கிருஷ்ணனின்
மனம் நெகிழ்ந்தது. திரெளபதியின் ஆழ்ந்த வருத்தம்
அவனைக் கொஞ்சம் அசைத்தது. அவளைப் பார்த்து அவன், “நான் மாட்சிமை பொருந்திய மன்னருக்கு
உதவவே விரும்புகிறேன், இளவரசி! ஆனால் நீங்கள்
அனைவரும் விரும்பும் வகையில் அல்ல.” அவர்கள்
அனைவரும் கிருஷ்ணன் மேல் வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்க வேண்டுமே என
நினைக்கையிலேயே கண்ணன் மனம் மிக வலித்தது.
ஆனால் அவர்கள் கூறியதை அவன் ஏற்றால் அவன் மனமே அவனை மன்னிக்காது. எந்த தர்மத்தைக் காக்கவென அவன் பாடுபடுகிறானோ அதற்கு
விரோதமாகவே இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில்
தான் இருப்பதைக் கண்டு கண்ணன் மனம் வருந்தினான்.
அதே சமயம் திரெளபதி அவனைப் பார்த்து, “கண்ணா, தர்மத்தைக் காக்கவென்றே நீங்கள்
அவதாரம் எடுத்திருப்பதாய் அனைவரும் கூறுகின்றனர்.
எங்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்களுடைய தர்மம் காக்கப்படாதா? தர்மத்துக்கு விரோதமான எதையும் உங்களை நாங்கள் செய்யச் சொல்லவே இல்லையே! துரோணரால் நாங்கள் எவ்வளவு கொடூரமான முறையில் நடத்தப்
பட்டோம் என்பதை நீர் அறிவீரா?” திரெளபதியின்
முகத்திலும் குரலிலும் மீண்டும் நம்பிக்கைக்கீற்று தென்பட்டது.
“ஏதோ
கொஞ்சம் அறிவேன். முழு விபரங்களும் தெரியாது.”
என்றான் கண்ணன். கண்ணன் முகத்தை நேருக்கு நேர்
தைரியமாகப் பார்த்த திரெளபதி, “எனில் நான் சொல்கிறேன், கேளுங்கள்!” என்றாள். “அப்போது அஹிசாத்ராவில் என் தந்தை ஒரு திருவிழாவை
ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருந்தார். கோயிலில் இருந்து கடவுளரை வணங்கிவிட்டு அங்கிருந்த
அந்தணர்களும், அர்ச்சகர்களும் புடைசூழ என் தந்தை அப்போது தான் வெளியே வந்தார். கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்குள்ளும் மக்கள் வெள்ளம். எவரும் ஆயுதம் தரிக்கவில்லை. அந்தச் சமயம் பார்த்து துரோணரும் அவருடைய சீடர்களும்
ஆயுதபாணியராகச் சூழ்ந்து கொண்டனர். இது தர்மத்துக்கு
விரோதமில்லையா? அர்ஜுனன் தூரத்திலிருந்து ஒரு
மரத்தின் அருகிருந்து என் தந்தையைக் குறி வைத்தான். ஒரே அம்பில் என் தந்தையின் கிரீடத்தைக் கீழே தள்ளினான். அடுத்த அம்பில் என் தந்தையின் வலது காதின் தங்க வளையங்கள் இரண்டு
துண்டாக ஆகிவிட்டன. மூன்றாவதில் அவரின் காலில்
காயத்தை ஏற்படுத்தினான். என் தந்தை தன்னைச்
சமாளித்துக் கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கவில்லை.
அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் வில்லையும், அம்பையும் எடுப்பதற்குள்ளாக
அர்ஜுனன் தாக்குதலால் கீழே விழுந்துவிட்டார்.
அவரைச் சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் நிராயுதபாணியாக இருந்தமையால் பயந்து ஓடி
விட்டனர். பின்னர் பீமனும், அர்ஜுனனும் அவரை
இழுத்துக் கொண்டு போய்க் கட்டி துரோணரிடம் இழுத்துச் சென்றனர். என் தந்தை,
இந்த ஆர்ய வர்த்தத்தின் ஒரு பகுதியான
பாஞ்சாலத்தின் மாட்சிமை பொருந்திய மன்னர் ஒரு
திருடனைப் போல இழுத்துச் செல்லப்பட்டார்.” பேச்சை நிறுத்திய திரெளபதிக்கு மேல் மூச்சு
வாங்கியது. அவள் கண்களில் இருந்து அக்கினி
ஜ்வாலை கிளம்பியது. அவள் குரோதத்தின் உச்சியில்
இருப்பதை அவள் முகம் காட்டியது.
அவள்
மேலே தொடரட்டும் எனக் கிருஷ்ணன் காத்திருந்தான்.
“அர்ஜுனனோ,
பீமனோ சரியான போர் வீரர்களைப் போல நேருக்கு நேர் யுத்தம் புரிந்திருந்தால் என் தந்தை
அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டிருக்கவே மாட்டார். யுத்தம் மன்னர்களுக்குள்ளே நடைபெறுவது சகஜம் தானே! ஆனால் துரோணரோ அவ்விதம் யுத்தம் புரிய அனுமதிக்கவில்லை. அவர் என் தந்தையை சற்றும் எதிர்பாராவிதத்தில் ஜெயிக்கவே
விரும்பினார். அதுவும் அவருடைய சீடர்களுக்கும்,
அவருடைய அஸ்தினாபுரத்து மக்களுக்கும் தெரியும்படி ஜெயிக்க விரும்பினார். அவருடைய மாணாக்கர்களுக்கு எதிரே என் தந்தையை அவமானப்படுத்தி,
அவரைக் கேவலமாக நடத்தித் தனக்கெதிரே மண்டி போட வைக்கவும் விரும்பினார். அவர் விரும்பியதை நடத்திக் கொண்டார். ஹூம், அதே போல் நடத்தினார். என் தந்தை மன்னிப்புக் கேட்டுக் கொண்டதற்குப் பின்னரே
விடுதலை செய்யப் பட்டார். என் தந்தை அளித்த
வாக்குறுதிப்படி நடக்காததற்கும், அதை உடைத்ததற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு
அல்லாமல் எங்கள் நாட்டின் ஒரு பகுதியையும் துரோணருக்குக் கொடுக்க வேண்டி வந்தது. அப்படியும் அவருக்குத் திருப்தி இல்லை. எங்கள் நாட்டைப் பறித்துக் கொண்டதோடு அல்லாமல்,
எங்கள் மக்களைக் கொள்ளை அடித்தார்; அவர்களை சொந்த நாட்டை, வீட்டை விட்டு விரட்டி அடித்தார். பசியுடனும், துக்கத்துடனும், ஆதரவு காட்ட மனிதர்கள்
இல்லாமல் அவர்களைத் துரத்தி அடித்தார்.”
திரெளபதி
கண்ணனுக்கு நடந்தவற்றைச் சொல்லுவதாக ஆரம்பித்திருந்தாலும், அவள் தனக்குத் தானே அந்த
நிகழ்வுகளை மீண்டும் தன்னுள் காண ஆரம்பித்திருந்தாள் என்று தெரிய வந்தது. அதிலும் அந்த நிமிஷம் அவள் அந்த நிகழ்ச்சியை, அவள்
தந்தையின் அவமானத்தை நேருக்கு நேரே கண்டு கொண்டிருந்தாள் என்பதையும் உணர முடிந்தது. அந்த நிகழ்வுகளின் காலத்துக்குச் சென்று மீண்டும்
வாழ ஆரம்பித்த அவள் குரல் கோபத்திலும், குரோதத்திலும் நடுங்க ஆரம்பித்தது. அவள் கண்களில் தெரிந்த ஒளி ஒரு தீப்பிழம்பைப் போல்
காணப்பட்டதெனில் அவள் முகமே அக்னியால் சூழ்ந்தது போல் சிவந்து இருந்தது.
திடீரெனத் தன்னைச் சமாளித்துக் கொண்ட திரெளபதி பேச்சை நிறுத்தினாள்.
7 comments:
முக மாற்றம் இங்கே தெரிகிறது... தொடரட்டும்...
திரௌபதியின் நியாயமான கோபத்துக்காகன கண்ணனின் பதிலுக்கு வெய்ட்டிங்.
பின்புலம் இங்கே வருகிறதா?
திரௌபதியின் சீற்றத்தை நேரில் பார்ப்பது போல் எழுதியிருக்கிறீர்கள்.
பின்னே எப்படி இவர்களை மணக்கச் சம்மதித்தாள்? சுவாரசியமான மர்மம்.
வாங்க டிடி.
வாங்க ஸ்ரீராம், நன்றி.
அப்பாதுரை, திரெளபதியின் சுயம்வரப் பகுதி வர குறைந்தது 2 மாதங்களாவது ஆகும். :))))))
அவசரமில்லே. அருமையா வந்திட்டிருக்கு.
Post a Comment