா? ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். கிருஷ்ணனுக்கு இந்தப் பெண்ணின் பேச்சு மட்டுமில்லாமல்
அவள் உறுதியும் பிடித்தது. தன் தந்தைக்காக
இவள் எப்படிப் பட்ட பிரச்னையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறாள். அவள் மேல் மதிப்பு உயர்ந்தது கண்ணனுக்கு.
“குரு சாந்தீபனி உன்னைக் குறித்த
அனைத்துத் தகவல்களையும் கூறினார் வாசுதேவா!
ஜராசந்தன் கூட உன்னைக் கண்டு பயப்படுகிறான் என்றும் அறிந்தோம்.” திருஷ்டத்யும்னன் கூறினான்.
“குருஜி என்னிடம் எப்போதும் அன்பு
அதிகம் காட்டி வருகிறார். ஆனால் மன்னர் துருபதன்
என்னிடம் வைத்த வேண்டுகோள் என் சக்திக்கு அப்பாற்பட்டது. என்னால் துரோணரோடு யுத்தம் செய்ய முடியாது; ஏனெனில் குரு வம்சத்தினரோடு எனக்கு யுத்தம் செய்யும்
அளவுக்கு எதிரிகள் இல்லை.” திரெளபதியின் முகத்தை ஏமாற்றம் என்னும் மேகம் சூழ்ந்து கொண்டது. ஏனெனில் இவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த அவள் முகம் இப்போது கறுத்தது. முகம் கவலையில் ஆழ்ந்து போகக் கண்கள் கீழ் நோக்கிப் பார்த்தன. தனக்கே கேட்குமோ கேட்காதோ என்னும்படியான மெல்லிய குரலில் அவள் கண்ணனிடம், " வாசுதேவா, அப்போது, அப்போது, நீங்கள் எங்கள் உதவிக்கு வரப் போவதில்லை என்று முடிவே செய்து வீட்டீர்களா?" என்று கேட்டாள். அவளது அழகிய விசாலமான கண்களில் நிரம்பிய நீரைப் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சமுத்திரத்தின் அலைகள் கரையில் வந்து மோதிக் குமுறிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான்.
5 comments:
நன்றி... தொடர்கிறேன்...
//தன்னுடைய கிரீடத்தை எடுத்து வைத்துக் கொண்டு கண்ணன் திரெளபதியைச் சந்திக்கக் கிளம்பினான்.//
நுண்ணிய விவரம்.
//அவளது அழகிய விசாலமான கண்களில் நிரம்பிய நீரைப் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சமுத்திரத்தின் அலைகள் கரையில் வந்து மோதிக் குமுறிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான். //
கவித்துவமான வரிகள்.
பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம், டிடி இருவருக்கும்.
கடைசி வரியின் உவமை கவிதை. பிரமாதம்.
திரௌபதி பற்றிய பவர்புல் அறிமுகம்.
நன்றி அப்பாதுரை.
Post a Comment