Friday, September 5, 2014

அர்ஜுனனுக்கு வந்த சோதனை!

பீமனும், திரௌபதியும் வெளியே சென்றதும் அர்ஜுனன் அங்கே வந்தான். ஒல்லியாக இருந்தாலும் திடமாகக் காணப்பட்ட அர்ஜுனன் தோள்கள் அகன்று அகலமாகவும், இடை சிறுத்தும், மெல்லிய ஆனால் நீண்ட உறுதியான கால்களோடும் காணப்பட்டான்.  பாண்டவர்களுக்குள்ளே இவன் மிக இளமையாகவும் அழகு நிறைந்தவனாகவும் காணப்பட்டான். செதுக்கியது போல் காணப்பட்ட முகவாயும், அதன் மேல்  பெண்களுக்கு இருப்பது போன்ற அழகிய உதடுகளும், கனவு கண்டு கொண்டிருக்கும் கவிஞனை நினைவூட்டும் கண்களும், நன்றாக வாரப்பட்டுத் தூக்கிக் கட்டப்பட்டிருந்த சிகையும், முகத்தில் காணப்பட்ட தாடியும் விவரிக்க ஒண்ணாததொரு கவர்ச்சியான தோற்றத்தை அவனுக்குத் தந்து கொண்டிருந்தது.  ஆனால்…. அனைத்தையும் மீறியதொரு துயரத்தின் சாயல் அதில் நிழல் போல் படிந்திருந்தது.  அர்ஜுனன் அந்தத் தாழ்வாரத்துக்கு வந்தபோது நேருக்கு நேர் திரௌபதியைப் பார்க்க நேரிட்டது.  அவளைச் சற்றே தீவிரமாகப் பார்த்த அவன் முகத்திலோ, கண்களிலோ சந்தோஷத்தின் சாயல் சிறிதும் இல்லை.  பின்னர் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் பார்வையைத் தவிர்த்தான்.


ஆனால் பீமன் விடவில்லை.  அர்ஜுனனைப் பார்த்த உடனேயே, பீமன் தன் நடையை நிறுத்திவிட்டு, திரௌபதியின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.  பின்னர் கிருஷ்ணனையும் பார்த்தான். “கிருஷ்ணா, இதோ இவன் தான் இந்த மங்கையைப் போட்டியில் வென்றான்; ஆனால் இப்போது?? நான் அவளைத் தூக்கிச் செல்கிறேன், பார்த்தாயா?  பாவம் இவன்!” இதைச் சொன்ன பீமன் தன் வழக்கப்படி பெரிய குரலில் மனம் விட்டுச் சிரித்தான். பின்னர் அங்கிருந்து அகன்றான்.  அர்ஜுனனின் மனப் போராட்டத்தை அவன் முகத்திலிருந்தே பார்த்த கிருஷ்ணன் அவனைப் பார்த்து, “அர்ஜுனா, என்ன ஆயிற்று?  என்ன விஷயம்?  நீ ஏன் இவ்வளவு வருத்தமான மனநிலையில் இருக்கிறாய்?  நான் இங்கே உனக்காகவே காத்திருக்கிறேன்.” என்ற வண்ணம் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அர்ஜுனனை அமர்த்திவிட்டு அவன் தோள்களில்  தன் கைகளை வைத்துக் கொண்டு அவனை அன்புடன் பார்த்தான்.  சற்று நேரம் அர்ஜுனன் ஏதும் பேசவில்லை.  பின்னர் தன் தொண்டை அடைப்பைச் சமாளிக்கும் விதமாகச் சற்று நேரம் முயன்று பின் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான். “எங்கள் மூத்தவர்” இப்போது தான் ஒரு முடிவை, தீர்மானத்தை அறிவித்தார்!”   சொல்லும்போதே அவன் குரல் உடைந்து போனது.  தன்னைச் சமாளித்துக்கொள்ள மிகவும் பிரயாசைப் பட்டான். அவனால் இயலவில்லை.


“அவசரப் படாமல் நிதானமாகச் சொல்!  சற்று நேரம் எடுத்துக் கொண்டு உன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேசு!” அன்புடனும், புரிதலுடனும் பேசினான் கிருஷ்ணன்.  சற்று நேரம் இருவருமே மௌனமாக இருந்தனர்.  பின்னர் கிருஷ்ணன் அர்ஜுனனைப் பார்த்து, “இப்போது சொல் அர்ஜுனா!  இந்தத் தீர்மானத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதை ஒளிவு, மறைவின்றி என்னிடம் சொல்.  இதைக் குறித்து நீ எவ்வாறு உணர்கிறாய்?”


“திரௌபதி எங்கள் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு வருடம் வாழ்வதாகச் சொல்லி இருக்கிறாள்.  அதுவும் வரிசைக்கிரமமாக. “அர்ஜுனன் குரலில் துக்கம் பொங்கியது.  மேலும் பொங்கிய துக்கத்தை அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான். “தேவ முனி நாரதர்  அவள் கனவில் வந்தாராம்.  வந்து இந்த ஆலோசனையைச் சொன்னாராம்.  அவள் இதைக் குறித்து என் அண்ணனிடம் பேசி இருக்கிறாள்.  அவரும் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.  ஆஹா, நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன்.” இதைச் சொன்னவன் அழவே ஆரம்பித்தான்.


“உன்னால் தாங்க முடியாது என்பதை நான் அறிவேன், அர்ஜுனா!  இது மிகக் கொடுமையான ஒன்று.  ஒருவனின் மனைவி  அவனுடன் சேர்ந்து இருப்பது என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்பதை யாராலும் ஏற்க முடியாது தான்.  மனைவியோடு அந்தரங்கமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்கவே எவரும் விரும்புவார்கள்.  அதிலும் ஜெயித்து அடைந்த மனைவி!”


“என் வாழ்க்கையின் அழகு, சந்தோஷம், ரம்மியம் அனைத்தும் ஒன்றுமில்லாமல் தொலைந்து போனது!”  அர்ஜுனன் ஒரு பெருமூச்சுடன் கூறினான்.  மிகக் கனிவோடு கிருஷ்ணன் அவனைப் பார்த்தான். “ ஆம் , இது இயற்கை தான்!  அனைவருக்கும் உள்ளதே!” என்றான்.  “கிருஷ்ணா, நான் எவ்வளவு மனக்கோட்டைகள் கட்டினேன் தெரியுமா?  திரௌபதி என் பக்கத்தில் இருக்க, நான் அவள் துணையோடு இந்த உலகையே வெல்லலாம் என நினைத்தேன்!”


“இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை அர்ஜுனா! அது இப்போதும் நடக்கும். திரௌபதி ஒரு நல்ல பெண்!  புரிதலுடன் கூடியவள்.  விரும்பி மணந்த உன்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவே மாட்டாள்.  நீ பெரிய சாகசங்கள் செய்ய உனக்குத் துணை இருப்பாள்.  உன்னைத் தூண்டுவாள். அது நிச்சயம்!”  என்றான் கிருஷ்ணன் தன் மென்மையான குரலில்.


“ஹா, பெரிய சாகசங்களா?  ம்ஹூம், சாத்தியமே இல்லை! நான் ஏற்கெனவே சுக்குச் சுக்காக உடைந்து போய்விட்டேன்.”மீண்டும் அவன் கண்கள் குளமாயின.  “தெய்வீக முனி நாரதரால் திரௌபதிக்குச் சொல்லப்பட்ட இந்த ஆலோசனை எவ்வகையில் உனக்கு இயற்கைக்கு விரோதமாகப் படுகிறது?  நீ ஏன் அவ்வாறு நினைக்கிறாய்?”


“இந்தப் போட்டியில் நான் வென்றதிலிருந்தே அனைத்துமே இயற்கைக்கு விரோதமாகவே நடந்து வருகிறது. “மிகுந்த மனக்கசப்புடன் சொன்னான் அர்ஜுனன்.  “ஆம், உண்மை தான்.  இயற்கைக்கு விரோதமானவற்றை நாம் இயற்கைக்கு உகந்ததாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம்.  அது சரி, உண்மையிலேயே இது இயற்கைக்கு விரோதமா? அப்படிப்பட்டதா?  திரௌபதி தன்னைத் தானே ஒரு மோசமான அருவருப்பான இடத்தில் வைத்துக்கொண்டுவிட்டாளா?  கொஞ்சம் யோசித்துப் பார்!  அவளால் எப்படி ஐந்து கணவர்களையும் ஒரே சமயத்தில் சந்தோஷமாகவும், அந்தரங்கமாகவும் நடத்த இயலும்?”


“அவளால் முடியாதா?” அர்ஜுனன் விசித்திரமான தொனியில் கேட்டான். அவன் திகைத்துப் போனான் என்பதும் புரிந்தது.  “அர்ஜுனா, அவள் அப்படி மட்டும் நடந்து கொண்டிருந்தால் நீங்கள் ஐவரும் ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரித்துக் கொன்றிருப்பீர்கள்!  உண்மையா, இல்லையா?” கிருஷ்ணன் அர்ஜுனனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

சில பதிவுகளுக்கு முன்பு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது போல இருக்கிறது இந்தப் பதிவு.