Monday, March 31, 2014

துரியோதனன் போடும் கணக்கு!

இருண்டு கிடந்த தன் வாழ்க்கையில் இனி என்றும் ஒளிமயம் என நினைத்தான் துரியோதனன்.  அவன் மனதுக்கும் உடலுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் அவன் உடலை நன்கு உருவி விட்டுப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தனர். அவன் பிறந்ததில் இருந்து இத்தனை ஆண்டுகளாக அவன் மெளனமாக ஒரு வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.   கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் ஒரு கோட்டைக்குள்ளாகச் சிறைப்பட்டிருந்தான்.  அங்கே அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தான் எத்தனை! தன்னைச் சுற்றிலும் தீய கிரஹங்கள் சூழ்ந்து கொண்டு கெடுதலைச் செய்து கொண்டிருந்தன.  எவராலும் கணிக்க முடியா செல்வாக்கைக் கொண்ட, இத்தனை வயது ஆகியும் இன்னமும் தன் செல்வாக்கும், அதிகாரமும் அழிவற்றதாகக் கொண்டிருக்கும் அந்தக் கிழவி, வியாசனின் தாய், மாட்சிமை பொருந்திய அன்னையார் சத்யவதி அவர்களாலும், பிதாமஹர் பீஷ்மராலும் அவர்கள் அனைவரும் வளர்க்கப்பட்டிருக்கின்றனர் தான்.  இல்லை என்று சொல்ல முடியாது.


அவன் பிறக்கும் முன்பே அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க முடிவு செய்திருக்கின்றனர்.  ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் அநியாயங்களை எல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் பொறுப்பது?  தன்னுடைய கொள்ளுப்பாட்டியார் மாட்சிமை பொருந்திய சத்யவதி அம்மையாரை முக்கியமான ஒரு சில அரசாங்க நிகழ்ச்சிகளில் மட்டுமே துரியோதனன் நன்கு பார்த்திருக்கிறான்.  அந்த அம்மையார் வெளியே செல்வதில்லை; அனைவரையும் பார்ப்பதும் இல்லை.  குறிப்பிட்ட சிலர் மட்டும் அவரைச் சென்று பார்க்கிறார்கள்.  ஆனாலும் அந்த அம்மையார் அந்தச் சின்னஞ்சிறு மாளிகையில் இருந்து கொண்டே சூத்திரக் கயிறைப் பிடித்து ஹஸ்தினாபுரத்து அரண்மனையின் ஆட்களை மட்டுமல்ல ஆட்சிப் பீடத்தையும் ஆட்டி வைக்கிறாள்.  அவளுக்கு எப்படி இத்தனை அதிகாரம்??  அவளால் தனக்கு எத்தனை கேடுகள் விளைந்திருக்கின்றன!

ஒவ்வொரு முறையும் சரியாக ஒரு வேலையைச் செய்து முடிக்க துரியோதனன் நினைத்தால் அது அப்படி முடியாது.  யாரேனும், எங்கிருந்தாவது சதியோ சூழ்ச்சியோ செய்து அவன் செய்வது அனைத்தும் தவறானது என அனைவரையும் நினைக்க வைத்துவிடுவார்கள்.  இது தான் கடந்த காலங்களில் நிகழ்ந்தவை.  இனி இப்படி நடக்க துரியோதனன் விட மாட்டான்.  அவனுடைய அனைத்து ஏமாற்றங்களும் அவன் தந்தை பிறவிக் குருடாகப் பிறந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது.  ஆரியர்களின் புராதனமான கோட்பாடுகள், நியதிகளின் படி பிறவிக் குருடான திருதராஷ்டிரன் மூத்த மகனாகப் பிறந்திருந்தாலும் அரியணை ஏற முடியாது.  ஏறக் கூடாது.  ஆகவே அவனுக்கு மறுக்கப்பட்டதன் காரணத்தால் துரியோதனனுக்கும் நியாயமாக அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அரச பதவி மறுக்கப்பட்டு விட்டது.  அவனிடம் என்ன தகுதி தான் இல்லை?  ஒரு அரசனுக்கு வேண்டிய அனைத்து குணநலன்கள் மட்டுமில்லாமல், வீரம், கம்பீரம் அனைத்தும் நிரம்பியவனாய் அவன் இருக்கையில் அவனுக்கு அரச பதவி கிடையாது  என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.   ஆனால்,,,, ஆனால் அவன் இளமையில் இதை எல்லாம் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.  தந்தை குருடராக இருந்தால் என்ன?  வேறு யாரும் இல்லை என்பதால் அடுத்துத் தான் யுவராஜாவாக ஆகிவிடுவோம் என்றே நம்பிக் கொண்டிருந்தான்.

அவனுடைய அந்த ஆசையிலும் ஒரு நாள் மண் விழுந்தது.  அந்த வியாசன் எங்கிருந்தோ இந்த ஐந்து சகோதரர்களையும் பாண்டவர்கள் என்னும் பெயர் சொல்லி ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து விட்டார்.  இங்கே அறிமுகமும் செய்தார்.  கூட அவன் சின்னம்மா குந்தி தேவியும் இருந்தார்கள்.  இன்னொரு சின்னமா மாத்ரி அவன் சிற்றப்பன் பாண்டுவோடு உடன்கட்டை ஏறிவிட்டார்களாம்.  கூடவே இந்த ஐந்து சகோதரர்களையும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாதோ!  அவர்கள் வந்ததும், தாத்தா பீஷ்மருக்குத் தான் என்ன சந்தோஷம்! அளவு கடந்த சந்தோஷம்.  அதைவிட அதிகம் சந்தோஷப்பட்டது அந்த மாட்சிமை பொருந்திய மஹாராணி சத்யவதி அம்மையார் தான்.  இந்தப் புதுப் பேரன்களைப் பார்த்ததும் அவர்களுக்கு எங்களை எல்லாம் மறந்தே போய் விட்டது.  அதுதான் போகட்டும் என்றால் பாண்டவர்களின் மூத்த சகோதரன் யுதிஷ்டிரன் தான் யுவராஜா பதவிக்குப் பொருத்தமானவன் என்று முடிவும் செய்து அவனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹமும் பண்ணி விட்டார்களே!  அநியாயம், அநியாயம்!

அந்தப் பிள்ளைகள் பிறந்த விதம் குறித்துப் பல்வேறு பேச்சுக்கள் நிலவி வந்தாலும் அனைவருமே அவனை அவன் சிற்றப்பன் பாண்டுவின் புத்திரர்கள் என்றே ஏற்றுக் கொண்டுவிட்டனர்.  ஆனால் ஒரு விஷயம் மறுக்கவே இயலாது.  அந்தப் பாண்டவர்கள் அனைவரும் எத்தனை அழகாக, கம்பீரமாக, முகத்தில் ஒளி வீச, புத்திசாலிகளாக இருந்தனர்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் புத்திசாலிகள் தான்.  மறுக்கவே முடியாது.  அவர்கள் இப்படி எல்லாம் இருந்தால் நான் மட்டும் என்ன குறைந்தா போய்விட்டேன்!  அவர்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவுக்கு மேல் வீரம், கம்பீரம், புத்திசாலித்தனம் எல்லாம் என்னிடமும் இருக்கத் தான் செய்கிறது.  ஆனால், அந்தப் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்து மக்களுக்கும், அரசவையினருக்கும், படைவீரர்களுக்கும் செல்லப் பிள்ளைகளாகவன்றோ இருந்தனர்!  ஏன் அவன் தாயான காந்தாரிக்குக் கூடப் பாண்டவர்களிடம் சொல்லவொண்ணா அன்பும், பாசமும் இருக்கத் தானே செய்தது.  அப்புறம் பாட்டனார் பீஷ்மரையும், கொள்ளுப்பாட்டியார் சத்யவதி தேவிக்கும் கேட்பானேன்!  அவர்கள் வெளிப்படையாகவே பாண்டவர்களின் பக்கமே துணை நின்றனர்.  அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

இவர்கள் ஐந்து பேரிலும் பீமனைக் கண்டால் தான் துரியோதனனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.  அவனைக் கண்டாலே வெறுப்பு வரும்.  'என் வாழ்க்கையையே நாசம் செய்யவென்று பிறந்திருக்கிறான்.  என் வாழ்வின் மிகப் பெரிய சாபம் அவன் தான்.  எவ்வளவு முயற்சிகள் செய்து பார்த்தும் அவனை வெல்ல என்னால் முடியவில்லை. ' துரியோதனனும் அவனை வெல்ல ஒவ்வொரு முறையும் முயன்றும் அந்த பீமன்  எப்படியோ ஏதேதோ தந்திரங்கள் செய்து ஒவ்வொரு முறையும் அவனை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் செய்து விட்டு அவனே வென்றதாகக் காட்டிக் கொள்வான். ஹூம், இந்த ஐந்து சகோதரர்களுக்கும் ஹஸ்தினாபுரத்தில் என்ன வேலை! எதுவுமே இல்லை.  அவர்கள் இருக்க வேண்டிய இடம் ஹஸ்தினாபுரமும் இல்லை. இது சர்வ நிச்சயம்.  


கேவலம், கேவலம், அவர்கள் ஐவருமே அவன் சிற்றப்பன் பாண்டுவின் மூலம் பிறந்த குழந்தைகள் அல்ல என்று அரண்மனை வளாகமே தங்களுக்குள்ளாகப் பேசிக் கொள்கிறார்கள்.  அவர்கள் ஹஸ்தினாபுரம் வந்த நாளில் இருந்து துரியோதனன் இது குறித்து அறிவான்.    ஆமாம், ஆமாம், அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் அல்ல. அதை துரியோதனன்  நன்கறிவான்.   அவர்கள் ஐவரையும் அவர்கள் இருக்கும் உயர்ந்த இடத்திலிருந்து அகற்றுவது ஒன்று தான் தர்மம்.  அது தான் நியாயம், நீதி.  சரியான முறை.  ஆனால்….ஆனால்….. அவர்களை அகற்ற முயலும்போதெல்லாம் துரியோதனன் தோல்வியையே அடைந்தான்.    நீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் நிலை நாட்ட விரும்பிய துரியோதனன் ஒவ்வொரு முறை அவர்களை அகற்ற முயலும்போதெல்லாம் தவறாகவே போய்க் கொண்டிருந்தது.

ஆனால் ஒரு விஷயத்தில் “நான் அதிர்ஷ்டக்காரனே!” என துரியோதனன் நினைத்தான்.  அதை வாய்விட்டும் சொல்லிக் கொண்டான்.  ‘தேரோட்டி மகன் என்று அனைவராலும் அறியப்படும் கர்ணன், எத்தனை மாபெரும் வீரன், அதோடு அவன் முக விலாசமும் இந்தப் பாண்டவர்களைப் போலவே கம்பீரம், இளமை, அழகு, ஒளி பொருந்தியதாகக் காண்கிறது அல்லவா?  இந்த மக்களுக்கு அது தானே பிடிக்கும்!  அத்தகைய அழகும், கம்பீரமும் வாய்ந்த வீரத்தில் அந்த அர்ஜுனனுக்கு நிகரானவனாகக் கருதப்படும் கர்ணன் என் ஆருயிர் நண்பன் அல்லவோ!  அதோடு மட்டுமா!  மாபெரும் வில்லாளியும் துரோணாசாரியாரின் ஒரே மகனும் பிரம்மாஸ்திரப் பிரயோகம் தெரிந்தவனும் ஆன அஸ்வத்தாமா என் நண்பன் அல்லவோ!  இதனால் துரோணர் கூட எனக்குக் கட்டுப்பட்டவர் ஆகிவிடுகிறாரே!  என் மாமா ஷகுனியைப் போன்றதொரு ராஜதந்திரியைக் காணத் தான் முடியுமா!   இந்த ஹஸ்தினாபுரத்து ராஜசபையின் அனைத்து ராஜ தந்திரிகளின் அறிவை எல்லாம் ஒன்று சேர்த்தால் கூட ஷகுனி மாமாவின் ராஜ தந்திரத்துக்கு ஈடு, இணையாகுமா!  என் அருமைச் சகோதரன் துஷ்சாசனன், அவன் மட்டும் எதில் குறைந்தவன்!  நான்  சொன்னால் உடனே அதைச் செய்து முடிப்பான்.  எப்போதும் என் ஆணைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பான்.  நான் காலால் இட்ட வேலைகளைத் தலையால் செய்து முடிப்பான்.  வேறென்ன வேண்டும் எனக்கு!’

முதலில் எல்லாம் இந்த ஐந்து சகோதரர்களையும் அழித்து முடிக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எதுவும் நடக்கவில்லை.  நீண்ட நாட்கள் அப்படியே போய் யுதிஷ்டிரன் யுவராஜாவாகக் கூட ஆகிவிட்டான்.  அந்தச் சமயத்தில் தான் ஒரு முறை கங்கையில் ஒரு நீச்சல் போட்டியில் அந்தப் பொல்லாத பீமனைக் கழுத்தை நெரித்துத் தண்ணீரில் அமுக்கிக் கொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  அப்படியே செய்தும் விட்டான்.  ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படியாக அந்தப் பொல்லாதவன் உயிருடன் வந்துவிட்டான். முன்னை விட பலமும், வலிமையும் வாய்ந்து திடகாத்திரனாகவும் தென்பட்டான்.  அவனைக் கண்டதும் அனைவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி! ம்ஹூம், துரியோதனனால் அதை மறக்கவே முடியாது.  யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆன பின்னர் கடைசிக் கடைசியாக அவர்கள் அனைவரையும் கொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  ஏகமாகப் பணம், நகைகள், ரத்தினங்கள் என்று கொடுத்து ஒரு கொலைப்பட்டாளத்தையே ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன்.   'ஆனால் அந்த விதுரன், துறவி போல் வேஷம் போடுபவன், ஹூம், அவனும் எனக்குச் சிற்றப்பனாம்!  அந்த வேஷக்காரனுக்கு எப்படியோ மூக்கில் வேர்த்து விட்டது.  நான் போட்ட திட்டத்தைக் கண்டறிந்து அந்தக் கிழவன் பீஷ்மனிடம் போய்ச் சொல்லிவிட்டான்.   அந்தக் கிழவன் தலையிட்டு, இந்தப்பாண்டவர்களை வாரணாவதத்துக்கு நாடு கடத்தியதோடு முடிந்து போயிற்று அந்த விஷயம். '

துரியோதனன் பெருமூச்செறிந்தான்.




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கர்ணன் "உயிர் கொடுக்கும்" நண்பன் தான்... ம்...

ஸ்ரீராம். said...

//அவனுடைய அனைத்து ஏமாற்றங்களும் அவன் தந்தை பிறவிக் குருடாகப் பிறந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது.//

ஒருவகையில் பாவம்தான்!

//அந்தப் பிள்ளைகள் பிறந்த விதம் குறித்துப் பல்வேறு பேச்சுக்கள் நிலவி வந்தாலும் அனைவருமே அவனை அவன் சிற்றப்பன் பாண்டுவின் புத்திரர்கள் என்றே ஏற்றுக் கொண்டுவிட்டனர். //

:)))))