Monday, January 12, 2015

பானுமதியின் நிலை!

இப்போது நாம் துரியோதனன் மனைவி பானுமதியைக் கொஞ்சம் போய்ப் பார்க்க வேண்டும்.  அவள் மிகவும் துயரத்தில் இருக்கிறாள். நிறைமாத கர்ப்பிணி வேறு.  உண்மையில் அவள் மகிழ்ச்சியாக இருக்கவே காரணங்கள் இருக்கின்றன.  பின் ஏன் துயரம்?  என்னவென்று பார்ப்போமே!

தன் மாளிகையின் மேன்மாடத்தில் உள்ள ஓர் அறையில் அவள் கொஞ்சம் ஓய்வாகச் சாய்ந்து படுத்திருக்கிறாள்.  உடலைத் தளரவிட்டு இடுப்பில் ஒரு சிறிய பாவாடையை மட்டும் அணிந்த வண்ணம் ஒரு போர்வையால் உடலைப் போர்த்தி இருக்கிறாள்.  இந்த நாள் அவள் தன் அழகிய தலைமயிரைச் சுத்தம் செய்து கொண்டு, தன் கைகள், கால்களில் மருதாணியால் அலங்கரித்துக் கொண்டு அவற்றின் செம்மையால் கைகளும், கால்களும் பார்ப்பவர்களுக்குப் பூக்களைப் போன்ற தோற்றம் வருமாறு அலங்கரித்துக் கொள்ளும் நாள்.   கட்டுக்கடங்காத அவள் தலைமயிர் தலையணையில் பரவிக் கிடந்தது.  சேடிப் பெண் ஒருத்தி அவள் தலையைச் சுத்தம் செய்துவிட்டு சாம்பிராணிப் புகை மூட்டிக் கொண்டு உலர வைத்துக் கொண்டிருந்தாள்.

பானுமதியை அப்போது பார்க்கையில் மயில் ஒன்று தோகையை விரித்த வண்ணம் தரையில் அமர்ந்திருந்தாற்போல் இருந்தது.  இன்னொரு சேடி அவள் மேல் வெயில் படாமல் திரையிட்டுப் பாதுகாத்தாள்.  பானுமதியைக் குழந்தையில் இருந்து எடுத்து வளர்த்து வந்த அவள் தாதி ரேகா என்பவள் பானுமதியின் படுக்கையின் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மனதில் ஊறிய தாயன்பை மறைக்காமல் அன்பு ததும்ப அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கிருந்தோ ஓர் மயில் பறந்து வந்து அங்கே அமர்ந்தது.  பானுமதி அதை வளர்க்கிறாள் போலும்!  அங்கிருந்த தங்கக் கூண்டில் சிறைப்படுத்தப்பட்டிருந்த கிளி ஒன்று தன் பவழ வாயைத் திறந்து, “பானுமதி! எழுந்திரு! பானுமதி! எழுந்திரு!” என்று விடாமல் தன் கிள்ளை மொழியில் பிதற்றிக் கொண்டிருந்தது.

செழுமையான முகம் கொண்ட பானுமதி உருவத்தில் மிகவும் சிறியதொரு பெண்மணி.  அஞ்சனம் அப்பிய அவள் கருமையான கண்கள்  அவள் எவ்வளவு வெகுளி என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.  பானுமதிக்கு அவள் கணவன் காம்பில்யத்தில் தோற்றுப் போய் நாடு திரும்பியதில் எவ்விதமான ஏமாற்றமும் இல்லை.  உண்மையில் அவளால் எப்போதும் துக்கத்தில் மூழ்கி இருக்க இயலாது.  சில நொடிகளில் அவள் மனம் மாறி மகிழ்ச்சி நிலைக்கு வந்துவிடுவாள்.  அவள் மகிழ்ச்சியடையப் பல காரணங்களும் இருந்தன.  காம்பில்யத்தில் அவள் கணவன் தோற்றுப் போனதும் திரௌபதியை அடைய முடியாததும் கடவுளால் அவளுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய வரமாக நினைத்தாள் பானுமதி.  இதற்காக அவள் கடவுளருக்கு மட்டும் நன்றியைத் தெரிவிக்கவில்லை. அவளைத் தன் தங்கையாக ஸ்வீகரித்துக் கொண்ட கிருஷ்ண வாசுதேவனுக்கும் சேர்த்தே தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்பினாள்.


கிருஷ்ண வாசுதேவன் தான் அளித்த வாக்குறுதியிலிருந்து சற்றும் பிறழவில்லை.  திரௌபதியை துரியோதனன் வெல்ல முடியாதபடி பார்த்துக் கொண்டான்.  நல்ல வேளையாக இன்னொரு பெண்ணுடன், என்னதான் அரசகுமாரியாக இருந்தாலும், தன் கணவனைப் பங்கிட்டுக் கொள்வதில் இருந்து அவள் தப்பித்தாள்.  திரௌபதி வயதிலும், பதவியிலும் அவளைவிடக் குறைந்தவளாகவே இருந்தாலும், அவள் தந்தையின் செல்வாக்கால் விரைவில் அவளை விட முதன்மையான ஸ்தானத்துக்கு வந்திருப்பாள். ஆகவே அந்த இக்கட்டிலிருந்து பானுமதி தப்பியதில் அவளுக்கு மகிழ்ச்சியே!

பாண்டவ சகோதரர்கள் ஐவரையும் திரௌபதி மணக்க நேர்ந்ததில் பானுமதிக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை.  அவள் அதைக் குறித்துக் கவலைப்படவே இல்லை.  யுதிஷ்டிரன் குரு வம்சத்தில் மூத்தவனாக இருந்தும், அவனை திரௌபதி மணந்திருந்ததும், அடுத்த பட்டம் யுதிஷ்டிரனுக்குச்ச் சூட்டப்பட ஏற்பாடுகள் நடப்பதும், அதன் மூலம் திரௌபதி பட்டமகிஷியாக ஆவாள் என்பதும் அவளுக்குப் புரிந்தே இருந்தது.  பானுமதி இதை எல்லாம் குறித்துக் கவலைப்படவே இல்லை.  அரச குடும்பத்தில் இவை அனைத்தும் சகஜமாக நடைபெறும் ஒன்று.  இப்போது பானுமதிக்கு ஒரே ஒரு கவலை தான்.  ஒரே ஒரு விஷயத்தில் தான் ஆர்வம். அதுதான் அவள் கணவன் துரியோதனனின் மகிழ்ச்சி.  அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே பானுமதி விரும்புகிறாள்.


ஆகவே அவள் இப்போது எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  விரைவில் அவளுக்கு அவள் கணவன் விரும்பிய வண்ணம் மகன் பிறக்க வேண்டும்.  அவன் தான் குருவம்சத்து அடுத்த வாரிசாக இருப்பான்.  ஏனெனில் பாண்டவர்களுக்கு இன்னமும் குழந்தை பிறக்கவில்லை.  இப்போது தான் திருமணமே ஆகி இருக்கிறது.  ஆகவே அவளுக்குப் பிறக்கும் மகனே குரு வம்சத்து மூத்தவன்.  யுதிஷ்டிரனுக்குப் பின்னர் அவன் மகன் வர முடியாது.  துரியோதனனுக்கும், பானுமதிக்கும் பிறக்கப் போகும் மகனே முடி சூடுவான்.  அந்த மகிழ்ச்சியான நாளுக்காகவே பானுமதி காத்திருந்தாள்.  தன் கணவனின் ஆசையும் விருப்பமும் இப்படியாவது நிறைவேறும் என எதிர்பார்த்தாள்.


ஆம், வரப் போகும் அடுத்த தலைமுறைக்கு அவள் மகனே மூத்தவனாக அரியணை ஏறும் உரிமை படைத்தவனாக இருப்பான்.  பானுமதியின் மகிழ்ச்சிக்கு இது மட்டும் காரணம் அல்ல.  அவளைத் தன் அருமைத் தங்கையாக ஸ்வீகரித்துக் கொண்ட கிருஷ்ண வாசுதேவன், அவள் அன்புடன் அழைக்கும் கோவிந்தன் இங்கே வருகிறான்.  புதுமணத் தம்பதியருடன் கிருஷ்ண வாசுதேவனும், பலராமனும், மற்ற யாதவர்களும் வரும் செய்தி பானுமதிக்கும் தெரிந்திருந்தது.  ஆகவே அவன் வரவுக்காக அவள் காத்திருந்தாள்.  சிறுமியாக இருக்கையில் இருந்தே கோபியர்கள் பாடிய கண்ணனின் லீலைகளைக் குறித்த நாட்டுப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தாள் பானுமதி.  இந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு மனப்பாடம் ஆகி இருந்தது.  இவற்றைப் பாடிக் கொண்டே பௌர்ணமி நாட்களில் தன் தந்தையின் காசி அரண்மனை மாளிகையின் நிலாமுற்றத்தில் அவள் ஆடிப் பாடியது உண்டு.  அந்த நேரங்களில் அவள் கற்பனை எல்லை மீறிச் சிறகடித்துப் பறக்கும்.  தானும் ஒரு கோபியாக மாறிக் கண்ணனுடன், யமுனைக்கரையில் ராஸ்லீலாவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றும்.


துரியோதனனை மணந்து ஹஸ்தினாபுரம் வந்த பின்னரும் அவளுடைய இந்த நடவடிக்கைகள் சற்றும் மாறவே இல்லை.  முதன் முதல் கிருஷ்ணன் அவளைப் பார்த்ததும் அவளை ஓர் இக்கட்டான அனைவருக்கும் அவமானம் உண்டாக்கக் கூடிய நிலையிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்ததையும் அவள் மறக்கவில்லை.  இல்லை எனில் அவள் இறந்திருப்பாள்;  ஆனால் பழிச்சொல்?  அவளை விட்டு நீங்கி இருக்காதல்லவா?  கிருஷ்ணன் தானே அவளை அந்தப் பழியிலிருந்து காத்து ரக்ஷித்தான்!  அவனுடைய பாசமும், நேசமும் தனக்குக் கிடைத்ததை கடவுள் தனக்களித்த விலை மதிக்க முடியாப் பரிசாக நினைத்தாள் பானுமதி!

1 comment:

ஸ்ரீராம். said...

//கிளி ஒன்று தன் பவழ வாயைத் திறந்து, “பானுமதி! எழுந்திரு! பானுமதி! எழுந்திரு!” என்று விடாமல் தன் கிள்ளை மொழியில் பிதற்றிக் கொண்டிருந்தது.//

பிதற்றிக் கொண்டிருந்தது என்பதை விட, மிழற்றிக் கொண்டிருந்தது என்று வரலாமோ!