Wednesday, January 8, 2014

கண்ணன் படும் பாடு!

இது வரையிலும் கிருஷ்ணன் சொன்னவற்றை ஆமோதித்து வந்தவர்களுக்குக் கூட இப்போது கொஞ்சம் தயக்கம் வந்துவிட்டது.   பலராமனின் யோசனையை அனைவரும் ஏற்கலாம் என நினைத்தனர்.  துரியோதனன் புஷ்கரத்தை ஆக்கிரமித்ததில் அவர்களுக்கு உடன்பாடாகவே  இருந்தது.  அதில் தாங்கள் தலையிட வேண்டாம் என எண்ணினார்கள்.  சாத்யகியுடனும், கிருதவர்மாவுடனும் கிருஷ்ணன் மட்டும் சுயம்வரத்துக்குச் செல்லட்டும்.  ஆனால் போட்டிகளில் ஈடுபட வேண்டாம்.  துரோணரை எதிரியாக்கும் விதமாகவும், ஜராசந்தனின் கொடுங்கோன்மை அதிகரிக்கும் வண்ணமாகவும் இந்த சுயம்வரத்தில் போட்டிகளில் கலந்து கொண்டு திரெளபதியை ஜெயிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.  அவர்கள் அனைவரின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு ஜெயித்து மனைவியாக்கிக் கொள்ள திரெளபதி அப்படி ஒன்றும் உயர்ந்தவள் அல்ல.  அதற்கான தகுதி அவளிடம் இல்லை.


இந்த ஆலோசனை சபையிலிருந்து திரும்பிய கிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்தான்.  அவன் போட்ட  திட்டங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டன.  யாதவத் தலைவர்கள் அவனை மிக மோசமாக ஏமாற்றிவிட்டனர்.  தங்கள் குலத்தின் தற்போதைய சுகத்தையும், சுதந்திரத்தையும் மட்டுமே எண்ணிக் கொண்டு, நாட்டின்  வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க மறுக்கின்றனர். அவன் உதவியால் அவர்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்துவிட்டனர்.  அதோடு அவன் யாதவ குல ரக்ஷகன் என்பது முடிந்துவிட்டது.

இப்போது அவர்கள் அனைவரும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும், பெரும்பணக்காரர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.  ஆகவே அவனுடைய பணி என்ன, எதற்காக அவன் அரும்பாடுபட்டு தூது செல்கிறான் என்பது குறித்தெல்லாம் அவர்களுக்குக் கவலை ஏதும் இல்லை.   அவ்வளவு ஏன்? அவர்களின் தர்மம் என்ன என்பது குறித்தும் அக்கறை இல்லை.  ஒரு நல்ல சிறந்த ஆரியன் எப்படி வாழவேண்டும், ஒரு ஆரிய அரசன் எப்படி ஆட்சி நடத்த வேண்டும், அவன் அரச தர்மம் என்ன என்பதை எல்லாம் ஆர்ய வர்த்தம் முழுமைக்கும் யாதவர்கள் மூலம் நடத்திக்காட்ட வேண்டும் என்று கிருஷ்ணன் கண்ட கனவுகளெல்லாம் கரைந்து போயின!  அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக அவன் நினைத்தது ஊமை கண்ட கனவாக ஆனதோடு அல்லாமல்  முட்டாள் தனம் என்னும் பெயரை அன்றோ வாங்கி விட்டது.  ஆரியர்களின் வாழ்க்கையோடு தான் தங்கள் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்தது என்பதை யாதவர்கள் உணரவே இல்லையே!  இவை அனைத்தும் தங்கள் நன்மைக்கே என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவே இல்லையே!

கிருஷ்ணனின் மனதில் துரியோதனனால் செகிதனாவுக்கு நடந்த தவறைச் சரி செய்ய நினைக்கும்  எண்ணம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது தான்.  அதில் அவர்கள் தலையிட மறுப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே!  அல்லது இந்த சுயம்வரத்தின் மூலம் ஆர்யவர்த்தம் முழுதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் ஜராசந்தனின் முயற்சியையும் அவர்கள் தடுக்க நினைப்பார்கள் என எண்ண முடியாது தான்.  இது அதர்மம் என்றும்  அதன் வெற்றி என்றும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் தான்.  ஆனால் அதன் மூலம் துரோணருக்கும், துருபதனுக்கும் இடையில் இருக்கும் மனக்கசப்பையையும், பகைமை உணர்வையும் அடியோடு அழிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லையே! அதிலே இவர்களுக்குக் கொஞ்சமும் ஆர்வம் இல்லையே!  இந்த மனக்கசப்பும், வெறுப்பும் எந்த அளவுக்குத் துன்பத்தை ஆர்யவர்த்தம் முழுமைக்கும் அளிக்கும் என்பதையும் யோசிக்க மறுக்கின்றரே!  யாதவர்கள் நடுநிலைமை வகிப்பவர்கள்;  அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பதை எல்லாம் இந்தப் பகைமையை ஒழிப்பதன் மூலம் நிரூபிக்கலாமே!   தங்கள் இருப்பும், தங்கள் தலையீடும் அங்கே எவ்வளவு தேவை என்பதை உணர மறுக்கின்றனரே!

ஆனால் இந்த சுயம்வரத்தின் மூலம் பாண்டவர்கள் ஐவரையும் கிருஷ்ணன் வெளிக்கொண்டுவர நினைப்பது குறித்து யாதவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.  அது மட்டுமின்றி அர்ஜுனனை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்து திரெளபதியை வெல்ல முயற்சி செய்யச் சொல்லவேண்டும் என்று கண்ணன் திட்டம் வகுத்திருப்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.  ம்ஹூம், இல்லை; இல்லை;  கண்ணனும் அவர்களுக்குச் சொல்லப் போவதில்லை.  இப்போது இல்லை.  எப்போதும் இல்லை; அப்படியே சொன்னாலும் அவர்கள் இதைக் கேட்டுவிட்டுக் கேலியாகச் சிரிப்பார்கள்.   இதை முட்டாள்தனமாகவும் நினைப்பார்கள்.  பார்க்கப் போனால் இது ஒரு சூதாட்டம் போலத் தான்.

ஒருவேளை அர்ஜுனனை இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் இருந்து ஏதேனும் காரணங்கள் தடுக்கலாம்.  எவரேனும் தடுக்கலாம்.  அவ்வளவு ஏன்? அவன் துரோணரின் அருமைச் சீடன் என்பது ஒன்றே போதுமே!  திரெளபதியை அவன் வெல்ல முயன்றால் அதுவே பெரும் தடையாகுமே! அல்லது திரெளபதி அவன் துரோணரின் சீடன் என்பதால் அவனைத் தேர்ந்தெடுக்க மறுக்கலாம்.  அதனால் வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்கள் எல்லாருடைய  மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் கலவரம் செய்யலாம்.  அல்லது ஜராசந்தனால் திரெளபதி கடத்திச் செல்லப்படலாம். இவை எதுவும் நிகழாமல் இருக்க வேண்டுமானால்!!!!!!!!!!!!!!  கண்ணனின் அனைத்து நம்பிக்கைகளும், வாக்குறுதிகளும் செகிதனாவை மீண்டும் புஷ்கரத்துக்கு அரசனாக்கிவிட்டு அந்த வழியே செல்ல அர்ஜுனனுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாமல் உதவிகள் செய்வதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.   இந்த உதவியை அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் யாதவர்களைத் தவிர எவரால் செய்ய முடியும்?  அவனுடைய அனைத்து நம்பிக்கைகளும் மண்ணோடு மண்ணாகிவிட்டனவே!

கண்ணனின் தன்னம்பிக்கையே ஆட்டம் கண்டுவிட்டதோ என்னும்படி கண்ணன் அவன் வாழ்க்கையிலேயே முதல்முறையாகக் கவலை கொண்டான்.  என்ன செய்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய இந்தத் துன்பங்களில் அவனோடு பங்கு கொள்வார் எவருமே இல்லாதது போல் உணர்ந்தான்.   எவரிடமும் மனம் விட்டுப் பேசக் கூட அவனால் முடியவில்லை.  உத்தவன் எங்கோ இருந்தான்.  சாத்யகி, ஒரு நல்ல விசுவாசமுள்ள நண்பன் தான்.   இளம் யாதவ வீரர்களை வரவிருக்கும் மாபெரும் யுத்த சாகசங்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இருந்து அவன் தவறவில்லை.  தவறாமல் பயிற்சி அளித்து வந்தான் தான்.  ஆனாலும் அவனுக்கு உள்மனதில் இத்தனை பெரிய ஒரு வீர, தீரப் பராக்கிரமச் செயலைச் செய்தே ஆகவேண்டுமா?  அது நடக்குமா என்னும் சந்தேகம்  தோன்றிக் கொண்டே தான் இருந்தது.  


அவன் தாய் தேவகி, அவன் இரு மனைவியர் ருக்மிணி, ஷாய்ப்யா,  ஆகிய மூவரும் தங்கள் உள்ளுணர்ச்சியால் கண்ணன் மனப்போராட்டத்தை எவ்விதமோ புரிந்து கொண்டனர்.  ஆகவே மூவரும் அவரவர் வழியில் அவனுக்கு உதவியும், ஆறுதலும் அளிக்க முற்பட்டனர்.   தேவகி அம்மா அவனுடைய துன்பங்களினால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் அன்புக்கும், பாசத்துக்கும் இடையூறு ஏற்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.  என்றாலும் அவளுக்குள் தன்னுடைய கோவிந்தன் ஒரு கடவுள் என்னும் எண்ணமும், அவன் இருக்கும் வரையில் எதிர்காலம் குறித்த சிந்தனையோ, கவலையோ வேண்டாம் என்னும் எண்ணமும் தொடர்ந்து இருந்தன.  


தாய்மை எய்தி இருந்த ருக்மிணி தன் அன்பாலும், அழகாலும் கண்ணன் மனதைக் கவர்ந்து அவன் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினாள்.  தான் கண்ணனை மிகவும் காதலிப்பதையும், அவன் மேல் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையையும் தன் செயல்களாலும், பேச்சுக்களாலும் வெளிப்படுத்தினாள்.  கண்ணனுக்குத் தோல்வி என்பதே இல்லை என்றும், அவன் தர்மத்தை நிலைநாட்டவே பிறந்திருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெளிவு படுத்தினாள்.  அதோடு கண்ணனுடைய அபரிமித வெற்றிக்காகவே இத்தனை கஷ்டங்களையும் மனத் துன்பத்தையும் அவன் அனுபவிக்கிறான் என்றும் அடுத்து அவன் பெறப்போவது மாபெரும் வெற்றி என்றும் தீர்மானமாகக் கூறினாள்.  தன் அன்பும், ஆதரவும் என்றென்றும் கண்ணனுக்கே என்று  கூறியதோடு அல்லாமல் அவன் செயல்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி கூறினாள்.



8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தாய்மை எய்தி இருந்த ருக்மிணி தன் அன்பாலும், அழகாலும் கண்ணன் மனதைக் கவர்ந்து அவன் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினாள்.//

அழகோ அழகு. பாராட்டுக்கள்.

தொடருங்கோ.

ஸ்ரீராம். said...

கண்ணனுக்கும் மனக் கிலேசமா?

திண்டுக்கல் தனபாலன் said...

/ அன்பும், ஆதரவும் என்றென்றும் கண்ணனுக்கே... /

தொடர்கிறேன்...

இராய செல்லப்பா said...

கடவுளே ஆனாலும் தாய்மையடைந்த மனைவியின் கொஞ்சலுக்கு வசமாகாமல் இருக்கமுடியாது என்று தெரிகிறது....

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், பாராட்டுக்கு நன்றி.

sambasivam6geetha said...

ஶ்ரீராம், கண்ணன் ஒரு அவதாரம் என்பதெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டவையே! ஆனால் கண்ணன் காலத்தில் அவனும் சாமானிய மனிதர்களைப் போலத் தானே வாழ்ந்திருக்கிறான். ஆகவே மனிதர்களுக்கு உண்டான அனைத்து உணர்வுகளும் அவனிடத்திலும் இருந்திருக்கும். :))))

sambasivam6geetha said...

நன்றி டிடி.

sambasivam6geetha said...

செல்லப்பா சார், கடவுள்னு கண்ணன் தன்னைக் கூறிக்கொள்ளவில்லை அல்லவா? சாதாரணமான மனிதர்களைப்போலத் தானே வாழ்ந்திருக்கிறான். ஆகவே அவனுடைய உணர்வுகளும் அப்படியே இருக்கின்றன. கடவுள் என்ற கோணத்தில் பார்ப்பது இங்கே சரியாக இராது என்பது என் தனிப்பட்ட கருத்து. :))))