Monday, March 24, 2014

பானுமதியின் கலக்கமும், கிருஷ்ணனின் சந்தேகமும்!

அடுத்த நாள் காலை!  காசிராஜனும் மகளும், துரியோதனனின் மனைவியுமான பானுமதி கண்ணனின் கூடாரத்துக்கு விஜயம் செய்தாள்.  தனியாக அல்ல! ஷகுனியும், ஷகுனியின் மனைவியும் உடன் இருக்க வந்த பானுமதி இளைத்துப் போய் உடல், முகமெல்லாம் வெளுத்துப் போய்க் காணப்பட்டாள். அந்நிலையிலும் அவளிடம் இருந்த நளினமான எழில் கண்ணன் மனதில் பதிந்தது.  அவள் ஏதோ தயக்கமாக, கலக்கமாகவும் இருந்தாள் எனத் தெரிந்து கொண்டான் கண்ணன்.  நொடிக்கு ஒரு முறை ஷகுனியைத் தன் பயந்த கண்களால் மருட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டு கண்ணனுக்கு உள்ளூர வியப்பு ஏற்பட்டது.  முல்லைக்கொடியைப் போன்று துவண்டு இருந்த அவள் இன்னமும் வளைந்து கிருஷ்ணன் காலைத் தொட்டுத் தன் கண்களிலும் உச்சந்தலையிலும் ஒற்றிக் கொண்டாள்.  பல நாட்கள் சென்று தன் மூத்த அண்ணனைப் பார்க்கும் ஒரு சகோதரி எப்படி வணங்குவாளோ அப்படியே அவள் நடந்து கொண்டதைக் கண்ணன் கவனித்துக் கொண்டான்.   எப்போதும் போல் தன் வளவள குரலில், பேசின ஷகுனி, “இளவரசி பானுமதி உன்னைப் பார்க்கவேண்டியே வந்துள்ளாள் வாசுதேவா.  நீ அவளையும் ஒரு சகோதரியாக ஏற்றுக் கொண்டது தெரியும்.  அதோடு நீ எப்போதும் அவளிடம் நல்லமுறையிலேயே நடந்தும் வருகிறாய்!” என்று சொன்ன ஷகுனி தன் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்ட வண்ணம் அருகிலிருந்த ஓர் ஆசனத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான்.  “அது மட்டுமா?  யாதவர்களிலேயே தலை சிறந்த வீரனான ஒருவனால் தங்கையாக வரிக்கப்பட எவர் தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கண்ணனை முகத்துதியும் செய்தான்.  அவன் இச்சகமாகப் பேசுவதைக் கண்ணன் நன்கு புரிந்து கொண்டான்.

கிருஷ்ணன் அவள் பக்கம் திரும்பி, “யுவராஜா துரியோதனன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.  ஷகுனியைத் திரும்பிப் பார்த்த பானுமதி மிகுந்த தயக்கத்துடன் கிருஷ்ணனை நேருக்கு நேர் ஒரு நொடி பார்த்துவிட்டு உடனே தன் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் குறிப்பாக உணர்த்தும் செய்தியைப் புரிந்து கொள்ள யோசித்தான் கிருஷ்ணன். “ஆர்யபுத்திரர் நன்றாகவே இருக்கிறார்!”மெல்லிய குரலில் கூறினாள் பானுமதி.  “தன் ஆசிகளை உங்களுக்கு அனுப்பி இருக்கிறார்!” ஷகுனியைத் திரும்பிப் பார்த்துத் தான் இதுவரை சரியாக நடந்திருக்கிறோமா என்பதை அவன் பார்வையின் மூலம் தெரிந்து கொள்ள முயன்றாள். பின்னர் மீண்டும் கண்ணனிடம்,”ஆர்யபுத்திரர் மிகவும் நல்லவர்;  அவர் தான் என்னை இங்கே உங்களைச் சந்திக்கச் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.  என் அண்ணன் கிருஷ்ண வாசுதேவரை இதனால் தான் நான் சந்திக்க முடிந்தது.”

“ஆ, அது அவரின் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது!” என்றான் கிருஷ்ணன்.  உடனடியாகச் சற்றும் தாமதிக்காமல் அதை ஆமோதித்த ஷகுனி, “உன்னிடம் துரியோதனன் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டிருக்கிறான் வாசுதேவா!  பார்க்கப் போனால் இங்கே உன்னை வரவேற்கவும், விருந்துபசாரம் பண்ணவும் அவனே நேரில் வந்திருக்க வேண்டும்.  ஆனால் அங்கே ராஜரிக காரியங்களில்  மிகவும் மும்முரமாக ஆழ்ந்து போயிருக்கிறான். பானுமதியிடம் உனக்காக ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பி இருக்கிறான். இதோ இப்போது அவளே உன்னிடம் சொல்வாள்!” என்றான் ஷகுனி.   இதன் மூலம் பானுமதி தான் வந்த காரியத்தை நினைவோடும், துணிவோடும் செய்ய ஓர் அடித்தளம் அமைத்தும் கொடுத்தான் ஷகுனி.  ஆனாலும் பானுமதியின் கைகள், நடுங்கின.  அவளால் பேச முடியவில்லை.  உதடுகளும்  நடுங்கின. அவள் மகிழ்ச்சியுடனோ அல்லது சுயவிருப்பத்துடனோ இங்கு வரவில்லை என்பதையும், அவளுக்கு ஏதோ போதிக்கப்பட்டு அனுப்பப் பட்டிருக்கிறாள் என்பதையும், அதைச் சொல்ல முடியாமல் அவள் தவிப்பதையும் கண்ணன் நன்கு புரிந்து கொண்டான்.

அவளிடம் சமாதானமாகப் பேசினான் கண்ணன்.  ஒரு குழந்தையைக் கேட்பது போல் அவளைப் பார்த்து, “பானுமதி, தங்காய், பயப்படாதே, உனக்கு என்ன சொல்ல வேண்டுமோ, அல்லது என்ன கேட்க வேண்டுமோ அதை வெளிப்படையாக என்னிடம் சொல் அல்லது கேள்!  தயக்கமோ, வெட்கமோ வேண்டாம்!” என்றான்.  பானுமதி மிகவும் முயற்சி செய்து பேச ஆரம்பித்தாள். ஆனாலும் அவள் குரல் நன்கு கேட்காமல் மெதுவாகவே ஒலித்தது. “ஆர்யபுத்திரர் திரெளபதியை வென்று மணமுடிக்க உங்கள் உதவியை நாடுகிறார்.” என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்.  இதற்கு மேல் பானுமதியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என முடிவெடுத்த கண்ணன், உடனே ஷகுனியின் பால் திரும்பி, “ மாட்சிமை பொருந்திய காந்தார இளவரசே, இவ்விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்? சுயம்வரம் என்றால் அது சுயம்வரம் தான்.  அந்தப் பெண் தானே தனக்கு இஷ்டமான ஒருவனைப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.  போட்டியில் வென்றவருக்கே அவள் மாலையிடுவாள்.  மணமகனைத் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க இளவரசி திரெளபதியின் கைகளில் தான் இருக்கிறது.”  என்றான்.

“ஆனால், வாசுதேவா, நான் கேள்விப்பட்டது என்னவெனில்…… பாஞ்சால அரசன் துருபதனும், அவன் மகள் திரெளபதியும் உன்னிடம் மிகவும் மரியாதையும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்றல்லவோ பேசிக் கொள்கின்றனர்!  நீ துரியோதனனின் கோரிக்கைக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து எடுத்துச் சொன்னாயானால் போதும், விஷயம் முடிந்தது. அவனுடைய நோக்கத்தில் அவன் வெற்றி பெற்றவன் ஆகிறான்.  இல்லையா பானுமதி?  இம்மாதிரி ஒன்று நடந்து விட்டால் போதுமே!  குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால வம்சத்தினருக்கும் இருந்து வரும் நீண்ட நாள் பகைமை ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.  எல்லாம் பழைய கதையாகிவிடும்.” என்று சொல்லிவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் ஷகுனி! பதில் சொல்லச் சற்று அவகாசம் எடுத்துக் கொண்ட கண்ணன், “உங்கள் கோரிக்கையின் மூலம் நான் பெரிதும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறேன். விநோதமான, புதுமையான கோரிக்கை, இல்லையா காந்தார இளவரசரே!   ஒரு தரம் பேசுகையில் பானுமதி தான் என்னுடைய தங்கை என்றும், என்னைத் தன் மூத்த அண்ணனாய்க் கருதுவதாகவும் சொல்லிவிட்டு, உடனே அடுத்தபடியாக துரியோதனன் மணந்து கொள்ள இன்னொரு மனைவி வேண்டும் எனவும் அவளை துரியோதனன் அடைய நான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சொல்கிறாள்.  அதிலும் இந்த மனைவி மட்டும் துரியோதனனை மணந்தால் பானுமதி இருக்கும் இடமே தெரியாது!  அவள் இவளை வென்று விடுவாள்! அவள் ஆட்சி தான் நடக்கும்!” என்றான் கண்ணன்.  பின்னர் தன் வசீகரச் சிரிப்போடு பானுமதியைப் பார்த்து, “பானுமதி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று அன்போடு கேட்டான்.

மீண்டும் பானுமதி தலையோடு கால் நடுங்கினாள்.  அவள் பேச ஆரம்பிக்கையில் உதடுகளும் நடுங்கின.  “ஆர்யபுத்திரரின் விருப்பமே என் விருப்பம்.  திரெளபதியை மணக்கவேண்டும் என்பது அவர் விருப்பம்.  அதோடு மட்டுமல்ல, இவரை விடத் தக்க மணாளனை அந்த துருபதனால் தேடிக் கொடுக்க முடியுமா? குருவம்சத்து யுவராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவர் உண்டோ?  நான் அவளை என் சொந்த சகோதரியைப்போல் வரவேற்று நட்புப் பாராட்டுவேன்.” இதைச் சொன்னாலும் பானுமதிக்குக் குரல் மேலெழும்பவே இல்லை.  இவளால் ஒரு போதும் பொய்யே சொல்ல முடியாது என நினைத்துக் கொண்டான் கண்ணன்.  “ஏற்கெனவே காசி தேசத்து ராஜகுமாரியான நீ மனைவியாக இருக்கையில் உன்னை விடவும் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒரு மணமகளை ஏன் துரியோதனன் விரும்புகிறான்?  அதுவும் நீ துரியோதனனுக்குப் பாத பூஜை செய்பவள் ஆயிற்றே.  அவனிடம் மாறாக்காதலும், பக்தியும் கொண்டவள் ஆயிற்றே! இவ்வளவு அழகான, இளமையான, பணிவான, அன்பான மனைவி இருக்கையில் இன்னொரு மனைவி ஏன்?” என்று கேட்டான் கிருஷ்ணன்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தனக்குள்ளே சகுனி சிரித்துக் கொண்டாலும் கண்ணனுக்குத் தெரியாதா என்ன...?

கதம்ப உணர்வுகள் said...

துரியோதனன் ஏற்கனவே திருமணம் ஆனவன்.. அப்படி இருந்தும் தானாக வந்து தனக்கு வேண்டியதை கேட்காமல் பெண்ணை முன்பில் விட்டு தனக்கு சாதகமான விஷயங்களை சாதிக்க முயல்கிறான்.

கண்ணன் சர்வமும் அறிந்தவன் தான் என்றாலும் தன் அமைதியான புன் சிரிப்பில் ஏதும் அறியாதவன் போலவே நடந்துக்கொள்வது அழகு...

சகுனியின் திட்டம் எத்தனை கீழ்த்தரமானது.. துரியோதனன் தனக்கானதை வந்து கேட்காமல் அவன் மனைவி பானுமதியை அனுப்பி கேட்கவைக்கிறானே.

அதோடு அதற்கு சால்ஜாப்பு வேறு சொல்கிறான். துருபதனும் திரௌபதியும் கண்ணனுக்கு நெருங்கியவர்கள் என்பதால் கண்ணன் அழுத்தி சொன்னால் அவர்கள் கேட்பார்களாம்..

பெண்ணுக்கும் ஒரு மனம் இருக்கிறது.. அவள் இஷ்டத்தையும் கேட்கவேண்டும் என்று பானுமதிக்கு கூட தோன்றவில்லையே...

துரியோதனன் திரௌபதியை திருமணம் புரிந்தால் சகோதரியாக நட்பு பாராட்டுவாளாம்...

கண்ணன் சரியான வழி சொல்லுவான் என்று எதிர்ப்பார்க்கிறேன்..

அருமையான பகிர்வு கீதா... அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

ஸ்ரீராம். said...

//“தன் ஆசிகளை உங்களுக்கு அனுப்பி இருக்கிறார்!”//

துரியோதனன் கண்ணனுக்கா...?

பாவம் பானுமதி. கிருஷ்ணன் மறைபொருளாய் பேசாமல் நேருக்கு நேராய் கேட்பதும் நன்றாக இருக்கிறது!