Monday, October 6, 2014

பீமனின் சதியும், ஜாலந்தராவின் சந்தோஷமும்!

நள்ளிரவு நேரம்.  எங்கும் நிசப்தம்.  அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அவ்வப்போது நதியின் அலைகள் கரையில் மோதும் சப்தமும், துடுப்புக்களால் நதியலைகள் தள்ளப்படும் சப்தமும், அமைதியற்ற குதிரைகள் அவ்வப்போது கனைக்கும் சப்தமும், தூரத்துக் காடுகளில் இருந்த நரிகளின் ஊளைச் சப்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.  எங்கும் இருட்டுக் கருமையாக அப்பிக் கிடந்த அந்த இரவிலே விண்ணில் நக்ஷத்திரங்கள் மட்டுமே அவ்வப்போது கொஞ்சம் ஒளியை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.  பீமன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தான்;  அவன் கையில் ஓர் அங்குசம் இருந்தது.  யானைப் பாகர்கள் யானைகளை அடக்கி ஆளப் பயன்படுத்தும் அந்த ஆயுதத்தை வைத்து அவன் என்ன செய்யப் போகிறான்? கரைக்கு வந்த பீமன் நதியில் மிதந்து கொண்டிருந்த படகுகளைக் கவனமாகப் பார்த்தான். இளவரசன் சுஷர்மா, இளவரசி ஜாலந்தரா மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய வந்த வேலையாட்கள் அனைவருமே படகினுள் அமைக்கப்பட்டிருந்த கூடார அறையில் தூங்கி விட்டிருந்தனர்.  ஒரு சில படகோட்டிகள் மட்டுமே நதியின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததும் நங்கூரத்தை எடுத்துவிட்டுப் படகைச் செலுத்தத் தயாராகக் காத்திருந்தனர்.



பீமன் சத்தமில்லாமல் நதிக்கரையில் நடந்து நதியில் இறங்கும் இடத்துக்கு அருகே வந்து, நீரின் அலைகள் எழுப்பும் சப்தம் வராத நேரமாகப் பார்த்து நதியில் இறங்கினான்.  காசி அரசகுமாரனும், அரசகுமாரியும் உறங்கிக் கொண்டிருந்த பெரிய படகை நோக்கி சப்தம் எழுப்பாமல் நீந்தினான். நீருக்குள்ளேயே நீந்தியவன் படகுக்கு அடியில் போனான்.  அங்கே படகை நங்கூரத்துடன் பிணைத்திருந்த இடத்துக்குச் சென்றவன், தன் கையில் இருந்த அங்குசத்தினால் படகில் துளைகள் போட முனைந்தான்.  தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து மிகவும் பிரயாசைப்பட்டுத் துளைகள் போட்டு முடித்தான் பீமன்.   அதன் பின்னர் அருகே இருந்த மற்றொரு படகுக்குச் சென்றான்.  இந்தப் படகில் தான் சாப்பாடு தயாரிக்கப்பட்டதோடு, சமையல் பொருட்களும் நிரம்பி இருந்தன.  அதிலும் இப்படியே துளைகள் போட்டான். இந்த வேலை முடிந்ததும், வந்தது போலவே சப்தமின்றிக் கரைக்குத் திரும்பினான்.  தன் துணிகளைப் பிழிந்து காய வைத்துக் கொண்டு அரச குமாரனின் படகுக்கு எதிரே சற்று தூரத்தில் சென்று அமர்ந்த வண்ணம் என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.



அவன் எதிர்பார்ப்புப் பொய்யாகவில்லை.  சற்று நேரத்தில் நதியின் நீர்மட்டம் உயர்ந்தது.  படகோட்டிகள் நங்கூரத்தை அகற்றினார்கள்.  படகு மெல்ல மெல்ல நீரில் மிதக்க ஆரம்பித்தது.  திடீரென அரசகுலத்தினரின் படகில் இருந்து கூச்சலும், குழப்பமுமாகக் கேட்டது.  படகில் ஏற்படுத்தப்பட்ட துளைகளின் மூலம் தண்ணீர் படகினுள் புகுந்து கொண்டிருந்தது.  மெல்ல மெல்ல உட்புகுந்த தண்ணீர் இப்போது வேகமாகப் புக ஆரம்பித்தது.  படகின் பயணிகள் அதன் மேல் தளத்துக்கு வந்து சேர்ந்து நின்று கொண்டு திடீரெனத் தண்ணீர் புகுந்ததின் காரணத்தை ஆராயந்தனர்.  ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  தண்ணீர் எப்படி உட்புகுந்தது என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.  விளக்குகளை ஏற்ற முயன்றால் அப்போது வீசி அடித்த காற்றினால் விளக்குகளையும் ஏற்ற முடியவில்லை.  நக்ஷத்திரங்கள் மட்டுமே தந்த அந்தக் குறைந்த ஒளியில் காசி இளவரசனும், இளவரசியும் படகின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்ததையும் அவர்களின் உதவியாட்கள் அவர்களைச் சுற்றி நின்று கொண்டு இருப்பதையும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பப் பேசிக் கொண்டிருந்ததையும் ஒருவரும் மற்றவர் சொல்வதைக் கேட்கும் மனதோடு இல்லாமல் இருந்ததையும் பீமன் கண்டான்.



நதி நீருக்குள் வெகுவேகமாய்ப் பாய்ந்த பீமன் இரண்டொரு விநாடிகளில் வேகமாக நீந்திப் படகுக்கு அருகே வந்து விட்டான்.   படகை நோக்கிய வண்ணம், “யுவராஜா, விரைவில் படகை விட்டு வெளியேறுங்கள்.  படகு நதியின் நட்டநடுவில் அலைகளுக்கு நடுவே ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டால் வெளியேற முடியாது.  இளவரசி, தாங்களும் வெளியேறுங்கள்.  இருவரும் உடனே குதியுங்கள்!  இளவரசி, நீங்கள் குதிக்கையில் நான் உங்களைத் தாங்கிக் கொள்கிறேன்.” என்று சப்தமாகக் கத்தினான். அனைவரும் ஒருசேரப் பேசிக் கொண்டிருந்த அந்தக் குழப்பமான ஒலியையும், நதியின் அலை ஓசையையும் மீறிக் கொண்டு பீமனின் குரல் காண்டாமணியின் ஓசையைப் போல் கேட்டது.  “ஆஹா, ராக்ஷச அரசர் வ்ருகோதரரா?” இளவரசி கேட்டாள்.



“ஆம், இளவரசி, நானே தான்.  விரைவில் குதியுங்கள். “ என்றான் பீமன். இளவரசி சிறிதும் தயக்கமின்றி நீரில் குதிக்க பீமனும் அவளைப் பிடித்துக் கொண்டான்.  அவளை அடுத்து இளவரசனும் நீரில் குதித்தான்.  நீரில் குதித்த இளவரசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு நீந்த உதவிய பீமன் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு நீந்த ஆரம்பித்தான்.  ஒரு கையால் நீந்திய வண்ணம் இன்னொரு கையால் இளவரசியை நீருக்கு மேல் பிடித்துக் கொண்டு இருந்தான் பீமன்.  படகில் இருந்த ஆட்களிடம், “இளவரசியையும் இளவரசனையும் நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்.” என சப்தம் போட்டுக் கத்தினான்.  படகு மூழ்காமல் நீர் வரும் துளைகளை அடைக்கும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டான்.   இதற்குள்ளாக நதியிலிருந்து வந்த கூச்சல், குழப்பம் போன்ற சப்தங்களால் கரையிலும் மனிதர்கள் கூடி விட்டனர். சிலர் கைகளில் விளக்குகளையும் ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்களை பீமன் நீந்திப் படகுகளுக்குச் சென்றுப் படகின் துளைகளை அடைக்கும் ஆட்களுக்கு உதவும்படியும் படகுகள் முழுகாமல் காக்கும்படியும் கட்டளையிட்டு அனுப்பினான்.  பீமன் கரைக்குப் போய்ச் சேர்வதற்குள்ளாக ஜாலந்தரா அவன் கைகளிலேயே மயக்கம் அடைந்தாள்.



சுஷர்மாவுக்கு பீமன் ஜாலந்தராவைத் தொட்டுத் தூக்கிச் சென்றதைப் பொறுக்க முடியவில்லை.  ஆனால் இப்போது வேறு வழியும் தெரியவில்லை.  இந்த அவமானத்தைச் சகிக்க முடியவில்லை தான்.  ஆனால் அவனே வலுவில்லாதவன்.  நதியில் குதித்ததில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கவனித்துக் கொள்வதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. இதில் ஜாலந்தராவை எவ்வாறு கவனிக்க முடியும்?  வேறு வழியில்லை!  பொறுக்க வேண்டியது தான்!



அப்போது பீமன், “இந்தக் குளிர் காற்றிலே இங்கே வெட்ட வெளியில் இருப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல இளவரசே, வாருங்கள்.  உங்கள் இருவரையும் நான் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்றான்.  அரை மனதாக இளவரசன் செய்த ஆக்ஷேபங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஓர் ஆள் விளக்குடன் வழிகாட்ட பீமன் இளவரசி ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி நடந்தான்.  வேறு வழியின்றி இளவரசனும் அவனைப் பின் தொடர்ந்தான்.  ஜாலந்தரா கொஞ்சம் கூட கனமாக இல்லாமல் லேசாக ஒரு குழந்தையின் எடையுடன் இருப்பதைக் கண்டு பீமன் வியந்தான்.  அவனுக்கு ஹிடும்பியின் நினைவு வந்தது.  அவளுடைய எடையையும், இவள் எடையையும் ஒப்பிட்டுப் பார்த்த பீமனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது.  “ஆஹா, இவளைப் பூக்களாலேயே பிரமன் படைத்திருப்பானோ!” என எண்ணிக் கொண்டான்.  தன் சுயநினைவின்றி அவள் ஓர் குழந்தையைப் போல் அவனைச் சார்ந்திருப்பதை மிகவும் விரும்பினான்.  அவள் உடலின் ஸ்பரிசம் பட்டதுமே தனக்குக் குளிரெல்லாம் அகன்று உடல் சூடானதாகவும் உணர்ந்தான்.



அவர்கள் சென்று கொண்டிருக்கும்போதே, பீமன் காதுகளில் ஓர் குரல் மெலிதாகக் கிசுகிசுத்தது.  “நீங்கள் தானே படகுகளை மூழ்கடித்தீர்கள்?” பீமன் தூக்கிவாரிப் போட ஜாலந்தராவைப் பார்த்தான்.  அப்படி என்றால் அவளுக்குச் சுய நினைவு வந்துவிட்டதா?  ம்ம்ம்ம்?  ஒருவேளை சுயநினைவு வந்திருக்கலாம்; அல்லது வராமலும் இருக்கலாம்.  ஆனால் அவள் தன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை.  ஆகையால் ஜாலந்தரா சுய நினைவின்றி இருக்கிறாள் என்னும் எண்ணத்திலேயே அவளைத் தூக்கிச் செல்லவே பீமன் விரும்பினான்.  ஆசிரமத்தை அடைந்ததும் சுஷர்மனிடம் திரும்பிய பீமன், “இளவரசே, உங்கள் தங்கையை நான் என் தாயிடம் விட்டு விட்டு வருகிறேன்.  நீங்கள் அதோ இருக்கும் என் குடிசைக்குச் சென்று உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள்.  இந்தக் குளிரில் உங்களுக்குக் கடுமையான ஜலதோஷம் பிடிக்கப் போகிறது.” என்றான்.



சுஷர்மாவுக்கு அந்தச் சூழ்நிலையில் தான் செய்யவேண்டியது என்னவென்று புரியவில்லை.  வேறு வழியின்றி பீமன் கூறியபடி அவன் குடிசைப் பக்கம் திரும்பிச் சென்றான்.  பீமன் அவளைத் தன் தாயிடம் தூக்கிச் செல்கையில் அவள் காதுகளில் கேட்கும்படி மெல்லிய குரலில், “என்னை விட்டு விட்டு நீ ஹஸ்தினாபுரத்துக்குப் படகுப் பயணமாகச் செல்ல நினைத்தாயா?  நல்லது, இப்போது முயன்றுதான் பாரேன்!” என்றான் அவளிடம்.  ஜாலந்தராவுக்கு நினைவு திரும்பியதாகத் தெரியவில்லை.  ஆனால் அவள் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் தோன்றியது.  அதைக் கண்ட பீமன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.


1 comment:

ஸ்ரீராம். said...

பீமனின் இந்த இனிமையான காதலை இப்போதுதான் படிக்கிறேன்.