Friday, August 9, 2013

கண்ணன் துவாரகைக்கு அழைக்கிறான்!

பீமன் தன் சகோதரர்களையும், தாயையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயன்றான்.  அவர்களுக்கு எந்தவிதமான மனக்குறைகளும் நேராதபடிக்கு கவனம் எடுத்துக் கொண்டான்.  ராக்ஷசர்களால் தன் குடும்பத்தினருக்கு எவ்விதத் தீங்கும் நேரிடக் கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்புக் காட்டினான்.  அதே சமயம் ஹிடும்பிக்கு ஒரு நல்ல கணவனாகவும் இருந்தான்.  அவளையும் மகிழ்வித்தான்.  நன்கு உணவு எடுத்துக்கொண்டான்.  தன் ராக்ஷசக் குடிகளிடம் தேவையான நேரத்தில் தேவையான அதிகாரத்தைக் காட்டினான்.  அந்த இனத்தவரையே அடக்கி ஆண்டான் என்றாலும் பொருந்தும்.  அவர்களை நிறைய வெளியிடங்களுக்குப் பயணப்பட வைத்து அவர்களின் விளையாட்டுக்களில் பங்கேற்று கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகத்தைப் புகட்ட முனைந்தான்.  இனம், மொழி, கலாசாரம் கடந்ததொரு மனோபாவத்துடன் பல அரிய செயல்களைச் செய்தான் எனலாம். எந்தவிதமான வேறுபாட்டையும் அவனால் காட்ட இயலவில்லை.  ஆனால் தன் சகோதரர்களுக்கும், தாய்க்கும் இந்த ராக்ஷசர்கள் எங்கோ அயல் தேசத்திலிருந்து வந்த புதியதொரு இனத்தவர் என்ற எண்ணம் இருப்பதையும், அதே எண்ணம் ராக்ஷசர்களுக்கும் தன் குடும்பத்தினரிடம் இருப்பதையும் பீமன் நன்கு அறிந்து வைத்திருந்தான்.

ஆனால் தன் சகோதரர்களிடமும், தாயிடமும் அவன் காட்டிய பெரும் ஆர்வம் மிகுந்த பாசமும், அன்பும் மட்டுமில்லாது குந்தியிடமும், யுதிஷ்டிரனிடமும் அவன் காட்டிய மரியாதையும், பணிவும் விநயமும் ராக்ஷசர்களை ஆச்சரியப் பட வைத்தது.  அதோடு அல்லாமல் பீமனின் சகோதரர்களையும், தாயையும் வேறு வழியில்லாமல் ராக்ஷசர்களும் மிக்க மரியாதையுடனும், பணிவுடனும், கெளரவமாகவும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளானார்கள்.  அன்றிரவு அர்ஜுனனுடன் படுத்துக் கொண்ட உத்தவன் ஒரு மரக்கட்டையைப் போல் தூங்கினான்.  அவன் விழித்து எழுந்த போது சூரியனின் ரச்மி அந்தக் குடிசையைச் சுட்டெரிக்க ஆரம்பித்திருந்தது.  அர்ஜுனனை அங்கே காணவில்லை.  அவன் ஏற்கெனவே எழுந்து கீழே இறங்கிப் போயிருக்கக் கூடும் என நினைத்த உத்தவன் தானும் கீழே இறங்க நூலேணியைத் தேடினான்.  கீழே இறங்கிய அவன் தன் அத்தை மகன் தனக்காக அங்கே காத்திருப்பதையும் கண்டான்.  “சகோதரா, உத்தவா, வா என்னுடன்.  இந்த நதியில் நீராடி உன் காலைக்கடன்களை விரைவில் முடித்துக்கொள்வாய்!  நீ எங்களுக்காகக் கொண்டு வந்திருக்கும் செய்திகளைக் கேட்க நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்.”

உத்தவன் நதிக்குக் குளிக்கச் செல்கையில் அவன் சென்ற கரைக்குச் சற்று தூரத்தில் காணப்பட்ட வேறொரு படித்துறையில் சில ராக்ஷசப் பெண்களோடு ஹிடும்பியும் குளித்துக் கொண்டிருந்ததைக்கண்டான்.  அவள் தலையைக் கட்டியிருந்த கயிறுகளின் பிணைப்புகள் நீக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் முகத்தில் பூசியிருந்த வண்ணக் கலவையும் முழுதும் நீரால் கழுவப் பட்டு முகத்தின் உண்மையான தோற்றம் தெரிந்தது.  அவளுடைய இந்தப் புதிய தோற்றத்தில் அவள் ஒரு பெண் என்பதற்கான வளைவு, நெளிவுகளை மறைக்க இயலவில்லை அவளால் என்பதையும், என்னதான் அவள் ஒரு கம்பீரமான தோற்றமுள்ளவளாக இருந்தாலும் பெண்மை ஆங்காங்கே தலை காட்டியதையும், அத்தனையையும் மீறி அவள் ஒரு பெண் சிங்கம் போலவே காட்சி அளித்தாள் என்பதையும் உத்தவன் கண்டான்.  ஆஹா, இவள் பீமனுக்குத் தக்கதொரு மனைவியே.  அதனால் தான் பீமனும் இவளைத் தயங்காமல் மணந்திருக்கிறான்.  உத்தவனுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நதியில் குளித்துத் தன் காலை அநுஷ்டானத்தையும் முடித்த உத்தவன், திரும்பி வந்து குந்தியுடன் தனக்காகக் காத்துக் கொண்டிருந்த ஐந்து சகோதரர்களையும் அடைந்தான்.  அனைவரும் பேசிக் கொண்டே அந்தக் குடியிருப்பிலிருந்து சற்றுத் தள்ளிக் காணப்பட்ட ஒரு சிறு குன்றை அடைந்தனர்.  உத்தவனைக் காத்து அழைத்து வந்த நிகும்பனைக் கூப்பிட்டு பீமன் தங்களுக்குக் காவல் இருக்கச் செய்தான்.  எவரேனும் வருவது தெரிந்தால் தன்னை அழைக்கும்படியும் உத்தரவு கொடுத்தான்.  மரங்களின் நிழலில் அவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.  பீமன் மட்டும் தனியாகப்போய் அங்கிருந்த புல்வெளியில் ஒருக்களித்துப் படுத்த வண்ணம் உத்தவனின் கதையைக் கேட்கத் தயாரானான்.  அவன் மூளை வெகுவேகமாகச் செயல்படுகிறதோ என்னும் வண்ணம் அந்தப் பேச்சுக்களையும் கேட்ட பீமன் அவ்வப்போது தனக்குள் சிரித்துக் கொண்டான்.  அவன் மனதில் ஏதேனும் வேடிக்கையான எண்ணங்கள் உதயம் ஆகி இருக்கலாமோ என்னமோ!  அப்போது தன் மெல்லிய குரலில் யுதிஷ்டிரன் உத்தவனைப் பார்த்து, “உத்தவா, நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதிற்குப் பின்னர் நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகக் கூறுவாய்!” என்று கேட்டான்.

“ஆனால், அதன் முன்னர், கிருஷ்ணன் எப்படி இருக்கிறான் என்பதைச் சொல்லிவிடு உத்தவா!” அத்தை குந்திக்குத் தன் மருமகனைக் குறித்த கவலை.  “அதோடு தாத்தா பீஷ்மர் எப்படி இருக்கிறார் என்பதையும் சொல்!  ஆ, மறந்துவிட்டேனே, என் அருமை மைத்துனர் விதுரர், மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ராணி அம்மா சத்யவதி, இன்னும், இன்னும் என் மூத்தாரான திருதராஷ்டிரர், அவர் மனைவி!.... எல்லோரையும் குறித்துச் சொல் உத்தவா!  அனைவரும் நலம்தானே?”

“ஆமாம், ஆமாம், முதலில் நீ பெரியப்பா திருதராஷ்டிரர், அவர் மனைவி காந்தாரி, சகோதரர் சகுனிமாமா, அவர்கள் புத்திரர்கள் நூற்றுவர் அனைவர் குறித்தும் அம்மாவிடம் சொல்லிவிடு அப்பா!  அம்மாவுக்கு அவரின் அன்பான மைத்துனர் குறித்தும் அவர் குடும்பம் குறித்தும் அவர்கள் நலன் குறித்தும் அதிகக் கவலை!  இன்னும் சொல்லப் போனால் நம் அனைவரின் பாதுகாப்பையும் நலனையும் விட அம்மா அவர்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் தான் கவலைப்படுகிறார்!”  பீமன் கேலிக்குரலில் சிரித்துக் கொண்டே கூறினான்.

‘என் குழந்தாய்!  உன் எதிரிக்குக் கூடக் கேடு எண்ணாதே!’ மிகக் கடுமையான குரலில் கொஞ்சம் அதட்டலாகவே குந்தி பீமனிடம் சொன்னாள்.  மேலும் தொடர்ந்து, “யாருக்குத் தெரியும்!  என்றாவது ஒரு நாள் எல்லாம் வல்ல மஹாதேவன் கிருபையால் அவர்கள் அனைவரின் கல்லைப் போன்ற மனதிலும் ஈரம் கசியலாம்!” என்றாள் குந்தி!

“ஹூம், ஆனால் நானோ அவர்கள் அனைவரும் செத்துப் போக வேண்டும் என்றே எண்ணுகிறேன்.” பதிலடி கொடுத்த பீமன் அதே சமயம் யுதிஷ்டிரனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்.  அவன் தன் தாயைக் கேலி செய்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது.  அவனைப் பார்த்துச் சற்றே தயையுடன் சிரித்த யுதிஷ்டிரன், “ நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டு உத்தவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிரு பீமா! உத்தவனிடமிருந்து எல்லாவற்றையும் நாம் கேட்போம்.  அப்போது அவனே நம் பெரியவர்கள் எப்படி இருக்கின்றனர், என்ன செய்கின்றனர் என்ற செய்தியையும் சேர்த்தே சொல்லி வருவான்.” என்றான்.   உத்தவனுக்கு அவர்கள் ஒருவரிடம் ஒருவர் கொண்டிருந்த பாசமும், அன்பும் வலை போல் பின்னிக் கொண்டு அனைவரையும் அந்த வலை ஒன்றாகப் பிணைத்திருப்பதும் கண்கூடாகத் தெரிந்தது.  ஒரு அன்பான, அனைவரையும் ஆதரவு காட்டி அரவணைத்துச் செல்லும் தாய்! உண்மையுள்ள, கடமை தவறாத அதே சமயம் மிகப் பெருந்தன்மையானதொரு அண்ணன் யுதிஷ்டிரன், அடுத்துபீமன், ஒரு விளையாட்டு வம்புக்காரப் பையன், அவனுக்கு இவ்வளவு வயது ஆனதிற்குக் குழந்தை போல் இருக்கிறான்.  இப்போதும் இந்தப் புல்வெளியில் படுத்துக் கொண்டு சோம்பல் முறித்துக் கொண்டு ஆனந்தமாகக் காணப்படுகிறான்.  அடுத்து அர்ஜுனன், அமர்ந்திருப்பதே நேராக ஒரு வளையாத கம்பி போல் காணப்படுகிறது.  அசையாமல் அப்படியே அமர்ந்திருக்கும் அவனுடைய புத்திசாலிக் கண்கள் மட்டும் பேசுபவர்கள் அனைவரிடமும் ஒருவர் மாற்றி ஒருவர் படிந்து மீண்டு வருகின்றன.  நகுலன் அடுத்து அமர்ந்து கொண்டு குந்திக்கு என்ன தேவை என்பதைக் கவனித்து நிறைவேற்றத் தயார் நிலையில் காணப்படுகிறான்.  சஹாதேவன் இவர்கள் அனைவரிடம் இருந்தும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு, தரையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.  அவன் கண்கள் நிலை குத்தி பூமியைப் பார்த்த வண்ணம் இருந்தாலும், அவன் கவனம் அனைத்துமே ஒருமித்து அந்தப் பேச்சில் இருக்கிறது என்பதும், அவன் எந்தவிதமான உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பதையும் பார்த்த உத்தவன் இவனை எவராலும் அசைக்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டான். அதே போல் அர்ஜுனனைப் பார்த்ததுமே அவனின் ஆண்மை நிரம்பிய கம்பீரமான தோற்றமும், எப்போதுமே கவனமாகத் தயார்நிலையில் இருப்பதும், அவன் புத்திசாலித்தனமும் உத்தவனைக் கவர்ந்தது.

உத்தவன் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொன்னான்.  நடந்தவைகளை அப்படியே விவரித்தான்.  கிருஷ்ணனைக் குறித்தும் தான் அறிந்தவரை கூறினான்.  சத்யவதியைக் கிருஷ்ணன் சென்று பார்த்ததையும், ஐந்து சகோதரர்களின் பாதுகாப்புக் குறித்து சத்யவதி பட்ட கவலையைக் குறித்துக் கிருஷ்ணன் அறிந்து கொண்டதையும் தெரிவித்தான்.  ஆசாரியர் வியாசரைச் சந்திக்கக்கிருஷ்ணன் சென்றதையும் கூறினான்.  அவன் இந்த ராக்ஷசர்களின் உலகுக்கு வர நேர்ந்ததையும் விவரித்தான்.  அவனை எப்படியானும் வறுத்துத் தின்ன வேண்டுமென ராக்ஷசர்கள் செய்த முயற்சிகளை எல்லாம் விவரித்தான்.  பீமன் மட்டும் சரியான நேரத்துக்கு அங்கே வந்திருக்காவிட்டால் மரத்தின் மேலே இருந்து தான் கீழே இறங்கி வந்து அவர்கள் கைகளில் மாட்டிக் கொண்டு வறுத்துத் தின்னப்பட்டிருப்பான் என்பதையும் கூறினான்.  கிருஷ்ணன் விரைவில் காம்பில்யத்திலிருந்து நாககூடம் வரப்போவதையும் சொல்லி முடித்தான்.  யாதவத் தலைவர்கள் ஹஸ்தினாபுரத்தில் இருப்பவர்களும் விரைவில் இங்கே வருவார்கள்.   கிருஷ்ணன் அனைவருமே சேர்ந்து துவாரகைக்குச் சென்றுவிட வேண்டும் என விரும்புகிறான் என்பதை உத்தவன் தெரிவித்தான்.  அவர்கள் அனைவரும் இந்த நரகத்திலிருந்து தப்பி துவாரகைக்கு வந்துவிட வேண்டும் என்பதே கிருஷ்ணனின் விருப்பம் என்றும் கூறினான்.


6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய கதையை மிகவும் ரஸித்துப்படித்தேன்.

குஷ்புவின் குளியல் ரூமுக்குள் பாம்பு நுழைந்து விட்டதாகக் கூறியதும், பாம்பைப்பிடிக்கப் போகும் ரஜினி, எதிர்பாராம்ல் குஷ்புவை பிறந்த மேனியாகப்பார்த்ததும் ”கடவுளே ..... கடவுளே” ன்னு ஒவ்வொருவரிடமும் அப்பாவியாக அந்தக்காட்சியை வர்ணிக்க ஆரம்பித்து விடுவார்.

அதே போல் நானும் இப்போது ”கடவுளே கடவுளே’ன்னு சொல்லி வருகிறேன்.

உத்தவனோடு சேர்ந்து தங்களின் எழுத்துக்கள் மூலம் நானும் ஹிடும்பி குளிப்பதையும், பெண்களுக்கே உரித்தான வளைவு, நெளிவு, சுளிவுகளுடன் பர்க்க நேர்ந்து விட்டதே, கடவுளே ... கடவுளே....

;)))))

இராஜராஜேஸ்வரி said...

இனம், மொழி, கலாசாரம் கடந்ததொரு மனோபாவத்துடன் பல அரிய செயல்களைச் செய்தான் எனலாம்.

பீமனின் பராக்ரமம் ...!

ஸ்ரீராம். said...

உத்தவன் பார்வையில் குந்தி மற்றும் 5 சகோதரர்கள் வர்ணனை - சாண்டில்யன் எழுத்தைப் படிப்பது போல இருந்தது.

sambasivam6geetha said...

வாங்க வைகோ சர், உங்கள் ரசனைக்கு நன்றி. நீங்க சொல்லும் படமெல்லாம் பார்த்தது இல்லை. :))) அதனால் அதைப் பத்தித் தெரியாது. இப்போ ஒரு மலையாள டப்பிங் படம் பார்த்துட்டு இருக்கேன். நல்லா இருக்கு. ஆனால் ஜெயராமனைத் தவிர மத்தவங்க யார்னு தெரியலை! :))))

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, உண்மைதான்.

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், சாண்டில்யனோடு எல்லாம் ஒப்பிடுவது 4 மச்சாக இல்லையோ? :))))