Friday, April 10, 2015

பேரானந்தத்தில் மூழ்கிய பகைவர்! திகைப்பில் மூழ்கிய பீமன்!

சற்று நேரம் மூவரிடமும் பேச்சே இல்லை. மௌனம் கோலோச்சியது. பின்னர் அந்த அகோரி துஷ்சாசனனைப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? உன் எதிரிகளை அழிக்க வேண்டுமெனில் நீ கைலை யாத்திரை செல்ல வேண்டும்.  அதற்கு வேண்டிய மனோதிடம் உன்னிடம் உள்ளதா? நீ செல்வாயா?” என்று கேட்டான். துஷ்சாசனன் தான் தைரியமாக இருப்பதாயும், போவதாயும் தெரிவித்தான்.

“ம்ம்ம்ம்ம்,,, அப்படி எனில் நீ காளிமாதாவைப் பார்க்க விரும்புகிறாயா? அவளைக் காணவோ அவளைக் கண்டு பயமில்லாமல் இருக்கவோ உன்னால் இயலுமா? பணிவுடன் அவளை வணங்கித் துதிப்பாயா?”

அதற்கும் சம்மதித்த அவர்கள் இருவரையும் கண்களை மூடிக் கொண்டு தேவியைத் துதிக்குமாறும், அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்குமாறும் அகோரி கூற, அவன் சொன்னதன் பேரில் இருவரும் அரை மனதாகத் தங்கள் கண்களை மூடினார்கள். பக்கத்தில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கஷாயம் சுற்றுப்புறமெங்கும் தன் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அதிலிருந்து கஷாயத்தை வெளியே எடுத்தான் அகோரி. மீண்டும் சில, பல மந்திரங்களை உச்சாடனம் செய்து கொண்டே அங்கே மயங்கிப் படுத்திருந்த குழந்தையின் அருகே சென்றான் அகோரி. குழந்தையின் குரல்வளையில் தன் கையிலிருந்த கத்தியால் ஒரு கீறு கீற ரத்தம் பீரிட்டது.  அந்த ரத்தத்தை அங்கே காட்சி தந்த காளிமாதாவுக்கு அர்ப்பணித்தான் அகோரி. அதன் பின் அருகிலிருந்த லிங்கத்தின் மேலே சில துளிகள் ரத்தத்தைத் தெளித்தான். பின்னர் அந்த ரத்தத்தால் தன் நெற்றியிலே நீண்டதொரு திலகம் இட்டுக் கொண்டு, எதிரே அமர்ந்திருந்த இருவரின் நெற்றியிலும் ரத்தத் திலகம் பதித்தான்.

இத்தனையும் செய்யும்போதும் அவன் மந்திர உச்சாடனம் தொடர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் வெளியே எடுத்த கஷாயத்தை முதலில் தான் கொஞ்சம் குடித்து விட்டுப் பின்னர் ஷகுனிக்கும், துஷ்சாசனனுக்கும் கொடுத்தான். அவர்களும் அதை வாங்கிக் குடித்தார்கள். இந்தக் கொடூரமான வெறுப்பூட்டும் நிகழ்ச்சியை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பீமன் முழுக்க முழுக்கத் திகில் அடைந்திருந்தான். அவன் திகிலை அதிகப்படுத்துவது போல் கஷாயம் குடித்த ஷகுனி மற்றும் துஷ்சாசனன் இருவரின் கண்களும் விரிந்தன. வழக்கமான ஒன்றாக இல்லாமல் வித்தியாசமாகத் தெரிந்தன அந்தக் கண்கள். அதைக் கண்ட பீமனுக்கு மேலும் திகில் அதிகம் ஆனது. அந்த அகோரியோ நிதானமாக அவர்களிடம், “எப்படி இருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?” என்று விசாரித்தான்.

“என் தலையே திரும்பிவிட்டாற்போல் உணர்கிறேன். என் முதுகுத் தண்டில் சில்லென்றிருக்கிறது.” என்று துஷ்சாசனன் சொல்ல, ஷகுனியோ, “என் கண்கள் முன்னே வண்ணமயமான வட்டங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன.” என்றான். கஷாயம் தன் வேலையைத் தொடங்கி விட்டதை உணர்ந்தான் அகோரி. தன் திரிசூலத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு அதன் நுனியால் இருவரின் நெற்றிப் பொட்டையும் தொட்டான் அகோரி. “என்ன பார்க்கிறாய்? அதைச் சொல் முதலில்! ஓர் ரதம் வருவது தெரிகிறதா?  அந்த ரதம் எதற்கென நினைக்கிறாய்? உன்னைக் காளிமாதாவிடம் அழைத்துச் செல்லத் தான் அந்த ரதம் வருகிறது. ரதத்தில் ஏறிக்கொள்ளுங்கள்.” என்றான் அகோரி.

சற்று நேரம் பேசாமல் இருந்த இருவரும் திடீரென, “ரதம் வந்துவிட்டது; வந்துவிட்டது!” என்று கூவினார்கள். அவர்கள் குரல் எங்கேயோ தூரத்திலுள்ள மலைக்குகைக்குள்ளே இருந்து பேசும் குரல் போல, அதன் எதிரொலி போலக் கேட்டது. பீமன் ஆச்சரியமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அகோரி அவர்களிடம், “ஏறி அமருங்கள்! ரதத்தில் உட்காருங்கள். உங்கள் மனம் பூராவும் காளிமாதாவே நிரம்பி இருக்கட்டும்.  அவள் அருளையே வேண்டிப் பிரார்த்தித்த வண்ணம் ஆசனங்களில் அமருங்கள்.” என்று சொல்லிக் கொண்டே தன் திரிசூலத்தால் மீண்டும் அவர்கள் நெற்றியில் தொட்ட அகோரி அந்தத் திரிசூலத்தை அவர்கள் முன்னால் ஆட்டினான்.

“நீங்கள் வரவில்லையா?” என்று ஷகுனி வினவ, “நானும் உங்களுடன் வரப்போகிறேன்.  ஆனால் இந்த ரதத்தில் இல்லை. வேறொரு ரதத்தில்.” என்று சொன்னவண்ணம் அக்னி குண்டத்தில் இன்னமும் கட்டைகளைப் போட்டான் அகோரி. தூரக் குகைக்குள்ளிருந்து பேசும் அதே குரலில் துஷ்சாசனன், “ஐயா, ரதம் வேகம் எடுக்கிறது. மிக வேகமாய்ப் போகிறது.” என்று சொல்ல, ஷகுனியோ, “இந்த வேகத்தில் எனக்கு மூச்சுத் திணறுகிறது.” என்று சொன்னவன் பயத்தினால் நடுங்கிய வண்ணம் தன் தொண்டையில் கையை வைத்து அமுக்கிக் கொண்டான். அகோரி மீண்டும் சூலத்தை அவர்கள் கண்ணெதிரே ஆட்டினான். “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்க, துஷ்சாசனன் மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய குரலில், “ஆனந்தமாக உணர்கிறேன். இது தான் பேரானந்தம்! நாங்கள் மிகவும் வேகமாகப் பயணம் செய்கிறோம். எனக்கு மகிழ்வாக இருக்கிறது.” என்று சந்தோஷத்தை அனுபவித்த வண்ணம் கூறினான்.

ஷகுனியோ, “நாங்கள் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம் ஐயா! காற்று பலமாக வீசுகிறது.  காற்றின் குரல் வலுத்து இருக்கிறது.  அது “உர்ர்”என்ற சப்தத்துடன் வீசிக் கொண்டிருந்தது இப்போது ஊழிக்காற்றைப் போல வீசுகிறது. ஏதோ புயல் காற்று அடிக்கும் சப்தமாகக் கேட்கிறது.” என்றான். அகோரியோ விடாமல் தன் சூலத்தை அவர்கள் முன்னே மேலும், கீழும், பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டிருந்தான். “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்றும் கேட்டான்.

“நாங்கள் மேலே, மேலே போய்க் கொண்டிருக்கிறோம். எங்கள் கால்களுக்குக் கீழே பூமி தெரிகிறது.” என்று துஷ்சாசனனும், ஷகுனியும் கூற சூலம் மேலும் மேலும் ஆட்டப்பட்டது. “எங்கள் கால்களுக்குக் கீழே இப்போது கங்கை தெரிகிறாள்.  அவள் நதியைப் போல் காணவில்லை. ஒரு கீற்றாகத் தான் தெரிகின்றாள்.” என்று ஷகுனி சொல்ல, துஷ்சாசனன், “ஆஹா, என்ன அற்புதமான காட்சி! நாங்கள் இப்போது மிக உயரமான மலைத் தொடர்களுக்கு வந்திருக்கிறோம்! ஆஹா! இவை தான் இமயமலைத் தொடர்களா? மலைகளின் சக்கரவர்த்தி இமயத்திடம் வந்து விட்டோமா?” என்று சொன்னான்.

1 comment:

ஸ்ரீராம். said...

ஹிப்னாடிசம்? கஷாயம் என்பது கஞ்சாவோ!