Thursday, August 1, 2013

பீமனின் சாகசங்களும், உத்தவனின் நடுக்கமும்!--தொடர்ச்சி!

“எங்களிடம் குண்டாந்தடிகளைத் தவிர வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லை. என்ன செய்வது எனப் புரியவில்லை.  எங்கள் தாய் குந்தியை நடுவில் விட்டு இருபக்கமும் சகோதரர்கள் நால்வரையும் சூழ்ந்து கொள்ளச்சொன்னேன். அவர்களைப் பின்னே விட்டு முன்னே மறைத்த வண்ணம் நான் நின்று கொண்டேன்.  தாயை சகோதரர்களைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சில அடிகள் முன்னெடுத்து வைத்தேன். அங்கே ஹிடும்பன் இருந்தான். பயங்கரமான ராக்ஷசன் அவன். அவனால் இயன்ற அளவுக்குப் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.  கர்ஜித்தான். அதைக் கண்ட நான் சிறிதும் அஞ்சாமல் நானும் திரும்பக் கர்ஜித்தேன்.  அவனுக்கு என் குரலாலேயே பதிலடி கொடுத்தேன்.  அதைக் கண்ட என் தாய் குந்தி மயங்கி விழ, பாவம் சஹாதேவன் அவனுக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி அவளை மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றான்.  இப்போது ஹிடும்பனோடு அவன் கூட்டத்தினரும் சேர்ந்து கர்ஜித்தனர்.  பெரிய இடி முழக்கம் போல் கேட்டது அது.  அதைக் கேட்ட நான் கர்ஜித்த கர்ஜனையில் அந்தக் காடே அதிர்ந்தது.  உத்தவா, நான் இப்படி எல்லாம் கர்ஜிப்பேன் என நானே நினைக்கவில்லை.  நீ நேரில் பார்க்கவில்லையே அந்தக் காட்சியை!  காட்டு மிருகங்கள் கூடக் குறிப்பாகக் காட்டின் ராஜாவான சிங்கமே நடுங்கியது அந்தக் கர்ஜனையால்.” இதைச் சொல்கையில் பீமனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வளவு அவ்வளவு அல்ல. உத்தவனைப் பார்த்து மகிழ்வோடு சிரித்தான்.

“நான் தான் காலையில் கேட்டேனே உன் கர்ஜனையை!  அது கொடுக்காத அச்சமா?  அப்போதே நான் மயங்கியும் விழுந்திருப்பேன். என்னவோ சமாளித்துக் கொண்டேன்.  அது போகட்டும்! பின்னர் என்ன நடந்தது?  எப்படித் தப்பினீர்கள் இந்த ராக்ஷசர்களிடமிருந்து?” உத்தவன் மீண்டும் கேட்டான்.  பீமன் தொடர்ந்தான். “அவர்கள் மீண்டும் மீண்டும் ஊளையிட்டனர்.  நான் திரும்பத் திரும்ப கர்ஜித்தேன்.  அவர்களும் நிறுத்தவில்லை;  நானும் நிறுத்தவில்லை.  அவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.  இப்படி ஒருவனை அவர்கள் அன்று வரை சந்தித்ததில்லை.  ஆகவே என்னருகே நெருங்கவும் அச்சமாக இருந்தது அவர்களுக்கு.  ஆனாலும் சமாளித்துக் கொண்ட ஹிடும்பன், கூரிய கல்முனை கொண்ட தன் ஈட்டியை என் மேல் தாக்கக் குறி பார்த்தான்.  ஈட்டியால் தாக்கியும் விட்டான்.  ஆனால் நான் ஒரு பெருங்குதி குதித்து அதிலிருந்து தப்பினேன். பெருங்கூச்சலுடன் கர்ஜித்துக் கொண்டே ஹிடும்பனை நோக்கிப் பாய்ந்தேன். அதை மிக வேகமாகச் செய்தேன்.  அதனால் சாதாரணமாக அனைவரையும் பயமுறுத்தும் அந்த ராக்ஷசர்கள் தாங்களே பயந்து போனார்கள்.  பயத்தில் சில அடிகள் பின்னே சென்றார்கள்.” பீமனின் கண்கள் சந்தோஷத்தில் ஒரு நாட்டியமே ஆடின.  “ஆஹா, நீயா இதைச் செய்தது?  எப்படி நீ இவ்வளவு பயமுறுத்துபவனாக மாறினாய்?  சாதாரணமாக நீ மிகவும் கருணையுள்ளவனாக இருப்பாயே!” என உத்தவன் கேட்டான்.

“ஆஹா, உத்தவா, உன் சகோதரனை நீ இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.  உனக்கு எவரையானும் பயமுறுத்த வேண்டுமெனில் என்னிடம் விட்டு விடு.  இதைக் கேள், அந்த ராக்ஷசர்கள் பின் வாங்கியதும், அதை, அந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்.  ஒரு பெரிய பாறை, கிட்டத்தட்டப் பத்து நபர்கள் ஒன்று சேர்ந்து முயன்றால் தான் தூக்க முடியும்.  அப்படிப்பட்ட பாறை ஒன்று என் முன்னர் கிடந்தது. நான் என் பலத்தை எல்லாம் பிரயோகித்து அந்தப் பாறையைத் தூக்கி, ஹிடும்பனைத் தாக்கினேன்.  அவ்வளவு பெரிய பாறையால் தாக்கப்பட்ட ஹிடும்பனின் மண்டை உடைந்தது.  மிகவும் பயத்தோடு கூடிய கேட்பவர் மெய் சிலிர்க்கக் கூடிய ஒரு கத்தலோடு அவன் கீழே விழ, ராக்ஷசர்கள் அனைவரும் பயந்து கூக்குரலிட்டுக் கொண்டு அவர்களும் கீழே விழுந்துவிட்டனர்.  ஹிடும்பன் ராக்ஷசர்களிலேயே மிகவும் வலிமை வாய்ந்தவன்.  உயரமாகவும் இருந்தான்.  ஆனாலும் பார் உத்தவா, அவன் என் தோள்களுக்குக் கீழ் தான் வருவான்.  அவனை அடக்க இதை விட வேறு வழி எனக்குத் தெரியவில்லை.  நல்லவேளையாக உன்னைக் காப்பாற்ற என்னைப் போன்றதொரு சகோதரன் உனக்குக் கிடைத்தானே, உன் நல்ல நேரம் அது!” மீண்டும் ஹாஹாஹாவெனக் குரலெடுத்துச் சிரித்தான் பீமன்.

உத்தவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே மேலும் அவன், “ அந்த ராக்ஷசர்கள் பயத்தில் ஓட்டமாக ஓடி விட்டனர். அப்படியும் ஒருத்தனைக் கால்களைப் பிடித்து நிறுத்தி விட்டேன்.  அவனை அப்படியே தூக்கிச் சுழற்றி ஒரு மரத்தில் ஓங்கி அடித்துவிட்டேன். ஓடிய சிலர் நின்று அங்கே நடப்பதைக் கவனித்தார்கள்.  பின்னர் நடந்தது தான் அதிசயம், ஆச்சரியம்! கேள் உத்தவா, அவர்களிடம் ஒரு பெரிய மாறுதல் சில கணங்களிலேயே ஏற்பட்டது.  ஹிடும்பனை அவர்கள் அனைவரும் ஏதோ மந்திரவாதி,  மந்திர, தந்திரங்களில் தேர்ந்த பலசாலி என்றே எண்ணி வந்தனர்.  அவன் வலிமை அவர்களுக்குள் ஒரு பயத்தையும், அதன் மூலம் மரியாதையையும் ஏற்படுத்தி இருந்தது.  ஆனால் இப்போதோ, அவனே கொல்லப்பட்டு விட்டான்.  இது அவர்களுக்கு ஆச்சரியத்தை மட்டுமில்லாமல் என் மேல் மிகுந்த பயம் கலந்த மரியாதையையும் ஏற்படுத்தியது.  அவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர்.  தங்கள் ஆயுதங்களை பூமியில் எறிந்துவிட்டுக் கீழே விழுந்து என்னை வணங்கினார்கள்.  “ பீமனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  தன் வெற்றியைக் குறித்த பெருமிதமும் அவன் குரலில் தெரிந்தது.

“எப்படி அது நடந்தது?” உத்தவனுக்குள் ஆச்சரியம் மிகுந்தது.

“இந்த ராக்ஷசர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது.  அவர்களின் முன்னோரான விரோசனனின் முழு பலத்தையும் அவர்களின் தலைவன் வழி வழியாகப் பெற்றுக் கொண்டு வருகிறான் என பரிபூரணமாக நம்புகின்றனர். அவனை எவராலும் வெல்ல முடியாது எனவும் நம்புகின்றனர்ர்.  ஆனால் எப்போது அவனால் எதிரிகளை எதிர்க்க முடியாமல் தோற்கிறானோ, அப்போது அவர்களுக்கு அவனிடம் நம்பிக்கை பிறப்பதில்லை.  நம்பிக்கையை அந்தத் தலைவன் இழந்துவிடுகிறான்.  இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கேட்டிருக்கிறேன்.  அதாவது ஒரு தலைவனின் பலம் போய்விட்டதெனில் அவனை இவர்கள்  நீ கூறினாயே இரண்டு கைதிகளை உயிரோடு வறுத்துச் சாப்பிட்டார்கள் என.  அவ்வாறே தங்கள் பலம் குறைந்த தலைவனையும், வறுத்துவிடுகின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தத் தலைவன் உடலைப் பங்கிட்டு உண்கின்றனர்.  இதன் மூலம் அந்தத் தலைவனின் பலம் முழுவதும் அவர்களில் எவனாவது ஒருவனுக்கு வரும் என்றும் நம்புகின்றனர்.  ஆகவே இப்போது ஹிடும்பனை விட நான் பலசாலி, வலிமை மிகுந்தவன் என்பது நிரூபணம் ஆனவுடன் அவர்களின் மொத்த விசுவாசமும் என்மேல் திரும்பிவிட்டது. எவராலும் வெல்ல முடியாத அவர்கள் தலைவனை நான் வென்றதும் என் மேல் அவர்கள் நம்பிக்கையும் விசுவாசமும் திரும்பிவிட்டது.  நான் எவராலும் வெல்ல முடியாதவன் ஆகிவிட்டேன்.” என்று கூறிய பீமன் மீண்டும் சிரித்தான்.

“நீ என்ன செய்தாய் அவர்களை?”  உத்தவன் கேட்டான்.

“ஹா, ஹா, அதைக் கேட்கிறாயா?  நான் அவர்களிடம் சென்று சிலரை நன்கு உதைத்துத் தள்ளினேன்.  பின்னர் அவர்களின் ஆயுதங்களைச் சேகரித்து என் சகோதரர்களிடம் விநியோகம் செய்தேன்.  பின்னர் அவர்களை எல்லாம் கயிற்றால் பிணைத்து, ஹிடும்பனின் வாசஸ்தலத்திற்கு, என்னை அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டேன். “

“உண்மையாகவா?  அவர்கள் அனைவருமே உனக்குக் கீழ்ப்படிந்தனரா?” உத்தவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஒரே ஒரு ராக்ஷசன் மட்டுமே ஏதோ தந்திரம் செய்ய நினைத்தான்.  நான் அதனைக் கண்டுகொண்டு அவனை அப்படியே மேலே தூக்கிச் சுழற்றித் தரையில் ஓங்கி அடித்தேன்.  அவ்வளவு தான்.  அவன் உயிர் பிரிந்தது. “ அந்நிகழ்வை இப்போது எண்ணிச் சிரிப்பது போல் இருந்தது பீமனைப் பார்க்கையில்.  “பின்னர் வேறு எவருமே என்னிடம் அவர்கள் தந்திரத்தைக் காட்டவில்லை. உனக்குத் தெரியுமா, உத்தவா?  நான் தேவைப்படும்போது எவ்வளவு பயங்கரமானவனாக ஆகிறேன் என?” பொய்யானதொரு பயங்கரத்தைக் காட்டிய வண்ணம் உத்தவனைப் பார்த்துச் சிரித்த பீமன் மேலும் தொடர்ந்தான்.” என் மூத்த சகோதரன், யுதிஷ்டிரனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை.  அவர் என் நடத்தையால் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.  மிருகத்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் சுட்டிக்காட்டி என்னை மிகவும் கண்டித்து விட்டார்.  ஹா, ஹா, நான் மட்டும் அப்படி மிருகத்தனமாக நடக்காவிட்டால், இதைச் சொல்லிக் கண்டிக்க அவர் உயிருடன் இருந்திருக்கவே மாட்டார்;  அதை நினைத்துப் பார்க்கவில்லை, பார் உத்தவா!  மறந்து விட்டார் அதை!” பீமனால் சிரிப்பை மீண்டும் மீண்டும் அடக்க இயலவில்லை.

“இறந்து போன ஹிடும்பனின் கதி என்ன ஆயிற்று!” உத்தவன் கேட்டான்.  “ஓ, அவன் உடலை நான்கு ராக்ஷசர்கள் தூக்கிக் கொண்டு வந்தனர். நாங்கள் அவன் குடியிருப்புக்கு அந்த உடலைத் தூக்கிச் சென்றோம்.” என்றான் பீமன்.

“ஓஹோ, அப்படியா? ஹிடும்பனின் குடியிருப்புக்கு நீ சென்றாயா?” எனக் கேட்டான் உத்தவன். “ஆம், சென்றோம்.  அந்த ஊர்வலத்திற்கு நான் தான் தலைமை தாங்கினேன்.  நான் முன்னே சென்றேன்.  வழியெங்கும் என்னுடைய கர்ஜனையை நிறுத்தவில்லை.  நாங்கள் அங்கே சென்றதும் எங்களுடன் வந்த ராக்ஷசர்கள் ஹிடும்பன் இறந்துவிட்டான் என்ற துக்கச் செய்தியை அங்கே பரப்பினார்கள்.  அனைவருக்கும் துக்கம் ஏற்பட்டது. மொத்த கிராமத்து ராக்ஷசர்களும் துக்கம் அநுஷ்டித்தனர்.  அவர்கள் அனைவரும் இப்படித் துருத்திய பற்களோடும், உதடுகளில் பொருத்தப்பட்ட வண்ண மரச்சில்லுகளோடும் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது.  அப்போது தான் வந்தாள் ஹிடும்பி.  ஹிடும்பனின் சகோதரியாம் அவள்.  அவளும் ஒரு ராக்ஷசிதான்.  உடல் முழுவதும் வண்ணம் அடித்துக் கொண்டு, தலையில் பின்னப்பட்ட சிறு சிறு பின்னல்களும், அதில் கட்டப்பட்டிருந்த கயிறுகளோடும், எலும்புகளால் ஆன மாலையையும் தரித்துக் கொண்டு வந்தாள். அவள் இதயமே உடைந்து நொறுங்கி விட்டது போல் தன் சகோதரன் ஹிடும்பனைப் பார்த்து அவள் அழுத அழுகை இருக்கிறதே! “ பீமன் சற்று நிறுத்தினான்.




4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பீமன் உத்தவனுக்குச் சொல்லும் எல்லாக் கதைகளும் சுவாரஸ்யமாக உள்ளன.

பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

தொடருங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பீமனின் சாகசங்கள் பயங்கரமானவை..!

ஸ்ரீராம். said...

பீமன் நகைச்சுவை கலந்து தன்னுடைய சாகசத்தை மிகச் சாதாரண சம்பவம் போல விவரிப்பது சுவாரசியம்!

திண்டுக்கல் தனபாலன் said...

நானும் நிறுத்திக் கொள்கிறேன் ஆவலுடன்... ஹிஹி... தொடர்கிறேன்...