“ஓ,
அது ஒன்றும் பெரிய விஷயமில்லை தாயே! ஒரு தாய்
தன் குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைத்துப் பிரிய மறுத்தால், தன் கடமைக்காகத் தந்தை மகனைப்
பிரிந்து தான் வரவேண்டும். வேறு வழியில்லை. ஐவரின் வெற்றியும் தர்மத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதையும்
நினைவில் கொள்ளுங்கள் தாயே! அந்த இளம் குழந்தைக்குத்
தற்போது அவன் தாயுடன் இருப்பதே நன்மை பயக்கக் கூடியதாக இருக்கலாம். உங்கள் மகனைப் போல
அவன் தன் தந்தையுடன் செல்ல மறுக்கலாம்.” வியாசரால் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச்
சிரித்தார். அவருள் பழைய நினைவுகள் ஓடின. அவர் குழந்தையாக இருந்தபோது அவர் தாயான சத்யவதி
எவ்வாறு தன்னைப் பிரிந்தாள் என்பதைப் பராசரர் பல முறை அவருக்குச் சொல்லி இருக்கிறார்.
அவை நினைவில் வந்தன.
“ஓ,
நான் அதன் மூலம் சரியான ஒன்றைத் தானே தேர்ந்தெடுத்தேன். ஆனால் இந்த ராக்ஷசி தவறு செய்கிறாள்.” என்ற சத்யவதிக்கு
வேறு வழியில்லாமல் தன் இளங்குழந்தையைத் தந்தையான பராசரரிடம் ஒப்படைத்த அந்த நிகழ்வு,
இன்றளவும் அவள் மனதை வருந்தச் செய்யும் நிகழ்வு கண் முன்னே தோன்றியது. “ஒரு குழந்தை சரியானபடி வளர்க்கப்பட, பரம்பரையின்
நியமங்களைப் பின்பற்ற அவை நன்கறிந்த தகப்பனிடமே வளர வேண்டும். அந்தக் குழந்தையால் தான் குடும்பப் பாரம்பரியங்கள்
போற்றிப் பாதுகாக்கப்படும். நான் உன் தந்தையிடமிருந்து
உன்னைக் கவர்ந்து செல்ல ஒருபோதும் நினைக்கவே இல்லை.”……….
“ஓஹோ,
நீ ஒரு ராக்ஷசி அல்லவே தாயே! நீ ஒரு ராக்ஷசியாக
இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்கலாமோ என்னமோ!” என்ற வியாசர் மீண்டும் நினைத்துக்
கொண்டு சிரித்தார். “ஒரு ராக்ஷசியால் தன் கணவனையும்
துறக்கலாம்; துறக்க முடியும்; குழந்தையையும் விழுங்க முடியும்.”
“ஓ,
அப்படிப்பட்ட பிசாசுகள் இருப்பதாய் என்னிடம் கூறாதே கிருஷ்ணா! அதை விடு! இப்போது பீமனுக்கு எப்படி வழிகாட்டுவது! என்ன செய்யலாம்? ஒரு தரம் முடிவெடுத்துவிட்டால்
பிடிவாதமாக அதிலிருந்து அவன் கடைசி வரை மாறவே மாட்டானே! குழந்தாய், கிருஷ்ணா, மகனே,
உன்னால் ராக்ஷசவர்த்தம் செல்ல இயலுமா? உன்னால்
முடியுமானால்??? அவர்களைச் சந்தித்து விட்டாயெனில்! உன் அறிவுரைக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற உன்னால் சம்மதிக்க
வைக்க இயலும். இதை நான் நன்கறிவேன்.” என்றாள் மஹாராணி.
தன்
வயதுக்கும், அறிவுக்கும் சற்றும் பொருந்தா வகையில் தாயைப் பார்த்துக் குழந்தை போல்
சிரித்தார் வியாசர். “எனக்கு இப்போது தான்
புரிகிறது. நான் இங்கே எதிர்பார்க்கப்பட்டேன்
என்பதை அறிந்து கொண்டேன். இன்னொரு பலமான முடிச்சையும்
இப்போது அவிழ்க்க வேண்டும். சரி, நான் செல்கிறேன். அவர்கள் என் குழந்தைகளும் தானே. அதோடு உங்கள்விருப்பங்கள் அனைத்துமே எனக்கு நீங்கள்
இட்ட கட்டளைகள் தாயே!”
“என்
குழந்தாய், உன்னை மகனாய் அடைய நான் செய்த தவம் தான் என்ன! நீ தான் எவ்வளவு உதவி செய்கிறாய். உன்னால் எனக்கு மிகவும் சுகமே காண முடிகிறது.” இதைச்
சொன்ன ராணியின் முகம் கர்வத்தில் பூரித்தது.
இப்போ நாம அவசரமா ராக்ஷசவர்த்தம் போயாகணும். எல்லாருமாச் சீக்கிரம் யமுனையைக் கடந்து நாக நாட்டையும் கடந்து ராக்ஷசவர்த்தம் வாங்க. அதுக்குள்ளே பீமனுக்குச் செய்தி எல்லாம் போய் தன் அருமைத் தாத்தா வியாசர் வரப் போவதற்காக வரவேற்பு ஏற்பாடுகளெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டான். ராக்ஷசவர்த்தத்தின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிகழ்வாக அதைப் பார்த்தனர். அனைத்து ராக்ஷசர்களுக்கும் வியாசரை முறைப்படி வரவேற்கவேண்டும் என்னும் கட்டளை அரசன் வ்ருகோதரனிடமிருந்து சென்றது. ஒவ்வொரு ராக்ஷசனும், மனிதர்கள் நுழைய முடியாமல் புதர்கள் அடர்ந்து கிடந்த பாதையைச் செப்பனிட்டார்கள். முட்புதர்களை வெட்டி வழியை ஒழுங்கு செய்தனர். மரங்களின் மேல் இருந்த தங்கள் வீடுகளை மீண்டும் ஒழுங்கு செய்து பூக்களாலும், இலை, கொடிகளாலும் அலங்கரித்தனர். இன்று வரை எவராலும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒரு குடிசையைத் தரையில் அமைத்தனர். இம்மாதிரித் தரையில் குடிசை அமைக்க முடியும் என்பதே ராக்ஷசர்களுக்குப் புதிய விஷயம். வர விருக்கும் விருந்தாளிக்காக அந்தக் குடிசை பூமியில் அமைக்கப்பட்டிருந்தது.
யுதிஷ்டிரனுடைய ஆலோசனைப்படி குடிசையைச் சுற்றிலும் வியாசர் தன்னுடைய வைதிக கர்மானுஷ்டானங்களைச் செய்யும் வண்ணம் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. மொத்தக் குடியிருப்பிலும் உள்ள மக்கள் அனைவருமே ஆங்காங்கே குடியிருப்பைச் சுத்தம் செய்வதிலும், அழகுபட அலங்கரிப்பதிலும் ஈடுபட்டனர். வயதில் முதிர்ந்த ராக்ஷசர்கள், இம்மாதிரியான வரவேற்பு ஏற்பாடுகளை நம் குலத்து முன்னோரான விரோசனன் காலத்தில் கூடப் பார்த்தது இல்லை என்று பேசிக் கொண்டனர். தங்கள் தலையை அலங்கரிக்கும் புதியதொரு பொய் முடியைப் பெண்களும், வாயில் வைத்துக்கொள்ளும் மரச்சில்லுகளை ஆண்களும் புதிதாகத் தயாரித்துக் கொண்டனர். மேலே அணியும் தோலாடைக்காகப் புதியதாக நரிகளை வேட்டையாடிக் கொன்று அதன் தோலை உரித்து மேலாடை தயாரித்துக் கொண்டனர். ராக்ஷசிகள் தங்கள் மார்பகங்களைப் பூக்களாலும், இலைகளாலும் ஆன மாலைகள், செண்டுகள் போன்றவற்றால் அலங்கரித்து மறைத்துக் கொண்டனர்.
ராக்ஷசச் சக்கரவர்த்தி வ்ருகோதரனின் தாத்தாவைப் பற்றிய செய்திகள் ராக்ஷசவர்த்தம் முழுதும் பரவி இருந்தது. அவர் சாதாரணமான மனிதரே அல்ல. அவரிடம் விரோசனனின் ஆவி கூட இருக்கிறதாம். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டுபின் தொடர்கின்றனராம். இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்கிறாராமே? வயது முதிர்ந்த பல ராக்ஷசர்களுக்கும் இதை நம்ப முடியாவிட்டாலும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் அப்படி இருக்கலாம் என்று பேசிக் கொண்டனர். அவர்களில் ஒரு சில ராக்ஷசர்கள் தங்கள் நாட்டை விட்டுச் சில சமயங்களில் வெளியே சென்று வந்திருக்கின்றனர். அப்படிப் பட்டவர்கள் வ்ருகோதரனின் இந்தப் பாட்டனாரைத் தாங்கள் பார்த்திருப்பதாகவும், படகுகளில் சீடர்கள் புடை சூழ ஒவ்வொரு நாடாகச் செல்வார் என்றும் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவார வரவேற்புக் கொடுப்பார்கள் என்றும் கூறினார்கள். மேலும் பல வியாதியஸ்தர்களின் வியாதிகளை இவர் குணப்படுத்தி இருப்பதைத் தங்கள் கண்களால் கண்டதாகவும் கூறினார்கள்.
ஒரு வயதான ராக்ஷசன் இதை உறுதி செய்தான்; “ஒரு சமயம் அவனுக்கு ஏதோ வியாதி வந்து இறப்பின் கடைசிக்கட்டத்தில் இருந்தான். இந்தப் பாட்டனார் வரும் செய்தி அவனுக்குத் தற்செயலாகத் தெரிய வந்தது. உடனே தன் உதட்டில் பொருத்தி இருந்த மரச்சில்லுகளை எல்லாம் எடுத்துவிட்டு அவனும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து கொண்டான். அவனும் வரிசையில் நின்று இந்தப் பாட்டனாரால் கொடுக்கப்பட்ட மருந்து கலந்த பாலை வாங்கி உண்டான். அவனுக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. இதைக் கேட்டதுமே ராக்ஷசர்களில் எவருக்கெல்லாம் உடல்நிலை சரியில்லையோ அனைவரும் வியாசரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்க ஆரம்பித்தனர். அவர்கள் மனதிலும் புதியதொரு நம்பிக்கைக் கீற்றுத் தெரிய ஆரம்பித்தது. இப்படி எல்லாருமே ஒரு வகையில் சந்தோஷத்தோடு வியாசரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் அங்கே இதற்காகக் கவலைப்படும் ஒரு ஜீவனும் இருந்தது. அது தான் ஹிடும்பி. அவளுக்கு எப்படியோ வியாசர் இங்கே வருவது சரியல்ல என்னும் உணர்வு உண்டாகி விட்டது. பெண்களுக்கே உரியதொரு உள்ளுணர்வின் மூலம் வியாசரின் வரவு தன் இல்வாழ்க்கையில் பெரியதொரு நாசத்தை உண்டு பண்ணப்போகிறது என எதிர்பார்த்தாள்.
என்னதான் அவள் கணவன் பீமனிடம் அவள் குலத்து முன்னோரான விரோசனனின் ஆவி கலந்து இருந்தாலும், அவளை, ஹிடும்பியை பீமன் சந்தோஷமாக வைத்திருந்தாலும், அவள் தன் மாமியாரான குந்திக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதையும் தன்னுடைய வாழ்க்கை முறைகளை அவள் வெறுப்பதையும் புரிந்து கொண்டிருந்தாள். ராக்ஷசர்களின் இளவரசியாக இருந்த அவள் வ்ருகோதரனை மணந்து ராணியான பின்னால், மக்களின் விசுவாசத்தையும் அன்பையும் பெற்றிருந்தாலும், அவள் மாமியார் இந்த விஷயத்தில் அவளை ஏமாற்றவே செய்தாள். மேலும் தன் கணவனைத் தன்னிடமிருந்து அந்த மூதாட்டி பிரிக்க நினைக்கிறாள் என்னும் எண்ணமும் ஹிடும்பியிடம் தோன்றி இருந்தது. சரியான சமயத்துக்காகக் காத்திருக்கிறாள் என்றும் எண்ணினாள். அந்தக் கிழவி முழு முயற்சியும் செய்தால் அவள் மகனான தன் கணவன் தன்னை விட்டுப் பிரிய மறுக்க மாட்டான் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். இப்போது எங்கிருந்தோ வரும் இந்தப் பாட்டனார்! இவருக்கும் தன்னையும் தன் குடிமக்களையும் தங்கள் வாழ்க்கை முறைகளையும் பிடிக்கவில்லை எனில்??? நிலைமை மிகவும் மோசமாகிவிடுமே! அந்தக் கிழவனுக்கும் அப்படி ஓர் எண்ணம் இருப்பதைக் குந்தி அறிந்தாளானால் தன் கணவனைத் தன்னிடமிருந்து பிரிப்பது அவளுக்கு மிக எளிதாகிவிடுமே!
பதிவில் விட்டுப் போன பகுதியைச் சேர்த்திருக்கேன். நல்லவேளையாகக் கவனித்தேன். மன்னிக்கவும்.
3 comments:
ஹிடும்பியின் உள்ளுணர்வும்
ம்ன வேதனையும் பொய்க்கவில்லையே..!!
//என்னதான் அவள் கணவன் பீமனிடம் அவள் குலத்து முன்னோரான விரோசனனின் ஆவி கலந்து இருந்தாலும், அவளை, ஹிடும்பியை பீமன் சந்தோஷமாக வைத்திருந்தாலும், அவள் தன் மாமியாரான குந்திக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதையும் தன்னுடைய வாழ்க்கை முறைகளை அவள் வெறுப்பதையும் புரிந்து கொண்டிருந்தாள்.//
கில்லாடியான மருமகளான ஹிடும்பி என்னும் கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;)
பெண்களுக்கேயான இயற்கையான உள்ளுணர்வு ஹிடும்பியை உஷார்ப் படுத்துகிறது!
Post a Comment