Tuesday, October 7, 2014

நகுலன் கவலை அடைகிறான்!

கொஞ்சம் பின்னோக்கிப் போய் பீமனுடன் ஒரே குடிசையில் தங்கிய நகுலனைச் சிறிது கவனிப்போம்.  பீமனோடு ஒரே குடிசையில் தங்கினான் நகுலன்.  அன்றிரவு அனைவரும் படுத்துக் கொண்ட பிறகு வெகு நேரம் பீமன் தூங்கவில்லை.  நடு இரவுக்குச் சிறிது முன்னர் அவன் எழுந்து எங்கோ வேகமாக வெளியேறியதை நகுலன் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  உடனே தானும் எழுந்து அவனைப்பின் தொடர்ந்தான்.  அவன் பீமனைக் கவனித்தவரையில் விரைவில் ஏதோ குறும்புத்தனமான சேட்டைகள் செய்ய அவன் தனக்குள் தயார் ஆகிக்  கொண்டிருப்பதை நகுலன் உணர்ந்தான்.  உடனே அவன் மனம் இதை சுஷர்மாவோடு இணைத்து நினைக்க ஆரம்பித்தது.  அன்று மதியம் தான் நகுலன் சுஷர்மாவைக் கிருஷ்ணனின் குடிலில் பார்த்திருந்தான்.  அவனிடம் பீமன் தயவாகக் கேட்டுக் கொண்டும் சுஷர்மா தரைவழிப் பயணத்துக்கு மறுத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நகுலனுக்குத் தன் சகோதரனின் இந்தக் குறும்புகளிலும் சேட்டைகளிலும் சிறிதளவு நம்பிக்கை கூட இருந்ததில்லை.  என்னதான் அவை எந்தவிதமான தீமையையும் விளைவிக்காவிட்டாலும் பல சமயங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. பீமன் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நகுலன் பீமன் நதியில் நீந்தி படகுகளுக்கு அடியில் சென்றதையும், சற்று நேரத்தில் திரும்பியதையும் கவனித்தான். அதன் பின்னர் சற்று நேரத்திலேயே படகுகளுக்குள் நீர் புகுந்து படகுகள் மூழ்க ஆரம்பித்ததையும் கவனித்தான்.  அப்போது உடனேயே பீமன் மறுபடி நீரில் பாய்ந்து படகுகளுக்கு அருகே சென்றதையும் சுஷர்மாவை நீந்த வைத்ததையும், ஜாலந்தராவைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததையும் கவனித்துக் கொண்டான்.  இதை எல்லாம் சத்தம் போடாமல் கவனித்த நகுலன் பீமனும், சுஷர்மாவும் வரும் முன்னரே விரைவாக குடிலுக்குச் சென்று அங்கே தன் படுக்கையில் படுத்துத் தூங்குவது போல் நடித்தான்.


சற்று நேரத்தில் சுஷர்மா குடிலுக்குள் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் குளிரில் நடுங்கிக் கொண்டும், அதே சமயம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டும், வசைமாரி பொழிந்து கொண்டும் நுழைவதைக் கண்டான்.  பீமன் குரலும் அப்போது கேட்டது:”இளவரசே, நான் என் தாயிடம் உங்கள் சகோதரியை ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.” என்றது அந்தக் குரல்.  பீமனின் நோக்கம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது நகுலனுக்கு.  பயத்தில் திகைத்துப் போன நகுலன் தன் தமையனின் இந்தச் சிறுபிள்ளைத் தனமான போக்கினால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணி மீண்டும் கவலை அடைந்தான்.  சுஷர்மா பீமனின் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டான்.  சிறிது நேரத்தில் தன் குடிலுக்குத் திரும்பிய பீமன் உலர்ந்த ஆடைகளை உடுத்தி இருந்தான்.  எவ்விதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அங்கேயே தரையில் படுத்தவன் உடனே தூங்கியும் போனான். சீரான அவன் குறட்டை ஒலி அவன் ஆழ்ந்து உறங்குவதை நிச்சயம் செய்தது.  நகுலனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. பீமன்,  தன் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டால், சுஷர்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமான நிலைமையை நினைத்துக் கொண்டு அதனால் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும் இன்பக்கனா கண்டு கொண்டிருப்பான் என நகுலன் நினைத்துக் கொண்டான்.


விடிவெள்ளி முளைக்கும் முன்னரே நகுலன் எழுந்து தன் வாளை உருவிச் சரிபார்த்த வண்ணம் கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்ல ஆயத்தமானான்.  குடிலுக்குள் மெதுவாக சப்தமின்றி அவன் நுழைந்தாலும் நுண்ணுணர்வு அதிகம் கொண்ட கிருஷ்ணன் எப்படியோ தன் குடிலுக்கு யாரோ வந்திருப்பதை அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அறிந்து கொண்டுவிட்டான்.  “யாரது?” என்றும் கேட்ட வண்ணம் எழுந்து அமர்ந்தான்.  “கோவிந்தா, நான் நகுலன்.  உன்னுடன் தனிமையில் பேச வேண்டும்.”  “வா, நகுலா, வா! உள்ளே வா!” என வரவேற்றான் கிருஷ்ணன்.  கிருஷ்ணனின் குரலைக் கேட்ட சாத்யகி உடனே படுக்கையிலிருந்து எழுந்து தன் வாளை உருவிக்கொண்டு பாய ஆயத்தம் ஆனான்.  “சாத்யகி, சாத்யகி, இது நகுலன்!” என்று நிதானமான குரலில் கிருஷ்ணன்கூறினான்.   தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாத்யகி, “உள்ளே வா நகுலா, இவ்வளவு அதிகாலையில் நீ இங்கே வரவேண்டிய அவசியம் என்னவோ?  எந்த விஷயம் உன்னை இங்கே வரவழைத்தது?” என்று வினவினான்.


“அண்ணன் பீமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு ஒன்றினால் விரும்பத் தகாத விளைவுகள் நேருமோ என அஞ்சுகிறேன்.”  மெதுவாகக் கூறினான் நகுலன்.  “என்ன விஷயம்?” என்றான் கிருஷ்ணன்.  “கோவிந்தா, உனக்குத் தெரியுமா?  பீமன் காசி தேசத்து இளவரசன், இளவரசி இருவரையும் தரை வழிப் பயணம் மேற்கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தான்.  பார்த்தாயா?” என்று நகுலன் கேட்டான்.  “ஓ, ஓ, நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுஷர்மா அதை மிகவும் புத்திசாலித்தனமாக மறுத்துவிட்டான்.  அவனுக்கு துரியோதனனிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.  சுஷர்மாவை ஹஸ்தினாபுரத்துக்கு உடனே வரச் சொல்லி அந்தச் செய்தி கூறுகிறது.  சுஷர்மா மட்டும் இந்தத் திருமணத் தம்பதிகளின் ஊர்வலத்தோடு வந்தானானால் துரியோதனன் பானுமதியின் குடலை உருவி மாலை போட்டுக் கொள்வான் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.  அது சரி, அதற்கு என்ன?” கிருஷ்ணன் மீண்டும் கேட்டான்.



“பீமன் தன் நோக்கத்தில் ஜெயித்துவிட்டான்.  அவன் நதிக்குச் சென்று நதியின் நீர்மட்டம் உயர்ந்து படகுகள் செலுத்தத் தயாரானதும், நங்கூரத்தை எடுத்த கணமே படகினுள் நீர் புகும்படி பார்த்துக் கொண்டு விட்டான். அதன் பின்னர் அவர்களைக் காப்பாற்றச் செல்பவன் போல் நடித்துக் கொண்டு அங்கே சென்று அவர்கள் இருவரையும் ஆசிரமத்துக்கு அழைத்து வந்துவிட்டான்.”

1 comment:

ஸ்ரீராம். said...

நகுலனுக்குப் பொறாமை!!!! கண்ணன் என்ன சொல்வான்? சிரிப்பானா? கவலை அடைவானா?