Tuesday, January 20, 2015

பானுமதிக்கு ஆபத்து?

தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது போல் சொன்னாள் பானுமதி. “பிரபுவே, கோவிந்தன், கிருஷ்ண வாசுதேவனின் உதவியை நாடுங்கள்!”

“என்ன?” எரிச்சலுடன் கத்தினான் துரியோதனன். கோவிந்தனின் உதவியை நாடவேண்டுமா?  அந்த இடையன் முன்னால் நான் உதவி கேட்டுக் கை கட்டி நிற்கவேண்டுமா? என்ன தைரியம் உனக்கு? ஒருக்காலும் முடியாது.  அவன் தான் எனக்கு முதல் எதிரி.  ஆம், பீமனை விட அவன் தான் எனக்கு முதல் எதிரியாவான்! பீமனை விட மோசமானவன் அவன்!”

பானுமதி தயக்கத்துடன், “ பிரபுவே, அவன் ஒரு விஷயத்திற்கு உறுதி மொழி கொடுத்தான் எனில் கடைசிவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவான்.” என்றாள்.

துரியோதனனின் பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.  பல்லைக் கடித்தான். “எப்போதும் கோவிந்தன், கோவிந்தன்!  அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்! அவனிடம் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாய்?  ஏன் நீ என்னை விட்டுவிட்டு அவனுடன் போய் வாழக் கூடாது?”

பானுமதியின் மனம் உடைந்தே போனது. இப்படி ஒரு மோசமான எண்ணம் துரியோதனன் வாயிலாகக் கேட்டதில் அவள் மிகவும் நொந்து போனாள்.  கண்ணீர் பெருகியது. விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். அவளுடைய தாதி ரேகா அவளைச் சமாதானம் செய்யும் வகையில் அவள் தோள் மேல் கை வைத்துத் தட்டிக் கொடுத்தாள்.  “பிரபுவே, நீங்கள் கேட்டதால் நான் இந்த யோசனையைச் சொன்னேன்!” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டுப் பரிதாபமாக அழத் தொடங்கினாள். தன் மனைவி தேற்றுவதற்கு ஆளில்லாமல் நிறை கர்ப்பிணியாய் அழுவதைப் பார்த்த துரியோதனன் ஒரு நிமிடம் மனம் கலங்கினான்.  பானுமதியின் பால் இரக்கம் தோன்றியது.


 “இதோ பார் இளவரசி! இப்படி அழாதே!  நீ இருக்கும் நிலையில் உடல் நலம் மோசமாகக் கெட்டு விடும்.  ஆனால் உனக்கு எனக்கு நடப்பவை என்னவென்று தெரியவில்லை; புரியவும் இல்லை.  அந்தக் கிழவன் தாத்தாவாம் தாத்தா!  பீஷ்மனும், அந்தக் கிழவி மஹாராணி சத்யவதியும் என் முதன்மை எதிரிகள்.  இருவரும் என்னை அழிக்க நினைக்கின்றனர். தந்தைக்கு இங்கே எவ்வித அதிகாரமும் இல்லை.  அவர் குரல் எடுபடாது. கர்ணனும், அஸ்வத்தாமாவும் என்னை விட்டுச் செல்ல நினைக்கின்றனர்.  துஷ்சாசனனும், மற்ற சகோதரர்களும் காந்தாரம் சென்றுவிடலாம் என எண்ணுகின்றனர்.  நான் நிராதரவாக நிற்கிறேன். எனக்கு உதவ யாருமில்லை.  இந்த உலகமே எனக்கு எதிராக நிற்கிறது.”


“எனக்குத் தெரியும், நான் அறிவேன், பிரபுவே! ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நானும் ஒரு நிராதரவான பெண் தானே! என்னை மன்னித்துவிடுங்கள் பிரபுவே, என் வார்த்தைகள் உங்களைத் துன்புறுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். என்னை மன்னியுங்கள். “ குரல் தழுதழுக்கக் கூறினாள் பானுமதி.

“ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? யுதிஷ்டிரனை இங்கே ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக முடிசூட்டப் போகின்றனர்.  இதற்கு நான் இறந்தே போகலாம். யுதிஷ்டிரனுக்குக் கீழே யுவராஜாவாக நான் இருப்பதை விட இறப்பதே மேல்.” கொஞ்சம் கோபத்துடனேயே கூறிய துரியோதனன் சற்று நேரம் யோசித்தான்.  பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவன் போல், மீண்டும் பேச ஆரம்பித்தான்.”இதெல்லாம் யாரால் என நினைக்கிறாய்? அசட்டுப் பெண்ணே! இவற்றிற்கு மூல காரணமே உன் கோவிந்தன் தான்.  இவை அனைத்தும் அவன் திருவிளையாடல் தான்.  ராக்ஷசவர்த்தத்தில் எங்கோ ஒளிந்திருந்தவர்களைக் கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே செல்ல இருந்தவர்களைத் திரும்பக் கொண்டு வந்தது உன் கோவிந்தன் தான்.”

“அவன் தான் அர்ஜுனன் திரௌபதியை மணக்கவேண்டும் எனத் திட்டமிட்டது. அது முடிந்ததும் பாண்டவர்கள் ஐவரையும் இங்கே ஊர்வலமாக வந்து விழா எடுக்கத் திட்டமிட்டதும் அவனே.  அவனால் தான் யுதிஷ்டிரன் வருகை இங்கே இவ்வளவு முக்கியமாக ஏதோ போரில் வெற்றி பெற்றவர்களை வரவேற்கும் விஜய யாத்திரையாகக் கொண்டாடப் படுகிறது.”

பதிலே சொல்லாமல் அவனைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள் பானுமதி.  அவள் கணவன் அவளை கோவிந்தனுடன் சென்று வாழச் சொன்னதை நினைத்து நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள்.  இவ்வளவு கடுமையாக அவள் கணவன் அவளிடம் பேசுவான் என அவள் நினைக்கவில்லை.  இப்போதும் நாம் சாதாரணமாக ஏதேனும் சொல்லிவிட்டால் அது தப்பாகிவிடுமோ என்னும் பயத்தில் எதுவுமே பேசாமல் இருந்தாள்.  தன் பேச்சு கணவனை மீண்டும் கோபப் படுத்திவிடுமோ என அஞ்சினாள்.  அவனைப் பார்த்து இனிமையாகப் புன்னகைக்க நினைத்தாள்.  அதுவும் அவளால் முடியவில்லை.

துஷ்சாசனன் தனக்குக் கொடுத்த எச்சரிக்கை துரியோதனன் நினைவில் வந்தது.  அவன் அருமை மனைவி அவன் குருவான துரோணரால் பெற்ற பெண்ணை விட அருமையாகப் பார்க்கப் படுவது அவன் நினைவில் வந்தது. மேலும் கிருஷ்ண வாசுதேவனோ உடன் பிறந்த தங்கையாகவே நினைக்கிறான். இருவரும் கொடுக்கும் தைரியத்தில்  அவன் மனைவி அவன் கூப்பிடாமலேயே அவன் விஷயங்களில் மீண்டும் தலையிடுவாளோ என அஞ்சினான் துரியோதனன்.  அதன் மூலம் மீண்டும் கிருஷ்ண வாசுதேவனின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவோமோ என எண்ணினான்.

“இதோ பார் இளவரசி, நான் இங்கே வந்தது என்னவெனில் நீ மீண்டும் என் விஷயத்தில் தலையிட்டுக் குழப்பிவிடாதே! இதைக் கேட்டுக் கொள்ளத் தான் நான் இங்கே வந்தேன்!”

“பிரபுவே, நான் உங்கள் விஷயங்களில் தலையிட்டுக் குழப்புகிறேனா?  இது என்ன புதிய செய்தி? ஏன் என்னை நீங்கள் நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்?”பரிதாபமாகக் கேட்டாள் பானுமதி!

“நீ மிகவும் எளிமையாகவும் அதே சமயம் வெளிப்படையாகவும் பேசுகிறாய். உன்னால் எதையும் மறைக்க முடியாது.   ஆகவே நீ வாசுதேவனைச் சந்திக்கவே கூடாது.  அவனுக்கு எந்தச் செய்தியையும் அனுப்பாதே.  அவனிடமிருந்து உனக்கும் எந்தச் செய்தியும் வரக் கூடாது. புரிகிறதா?” பற்களைக் கடித்த வண்ணம் பேசினான் துரியோதனன்.  “புரிகிறது ஐயா, புரிகிறது!” என்று மிகவும் ஈனமான குரலில் கூறினாள் பானுமதி.  அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.  பற்களைக் கடித்துக் கொண்டு தன் உதடுகளை இறுக்க மூடிக்கொண்டு தனக்கு வரவிருந்த பெரும் விம்மலை அடக்க முயற்சி செய்தாள்.  அவள் கணவனின் கடுமையான நடத்தையினாலும், கடுமையான சொற்களினாலும் அவள் மனம் புழுங்கித் தவித்தது.

“நீ மட்டும் நான் சொன்னதற்கு மாறாகச் செய்தாயானால், பானுமதி, நான் உன்னைக் கொன்றே போட்டுவிடுவேன்.  இது சத்தியம்!” என்றான் துரியோதனன்.  

1 comment:

ஸ்ரீராம். said...

படித்தேன். பானுமதியிடம் கம்பீரமில்லை.