Thursday, January 30, 2014

பலராமனின் கோபம்!

ருக்மிணி மிகுந்த மனக் கலக்கத்தில் இருந்தாள்.  அவளுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை.  அவள் உடனே ஷாய்ப்யாவின் அந்தப்புரத்துக்கு விரைந்தாள்.  ஷாய்ப்யா தூங்கிக் கொண்டிருந்தாள்.  அவளை எழுப்பிய ருக்மிணி, “ஷாய்ப்யா, பிரபு சென்றுவிட்டார்!” எனத் தழுதழுத்த குரலில் கூறினாள்.  ஒன்றும் புரியாமல் விழித்த ஷாய்ப்யாவிடம், ருக்மிணி தனக்கும், கண்ணனுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்ர்த்தைகளை விவரித்தாள். ஷாய்ப்யா இயல்பாகவே தன்னம்பிக்கை நிறைந்தவள்.  அதோடு விரைவில் உணர்ச்சிவசப்படாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவள். ஆகவே அவள் கிருஷ்ணன் செய்த காரியத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொண்டாள்.  ருக்மிணியிடன் உடனே பலராமனிடம் சென்று கிருஷ்ணனின் செய்தியைக் கூறுமாறு அறிவுரை கொடுத்தாள்.  மேலும் அவளே நேரில் சென்று தேவகி அம்மாவிடமும், வசுதேவரிடமும் செய்தியைக் கூறுவதாய்ச் சொன்னாள்.

தன் உடையைக் கூடச் சரிப்படுத்திக்கொள்ள மனமில்லாமல் விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருதி ருக்மிணி விரிந்த தலையுடன் பொறுமை சிறிதும் இன்றிப் பக்கத்து மாளிகையில் இருந்த ரேவதியின் அந்தப்புரம் சென்றாள்.  ரேவதியை எழுப்பச் சொன்னாள்.  ரேவதி வந்ததும், “நான் மூத்தவரைச் சந்திக்க விரும்புகிறேன் ரேவதி.  உடனே அவரைப் பார்க்க வேண்டும்.  எங்கள் பிரபு சென்றுவிட்டார்.  அவர் மூத்தவருக்கு ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். உடனடியாக அவரிடம் இந்தச் செய்தியை நான் சொல்ல வேண்டும்.” என்றாள் ருக்மிணி.  பலராமனை இவ்வளவு சீக்கிரம் எழுப்புவதற்கு ரேவதி மிகவும் யோசித்தாள்.  இரவு முழுதும் சூதாட்டங்களிலும், மது விடுதிகளிலும் யாதவத் தலைவர்களோடு உல்லாசமாகப் பொழுது போக்கிவிட்டு நடு இரவு சென்ற பிறகே அரண்மனை திரும்பும் வழக்கம் உள்ள பலராமன் சூரியன் உச்சிக்கு வரும்போது தான் எழுந்திருப்பது வழக்கம்.  ஆகவே ரேவதி தயங்கினாள்.  ஆனால் ருக்மிணி மேலும் மேலும் வற்புறுத்தவே ரேவதி பலராமனை எழுப்பினாள்.  தன் வலிமை வாய்ந்த பெரும் உடலைத் தூக்கிக் கொண்டு மிகுந்த சிரமத்துடனேயே எழுந்தான் பலராமன்.  அரைத்தூக்கத்தில் இருந்த பலராமன் மிகவும் மந்தமான மனநிலையுடனே சிரிப்பு இல்லாத முகத்துடன் காணப்பட்டான்.  அவன் மூக்கு மட்டும் சிவந்து வீங்கி இருந்தது தனித்துத் தெரிந்தது.

தன்னுடைய தூக்கத்தைக் கலைத்ததற்கு  ரேவதியிடம் கத்தினான் பலராமன். அந்த அரைத் தூக்க நிலையிலேயே மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தவன் காதுகளில் திரும்பத் திரும்ப ரேவதி கூறிய ஏதோ ஒரு விஷயம் வந்து மோதின.  அரைத் தூக்கத்திலேயே மீண்டும் ரேவதி சொல்வதைக் கேட்டவனுக்கு அவள், “பிரபுவே, கோவிந்தன் இங்கே இல்லை;  அவன் சென்றுவிட்டானாம்!” என்ற வார்த்தைகள் விழுந்தன.  அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள சில விநாடிகள் பிடித்தன அவனுக்கு.   அதன் முக்கியத்துவம் மெல்ல மெல்ல அவன் காதுகள் வழியாக அவன் மூளையைச் சென்றடைந்து அதன் தீவிரம் புரிய மேலும் சில விநாடிகள் சென்றன.  புரிந்ததோ இல்லையோ, விருட்டென எழுந்தவன், ரேவதியைப் பார்த்து, “என்ன முட்டாள் தனமாக உளறிக் கொண்டிருக்கிறாய்?” என்று கூச்சலிட்டான்.

“இதோ, இங்கே ருக்மிணி இருக்கிறாள் பிரபுவே!  நீங்கள் அவளையே கேட்டுக் கொள்ளுங்கள்.  உங்களுக்குச் சொல்ல ஒரு செய்தியும் கொண்டு வந்திருக்கிறாள்.”

“இவ்வளவு சீக்கிரமாகவா? என்ன விஷயம்?” இவ்வளவு கத்தியதில் முழுத் தூக்கமும் கலைந்தே போனது பலராமனுக்கு.

“கோவிந்தன் சென்று விட்டான்.” என மீண்டும் ரேவதியே சொன்னாள்.

“எங்கே?” பலராமன் கேட்டான்.  “திடீரென அவன் புஷ்கரத்தை நோக்கிச் சென்றுவிட்டான்.  ஏனெனில் இன்று செல்ல வேண்டிய சாத்யகி திடீரென மறைந்து விட்டான்." ரேவதி கூறியதில்  தூக்கம் கலைந்து தெளிந்த அறிவு வந்துவிட்ட உணர்வு முகத்தில் தெரியத் தன் பெருத்த உடலைக் கட்டிலில் இருந்து மெல்ல மேலே தூக்கிக் கொண்டு எழுந்தான் பலராமன்.  “உள்ளே வரச் சொல் ருக்மிணியை!  இதெல்லாம் என்ன கூத்து!  என்ன நடக்கிறது இங்கே?” என்று மீண்டும் கூச்சலிட்டான்.   ருக்மிணி உள்ளே வந்து தனக்குத் தெரிந்த விஷயங்களை பலராமனிடம் விவரித்தாள்.  அவள் பேசும்போதே அவள் குரலிலும், முகத்திலும் தெரிந்த கசப்பு உணர்ச்சியைப் பார்த்தான் பலராமன்.   தொண்டையை துக்கம் அடைக்க, கண்களில் கண்ணீர் பெருக, கோபத்திலும், தாபத்திலும் உணர்வுகள் பெருகி ஓட, கசப்பு தொண்டையை மீண்டும் அடைக்க, சமாளித்த வண்ணம், “ யாதவர்கள்…யாதவர்கள்,  அதாவது நீங்கள் அனைவருமே  அவரைத் தோற்கடித்துவிட்டீர்கள். என் பிரபுவைத்  தோல்வி காண வைத்துவிட்டீர்கள்.  மூத்தவரே, நீர் அவரைக் கைவிட்டு விட்டீர்! ஆனால் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டி அவர் சென்றுவிட்டார்.” இதைச் சொல்கையில் பெருமிதம் எட்டிப் பார்த்தது ருக்மிணியின் குரலில்.

பலராமனுக்கு எதுவும் புரியவில்லை.  “ஏன், ஏன், ஏன்?” என்று இன்னமும் குழம்பிய தொனியிலேயே கேட்டான்.  “மூத்தவரே, அவர் செல்வதற்கு முன்னர் என்னைச் சந்திக்க வந்தார்.  உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி ஒரு செய்தியும் கொடுத்துச் சென்றார். “

“என்ன செய்தி அது? விரைந்து சொல்!”

“இது தான் அவர் உங்களிடம் சொல்லும்படி கூறியது: “அண்ணா, செகிதனாவுக்குப் புஷ்கரத்தைத்திரும்ப வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளேன்.  நாக மன்னன் கார்க்கோடகனின் நாக ராஜ்யப் பிரதேசத்திலிருந்து யாதவர்கள் அனைவரும் விரைவில் வெளியேறுவார்கள் என கார்க்கோடகனுக்கு நான் வாக்குக் கொடுத்துள்ளேன்.  பாஞ்சால மன்னன் துருபதனுக்கு அவன் மகளின் சுயம்வரம் வெற்றியில் முடித்துக் காட்டுவதாய் வாக்குக் கொடுத்துள்ளேன்.  அதோடு இல்லை;  திரெளபதியிடமே அவள் வில் வித்தையில் சிறந்த தக்க மணாளனைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் கூறியுள்ளேன்.  “ என்று கூறிய ருக்மிணி சற்றே நிறுத்தினாள்.

“கோவிந்தனுக்கு வேறு வேலையே இல்லையா?  இத்தகைய பயங்கரமான வாக்குறுதிகளை மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறானே!  அவன் ஏன் இப்படிச் செய்கிறான்?” பலராமன் கேட்டான்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாக்குறுதிகளை கொடுப்பதற்கு கண்ணனும் பலராமனும் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் - நம் நாட்டிற்கு வந்து... ஹிஹி...

சுவாரஸ்யத்துடன் தொடர்கிறேன் அம்மா...

sambasivam6geetha said...

தொடர்ந்து வருவதற்கு நன்றி டிடி.